Thursday, March 14, 2013

கண்ணனைக் காணாதே...

மோக நிலவிதுவே - குளிர்
மோதிக் களித்திடும் இரவினிலே
சோகம் அறிந்திலையோ - கவி
சொன்ன நிலையும் இதுவன்றோ?
போகம் மறந்தினையோ - மது
பொங்கி வழிகின்ற வயதினிலே
தேகம் அழிகிறதே - கண்ணன்
தீண்டும் விரல்நுனி காணாதே!

உண்ணும் நினைப்பிலையே - உடை
உடுத்தும் எண்ணமும் வரவிலையே!
பண்ணை இசைத்திடும் பாங்கியரும்
பாவம் இவளென்று சொல்லினரே!
கன்னம் காயவிலையே - வானில்
காலை மாலை கண்டதிலையே
கண்ணன் உடனுறை காலமெலாம்
கண்கள் தூங்கிப் போனதிலையே!*

கூவி யுனையழைத்து இருள்
கூட்டிலே இருவர் தானமர்ந்து மலர்த்
தூவி மகிழ்ந்திட்டு உடல்
தூரிகை மேல்வரை எழிலுடன்
தாவி உனைக் கட்டி - மனம்
தாங்கொணா இன்பமே போதெலாம்
பாவி சுகித்திருப்பேன், அன்றேல்
பாலை நிலத்துப் பாலொளியாய்
ஆவி பிரிவதன்றோ - உடல்
ஆக்கினை பூமிக் கானதன்றோ!

***
*வாராக்கால் துஞ்சா வரின் துஞ்சா ஆயிடை
ஆரஅஞர் உற்றன கண். (1179)

8 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

(ஆரஅஞர் - ஆரஞர்)

sury siva said...

வசந்த குமாரே !
வசந்தத்தில் மோகத்தின்
வாசனையைத் தெளித்த
வாசனே !! என் வசந்தனே !!

கண்ணனை நினைந்து நினைந்து
ஏங்கும் இந்த கீதத்தை யான்
கானடா ராகத்தில் பாடுவேன்.

உமது இமெயில் இல்லையே ?
எங்கு அனுப்புவது ?
பரவாயில்லை.... அந்த
பரந்தாமன் கண்ணனுக்கே
அனுப்பிவிடுவேன்.

சுப்பு தாத்தா.
meenasury@gmail.com

sury siva said...

சுந்தர கவிதையை
தாத்தா பாட இங்கு கேளுங்கள்.

subburathinam
www.subbuthatha.blogspot.in

கோமதி அரசு said...

கவிதை அருமை, அதை சூரிசார் பாடியது சிறப்பு.

இரா. வசந்த குமார். said...

அன்பு சுப்பு தாத்தா...

மிக்க மகிழ்வாய் உணர்கிறேன்...! சிதறிக் கிடக்கும் முத்துக்களை பொன் நாரில் கோர்த்து ஜொலிக்கும் மாலையாக ஆக்குவது போல், எவ்வித ராக அமைப்பும் இல்லாமல் எழுதிய வரிகளை மிக அழகாய் ஓர் இசைப் பாடலாகப் பாடியுள்ளீர்கள்..! அருமை...அருமை ஐயா... தன்யனானேன்...!!

நேற்று மற்றுமொரு கவிதையும் எழுதினேன். அதையும் நீங்கள் பாடல் ஆக்கினால் இன்னும் மகிழ்வேன்.

ஏக்கர் நிலம் வேண்டும் - சக்தி
ஏக்கர் நிலம் வேண்டும் - அங்கு
பாக்குத் தோட்டமும் கயல்
பாயும் குளிர்ச் சுனையும்
தேக்குத் தூண்களில் மாளிகை
தெள்ளிய நீர்க் கேணியும்
பூக்கும் ஆயிரம் பூக்களும்
பூமி மேலெலாம் பச்சையும்

ஆற்றங் கரையிலே வாயிலும்
ஆடிக் களித்திட ஓடமும்
போற்றி வாழ்த்திடப் பெண்டிரும்
போரை வென்றிட நண்பரும் - பூச்
சாற்றிக் கும்பிட சாமியும் - பால்
சாறு தந்திட ஆக்களும் - கொடும்
கூற்றம் வாரா வேலியும் - நல்
கூறல் கேட்கும் மக்களும்

மாடி மேலெழு சந்திரிகை
மாதம் முழுவதும் பறவைகள்
கூடி வாழ்ந்திடக் கூரையில்
கூவி அமைத்த அறைகளும்
ஓடி ஆடிட ஆற்றலும்
ஓய்வில் அருந்திட தென்னையும்
ஏடி உன்னைக் கேட்கிறேன்
எனக்குத் தருவ தெப்போது?

#பாரதியாருக்கு நன்றியுடன்.

எனது மின்னஞ்சல் : vasanthfriend.raju@gmail.com

எழுதிய மற்றும் சிலவற்றை http://kaalapayani.blogspot.com/ என்ற வலைப்பதிவில் காணலாம்.

இரா. வசந்த குமார். said...

அன்பு திண்டுக்கல் தனபாலன் சார்...

நன்றிகள்.

***

அன்பு கோமதி அரசு மேடம்...

நன்றிகள்.

Rathnavel Natarajan said...

அருமை.
நன்றி.

Kavinaya said...

வாவ்! வசந்த், அருமை! சொன்னாற் போல் சுப்பு தாத்தா மிகவும் உணர்வு பூர்வமாகப் பாடி அசத்தியிருக்கிறார்! இருவருக்கும் நன்றிகள் பல.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP