Tuesday, January 08, 2008

அனுமத் ஜெயந்தி: சொல்லின் செல்வன் அனுமன்!

உலகில் எத்தனையோ அமரகாவியங்கள் உருவாகியுள்ளன. ஆனால் நம்முடைய பாரத இதிகாசங்களான ராமாயணம் மஹாபாரதம் போல மானுட வாழ்வின் ஒட்டுமொத்த செறிவுகளை பிரதிபலிக்கும் ஒரு இயக்கம் வேறு எங்கும் இல்லை.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் என்றும் பொருந்தும் விதமாக அதன் உணர்ச்சிக் களன் அமைத்திருப்பது இன்றைய ஹைடெக் விஞ்ஞானத்தில் உன்னதமான ஒரு கண்டுபிடிப்புக் கூடத் தரமுடியாத ஆச்சரியமாகும்.

ராமாயண நாயகன் ராமனைப் போல மகாபாரத நாயகன் கண்ணனைப் போல விலங்கினமான வானரைனத்துப் பிரதிநிதியான அனுமன் இந்த இரு இதிகாசங்களிலும் விஞ்சி நின்று தனித்துத் தெரிகிறான்.

இதுவும் கூர்ந்து கவனிக்கப்படவேண்டிய ஒரு சிறப்பு அம்சம். விலங்குகளுக்கு பாவ புண்ணியங்கள் இல்லை.

ஏனென்றால் அவை மனத்தால் வாழ்பவை அல்ல. மனிதனே மனத்தால் வாழ்பவன். மனம் என்று வந்த உடனேயே நேற்று- இன்று- நாளை என்ற மூன்று காலங்கள் வந்துவிடுகின்றன..நேற்றைய நிகழ்வுகள் இன்றைய தாக்கமாகி இன்றைய தாக்கமே நாளைய வாழ்விற்கு அடிப்படையாகி ஒரு வட்ட சுழற்சி ஏற்பட்டு விடுகிறது. இது முடிவில்லாத வாழ்க்கைப்பயணம்.

எப்படி இருப்பினும் மானுடப்பிறப்பு என்பதே அரிதானது.

தாவும் குணம் கொண்டவனும் மனத்தவனுமான வானரன் ஒருவன் அந்த குணத்தை வென்று தர்மத்தின் தூதுவனாக பக்தியின் இருப்பிடமாகத் திகழ்ந்ததால் அவன் அழகானவன் - சுந்தரன் ஆனான்! அதனால் தான் சுந்தரகாண்டம் வந்தது.

மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் வாயு-அஞ்சலை புத்திரனாய் அவதரித்தவன் அனுமன்.
இங்கிதம் அறிந்து பேசும் அனுமனை சொல்லின் செல்வன் என்கிறார் கம்பர்பெருமான்.
அதற்கு உதாரணம்..

இலங்கையில் சீதையைக்கண்டு திரும்பிய அனுமன் வானரவீரர்களுடன் கிஷ்கிந்தைக்கு திரும்புகிறான்.
ஒரே உற்சாகக் கூக்குரல்கள்..குதூகல ஒலிகள்! அவ்வளவு வானரவீரர்களும் வேகமாய் நடந்துவந்து சுக்ரீவனிடம்,: ப்ரபுவே! நமது அனுமன் வெற்றியுடன் திரும்பி இருக்கிறான். அனுமனால் நமக்கெல்லாம் பெருமை.
சீதாபிராட்டியை சிறையினின்றும் மீட்க நாம் உடனே படையெடுத்துச் செல்லலாம் வாருங்கள்" என்றனர்.

ஆனால அனுமன் மட்டும் மூலையில் அடக்கமாய் ஏதும் பேசாது அமைதியாய் நின்று கொண்டிருந்தார்.
அவனை அழைத்து ராம சுக்ரீவன் முன்பு அழைத்துக் கொண்டு நிறுத்திய ஜாம்பவானும் அங்கதனும்,"ப்ரபோ! அனுமன் ஜெயவீரன். அவன் வாயினாலேயே அனைத்து விவரங்களும் அறிவது தான் தங்களுக்கு நிம்மதி" என்று கூறி அனுமனைத் தூண்டி விட்டனர்.
அனுமன் பேசத்தொடங்கினான்.
"கண்டேன் கற்பின் அரசி சீதையை: என்று ஆரம்பித்தான்.

சீதையைப்பற்றி செய்தி கேட்க ஆவலாயிருக்கும் ராமனுக்கு சீதையைக் கண்டதாய் சொல்ல ஆரம்பித்தால் சீதையை எனக் கூறி அடுத்து சொல்ல இருக்கும் அந்தக் கண நேரத்திற்குள் சீதைக்கு ஆபத்து என ராமன் நினைத்து பதட்டமடையக்கூடும் என நினைத்து மகிழ்ச்சி தரக்கூடியதும் மன நிம்மதி தரக்கூடியதுமான கண்டேன் எனும் சொலலி முதலில் கூறுகிறான் என்கிறார் கம்பர்.
மேலும் கண்டேன் சீதையை என்று கம்பன் பாடவில்லை.
கண்டனன் கற்பினுக்கணியை என்றே கம்பன் பாடல் கூறுகிறது.

ஒருக்கால் சீதை ராமனின் வீர பராக்கிரமங்களைக்கேட்டு மயங்கி இலங்கையில் மகிழ்ச்சியுடன் இருக்கிறாளோ என்ற எண்ணம் ராமனுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக கற்பினுக்கணியை என்கிறான் கம்பன்.
ராமனே தங்கள் தேவி தங்களைத்தவிர வேறு எதையும் நினைப்பதில்லை. இராவணனையும் அவனது செல்வங்களையும் ஒரு சிறு துரும்புக்கு சமமாய் எண்ணுகிறாள். இதை நான் என் கண்ணால் கண்டேன்.எனவே சீதை கற்பின் செல்வி என்கிற இவ்வளவு விஷயங்களையும் ஒரே வரியில் சொல்லி விடுகிறான்.

கண்டனன் கற்பினுக்கணியை கண்களால்....என்று பாடல் தொடங்குகிறது.

அனுமன் பிறந்த நாள் ஆற்றல் பிறந்த நாள்! இந்த நன்னாளில் அவனைத்தொழுது வாழ்வில் வளமும் நலமும் பெறுவோம்!

5 comments :

வடுவூர் குமார் said...

மனம் என்று வந்த உடனேயே நேற்று- இன்று- நாளை என்ற மூன்று காலங்கள் வந்துவிடுகின்றன
அப்ப மனத்தை ஒரே காலத்தில் நிறுத்தினால் அல்லது இல்லாமல் செய்ய முடிந்தால் என்னாகும்?
அந்த படம் நாமக்கல் ஆஞ்சநேயரா?பார்த்து ரொம்ப வருடங்கள் ஆகிவிட்டது.

LA_Ram said...

மிகவும் ரசித்தேன்.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

LA_Ram said...

மிகவும் ரசித்தேன்.

-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ஷைலஜா

அனுமத் ஜெயந்திக்கு அருமையான பதிவு! கண்ணன் பாட்டில் அனுமனும் வந்து விட்டானே! :-)
ச்சும்மா...கண்ணன் கதையில் அனுமன் வரும் போது, கண்ணன் பாட்டில் வரக்கூடாதா என்ன?

ஒரு வேண்டுகோள்:
இந்த வலைப்பூ = கண்ணன் "பாட்டு"
எனவே
"கண்டேன் கற்பினுக்கு அணியை" என்ற முழுப் பாடலையும் கொடுத்து...பாட்டாக்கி விடவும்! :-)

தி. ரா. ச.(T.R.C.) said...

ராமனைப் போற்றிப் பாடிடும் நேரம் ரகசியமாய் வருவான்
கைத் தாளங்கள் போட்டு ஆனந்தமாக மனங்குளிர்ந்தே மகிழ்வான்
கண் மடல் மூடிமெய் மலர் சூடி செவி மடல் திறந்திடுவான்
நாதனின் காதை யாவும் கேட்டு விழி மழை சொரிந்திடுவான்

ஜெய் ராம் ஸ்ரீ ராம்

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP