Wednesday, March 21, 2007

எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே!


எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே!

யதுவீரனை நந்தகுமாரனை நினைந்து
எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே!

மலரே இருவிழி பங்கஜ மலரே திருமுகமும்
மலரே இருகரம் தாமரை மலரே திருவடிகள்
மந்தஹாசமும் தவழ்ந்த சுந்தர முகாரவிந்தம் நினைந்து
எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே!

அன்னை தந்தை பதியும் அவன்
அருந்துணை நவநிதியும் அவன் (என்)
இன்பமும் அழகும் அவனே
எழில் தரும் மணி வடிவவனே
மீரா பிரபு கிரிதரகோபாலனை வரதனை நினைதொறும்
எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே



பாடியவர்: எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி
திரைப்படம்: மீரா
வெளிவந்த வருடம்: 1945
இசையமைப்பாளர்: எஸ்.வி. வெங்கடராமன்

அருஞ்சொற்பொருள்:

யதுவீரன் - யாதவ குல வீரன்
நந்தகுமாரன் - நந்த கோப குமாரன்
பங்கஜமலர் - தாமரை மலர்
மந்தஹாஸம் - புன்னகை
சுந்தர - அழகிய
முகாரவிந்தம் - முக + அரவிந்தம் = முகமாகிய தாமரை
பதி - கணவன்

14 comments :

குமரன் (Kumaran) said...

எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத இன்னொரு பாடல் இந்தப் பாடல். மனம் ஆழ்ந்த அமைதி அடைய வேண்டும் என்றால் இந்தப் பாடலைக் கேட்டால் போதும்.

வெற்றி said...

குமரன்,
நல்லதொரு பாடல். பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.
சில ஐயங்கள் குமரன்.

நவநிதியும் == ??

நவ என்றால் ஒன்பது என அறிந்திருக்கிறேன். அப்படியாயின் நவநிதி = ஒன்பது செல்வம்??
என் மேலுள்ள புரிதல் சரியாயின் அந்த ஒன்பது செல்வங்கள் எவை?

மிக்க நன்றி.

கோவி.கண்ணன் said...

குமரன்,

படங்கள் அழகாக இருக்கிறது.

குமரன் (Kumaran) said...

ஆமாம் வெற்றி. நவநிதி என்றால் ஒன்பது விதமான செல்வங்கள் தான். செல்வத்திற்கு அதிபதியான குபேரனிடம் ஒன்பது விதமான செல்வங்கள் (நவநிதிகள்) இருப்பதாகச் சொல்வார்கள். அவை சங்கநிதி (சங்கின் வடிவில் இருப்பது), பதுமநிதி (தாமரை வடிவில் இருப்பது), மகரநிதி (சுறாமீன் வடிவில் இருப்பது), கச்சபநிதி (ஆமை வடிவில் இருப்பது), முகுட நிதி (தலையணி - மகுட வடிவில் இருப்பது), நந்த நிதி (இன்பமளிப்பது), நீல நிதி (நீல நிறத்தில் இருப்பது), கர்வ (karva - not Gharva) நிதி (குறளன் வடிவில் இருப்பது), மஹாபதும நிதி (பெருந்தாமரை வடிவில் இருப்பது) - பெயர்களைப் பார்த்தால் அவை குபேரனின் பொற்குவைகளின் பெயர்களைப் போல் இருக்கின்றன - தவம் முயல்வார் அடையும் சித்திகளைச் செல்வங்களாகச் சொன்னார்கள் என்றும் சொல்வதுண்டு.

***

கண்ணன் அண்ணா. ஒரு படம் தானே இருக்கிறது?! ஓ. படம் கள் நன்றாக இருக்கிறது என்கிறீர்களா ஆமாம். அவன் மது-ராபதி தானே. :-)

கோவி.கண்ணன் said...

//
கண்ணன் அண்ணா. ஒரு படம் தானே இருக்கிறது?! ஓ. படம் கள் நன்றாக இருக்கிறது என்கிறீர்களா ஆமாம். அவன் மது-ராபதி தானே. :-)
//
சொல் ஒரு சொல்லில் வில் தொடுக்கும் வல்லவரே, மற்ற இடுகைளிலும் உள்ளப் படங்கள் நன்றாக இருக்கிறது என்றும் சொல்லும் ஒரே பின்னூட்டமாக போட்டேன். மற்ற இடுகைகளில் பின்னூட்டவில்லை. அங்கும் படங்களை அழகு சொக்க வைத்தது. இந்த *கள்* ஒரு பொருள் மயக்கம் இங்கே ஆகுபெயர் இடுகைகளில் உள்ள பல படங்களுக்கு என்று கொள்ளவும்.

G.Ragavan said...

சமீபத்தில் டிவிடிகள் விலை குறைந்ததால் வாங்கிய டிவிடியில் மீராவும் ஒன்று. நாற்பது ரூபாய்க்கு ஒரிஜினல் டிவிடி கிடைத்தது. படத்தை ஓடவிட்டேன். அப்பப்பா! எத்தனை பாடல்கள். அத்தனையும் கண்ணன் பாட்டுகள். கண்ணன் அடியவர் எவராயினும் அந்த ஒரு படப் பாட்டுகள் போதும். அத்தனை பாட்டுகள். அதிலும் மதுராவிலேயே சென்று படம் பிடித்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன். சமீபத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு மதுரா சென்றிருந்த பொழுது அங்கு வசதிகள் மிகக் குறைவாக இருப்பதைக் கண்டு....ஒழுங்கான விளக்குகள் கூட இல்லை. மிகப்பெரிய கிராமமாக இருக்கிறது மதுரா. அந்தக்காலத்தில் எப்படி அத்தனை தொலைவு சென்று தங்கிப் படமெடுத்தார்களோ என்று நினைத்துப் பார்த்தால்...அப்பப்பா! நீங்களும் அந்தப் படத்திலிருந்து பாடலைக் கொடுத்திருகின்றீர்கள்.

மெளலி (மதுரையம்பதி) said...

"பார்வை ஒன்றே போதுமே, கள்ள பார்வை ஒன்றே போதுமெ, சங்க பதுமநிதி இரண்டும் வலியதந்தாலென்ன...."
என்ற ஊத்துக்காடு பாடலும் நினைவில் வந்தது....

ஆம், மீரா ஒரு அதி அற்புதமான பாடல்கள் நிறைந்த படம். நன்றி குமரன். மேலும் உங்களது நவநிதி லிஸ்ட் அருமை.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

குமரா!
யூ ரியூப்பின் புண்ணியத்தில் இப்பாடலைப் பல தடவை கேட்டேன். தாங்கள் எழுத்தாகவும் தந்துள்ளீர்கள்.நன்றி!. அன்றைய மணிப்பிரவாகம் தூக்கலாக உள்ளது.

குமரன் (Kumaran) said...

இராகவன். நீங்கள் சொல்வது சரி தான். இந்த ஒரு படப் பாடல்கள் போதும். கண்ணன் அடியார்கள் காலமெல்லாம் அவன் காதலை எண்ணி உருகிக் கொண்டிருக்க. என் கல்லூரி நண்பன் ஒருவன் மீரா பாடல்களை ஹார்மோனியப் பெட்டியை வைத்துக் கொண்டு எப்போதுமே பாடிக் கொண்டிருப்பான். பொருள் புரியாத இடங்களில் பொருளைக் கேட்டுத் தெரிந்து கொள்வான். இன்றும் அந்தப் பாடல்களைப் பாடிக் கொண்டிருக்கிறான் என்பதை அவனுடன் அண்மையில் பேசிய போது தெரிந்து கொண்டேன்.

நல்ல வேலையில இருக்கீங்க இராகவன். பணியின் காரணமாக பல இடங்களுக்குச் செல்கிறீர்கள்; அப்படியே மதுரா போன்ற இடங்களுக்கும் செல்கிறீர்கள். கொடுத்துவைத்தவர்.

குமரன் (Kumaran) said...

நன்றி மௌலி ஐயா. இந்தப் பாடலை இடுவதற்கு முன் 'பார்வை ஒன்றே போதுமே' நினைவிற்கு வந்தது. எதனை இடுவது என்று ஒரு நிமிடம் சிந்தித்துப் பின்னர் இந்தப் பாடலை இட்டேன்.

***

ஆமாம் யோகன் ஐயா. நானும் நினைத்துக் கொண்டேன். மணிப்பவள நடை தூக்கலாக இருக்கிறது என்று எனக்கும் இடுகையை இடும் போது தோன்றியது. அதனால் தான் அருஞ்சொற்பொருள் தந்தேன். ஆனால் பல முறை முன்பு கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் மணிப்பவள நடை உறுத்தியதில்லை. அருணகிரியாரின் பாடல்களைப் படித்ததன் விளைவு என்று எண்ணுகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

குமரன், அருமையான படைப்பு , இந்தப் படம் . பாடல்கள் அனைத்து இரண்டு மொழிகளிலும் அமுதமாக இருக்கும்.

இசையைப் போட்டுவிட்டு அமைதியாகி விடலாம். அந்த அம்மாவின் புண்ணியத்தாஅல் நாங்கள் அனுபவித்த , அனுபவித்துக் கொண்டிருக்கும் மகிழ்ச்சியை அளவிடவே முடியாது. மிகவும் நன்றி.

குமரன் (Kumaran) said...

உண்மை வல்லி அம்மா. காரிலும் எப்போதாவது உடற்பயிற்சி செய்யும் போதும் மீரா படப்பாடல்களையும் ஜேசுதாஸ் பாடிய திருப்புகழ்ப்பாடல்களையும் சீர்காழியார் பாடிய அபிராமி அந்தாதியையும் கேட்பேன். இந்தப் பாடல்களை எந்த இடையூறும் இன்றிக் கேட்கவென்றே ட்ரட்மில்லுக்குச் செல்வதும் உண்டு. :-)

வல்லிசிம்ஹன் said...

ட்ரெட் மில்லுக்கும் புண்ணியம்.
அடைக்கலம் தேட இதுவும் அருமையான இடம்தான்:-)

குமரன் (Kumaran) said...

ஆமாம் வல்லி அம்மா. அடைக்கலம் பெற அருமையான இடம் டிரெட் மில். :-)

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP