கிரிதர கோபாலா - மீராவின் கதை!
ராஜபுதனத்து அரண்மனை அதன் உப்பரிகையிலிருந்து கீழே பார்த்துக்கொண்டிருக்கிறாள் அந்த அழகான சிறுமி.
வீதியில் ஒரே ஆரவாரம், கோலாகலம் ! ஏதோகல்யாண ஊர்வலம்! அலங்கரிக்கப்பட்ட யானை மீது மாப்பிள்ளை அமர்ந்திருக்கிறார்.
சட்டென தன் தாயைப்பார்த்து அந்தச் சிறுமி கேட்கிறாள்.
'அம்மா யார் அது குதிரைமீது?"
'அவர் ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளப்போகும் மாப்பிள்ளை"
"அம்மா என் மணவாளன் யார்?"
கள்ளங்கபடமற்ற குழந்தையின் கேள்வி அந்தத் தாயைப் பரவசப்படுத்த அங்கே உயர்ந்த பீடத்திலிலிருந்த கிரிதரகோபாலனின்
சிலையைக் காண்பித்தாள்." இவன்தான் உன் மணவாளன்" என்கிறாள்
அந்தக் கணமே அந்தச் சிறுமியின் மனதை ஆட்கொண்டுவிட்டான் கிரிதரகோபாலன்.
அந்தச் சிறுமி தான் மீரா.
மீராபாய் என்பார்கள் வடக்கில் பெரும்பாலும்.
அரசகுமாரியாய்ப் பிறந்து அனைத்தையும் துறந்து ஆண்டவனைத் தேடிக்கொண்ட மாபெரும் பக்தை, மீரா.
ராதையின் மறு அவதாரம் மீரா என்பார்கள் வடநாட்டில்.
ராஜபுத்ர சிற்றரசனின் மகளாய் கிபி1547ல் அவதரித்தாள் மீரா.
அவளுடைய மூன்றவது வயதில் அரண்மனைக்கு வந்த துறவி அளித்த
கிரிதரகோபாலனின் சிலையைத் தான் அவள் தாய் காண்பித்து அவளுடைய மணவாளன் என வேடிக்கையாய் சொன்னாள்.
ஆனால் மீராவுக்கு அது வேடிக்கையாய் விளங்காமல் உயிரில் கலந்த உறவாய் வியாபிக்க ஆரம்பித்தது. விக்கிரஹத்துக்கு நீராட்டி
அலங்கரித்து அதனுடன் ஆடிப்பாடி என பக்தியோடு வளர ஆரம்பித்தாள்.
அவளுடைய எட்டாவது வயதில்(சில குறிப்பு 13வயது என்கிறது) சித்தூர் இளவரசன் போஜராஜனுடம் மீராவுக்குத் திருமணம் நடந்தது. மீரா கிரிதர கோபாலனின் விக்ரகத்துடன் சித்தூர் சென்றாள்.
மேவார் ராணாக்களின் குலதெய்வம் சிவனும் சக்தியும்.
மீராவோ கண்ணனைத் தவிர வேறு தெய்வங்களைத் தொழாதவள். இதிலேயே பிரச்சினை ஆரம்பித்தது.
ஆயினும் மீரா பணிவோடு தன் கொள்கையைக் கணவனிடம் கூறி
அவனுக்கு வேண்டிய பணிவிடைகளைக் குறைவின்றி செய்தாள்; குடும்பகாரியங்களை சரியாக கவனித்து முடித்தபின்னரே தனது தெய்வ மணாளனுக்கு வழிபாடுசெய்வாள்; ஆடல்பாடல் சேவைகளில் மனதைப் பறி கொடுப்பாள்.
போஜராசன் ராஜபுத்ரவீரன் ..அழகன் ..மீராவிடம் காதல்கொண்ட அன்புக் கணவன். அவளை உயிரினும் மேலாய் நேசித்தான். அவளோ ஆண்டவனிடமே மனதைச் செலுத்தினாள். தெய்வீக்காதலைப் புரிந்துகொள்ளாத புகுந்த வீட்டார் அவள் கற்பில் மாசு கூற, ஒரு நாள் போஜன் உருவிய வாளோடு மிராவின் பூஜை அறைக்குள் நுழைந்தான்.
அங்கே மீரா கிரிதர கோபால விக்கிரஹத்திடம் மனமுருக பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் அவன் கோபம சட்டென மறைந்தது .
ஆனாலும் மனைவிக்கு புத்தி பேதலித்து விட்டதென வருத்தமாயும் வந்தது .
மீரா மீதுள்ள அன்பில் அவளுடைய கண்ணனுக்காக ஆலயம் கட்டி கொடுத்தான்.
அக் கோயில் மூலமாய் மீராவின் வெளி உலக உறவு வளர்ந்தது. சத்சங்கம் சாதுக்கள் என மீரா பக்தியுடன் பாடிஆடி பக்தியின் உச்சத்திற்கே போய்விட்டாள். மீராவின் புகழ் நாடெங்கும் பரவியது.
மொகலாய மன்னர் அக்பர் காதுக்கு அது எட்டியது.
மன்னர் சர்வ சமய சமரசத்தை ஆதரித்தவர். அவர் மீராவின்ன் பக்தியால் கவரப்பட்டு அவளைக் காண விரும்பினார்.
காலங்காலமாய் இரு பிரிவினருக்குள் கடும்பகை வேறு .அதனால் அக்பர் தன்னை ஹிந்து சாது போல மாறுவேடம் போட்டுக்கொண்டு சித்துர் வந்து மீராவின் பாதங்களை பயபக்தியுடன் தொட்டார். அவளுடைய கிருஷ்ணனுக்கு விலை உயர்ந்த முத்து மாலைகளை அளித்துச் சென்றார்.
இந்தச் செய்தி போஜனுக்கு எட்டி விட்டது, வந்துபோனது அக்பரென்றும் சித்துரின் ஜன்மசத்ரு மீராவின் பாதங்களைத் தொட்டது
மன்னிக்க முடியாத குற்றம் என்றும் ராஜபுத்திர குலதிற்கே அது களங்கம் என்றும் கொதித்தனர்.
மீராவை ஆற்ரில் குதித்து உயிரைவிட போஜன் கட்டளையிட்டான்.
மீராவும் அதை ஏற்று ஆற்றில் குதித்தாள் ஆனால் பின்னாலேயெ கண்னனின் அன்புக்கரங்கள் அவளை அணைத்து மேலேற்றியது.
காதோரம் 'இன்றோடு உலகபந்தம் உனக்கு அற்றது, ஸ்ரீ பிருந்தவனம் சென்று அங்கே நீ என்னைச் சந்திப்பாய் 'எனக் கூறி மறைகிறார்
ப்ருந்தாவனத்தில் மீரா கண்ணனுக்காக பாடிய பாடல்கள் அனைத்தும் அற்புதமானவை.
சூர்தாஸ் துளசிதாஸ் மீரா என ஹிந்தி கவிகளில் மூவரே முதல் சிறப்பு வாய்ந்தவர்கள்.
குஜராத்தியிலும் கவிதை எழுதினாள். குஜராத்தி இலக்கியத்தில் நர்சீ மேத்தாவுக்கு அடுத்த இடம் மிராவுக்கு உண்டு.
வையந் தகளியாக வார் கடலே நெய்யாக இந்த பிரபஞ்ச விசாலத்தின் அழகொளியிலும் பின்னர் உருகி உருகி
'அன்பே தகளியா, ஆர்வமே நெய்யா இன்று சிந்தை இடு திரியா' ஏற்றிய அன்பு விளக்கின் ஒளியிலும் முதலாழ்வார்கள் இறைவனைக்
காணவில்லையா! அப்படியே மீராவும் பாடுகிறாள்.
எந்தன் உடலை விளக்காக்கி
இடுதிரியாக்கி இதயத்தை
உன்பால் உள்ள காதலையே
எண்ணை ஆக ஏற்றிடுவேன்
இரவும்பகலும் எரியட்டும்
அருள்மிகுஅடியார் கூடிடும் உன்
அழகிய சந்நிதி முன்னிலையில்
உன்னைப் பிரிந்து ஒருக்கணமும்
இருக்கமாட்டேன் இனி ஐயா
என்னை உனதாய் ஏற்றுக்கொள்
என்னை உனைப்போல் ஆக்கிவிடு
தமிழ்நாட்டு ஆண்டாளுக்கும் ராஜபுதனத்து மீராவிற்கும் வாழ்வின் நோக்கம் ஒன்றாகவே இருந்தது.
கண்ணனையே மணாளனாய் மனத்தில் வரித்துக்கொண்ட மாமங்கையர்கள் இருவரும்.
' மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழ்கிலேன்' என்ற ஆண்டாளை ஸ்ரீரங்கதிற்கே அரங்கன் அழைத்தான்.
மீராவையும் கண்ணன் ப்ருந்தாவனத்திற்கு அழைத்தான்.
திருஅரங்கத்தில் இறைவனுடன் இரண்ரடறக் கலந்தாள் ஆண்டாள்.
துவாரகையில் ஆடிப்பாடியபடியே கண்ணன் சந்நிதியில் மீராவும் இறைவனோடு ஒன்றாகக் கலந்தாள் என்கிறது மீராவின் வரலாறு.
பல்லாண்டுகள் மறைந்தாலும் மீராவின் பாடல்கள்
காற்றினிலே வரும் கீதமாய்
இன்னமும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.
******************************************************************************************************************
4 comments :
இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக ...
ச்சே...
கண்ணன் பாட்டில் முதன் முறையாக
கதையும், உரைநடையும்!!
அருமையாகச் சொல்லி இருக்கீங்க ஷைலஜா..
ஆண்டாளும் ஆழ்வாரும் விளக்கத்துக்கு அழகு சேர்க்கிறார்கள்!
அதுவும் அன்பே தகளியா என்னுமிடத்தில்!
அக்பர் பற்றிய குறிப்புகள் பற்ற வரலாற்றுச் சர்ச்சைகள் இருக்கக் கூடும். மற்றபடி கதை அருமை!
மீரா-போஜன் போய் மீரா-பஜன் ஆன கதையைக் கண்ணன் பாட்டில் தொடுத்த உங்களுக்கு நன்றி.
'காலமெல்லாம் அவன் காதலை எண்ணி உருகுமோ என் உள்ளம்' என்ற பொன்னான வரியை அடியேன் ஆழ்மனத்தில் நிறுத்திய பக்த மீராபாயின் திருக்கதையை இன்னொரு முறை படிக்கத் தந்ததற்கு நன்றி திருவரங்கப்ரியா.
அம்மா எம்.எஸின் குரலில் மீராவைக் கேட்டு வளர்ந்தோம்.
இதைப் பாடாத பெண் குழந்தைகளே இருக்க முடியாது அப்போது.
கண்ணனும் வந்திருப்பான். நமக்குத் தான் தெரியவில்லை.
மீரா கதையை மீண்டும் படிக்கக் கொடுத்ததற்கு நன்றி,
ஷைலஜா.
நான் என் மகளுக்கு மீராவின் பெயர் சூட்டுவேன்