84. முருகனுக்கு மட்டுமா? கண்ணனுக்கும் காவடி எடுக்கறாங்க டோய்!
காவடி-ன்னாலே அது முருகனுக்கு மட்டும் தானே! அது எப்படிடா கண்ணனுக்குப் போயி எடுப்பாங்க? எங்கிட்டு எடுப்பாங்க-ன்னு தானே கேக்கறீங்க! மேலே படிங்க! தமிழ்க் கடவுளுக்குக் காவடி எடுக்கும் வழக்கம், தமிழ் மக்களிடையே காலம் காலமாக வந்த ஒன்று! - தெரிஞ்சது தான்!
சரி, தமிழ்க் கடவுள் யாரு? - முருகப் பெருமான்! - மிகவும் சரியான விடை! ஆனா கேள்விக்குண்டான எல்லா விடைகளையும் சொன்னாத் தான் மதிப்பெண்ணு, மதிப்பொண்ணு எல்லாம் கொடுக்கப்படும் :-) இன்னொரு தமிழ்க் கடவுள் யாருன்னும் சொல்லுங்க!
குறிஞ்சிக் கடவுள் = சேயோன் = முருகன் = பெருமான்
முல்லைக் கடவுள் = மாயோன் = கண்ணன் = பெருமாள்
மற்ற திணைகளான மருதம், நெய்தற், பாலைக்கு எல்லாம் தனித்தனித் தெய்வங்கள் இருந்தாலும், பெரும் தெய்வங்களாக எல்லா இலக்கியங்களிலும் பேசப்படுவது இந்த மாயனும், சேயனும் மட்டுமே!
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் முதற்கொண்டு, சிலப்பதிகாரம் முதலான காப்பியங்கள், பிற்கால இலக்கியங்கள் - என்று எல்லாவற்றிலும் இந்த இருவரின் ஆளுமை அதிகமாகத் தான் இருக்கு!
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
என்பது தொல்காப்பியம்! சிலப்பதிகாரத்திலும் விழாக் காலங்களில் இவர்கள் இருவரின் கோயில்களில் நடக்கும் வழிபாடு பற்றிச் சிறப்பாகப் பேசப்படுகிறது! ஒருவேளை மக்கள் அதிகம் புழங்கிய இடங்களாகக் குறிஞ்சியும் முல்லையும் இருந்திருக்கலாம்; அதனால் தானோ இவர்கள் மட்டும் இத்தனை பெரிதாகப் பேசப்படுகிறார்கள்?
ஆக தமிழ்க் கடவுள் என்றாலே அது மாயோனும், சேயோனும் ஆகிய இந்த இருவருமே தான்!
நண்பர் ஜிராவின் உதவியுடன், இது பற்றித் தனி ஆராய்ச்சிப் பதிவாகப் பின்னொருகால் இடுகிறேன்!
இராம.கி ஐயாவையும் சில பாடல்களுக்குப் பொருள் கேட்டுத் தெளிய வேண்டும்! இன்னிக்கி காவடி மேட்டருக்கு மட்டும் வருவோம்!
சின்ன வயசுல (மூனாங் கிளாஸ்-னு நினைக்கிறேன்) என்னைய திருப்பதிக்குக் கூட்டிக்கிட்டு போயிருக்காய்ங்க வூட்டுல!
விளையும் பயிர் தான் முளையிலேயே தெரியுமாமே! சரியான டகால்டி பார்ட்டின்னு அப்பவே என்னை முடிவு கட்டிட்டாங்களாம்! :-)
ஏன்னா....திருப்பதியில நான் அரோகரா அரோகரா-ன்னு கூவிக்கிட்டு இருந்தேனாம்!
வர்ற வழியில, திருத்தணியில் ஹால்ட்டு! அங்கிட்டு கோவிந்தா கோவிந்தா-ன்னு கோஷம் போட்டுக்கிட்டு இருந்தேனாம்! நான் கல்லூரி லெவலுக்கு வந்த பின்னும் கூட, இதச் சொல்லிச் சொல்லிச் சிரிப்பாங்க எங்க மறைந்த ஆயா!(பாட்டி)
நான் மட்டும் தான் இப்படி டகால்ட்டி பேர்வழின்னு நெனைக்கறீங்களா? நம்மள விட ஒருத்தர் செம டகால்ட்டியா இருக்காரு!
ஊத்துக்காடு வேங்கட கவி-ன்னு ஒருத்தரு! அழகான பல தமிழிசைப் பாடல்களை எல்லாம் கொடுத்திருக்காரு! அலைபாயுதே கண்ணா பாட்டு அவர் எழுதினது தான்! ஏ.ஆர். ரஹ்மான் ராயல்டி ஏதாச்சும் கொடுத்தாரான்னு தெரியலை! அவரு கண்ணன் மேலே காவடிச் சிந்து பாடி இருக்காரு!
பொதுவா காவடிச் சிந்து-ன்னா அது முருகனுக்குத் தான்!
காவடி எடுக்கும் களைப்பு தெரியாம இருக்க, வழிநடைப் பாடலா இதைப் பாடுவாங்க! செஞ்சுருட்டி இல்லீன்னா சிந்து ராகத்தில் இருக்கும்! சும்மா பாட்டைக் கேட்டாலே போதும்,
தையத் தையத் தக்கத் தானா - திமி
தையத் தையத் தக்கத் தானா -ன்னு கால்கள் தானாவே ஆடும்!
அப்படி ஒரு அருமையான காவடிச் சிந்தை, கண்ணபிரான் மேல் பாடி இருக்காரு இந்த ஊத்துக்காட்டுக் கவி!
வாங்க...இன்னிக்கி கண்ணன் பாட்டுல, கண்ணனுக்குக் காவடி எடுப்போம்! கண்ணான கண்ணனுக்கு அரகரோகரா!:-)
மேலே மலேசிய பத்து மலைக் காவடிய உத்துப் பாருங்க! என்னாத் தெரியுது? :-)
எது பிடிச்சிருக்கோ, அதைக் கேட்டுக்கோங்க! என் தெரிவு அருணா சாய்ராம்! தமிழ் உச்சரிப்பு கொஞ்சம் நச்சரிப்பு பண்ணாலும், இவங்க சும்மா கும்மறாங்க! காவடி-ன்னாலே கும்ம வேணாங்களா? :-)
யேசுதாஸ் பாடும் காவடிச் சிந்து
அருணா சாய்ராம்
நித்ய ஸ்ரீ பாடுவது
பம்பாய் சகோதரிகள்
கண்ணன் வருகின்ற நேரம் - கரையோரம்
தென்றல் கண்டுகொழித்தது பாரும் - அந்தக்
கானத்திடை மோனக்குயில் ஓசைக்கு இணையாதென
தரமான குழலிசை கேளும் - போன
ஆவி எல்லாம் கூட மீளும்!
(கண்ணன்)
சல்ல சலனமிட்டு ஓடும், நதி பாடும் - தென்றல்
தங்கித் தங்கிச் சுழன்று ஆடும் - நல்ல
துதிபாடிடும் அடியாரவர் மனமானது இதுபோலென
துள்ளித் துள்ளிக் குதித்தாடும் - புகழ்
சொல்லிச் சொல்லி இசைபாடும்!
(கண்ணன்)
கண்ணன் நகைபோலே முல்லை, இல்லையில்லை - என்று
கண்டதும் வண்டொன்றும் வர்லை
இது கனவோ அல்ல நனவோ எனக் கருதாதிரு மனமே - ஒரு
காலமும் பொய் ஒன்றும் சொல்லேன் - எங்கள்
கண்ணன் அன்றி வேறு இல்லேன்!
(கண்ணன்)
தாழைமடல் நீர்த்து நோக்கும், முல்லை பார்க்கும் - என்ன
செளக்கியமோ என்று கேட்கும் - அட
மொழி பேசிட இதுவோ பொழுதெனவோ - மாதவனின்
முத்து முடி தனில் சேர்வோம் - அங்கே
மெத்த மெத்தப் பேசி நேர்வோம்!
(கண்ணன்)
கீழே ஒருத்தரு இந்தப் பாட்டுக்கு நாட்டியம் ஆடறாங்கப்பா! சும்மா கெடைச்சுது யூ-ட்யூப்பில்! சுட்டுப் போட்டுட்டேன்!
ஷைலஜாவுக்குப் புத்தாண்டு சபதம்! அப்புறம் அம்பிக்கு 2007 இல் புடிச்ச பதிவு! சீனா சாருக்கு மொக்கைச் சரம் பதிவு! - எல்லாம் எக்கச் சக்கமாப் பாக்கி இருக்கு!
சீனா சார் - இந்தப் பதிவை எல்லாம் ப்ளீஸ், மொக்கையில் கணக்கு எடுத்துக்க மாட்டீங்களா? :-)
இன்னிக்குத் தைக் கிருத்திகை-யாம்ல! திராச முருகனருள்-ல பாட்டு போட்டுருக்காரு! இங்கிட்டு கண்ணனுக்குக் காவடி எடுத்துட்டு, அங்கிட்டு முருகனுக்கு ஒரு கும்புடு போட்டுட்டு வந்துருங்க!
20 comments :
நல்ல பாடல், பம்பாய் சகோதரிகள் பாடி கேட்டிருக்கிறேன். நன்றிங்கண்ணோவ்.
//இந்தப் பதிவை எல்லாம் ப்ளீஸ், மொக்கையில் கணக்கு எடுத்துக்க மாட்டீங்களா//
ஒரு நல்ல பாட்டை குடுத்துட்டு, இப்படி வேற அராஜகமான பேச்சா?.
எனக்குப் பிடித்த பாடல்.
குன்னக்குடியின் வயலினில் கேட்கவும் இனிமையாக இருக்கும்!
நல்ல பாட்டு ரவி கேட்டதே இல்ல இதுவரைக்கும்....இதுக்கென்ன டோய்
கோய்ன்னுட்டு?:) நீங்க மொக்கை எழுதினாலும் அது KRS(KrishnaRaja sagardam) வழக்கமா எழுதறது தான்!!!சும்மா அருவியா தமிழ் கொட்டுதில்ல அதான்... சம்ஜே?:)
நல்ல பதிவு. நல்ல பாட்டு.
//மதுரையம்பதி said...
நல்ல பாடல், பம்பாய் சகோதரிகள் பாடி கேட்டிருக்கிறேன்.//
இதைக் கிராமத்து மெட்டில் பாடினா இன்னும் நல்லா இருக்கும் மெளலி அண்ணா! புஷ்பவனம் குப்புசாமியோ இல்லை கானா உலகநாதனோ பாடியும் ஒரு தபா கேக்கணும்!
//மதுரையம்பதி said...
//இந்தப் பதிவை எல்லாம் ப்ளீஸ், மொக்கையில் கணக்கு எடுத்துக்க மாட்டீங்களா//
ஒரு நல்ல பாட்டை குடுத்துட்டு, இப்படி வேற அராஜகமான பேச்சா?//
அட...இம்புட்டுக் கோவம் வருது? :-)
//ஜீவா (Jeeva Venkataraman) said...
எனக்குப் பிடித்த பாடல்.
குன்னக்குடியின் வயலினில் கேட்கவும் இனிமையாக இருக்கும்!//
ஆமாங்க ஜீவா! குன்னக்குடி காவடி மெட்டெல்லாம் பட்டைய கெளப்புவாரு!
//G.Ragavan said...
நல்ல பதிவு. நல்ல பாட்டு//
எங்க ஜிரா-வா இது? இப்படி ஒன்-லைனர்-ல பேசறாரு? நான் இன்னும் நெறய விசயம்...தமிழ்க் கடவுள், காவடி பத்தியெல்லாம் சொல்லப் போறாரு-ன்னுல்ல நெனச்சேன்!
// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//G.Ragavan said...
நல்ல பதிவு. நல்ல பாட்டு//
எங்க ஜிரா-வா இது? இப்படி ஒன்-லைனர்-ல பேசறாரு? நான் இன்னும் நெறய விசயம்...தமிழ்க் கடவுள், காவடி பத்தியெல்லாம் சொல்லப் போறாரு-ன்னுல்ல நெனச்சேன்! //
:) அவருக்கு அதெல்லாம் தெரியாதுங்க. நீங்க சொன்னா கேட்டுக்கிறப் போறாரு. :)
முருகனுக்கு அரோகரா - கந்தனுக்கு அரோகரா - வேலனுக்கு அரோகரா - மாமனுக்கும் அரோகரா - மருகனுக்கும் கோவிந்தா கோவிந்தா
KRS, என்ன இது - அருமையான பதிவுகள் எல்லாம் மொக்கக் கணக்கிலே எடுத்துக்க முடியாது. போனாப்ப் போகுது - உங்களே ( ரொம்ப பிஸியா இருக்கதுனாலே )லிஸ்ட்லே இருந்து எடுத்துடறேன். ஓக்கேயா
//இதைக் கிராமத்து மெட்டில் பாடினா இன்னும் நல்லா இருக்கும் மெளலி அண்ணா! புஷ்பவனம் குப்புசாமியோ இல்லை கானா உலகநாதனோ பாடியும் ஒரு தபா கேக்கணும்!//
ரிப்பீட்டேய்
//அட...இம்புட்டுக் கோவம் வருது? :-)//
மதுரை ஸ்லாங்க்-ல ஒரு பின்னூட்டம்தான் எழுதினேன்...அது இன்னும் மோசமா இருந்ததால....போடாம விட்டுட்டேன். ஆமா எங்க ஆளையே பிடிக்க முடியல்ல?......
இரவிசங்கர். இந்தப் பாட்டிற்குத் தான் ரொம்ப நாளா காத்திருந்தேன். முருகனுக்குக் குத்துப்பாட்டு போட்டப்ப கண்ணனுக்கு எங்கேன்னு கேட்டது நினைவிருக்கும்ன்னு நினைக்கிறேன்.
நீங்கள் சொன்ன வரையறைப்படி சொன்னால் தமிழ்க்கடவுளர்கள் மூவர் - முருகன், கண்ணன், சிவன். சேயோனுக்கும் மாயோனுக்கும் இருக்கும் அளவிற்குப் பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பாக சங்க இலக்கியங்களில் சிவபெருமானுக்கும் பாடல்கள் இருக்கின்றன. இப்போது கிடைத்திருக்கும் இலக்கியங்களில் எண்ணிக்கையை மட்டுமே வைத்துப் பார்த்தால் சிவபெருமானுக்குத் தான் அதிக பாடல்கள் இருக்கின்றன என்று கூட சொல்லலாம் என்று நினைக்கிறேன். பல இலக்கியங்களின் கடவுள் வாழ்த்துகள் நஞ்சுண்ட இறைவனைப் போற்றுவதாக அமைந்திருப்பதை இப்போது நான் செய்து வரும் சங்க இலக்கிய பயிற்சியில் காண்கிறேன்.
முருகனுக்கும் சிவபெருமானுக்கும் தமிழ்க்கடவுளர்கள் என்ற அடைமொழியைத் தருவதில் நிறைய பேருக்குத் தயக்கம் இருப்பதில்லை. ஆனால் கண்ணனுக்கு என்று வரும் போது பெரும் தயக்கம் வந்துவிடுகிறது. அதற்கு என்ன காரணம் என்பதைப் பற்றிப் பேசப் புகுந்தால் மிக நீண்டு விடும். அதை இன்னொரு இடத்தில் பார்க்கலாம். ஆனால் பழந்தமிழர் தெய்வங்கள் என்று பார்க்கும் போது கண்ணனுக்கும் மிகப் பெரிய இடம் இருக்கிறது என்பதை சிறிதே பழந்தமிழ் இலக்கியங்களில் பயிற்சி இருந்தாலும் உணரலாம்.
பாடலின் அடிகள் சிறுத்தும் கொஞ்சமே நீண்டும் இருப்பது சிந்துக்கவி என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். முருகப்பெருமான் மீது அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்துகள் நிறையப் பாடி சிந்துக்கவியைப் பிரபலமாக்கினார். பாரதியாரும் சில சிந்துப் பாடல்கள் பாடியிருக்கிறார். சிந்துப் பாடல்களை யார் மீது வேண்டுமானாலும் பாடலாம்; காவடிச் சிந்துகளாக முருகப் பெருமான் மீது அதிகமாகப் பாடப்பெற்றதால் அது முருகனுக்கே உரியது என்றதொரு மனத்தோற்றம் நமக்கு வந்திருக்கிறது. ஊத்துக்காட்டார் அதனைக் கண்ணனுக்கும் எழுதிவிட்டார்.
இது வரை முதல் மூன்று பகுதிகளை மட்டுமே கேட்டிருக்கிறேன். தாழை மடலும் முல்லையும் கண்ணன் முடியில் சேர்ந்த பின்னர் சாவகாசமாகப் பேசலாம் என்று பேசிக் கொள்ளும் பகுதியை இன்று தான் முதலில் கேட்டேன்.
முட்டையன் கதையை இராகவன் போட்டு அதை மொக்கை என்று சொன்னால் ஏற்றுக் கொள்பவர்கள் இந்த இடுகையையும் மொக்கை என்று ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும் இரவிசங்கர். (இப்படி ஒரு வரையறை செய்தால் நானும் மொக்கை போடும் போது வசதியாக இருக்குமில்லை?! :-) )
//ஷைலஜா said...
நல்ல பாட்டு ரவி கேட்டதே இல்ல இதுவரைக்கும்....//
ஆகா...இப்ப கேட்டீங்களே! மகிழ்ச்சி ஷைலஜா!
//இதுக்கென்ன டோய்
கோய்ன்னுட்டு?:) நீங்க மொக்கை எழுதினாலும் அது KRS(KrishnaRaja sagardam) வழக்கமா எழுதறது தான்!!!சும்மா அருவியா தமிழ் கொட்டுதில்ல அதான்... சம்ஜே?:)//
சந்தடி சாக்குல krs ஐ Krishna Raja Sagarன்னு சொல்லிட்டீங்களே! அந்த அணையில் தானே காவிரியைத் தேக்கி வச்சிக்கிட்டு விடமாட்டேன்-ன்னு சண்டை எல்லாம் போடுவாங்க! :-)
//மதுரையம்பதி said...
மதுரை ஸ்லாங்க்-ல ஒரு பின்னூட்டம்தான் எழுதினேன்...அது இன்னும் மோசமா இருந்ததால....போடாம விட்டுட்டேன்//
ஆகா...தப்பிச்சேன்! மதுரை ஸ்லாங்கா? சூப்பரு! தனியா அனுப்புங்க! படிச்சி சுவைக்கிறேன்!
//ஆமா எங்க ஆளையே பிடிக்க முடியல்ல?......//
ஆபீஸ்-ல ஒரு பெரிய கடப்பாறை அண்ணா! இன்னிக்கி சனிக்கிழமை காலையிலும் கூட work from home!
அடுத்த வாரம் ஃப்ரீ ஆயிடும்! பதிவுல ரவுண்டு கட்டி அடிக்கலாம்!
//G.Ragavan said...
அவருக்கு அதெல்லாம் தெரியாதுங்க. நீங்க சொன்னா கேட்டுக்கிறப் போறாரு. :)//
நம்பிட்டோம்! :-)
இது என்ன இன்னொரு மொக்க யாகப் பரணியா?
இருங்க சீரியஸ் பதிவு போடுவோம்-ல இந்த மேட்டரை வச்சி! அப்போ உங்க சந்தங்கள் சிந்து பாடட்டும்!
//cheena (சீனா) said...
மருகனுக்கும் கோவிந்தா கோவிந்தா//
Dank u! Dank u!
சீனா சாரும் நம்ம கட்சி தானா :-)
//KRS, என்ன இது - அருமையான பதிவுகள் எல்லாம் மொக்கக் கணக்கிலே எடுத்துக்க முடியாது. போனாப்ப் போகுது - உங்களே ( ரொம்ப பிஸியா இருக்கதுனாலே )லிஸ்ட்லே இருந்து எடுத்துடறேன். ஓக்கேயா//
இன்னிக்கி ராத்திரி உங்க மூனு பேர் லிஸ்ட்டும் எழுதி முடிச்சிடுவேன் சீனா சார்!
//குமரன் (Kumaran) said...
இரவிசங்கர். இந்தப் பாட்டிற்குத் தான் ரொம்ப நாளா காத்திருந்தேன். முருகனுக்குக் குத்துப்பாட்டு போட்டப்ப கண்ணனுக்கு எங்கேன்னு கேட்டது நினைவிருக்கும்ன்னு நினைக்கிறேன்.//
இருக்கு! இருக்கு!
காத்திருந்த குமரனுக்கு இப்போ திருப்தி தானே?
//நீங்கள் சொன்ன வரையறைப்படி சொன்னால் தமிழ்க்கடவுளர்கள் மூவர் - முருகன், கண்ணன், சிவன்.//
ஆமாம் குமரன், ஒரு கேள்வி!
பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்-னு சிலம்பில் கூட வருது! ஆனா இப்படியான சிவபெருமானுக்கு ஒரு திணையைக் கூட தராதது ஏனோ? குறிஞ்சி முதலான ஐந்து திணைகளில் ஒன்னு கூட சிவனாருக்கு இல்லியே!
//இப்போது கிடைத்திருக்கும் இலக்கியங்களில் எண்ணிக்கையை மட்டுமே வைத்துப் பார்த்தால் சிவபெருமானுக்குத் தான் அதிக பாடல்கள் இருக்கின்றன என்று கூட சொல்லலாம் என்று நினைக்கிறேன்//
ஹூம்! ஆராய்ச்சிக் கட்டுரை ரெடி ஆயிடுச்சின்னு சொல்லுங்க! எப்போ பதிவைப் பார்க்கலாம்?
//பல இலக்கியங்களின் கடவுள் வாழ்த்துகள் நஞ்சுண்ட இறைவனைப் போற்றுவதாக அமைந்திருப்பதை இப்போது நான் செய்து வரும் சங்க இலக்கிய பயிற்சியில் காண்கிறேன்//
கடவுள் வாழ்த்துப் பகுதிகளைப் பிற்சேர்க்கை, இடைச்செருகல் அது இதுன்னு சிலர் புறம் தள்ளுவாங்க! ஆனா இலக்கியப் பாடல்களின் இடையிடையே வரும் குறிப்புகளை அப்படித் தள்ள முடியாது! அதனால் வாழ்த்துப் பகுதி மட்டும் இல்லாமல், பாட்டின் பகுதியிலும் சிவனாரின் குறிப்புகள் அதிகம் வருகின்றனவா, குமரன்?
//முருகனுக்கும் சிவபெருமானுக்கும் தமிழ்க்கடவுளர்கள் என்ற அடைமொழியைத் தருவதில் நிறைய பேருக்குத் தயக்கம் இருப்பதில்லை. ஆனால் கண்ணனுக்கு என்று வரும் போது பெரும் தயக்கம் வந்துவிடுகிறது. அதற்கு என்ன காரணம் என்பதைப் பற்றிப் பேசப் புகுந்தால் மிக நீண்டு விடும். அதை இன்னொரு இடத்தில் பார்க்கலாம்.//
கண்டிப்பா! நானும் பாதிக் கட்டுரையை எழுதி முடித்து விட்டேன்! என்னைக்குப் பதிவா இடலாம்-னு சொல்லுங்க! சண்டை போடறதுக்கு நல்ல நாள் என்னவோ? :-)))
//ஆனால் பழந்தமிழர் தெய்வங்கள் என்று பார்க்கும் போது கண்ணனுக்கும் மிகப் பெரிய இடம் இருக்கிறது என்பதை சிறிதே பழந்தமிழ் இலக்கியங்களில் பயிற்சி இருந்தாலும் உணரலாம்//
ஆமாம்! மிகவும் உண்மை!
//பாடலின் அடிகள் சிறுத்தும் கொஞ்சமே நீண்டும் இருப்பது சிந்துக்கவி என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்//
ஆமாம் குமரன்! வெண்பாவிலும் சிந்தியல் வெண்பா உண்டு!
//முருகப்பெருமான் மீது அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்துகள் நிறையப் பாடி சிந்துக்கவியைப் பிரபலமாக்கினார்//
சென்னிக்குள நகர் வாசன்..
பச்சைக் கலைமயில் ஆட்டம்..
தெள்ளு தமிழுக்கு உதவும் சீலன்...
ன்னு நிறைய காவடிச் சிந்து நம்ம முருகப் பெருமான் மீது!
//காவடிச் சிந்துகளாக முருகப் பெருமான் மீது அதிகமாகப் பாடப்பெற்றதால் அது முருகனுக்கே உரியது என்றதொரு மனத்தோற்றம் நமக்கு வந்திருக்கிறது. ஊத்துக்காட்டார் அதனைக் கண்ணனுக்கும் எழுதிவிட்டார்//
ஆமாம்! மனத் திரையைக் கிழித்து விட்டார்! :-)
//இது வரை முதல் மூன்று பகுதிகளை மட்டுமே கேட்டிருக்கிறேன். தாழை மடலும் முல்லையும் கண்ணன் முடியில் சேர்ந்த பின்னர் சாவகாசமாகப் பேசலாம் என்று பேசிக் கொள்ளும் பகுதியை இன்று தான் முதலில் கேட்டேன்//
சில பேர் மட்டும் கடைசிப் பத்தியையும் சேர்த்தே பாடுறாங்க குமரன்! ஆனா வரிகள் பாடகருக்குப் பாடகர் மாத்தி மாத்திப் பாடறாங்க!
//முட்டையன் கதையை இராகவன் போட்டு அதை மொக்கை என்று சொன்னால் ஏற்றுக் கொள்பவர்கள் இந்த இடுகையையும் மொக்கை என்று ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும் இரவிசங்கர்//
அதானே! ஒரு வேளை நானும் வீடியோ மட்டும் போட்டிருக்கணுமோ?
//இப்படி ஒரு வரையறை செய்தால் நானும் மொக்கை போடும் போது வசதியாக இருக்குமில்லை?! :-) //
ஓகா! அப்படி வரீங்களா!
சரி சரி! பதிவைப் போடுங்க! நாங்க மொக்கைப் பலகையில் வச்சிப் பார்க்கிறோம்! :-)