Wednesday, April 27, 2011

சாய்பாபாவின் குரலிலே ஒரு கண்ணன் பாட்டு!

ஸ்ரீ சத்ய சாயி பாபா அவர்கட்கு நல்லடக்க நாளிலே அஞ்சலி!

அவரைப் பற்றி, பலரும் பலவும், புகழ்ந்தும் இகழ்ந்தும் பேசினாலும், காணொளியில் நுணுக்கினாலும்....
ஒரே புள்ளி: Sai Baba is "also" a Social Worker! So, let his soul rest in peace!

* "ஸ்வாமி நீலு" என்று கிராமத்துப் பெண்கள் சொல்லும் வறண்ட கிராமக் குடிநீர்
* மாணவர்களிடம் வசூல் செய்யாத "கல்வித் தந்தை"
* நோயாளிகளிடம் வசூல் செய்யாத "மருத்துவத் தந்தை"
* Very few places in India for a free open heart surgery!
* தமிழால் வளர்ந்து தமிழரை அழிப்பது போல், ஆன்மீகத்தால் வளர்ந்து ஆன்மீகத்தை அழிக்காத பான்மை!

பெரியவர் இரணியகசிபு: "அஹம் பிரம்மாஸ்மி = நான் கடவுள்!"
பிள்ளைப் பிரகலாதன்: "மனிதன் குற்றங் குறை உடையவனே!
அவன் 'பகவான்' அல்லன்! பகவானை அடைபவன்!"

வியத்தலும் இலமே! இகழ்தலும் இலமே!
ஒரு ஆன்மா அமைதியுற வேண்டுவோம்!!
சத்ய சாயி பாபா அவர்கட்கு அஞ்சலி!


அவர் குரலிலேயே ஒலிக்கும், கூட்டுப் பாடல், கண்ணன் பாடல்.....இன்று கண்ணன் பாட்டிலே!!




க்ஷீராப்தி சயனா நாராயணா
ஸ்ரீலக்ஷ்மி ரமணா நாராயணா
(திரு-பாற்கடல் துஞ்சிடும் நாராயணா
திரு-மாமகள் கொஞ்சிடும் நாராயணா)

நாராயணா லக்ஷ்மி நாராயணா
நரஹரி ரூபா நாராயணா
(நாராயணா திரு நாராயணா
ஆள்-அரி உருவே நாராயணா)

வைகுண்ட வாசா நாராயணா
வைதேகி மோகன நாராயணா
(வைகுந்த வேந்தமே நாராயணா
நப்பின்னை காந்தமே நாராயணா)

நாராயணா ஹரி நாராயணா
நதஜன பரிபால நாராயணா
(நாராயணா அரி நாராயணா
நாதியில்லார் தாங்கும் நாராயணா)

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்!

Monday, April 18, 2011

சுத்தி சுத்தி குழப்பியடிக்கும் ஒரு கண்ணன் பாட்டு!

ஹரிதாசர்கள் பாட்டுன்னா எப்படி இருக்கும்?


கிருஷ்ணா நீ பேகனே பாரோ.


அல்லி நோடலு ராமா இல்லி நோடலு ராமா.


இப்படி பெரும்பாலும் மிகவும் எளிமையாக, கன்னடமே தெரியலேன்னாக்கூட தட்டுத் தடுமாறி, ஓரளவுக்கு புரிஞ்சிக்கக்கூடியதா இருக்கும். ஆனா, இன்னிக்கு பார்க்கப் போகிற பாடல் அப்படி இல்லை.


ஸ்ரீ கனகதாசர் எழுதியுள்ள - ஈதநீக வாசுதேவனு - என்ற இந்த பாடல் - முழுக்க முழுக்க குறியீடுகளால் நிரம்பியுள்ளது. மற்ற பாடல்களைப் போல் எளிதாக விளக்கமுடியாமல் எவ்வளவு விரிவாக சொல்ல வேண்டியிருக்குன்னு நீங்களே பாருங்க. ஒவ்வொரு வார்த்தையும் பிரித்து எழுதி, அதன் பொருளை புரிந்து கொண்டு, பிறகு மொத்த சரணத்தையும் ரசிச்சி அனுபவிக்குமாறு இருக்கும். மொதல்லே இந்த பாடலையும், அதன் பொருளையும் பாத்துடுலாம்.


****


ஈதநீக வாசுதேவனு லோகதொடேயா


தாசகொலிது தேரலேறி தேஜி பிடிது நடேசிதாத (ஈதநீக)


உலகத்தைக் காக்கும் கடவுள், இந்த வாசுதேவன் இவனே


தன் பக்தனுக்காக தேரேறி சாரதியாக சென்றவன் இவனே


தனுஜேயாள்வ தன்னநய்யன பிதன முந்தே கௌரவேந்திரன


அனுஜயாளிதவன சிரவ கத்தரிசுதா


அனுஜயாளிதவன பெங்கி முட்டதந்தே காய்தா ருக்மன


அனுஜயாளிதவன மூர்த்தியன்னு நோடிரோ (ஈதநீக)


சூரிய அஸ்தமனத்திற்கு முன் ஜயத்ரதனின் தலையை துண்டிப்பேன் - இல்லையேல் தீக்குளிப்பேன் என்று சொன்ன அர்ஜுனனை தீக்குளிக்காமல் காத்த ஸ்ரீ வாசுதேவனின் அழகான மூர்த்தியை பாருங்கள் (ஈதநீக)


க்ரூரனாத பணிபபான தருணிஜனு நிரீக்ஷிசி யாக


வீரநெஜ்ஜே எசுகே ஒப்புதன்னு ஈக்ஷிசி


தாருணிய பததளொங்கி சரண பஜப நரன காய்தா


பாரகர்த்தனாத தேவ ஈத நோடிரோ (ஈதநீக)


சூரிய புத்திரனான கர்ணன் போரின்போது நாகாஸ்திரத்தை அர்ஜுனன் மேல் எய்தபோது பூமியை காலால் அழுத்தி தேரை கீழே அழுத்தி அர்ஜுனனைக் காத்த ஸ்ரீ கிருஷ்ணனை பாருங்கள் (ஈதநீக)


வ்யோமகேஷ இப்ப தெஷேய ஆமஹா மஹிமேயுள்ள


சாமஜவனு ஏறி பருவ சக்தியனு ஈக்ஷிசி


பிரேமதிந்தா எரவநோட்டி டிங்கரிகன காய்தா


சார்வபௌம படதாதி கேசவன நோடிரோ (ஈதநீக)


ஈசன் இருக்கும் திசையிலிருந்து மிகவும் பலம் பொருந்திய யானையின் மீதேறி வந்து சண்டையிட்ட (பகதத்தனின்) விஷ்ணு அஸ்திரத்தை தன் மார்பில் மாலையாக ஏந்தி அர்ஜுனனைக் காத்த அந்த கேசவனை பாருங்கள் (ஈதநீக)


***


என்னடா, பாட்டுக்கும் பொருளுக்கும் சம்மந்தம் இருக்கற மாதிரியே தெரியலையேன்னு நினைக்கிறீங்களா? பொறுமை பொறுமை.


விளக்கத்துக்கு போவதற்கு முன், இந்த பாட்டின் காணொளியை பாத்துடுவோம். PBS தன் அருமையான குரலில் மிகமிக பக்தி/ உணர்ச்சிபூர்வமாக பாடி, ராஜ்குமார் நடித்துள்ள காட்சியில் இந்தப் பாடல்.



***


இப்போ பாடலின் விளக்கம். முதலில் பல்லவி, பிறகு ஒவ்வொரு சரணமா பார்க்கலாம். ரெடி? ஜூட்.


பல்லவி:


அருஞ்சொற்பொருள்:


ஈத = இவர்


ஈக = இப்போ


தாசகொலிது = தாச + கொலிது = பக்தன், இந்த இடத்தில், அர்ஜுனன். So, அர்ஜுனனைக் காப்பாற்ற


தேஜி = குதிரை


விளக்கம்:


தன் பக்தன் அர்ஜுனனைக் காப்பாற்ற, தேரிலேறி பார்த்த-சாரதியாய் சென்ற, இந்த உலகத்தை ரட்சிக்கும் வாசுதேவன் இவனே.


சரணம் 1:


அருஞ்சொற்பொருள்:


தனுஜே = த + அனுஜே = அரக்கன் + சகோதரி = அரக்கனின் சகோதரி = (மகாபாரதத்தில் வரும்) ஹிடிம்பா


ஆள்வ தன்னநய்யன பிதன = ஆள்வ + அண்ண + அய்யன + பிதன = கணவனின் அண்ணனின் தந்தையின் தந்தை. அதாவது, ஹிடிம்பாவின் கணவன் பீமன், அவர் அண்ணன் தருமர், அவர் தந்தை யமதேவன் (அம்சம்), அவர் தந்தை சூரியதேவன்.


கௌரவேந்திரன அனுஜெயாளிதவன = கௌரவேந்திரனின் + அனுஜே + ஆளிதவன. அதாவது, துரியோதனின் + சகோதரியின் + கணவனின் = ஜயத்ரதனின்


மூன்றாம் வரி:


அனுஜெயாளிதவன பெங்கி முட்டதந்தே காய்த


அனுஜே + ஆளிதவன = சகோதரியின் + கணவன் = (கிருஷ்ணனின் சகோதரி) சுபத்ராவின் கணவன் அர்ஜுனன்.


பெங்கி = நெருப்பு


முட்டதந்தே = சுடாமல்,


எரிக்காமல் காய்த = காப்பாற்றிய அதாவது, அர்ஜுனனை நெருப்பு சுடாமல் காப்பாற்றிய


நான்காம் வரி:


அனுஜே + ஆளிதவன = சகோதரியின் + கணவன் = (ருக்மனின்) சகோதரி ருக்மிணி. அவர் கணவர் கிருஷ்ணன்.


மூர்த்தியன்னு நோடிரோ = ரூபத்தை பாருங்கள்.



விளக்கக் கதை:


சக்கர வியூகத்துக்குள் நுழைந்த அபிமன்யு, வெளியில் வர முடியாதவாறு அந்த வியூகத்தை மூடிய ஜெயத்ரதனே, அபிமன்யுவின் மரணத்திற்கு காரணம் என்ற அர்ஜுனன், அடுத்த நாள் மாலைக்குள், ஜயத்ரதனை கொல்வேன் என்று சபதம் செய்தான். அப்படி கொல்ல முடியாவிடில், அன்று மாலையே நெருப்பில் குதித்து தன்னுயிரையும் மாய்த்துக் கொள்வேன் என்றும் கூறினான். பின்னர் கிருஷ்ணனின் உதவியால், ஜயத்ரதனை கொன்றான் அர்ஜுனன். இப்படியாக, அர்ஜுனன் உயிருக்கு பங்கம் வராமல், அர்ஜுனனைக் காப்பாற்றினான் கிருஷ்ணன்.


சரணம் 2 :


அருஞ்சொற்பொருள்:


க்ரூரனாத = மிகவும் அபாயமான


பணிபபான = பணிப + பாண = நாகம் + அஸ்திரம் = நாகாஸ்திரம்


தருணிஜனு = தருணி + ஜனு = சூரியனுக்கு + பிறந்த. அதாவது, சூரியனுக்கு பிறந்த, கர்ணன்.


நிரீக்ஷிசி = தக்க சமயத்துக்கு, தக்க சமயத்தில்


வீரநெஜ்ஜே எசுகே = மிகவும் வீரத்துடன், எய்த அம்பு


பப்புதன்னு = வருவதை


ஈக்ஷிசி = பார்த்து


தாருணிய பததளொங்கி = பூமியை காலால் அழுத்தி


சரண பசப நரன காய்த = சரணாகதி செய்த நரனை (அர்ஜுனனை) காப்பாற்றிய


பாரகர்த்த = அனைத்து செயல்களுக்கும் காரணமானவன். அதாவது, பிறப்பு, இறப்பு, காத்தல் ஆகிய அனைத்திற்கும் காரணமான


விளக்கக் கதை:


நாகாஸ்திரத்தை அர்ஜுனன் மேல் மட்டும்தான் பிரயோகிக்க வேண்டுமென்றும், அதுவும் ஒரே ஒருமுறைதான் பயன்படுத்த வேண்டுமென்றும், கர்ணனிடம் குந்தி வரம் பெற்றிருந்தார். அதன்படி, கர்ணன் அதை பிரயோகிக்கும்போது, அர்ஜுனனைக் காக்க வேண்டி, கிருஷ்ணன், பூமியை அழுத்தி, தேரை சற்று கீழே அழுத்தி, அர்ஜுனன் மார்புக்கு வந்த அந்த நாகாஸ்திரத்தை, கிரீடத்தில் படுமாறு செய்து, அர்ஜுனனைக் காப்பாற்றினார்.


சரணம் 3 :


அருஞ்சொற்பொருள்:


வ்யோமகேஷ = வ்யோம + கேஷ = காற்று + முடி. அதாவது, தன் தலைமுடியை காற்றில் வலை போல் விரித்து, பாய்ந்து வரும் கங்கையை அடக்கியதால், சிவனுக்கு 'வ்யோமகேசன்' என்று பெயர்.


இப்ப தெஷேய = இருக்கும் திசையில்.


சாமஜ = யானை


சக்திய = (இந்த இடத்தில்) நாராயண அஸ்திரம்


எரவநோட்டி = இடையில் (நடுவில்) புகுந்து


டிங்கரிகன = தாசனை (பக்தனை)


விளக்கக் கதை:


சிவன் இருக்கும் திசை. அதாவது கைலாயம் இருக்கும் திசை வடகிழக்கு. அந்த திசையில் இருந்த ப்ரக்ஜ்யோதிஷா என்னும் ஊரின் அரசன் பகதத்தன். தன் யானையான 'சுப்ரதீபன்' மீதேறி, கௌரவர்கள் சார்பாக போரிட்ட மாவீரன். அந்தப் போரில் ஒரு முறை, பகதத்தன், வைஷ்ணவாஸ்திரம் என்னும் அஸ்திரத்தை ஏவ, அதனால் அர்ஜுனனுக்கு கண்டிப்பாக மரணம் ஏற்படுமென்று தெரிந்து கொண்ட ஸ்ரீ கிருஷ்ணன், நடுவில் புகுந்து அதை தன் மார்பில் ஏற்றார். அது அவர் கழுத்தில் மாலையாக விழுந்தது.


***


அவ்வளவுதான். இப்படியாக, இந்த பாட்டில், அர்ஜுனனைக் காப்பாற்றிய கிருஷ்ணனின் மகிமையை புகழ்ந்து பாடியுள்ளார் ஸ்ரீ கனகதாசர். இப்போ மறுபடி அந்த காணொளியை பாருங்கள். சூப்பரா புரியும்.


அனைத்தும் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.


***


Tuesday, April 12, 2011

இராமன் கதை கேளுங்கள்! இராமா கனவேமிரா!

கண்ணன் பாட்டு நேயர்கள் அனைவருக்கும் இனிய இராம நவமி வாழ்த்துக்கள்!
இன்றைய கண்ணன் பாட்டு, இராமன் பாட்டு! இராகவன் பாட்டு! அதுவும் இசைஞானி இளையராஜா இசையில்...


சிப்பிக்குள் முத்து (ஸ்வாதி முத்யம்) திரைப்படம் அனைவருக்கும் தெரியும்! அவ்வப்போது கமலஹாசனின் நடிப்புத் திறனை உண்மையாலுமே உரைகல்லால் உறைத்துக் காட்டும் சிலவே சில படங்களுள் இதுவும் ஒன்று! விஸ்வநாத் இயக்கம் அல்லவா!

* அன்று ஒரு இராகவன், வயிற்றில் லவ-குசர்களோடு அவளைக் காட்டுக்கு அனுப்பினான்!
* இன்று சினிமாவில், லவனோடு கூடிய இந்தச் சீதையை இராகவன் கைப்பிடிக்கிறான்!


சற்றே குன்றிய கமல், மகனுடன் விதவையாய் நிற்கும் ராதிகா - இவர்களுக்குள் என்ன பெருசா பொருத்தம் இருக்கு?
= பொருத்தம் இருந்து தானா காதல் வாழ்க்கை மலருது?
* சீதை இராமனை விட மூத்தவள் அல்லவா!
* அவள் பொன், இவன் கரி அல்லவா!

ஆனாலும் ராதிகா படும் துன்பங்களுக்காக, கமல், இராமனிடம் வேண்டுகிறான்(ர்), அல்லாவுக்குத் தீ மிதிக்கிறான்(ர்)! ஆனால் ஒன்றும் நடக்கவில்லை!

பாட்டி, அவளுக்கென்று ஒரு துணை வேண்டுமெனச் சொல்ல, ஒரு விவரமும் புரியாத கமல்...
எம்பெருமானுக்கும் தாயாருக்கும் நடக்கும் திருமாங்கல்ய தாரணத்திலே, அதே தாலியைப் பற்றி அந்தப் பேதைக்குச் சூட்டுவதும்...
இராகவன் சீதையை மணக்கும் காட்சி போலவே, கமல் ராதிகாவை மணக்கும் காட்சி, அழகாகச் சித்தரித்து வரும் சித்திரம்! தெலுங்கில் பாடல் இன்னும் இனிமையாக இருக்கு! = ராமா கனவேமிரா!


ஒரு கதாகாலட்சேபம், நாதஸ்வர-தவில், வில்லுப்பாட்டு, வீணை மட்டல் என்று பலவும் கலந்து, சினிமா இசை + மரபு இசை என்று இணைத்துக் கொடுத்திருப்பார் இளையராஜா!
அதைச் செவ்வனே செய்து முடித்திருப்பார் SPB! சிரிப்பு, சுயம்வரக் கேலி, பக்தி, உருக்கம், திருமாங்கல்ய தாரண ஏக்கம் என்று அத்தனையும் கலந்து...

இதோ, இராம நவமி அன்று அவள்-இராகவன் திருக்கல்யாண வைபோகத்தை...
பாட்டிலே பாவித்துப் பாருங்கள்! - பாவனை அதனைக் கூடில் அவனையும் கூடலாமே!

சாஸ்திர விரோதமான சினிமா என்றெல்லாம் எண்ணாமல்,
அதிலும் எம்பெருமானையே காணும் உள்ளம், அதுவே இராகவனைப் பற்றும் உள்ளம்...
இராமன் கதை கேளுங்கள்! இராமா கனவேமிரா!


(Telugu Version amidst Epic Scenes)


or
(Tamil Version just audio)


ராமன் கதை கேளுங்கள் - ஸ்ரீ
ரகுராமன் கதை கேளுங்கள்!
(ராமன் கதை கேளுங்கள்)

அலங்காரச் சீதை, அழகு அரசாளும் கோதை
அவள் விழிகண்டு, குடிகொண்டு, மணமாலை தந்த
(ராமன் கதை கேளுங்கள்)

(சீதையின் சுயம்வரம் நிச்சயிக்கப்பட்ட நாளிலே,
ஜனகனின் மண்டபத்தில் மாலை ஏந்தி வந்த ஜானகியை,
வெண்ணிலா மண்ணிலா வந்ததென்று மன்னவரெல்லாம் பார்க்க,
ஸ்ரீ ராமசந்திர மூர்த்தி...
கண்ணெடுத்துப் பார்க்க மாட்டாரோ என்று கவலை கொண்டார்களாம் சீதாதேவியின் செல்லத்தோழிகள்)

ராமன் கதை கேளுங்கள் - ஸ்ரீ
ரகுராமன் கதை கேளுங்கள்!
(ராமன் கதை கேளுங்கள்)

புலிகளின் பலம் கொண்ட புருஷர்கள் வந்திருந்தார்
யானையின் பலம் கொண்ட வேந்தர்கள் அங்கிருந்தார்
தோளில் மலையைத் தூக்கிய வீரர் வந்தார்
இடிகளைக் கையில் பிடிப்பவர் பலர் இருந்தார்

நடந்தாள்...சீதை நடந்தாள்
விழி மலர்ந்தாள்...சபை அளந்தாள்
வரவு கண்டு, அவள் அழகு கண்டு சிவ
தனுசின் நாணும் வீணை போல அறுந்தது!
(ராமன் கதை கேளுங்கள்)

வில்லொடிக்க அங்கு வந்த வேந்தர் தம் பல்லது உடைபட விழுந்தார் - சிலர் எழுந்தார்
தொடை தட்டி எழுந்தவர்கள் முட்டி தெறித்துவிட சட்டென்று பூமியில் விழுந்தார்
காலும் நோக இரு கையும் நோக தம் தோளது நோகவே அழுதார்
சிலர் இடுப்பைப் பிடித்தபடி சுளுக்கு எடுத்தபடி ஆசனம் தேடி அமர்ந்தார்

ஆஹா வீரமில்லையா, வில்லொடிக்க ஆண்கள் யாரும் இல்லையா?
ஆஹா வீரமில்லையா, வில்லொடிக்க ஆண்கள் யாரும் இல்லையா?
(ராமாய ராம பத்ராய ராமச் சந்தராய நமஹ)

தசரத ராமன் தான் தாவி வந்தான்
வில்லையே ஒரு கண்ணால் பார்த்து நின்றான்
சீதையை மறு கண்ணால் பார்த்து நின்றான்
மறு நொடியில் வில்லெடுத்து அம்பு தொடுத்தான்

படபட படபட படபட படபட
ஒலியுடன் முறிந்தது சிவ தனுசு
அந்த ஒலியுடன் சிரித்தது அவள் மனசு!

ஜெயஜெய ராமா சீதையின் ராமா
ஜெயஜெய ராமா சீதையின் ராமா
தசரத ராமா ஜனகனும் மாமா
தசரத ராமா ஜனகனும் மாமா


சீதா கல்யாண வைபோகமே - ஸ்ரீ
ராமா கல்யாண வைபோகமே!
சீதா கல்யாண வைபோகமே - ஸ்ரீ
ராமா கல்யாண வைபோகமே!

காணக் காண அழகாகுமே
இன்னும் ஆயிரம் கண் வேண்டுமே
சீதா கல்யாண வைபோகமே - ஸ்ரீ
ராம கல்யாண வைபோகமே!

ராமனே அதோ பாரப்பா.....
அலங்காரச் சீதை, அழகு அரசாளும் கோதை
அவள் விழிகண்டு, குடிகொண்டு, மணமாலை தந்த
ராமன் கதை கேளுங்கள்!
ராமன் கதை கேளுங்கள்!

படம்: சிப்பிக்குள் முத்து
இசை: இளையராஜா
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் (SPB)
வரிகள்: வைரமுத்து
ராகம்: ரீதி கெளளை


* ஆயிரம் மனஸ்தாபங்கள் இருப்பது போல் தெரிந்தாலும்...
* அவனை விட இவள் மூத்தவளே என்றாலும்...
* அவன் இவளைப் புரிந்து கொண்டானோ, இவள் அவனைப் புரிந்து கொண்டாளோ...
* அவள் கற்பை இவன் சோதித்தானோ, அவன் கற்பை இவள் காத்தாளோ...
* இவள் காடேகினாளோ, இல்லை அவன் தனிமைக் காட்டுக்குள் வாழ்ந்தானோ...

அவனுக்கு இவள்!
இவளுக்கு அவன்!

இந்த இணை ஜோடி மயில்கள்...திவ்ய தம்பதிகள்...இவர்களுக்குப் பல்லாண்டு பல்லாண்டு!

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP