குழல்காரன்!
ஆவினங்களை மேய்ச்சலுக்கு ஓட்டிச்
செல்வதென்றால் வெகு பிரியம், குட்டிக் கிருஷ்ணனுக்கு! பட்டுப் போன்ற மென்மையுடன் கொழு
கொழுவென்று இருக்கும் மாடுகளை ஒவ்வொன்றாக ஆசையுடன் தடவிக் கொடுப்பான். சின்னஞ்சிறு
கன்றுகளின் கழுத்தைக் கட்டிக் கொண்டு கொஞ்சுவான். கன்றோடு கன்றாக பாலருந்துவான். கன்றோடு
கன்றாக படுத்துறங்குவான். மேய்ந்து முடிந்ததும், மாடுகளே அவனைத் தேடி வந்து விடும்.
தங்கள் மூக்கால் அவனை இலேசாக உரசி எழுப்பி, தம் முதுகின் மீது அமரச் செய்து, அவைகளே
அவனை வீட்டுக்குக் கூட்டிச் செல்லும்!
மேய்ச்சலுக்குப் போகும் போது,
மாடுகளை இந்தப் புறம் மேய விட்டு, பிள்ளைகள் எல்லோரும் அந்தப் புறம் விளையாடுவார்கள்.
அன்றைக்கும் அப்படித்தான், பிள்ளைகள் கண்ணாமூச்சி ஆடத் தீர்மானித்தார்கள். “அதோ… அந்த
மரத்தை ஓடிப் போய் தொட்டு விட்டுத் திரும்ப வேண்டும். கடைசியில் வருகிறவன்தான் ஒளிந்திருப்பவர்களைக்
கண்டு பிடிக்க வேண்டும்”, என்று கிருஷ்ணன் சொன்னதற்கிணங்க, எல்லோரும் ஓடிப் போய் தூரத்தில்
இருந்த அந்த மரத்தைத் தொட்டு விட்டுத் திரும்ப வந்தார்கள். சுதாமன் தான் கடைசியாய்
வந்தான்.
சுதாமன் கண்களை இறுக மூடிக் கொண்டு,
“ஒன்று…இரண்டு…மூன்று…” என்று எண்ணத் தொடங்க, எல்லோரும் ஓடிச் சென்று மரத்துக்குப்
பின்னால், புதருக்குப் பின்னால், பாறைக்குப் பின்னால், இப்படி அவரவருக்குத் தோன்றிய
இடங்களில் ஒளிந்து கொண்டர்கள். கிருஷ்ணன் மட்டும் சுற்றிச் சுற்றிப் பார்த்துக் கொண்டே
அவர்களை விட்டுச் சிறிது தூரம் விலகி வந்து விட்டான்!
அவன் வந்து சேர்ந்த இடம்தான்
என்ன அழகு! இயற்கை அன்னை தன் அன்பையெல்லாம் அந்த இடத்திலேயே பொழிந்து விட்டிருந்தாளோ
என்று நினைக்கும்படி இருந்தது அந்த இடம். அழகான தாமரைக் குளம் ஒன்று. சுற்றிலும் பலவிதமான
மரங்கள் அடர்ந்திருந்தன. வித விதமான செடிகளும், புதர்களும் மண்டியிருந்தன. நெடிதுயர்ந்த
மூங்கில் மரங்கள் குனிந்து பூமியில் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தது போல் இருந்தது.
நட்புணர்வோடு, மகிழ்ச்சியாக சுற்றி வந்தன, வண்ண வண்ணப் பறவைகள். அந்த இடத்தைப் பார்த்தவுடன்
குட்டிக் கிருஷ்ணனுக்கு மிகவும் பிடித்து விட்டது. எங்கே ஒளிந்து கொள்ளலாம் என்று அவசரமாக
சுற்றும் முற்றும் பார்த்தான்… அதோ அந்தப் பெரிய மரத்தின் பின்னால் ஒளியலாம் என்று
அங்கே சென்றான்.
இதற்குள் சுதாமன் எல்லாப் பிள்ளைகளையும்
கண்டு பிடித்து விட்டிருந்தான், கிருஷ்ணனைத் தவிர. தெரிந்த இடங்களிலெல்லாம் தேடிக்
களைத்து, இப்போது எல்லோரும் சேர்ந்து, கொஞ்சம் கவலையுடனேயே கிருஷ்ணனைத் தேட ஆரம்பித்திருந்தார்கள்.
இங்கே, கிருஷ்ணனைத் தன்னிடம்
வைத்திருந்த மரத்திற்கு ஒரே கொண்டாட்டமாக இருந்தது! “உலகாளும் பரந்தாமன் என்னிடத்தில்
இருக்கிறான்!” அது இலேசாக, “கிசுகிசு”வென்று, தன் பக்கத்தில் இருந்த மரத்திற்கு சேதி
சொன்னது. அது, தன் பக்கத்தில் இருந்த மலர்ச்செடிக்குச் சொன்னது. அது, தன் அருகில் விளையாடிக்
கொண்டிருந்த மயிலிடம் சொன்னது. இப்படியாக, காட்டுத் தீ போல் அந்தப் பகுதி முழுவதும்
கிருஷ்ணன் வந்திருக்கும் செய்தி, ஒரு நொடியில் பரவி விட்டது!
அமைதியாக இருந்த குளத்தில், இப்போது
தாமரை மலர்கள் ‘குப்’பென்று பூத்தன. மல்லிகை, மந்தாரை மலர்கள் மலர்ந்து சிரிக்க, பாரிஜாத
மலர்களும் பூத்துக் குலுங்கி, மணம் பரப்பின. குயில்களெல்லாம் சந்தோஷ கீதம்
இசைத்தன. மயில்கள் எல்லாம் ஒன்று கூடி, தம் தோகையை விரித்தாடி, தம் மகிழ்ச்சியைத் தெரிவித்தன.
மூங்கில் மரங்களுக்கிடையில் புகுந்த காற்று, தன் பங்கிற்கு இனிமையான இசையொலி எழுப்பியது.
மயில்கள் ஆடுவதைப் பார்த்து, அடடா, நாம்தான் நம் வேலையை மறந்து விட்டோம் போலும் என
நினைத்து, வானத்தில் கருமேகங்கள் ஒன்றாகக் கூடி, மலர்த் தூவலாக, மழைத் தூறல் ஆரம்பித்தது.
இவ்வளவு கலாட்டாவும், சப்தங்களும்,
காற்றில் கலந்து வந்த மலர்களின் மணமும், கிருஷ்ணனைத் தேடிக் கொண்டிருந்த பிள்ளைகளின்
கவனத்தைக் கவர்ந்தது. சிறிது நேர முயற்சிக்குப் பின், அவனைக் கண்டு பிடித்து விட்டார்கள்!
“கிருஷ்ணா! கிருஷ்ணா! கிருஷ்ணா!”
என்று அவனைச் சுற்றி ஒரே ஆட்டமும் கொண்டாட்டமும்தான்! ஆனால் கிருஷ்ணனின் முகத்தில்
மட்டும் எந்த சந்தோஷமும் இல்லை! மாறாக, அவனுடைய அழகான முகத்தில் கோபத்தின் ரேகை இலேசாக
எட்டிப் பார்த்தது.
கிருஷ்ணன் தன்னைச் சுற்றிலும்
தலைகீழாக மாறிவிட்டிருந்த இயற்கையைப் பார்த்தான். இந்த இயற்கையல்லவா நம்மைக் காட்டிக்
கொடுத்து விட்டது என்று எண்ணமிட்டான். சின்னக் கைகளை இடுப்பின் இருபுறமும் வைத்துக்
கொண்டு சுற்றிலும் ஒரு முறை கோபப் பார்வை பார்த்தான். அவன் நண்பர்களும் கூட இலேசான
அச்சத்துடன் அமைதியாக நின்றிருந்தார்கள்.
அவன் கோபத்தைக் கண்டு இத்தனை
நேரம் சந்தோஷம் கொண்டாடிக் கொண்டிருந்த அத்தனை உயிரினங்களும் நடுங்கி விட்டன! எல்லாம்
ஓடி வந்து கிருஷ்ணனைப் பணிந்தன.
“கிருஷ்ணா… எங்களை மன்னித்து
விடு. உன்னைக் கண்ட பரவசத்தில் எங்களையே நாங்கள் மறந்து, இவ்வாறு செய்து விட்டோம்.
உன்னைக் காட்டிக் கொடுக்கும் எண்ணமே எங்களிடம் இல்லை”.
“அதெப்படி! என்ன சொன்னாலும் நீங்கள்
செய்தது தவறுதான்!” கிருஷ்ணனின் கோபம் மாறியதாகத் தெரியவில்லை.
மூங்கிலிடை புகுந்த காற்றும்,
மூங்கிலும், குயிலும், மயிலும், மரங்களும், மலர்களும், தாமரைகளும், எல்லாம் சேர்ந்து,
“கிருஷ்ணா. உனக்கு இன்னும் கோபம் தீரவில்லையென்றால், எங்களுக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும்
கொடு. ஏற்றுக் கொள்கிறோம்”, என்று கண்ணீருடன் தலை வணங்கின.
இப்போது குட்டிக் கிருஷ்ணனின்
எழில் வதனத்தில் இலேசாகப் புன்னகை அரும்பியது. “ஆம், உங்கள் அனைவருக்குமே கண்டிப்பாக
தண்டனை உண்டு!” என்றான்.
“மயிலே! இனி உன் இறகுகளை நான்
என் முடியில் அணிந்து கொள்ளப் போகிறேன்!”
“மலர்களே! நீங்கள் எல்லோரும்
சேர்ந்து மாலையாகி*, என் மார்பில் தவழ வேண்டும்!”
“மூங்கில் மரமே! உன்னிடம் காற்று
புகுந்து எழுப்பிய இனிய நாதத்தை இனி நானே எழுப்புவேன். காற்றே, நீ என்னிலிருந்து எழுந்து
மூங்கிலில் புகுந்து அதற்கு உதவுவாய்! மூங்கிலைக் குழலாக்கி, நானே வைத்துக் கொள்வேன்.
குயிலோ குழலோ என்னும்படி குயில்களே, உங்கள் கீதங்களையும் அதில் இசைப்பேன்!”
ஆகா, தண்டனையென்றால் இப்படியல்லவா
இருக்க வேண்டும்! மகிழ்ச்சி வெள்ளம் அந்த வனமெங்கும் பொங்கி ஆர்ப்பரித்தது! அனைத்து
உயிர்களும் மீண்டும் மீண்டும் கிருஷ்ணனைப் பணிந்து வணங்கின.
பிறகு கிருஷ்ணன் தன் நண்பர்களை
நோக்கி, “நீங்கள் எல்லாம் என்னைக் கண்டுபிடித்ததில் எனக்கு மகிழ்ச்சியே! இவ்வளவு நேரமும்
உங்கள் அனைவரிடமும் சும்மாதான் விளையாடினேன்!” என்று கூறி தன் திருக்கரங்களினால் அவர்களைத்
தீண்டி, தன் திருமேனியுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான்!
ஆம்! அடியவர்களிடம் அகப்படுவதுதான்
அந்தப் பொல்லாத கிருஷ்ணனுக்கு மிகவும் பிடித்த விஷயமாயிற்றே!
--கவிநயா
*வனமாலியின் வைஜெயந்தி மாலை என்பது
மல்லிகை, மந்தாரை, தாமரை, மற்றும் பாரிஜாத மலர்களால் ஆனது என்று வாசித்த நினைவு.
அனைவருக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி
வாழ்த்துகள்!
நன்றி: வல்லமை
படங்களுக்கு நன்றி: http://shirdisaibaba100.blogspot.in/2011/06/lord-krishna-beautiful-childhood-photos.html
படங்களுக்கு நன்றி: http://shirdisaibaba100.blogspot.in/2011/06/lord-krishna-beautiful-childhood-photos.html
11 comments :
சிறப்பான பகிர்வு...
தங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்...
நன்றி...
நன்றி திரு.தனபாலன்!
இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள் கவிநயா.
இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்
நன்றி கைலாஷி, மற்றும் சக்தி.
யாருமே பதிவு படிக்கலை போல :(
“மயிலே! இனி உன் இறகுகளை நான் என் முடியில் அணிந்து கொள்ளப் போகிறேன்!”
“மலர்களே! நீங்கள் எல்லோரும் சேர்ந்து மாலையாகி*, என் மார்பில் தவழ வேண்டும்!”
“மூங்கில் மரமே! உன்னிடம் காற்று புகுந்து எழுப்பிய இனிய நாதத்தை இனி நானே எழுப்புவேன். காற்றே, நீ என்னிலிருந்து எழுந்து மூங்கிலில் புகுந்து அதற்கு உதவுவாய்! மூங்கிலைக் குழலாக்கி, நானே வைத்துக் கொள்வேன். குயிலோ குழலோ என்னும்படி குயில்களே, உங்கள் கீதங்களையும் அதில் இசைப்பேன்!”//
என்ன அருமையான தண்டனை!
கீதங்கள் இசைத்து உயிர்களை அவன் பால் சரண் அடைய செய்து விட்டார்.
கிருஷ்ணஜெயந்தி வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் கவிநயா.
கண்ணன் என்னும் கருந்தெய்வம் காட்சிப் பழகிக் கிடந்தால் தான் இப்படி எல்லாம் எழுத இயலும். அருமை.
//என்ன அருமையான தண்டனை!
கீதங்கள் இசைத்து உயிர்களை அவன் பால் சரண் அடைய செய்து விட்டார்.
கிருஷ்ணஜெயந்தி வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் கவிநயா.//
மிக்க நன்றி கோமதி அம்மா!
//கண்ணன் என்னும் கருந்தெய்வம் காட்சிப் பழகிக் கிடந்தால் தான் இப்படி எல்லாம் எழுத இயலும். அருமை.//
உங்களுக்குப் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி குமரன். மிக்க நன்றி :)
“மயிலே! இனி உன் இறகுகளை நான் என் முடியில் அணிந்து கொள்ளப் போகிறேன்!”
“மலர்களே! நீங்கள் எல்லோரும் சேர்ந்து மாலையாகி*, என் மார்பில் தவழ வேண்டும்!”
“மூங்கில் மரமே! உன்னிடம் காற்று புகுந்து எழுப்பிய இனிய நாதத்தை இனி நானே எழுப்புவேன். காற்றே, நீ என்னிலிருந்து எழுந்து மூங்கிலில் புகுந்து அதற்கு உதவுவாய்! மூங்கிலைக் குழலாக்கி, நானே வைத்துக் கொள்வேன். குயிலோ குழலோ என்னும்படி குயில்களே, உங்கள் கீதங்களையும் அதில் இசைப்பேன்!”//
BEAUTIFUL!
//BEAUTIFUL!//
நன்றி லலிதாம்மா! :)