Tuesday, May 25, 2010

சிரித்தது செங்கட் சீயம்!







இன்று நரசிம்ம ஜயந்தியை முன்னிட்டு இந்தப்பதிவு!


அன்று ஸ்ரீரங்கம் அரங்கன் கோயிலில் ஒரே ஆரவாரம்! ‘ஆதிகவியான வால்மீகியின் இராமாயண காவியத்தை தமிழில் செய்து அரங்கேற்றத் துணிந்த இந்தக் கம்பன் என்பவன் யாராம்?” என்று ஒருவருக்கொருவர் வியப்பும் திகைப்்புமாகக் கேட்டுக்கொண்டனர்.

திருவரங்க நகரம் அந்த நாளில் தமிழிலும் வடமொழியிலும் தேர்ந்த பண்டிதர்களைக்கொண்டிருந்தது. அங்கே தங்களது புலமைக்குப்பாராட்டு கிடைப்பதை விரும்பாத புலவர்களே இல்லை.

இங்கு தனது இராமாயணக்காதை அரங்கேறுவதே தனக்குச்சிறப்பு என்று கம்பன் நினைத்தான்.

.

கம்பனின் கதையைக்கேட்டுத்தான் பார்க்கலாமே என்று சிலர் ஆர்வமுடன் முன்வந்தனர். அவர்களின் முயற்சியில்

அரங்கன் கோயிலில் பிராட்டியாரின் சந்நிதி முன்பாக இருக்கும் நாலுகால் கல்மண்டபத்தில் அரங்கேற்ற ஏற்பாடுகள் ஆயத்தமாயின.

வால்மீகியான தெய்வ மாக்கவி மாட்சி தரிக்கவே இதை நான் புனைந்தேன் என்றான். கம்பன்.

பிறகு இராமாயணக்காதையை தான் இயற்றிய பாடல்களுடன் கூற ஆரம்பிக்கிறான்.

. பல புலவர்களும், கதை கேட்பவர்களும், அமர்ந்திருக்கும் அந்த இடத்தில் அப்போது, யுத்த காண்டம் அரங்கேற்றம் ஆரம்பிக்கின்றது.

”விபீஷணன் ராவணனுக்கு எவ்வளவோ அறிவுரைகள் கூறினான் காமத்தில் மதி இழந்த இராவணன் அவைகளைப்பொருட்படுத்தாமல் விபீஷணனை இகழத்தொடங்கினான்.

“விபீஷணா! மானுடர் வலியர் என்றாய்! ஏன்...? அச்சமோ? அவர்பால் அன்புமோ உனக்கு? கூனியின் சூழ்ச்சியால் அரசிழந்து வனம் புகுந்து என் சூழ்ச்சியால் தன் மனைவியை இழந்தும் கழிந்துபோகா உயிரைச் சுமந்து கொண்டிருக்கும் மனிதர்களின் வலிமையை உன்னைத்தவிர யார் மதிப்பர்? அவனோ என்னை வெல்லுவன்?’ என்று கத்தினான் .

“மனம் வருந்திய விபீஷணன்,”அண்ணா!! நீர் இராமன் என்னும் நாராயணனைக் கேவலமாய் நினைக்கவேண்டாம். ஒப்புயர்வில்லாத வீரர்கள் அந்த நாராயணனைப் பகைத்து அழிந்து போயிருக்கின்றனர் அத்தகையவர்களில் ஒருவன் தான் இரணியன் என்பவன்.” என்று சொல்லி இரணியனின் வரலாற்றையும் கூறினான்.

இப்படி கம்பன் கூறும்போது, சில பண்டிதர்கள் திகைத்தனர்.


”உமக்கு நரசிம்மாவதாரம் எழுத ஆசையிருந்தால், தனியாக எழுதிவிடலாமே! இங்கு எதற்கு இதைச் சேர்க்க வேண்டும்?” என்று சீறினார் ஒருவர்.


மற்றவர்.” ஆமாம்! இதை ஒப்புக் கொள்ள முடியாது! அனைத்தும் தவறு “ என்று பொங்கி எழுந்தார்.

”: புலவர்களே! அமைதி! கம்பர் என்ன சொல்கிறார் என்று முதலில் கேட்கலாம்! கம்பரின் ராமாயணம் முடிவதற்குள் இறைவனின் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால், இந்த ராமாயணம் காப்பியமாக அனுமதிக்கப் படாது. அதுவரையில் நாம் பொறுமை காக்க வேண்டியது அவசியம். கம்பரே! நீர் தொடரும்!” என்று அவைத்தலைவர் அனுமதி அளித்தார்.

பெருமூச்சுடன், கம்பர் தொடர்ந்தார்

நசை திறந்து இலங்கப் பொங்கி, 'நன்று நன்று' என்ன நக்கு;
விசை திறந்து உருமு வீழ்ந்தது என்னவே, தூணின் வென்றி
இசை திறந்து, உயர்ந்த கையால் எற்றினான்; என்றலொடும்;
திசை திறந்து, அண்டம் கீறிச் சிரித்தது செங்கட் சீயம்!



அவ்வளவுதான்.......


ஒரு புலவர் (வேகமாக எழுந்து,” புலவரே! பாடலை மீண்டும் படியுங்கள்!” என்றார்

கம்பர் படிக்க, புலவர் பொருள் கேட்க, கம்பர் பாடலை விளக்கினார்.

”'சிரித்தது செங்கட் சீயம்' என்கிறீரே! எங்காவது சிங்கம் சிரிக்குமா? நீர் கேட்டதுண்டா? அவையில் யாராவது இதைப் பார்த்ததுண்டா?”

அவையில் சிரிப்பு!;


கம்பர், இந்தச் சிரிப்பையும் கிண்டல் பார்வைகளையும் பொருட்படுத்தாமல் அடுத்த பாடலை ஆரம்பித்தார்.

அவைத் தலைவர் இப்போது,”புலவரே! அவர் கேள்விக்கு விளக்கமளித்து விட்டு, அடுத்த பாடலுக்குச் செல்லுங்கள்!” என்றார் உத்தரவிடும் குரலில்.

கம்பர் திகைத்தார்.தன்னிலை மறந்து காவியம் எழுதும் போது கடவுளின் ஆணையாக வந்த சொற்களை கடவுளே அறிவார்! .அபிராமி பட்டருக்கும் இதே நிலைதானே ஏற்பட்டது?


அவையில் பலத்த சிரிப்பொலி ...

“மாட்டிக்கொண்டான் கம்பன் ...அவன் ராமாயணக்காதை முற்றிலும் அரங்கேற்ற சாத்தியமே இல்லை இனி! “

முணுமுணுத்து மகிழ்ந்தது ஒருகூட்டம்.

திடீரென்று அவர்களின் பலத்த சிரிப்பையும் மீறி, ஒரு சிரிப்பு! அனைவரையும் நடுங்க வைக்கும் சிரிப்பு! எல்லோரும், சிரிப்பு வந்த திசையை நோக்குகின்றனர்)

கம்ப மண்டபத்தின் மிக அருகில் கல்படிக்கட்டுகள் கொண்ட மேட்டுப் புறத்திலே உள்ள சந்நிதி கோபுரத்திலிருந்து ஒரு அதிர்வு உண்டானது. பூகம்பமோ என மக்கள் நிமிர்ந்து அச்சத்துடன் பார்த்தனர்.

ஆ !என்ன இது கோபுரத்தில் பதிக்கப்பெற்றிருந்த நரசிம்மனின் சிலை.. இல்லை இல்லை இது சிலையில்லையே ?நரசிம்மர் உயிரோடு அல்லவா இருக்கிறார்! கோலாகலமாய் சிரிக்கிறாரே!

ஒருக்கணம்தான் எல்லாம்!


திகைப்பும் பயமுமாய் கண்டவர்களுக்குக் காட்சி தந்து மறைகிறார் நரசிம்மப்பெருமான்.

“கம்பனே! உன் கவிதையை யாம் ஏற்றுக்கொண்டோம்! வால்மீகியின் கவிதையைப்போல நின் கவிதையும் என்றும் மக்கள் மனத்தில் நிலைத்து வாழட்டும்” என்பதாகக்கையை உயர்த்தி ஆசி கூறி வாழ்த்தினார். அடுத்த கணம் உயிர்பெற்ற சிலை மறுபடி சிலையானது.ஆனால் தூக்கிய திருக்கரம் தூக்கியபடியே இருந்தது.


அனைவரும் மெய்சிலிர்த்தனர் . கம்பனைப்போற்றி வணங்கினர்.

இன்றும் அரங்கன் கோயிலில் அந்த கம்ப மண்டபம் இருக்கிறது ! அதற்குப் பக்கத்தில் சற்றே எதிரே அந்த மேட்டழகிய சந்நிதியும் இருக்கிறது !தூக்கிய திருக்கரமுடன் தம்மைக் காணவரும் பக்தர்களுக்கு இன்றும் அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார் அன்று கம்பனைக்காத்த நம் பெருமான் நரசிம்மன்!


'ஆடிஆடி அகம் கரைந்து இசை

பாடிப்பாடிக் கண்ணீர்மல்கி எங்கும்

நாடிநாடி, நரசிங்கா என்று

வாடி வாடும் இவ் வாள்நுதலே. '



'.

7 comments :

Rajewh said...

எந்தை தந்தை தந்தை தந்தை தம்மூத்தப்பன்* ஏழ்படிகால் தொடங்கி*
வந்து வழி வழி ஆட்செய்கின்றோம்* திருவோணத் திருவிழவில்*
அந்தியம் போதில் அரி உருவாகி* அரியை அழித்தவனை*
பந்தனை தீரப் பல்லாண்டு*பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே.
- பெரியாழ்வார்

ஓம் ஓம் நரசிம்மா ஓங்கார நரசிம்மா
நரசிம்ம ஜெயந்தி நல வாழ்த்துக்கள்!

shylaja mam பகிர்தலுக்கு மிக்க நன்றி!

குமரன் (Kumaran) said...

எங்குமுளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கு இல்லையால் என இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய
சிங்கப்பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே!

Rajewh said...

நசை திறந்து இலங்கப் பொங்கி, 'நன்று நன்று' என்ன நக்கு;
விசை திறந்து உருமு வீழ்ந்தது என்னவே, தூணின் வென்றி
இசை திறந்து, உயர்ந்த கையால் எற்றினான்; என்றலொடும்;
திசை திறந்து, அண்டம் கீறிச் சிரித்தது செங்கட் சீயம்!

கம்பர் படிக்க, புலவர் பொருள் கேட்க, கம்பர் பாடலை விளக்கினார்:)))


பொருள்???

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஆளரிப் பெருமான் திருவவதார நாளில் நல்ல பதிவு!

//அரங்கன் கோயிலில் பிராட்டியாரின் சந்நிதி முன்பாக இருக்கும் நாலுகால் கல்மண்டபத்தில்//

அரங்க நாச்சியார் சன்னிதிக்கும், மேட்டு அழகிய சிங்கர் சன்னிதிக்கும் இடையே தான் இந்த நாலு கால் மண்டபமா? (கம்பராமாயண அரங்கேற்ற மண்டபம்). ப்டம் இருந்தா போடுங்க-க்கா!

//இங்கு தனது இராமாயணக்காதை அரங்கேறுவதே தனக்குச்சிறப்பு என்று கம்பன் நினைத்தான்//

தில்லை தீட்சிதர்களைச் சந்தித்து, கம்பன் அனுமதி பெற முயன்றதும், அவர்கள் அதை மறுத்ததும் பற்றிய குறிப்புகள் உள்ளனவே! அது பற்றி அறிந்தவர் தாருங்களேன்!

//உமக்கு நரசிம்மாவதாரம் எழுத ஆசையிருந்தால், தனியாக எழுதிவிடலாமே! இங்கு எதற்கு இதைச் சேர்க்க வேண்டும்?” என்று சீறினார் ஒருவர்//

:)
அதானே! அதெல்லாம் தனியாகப் போய் எழுதுங்கள்! இந்தக் குழுப் பதிவில் வேணாம் என்று சொன்னவர்களும் நம்மிடையே, இந்தக் காலத்திலும் உண்டு! :))

//'சிரித்தது செங்கட் சீயம்' என்கிறீரே! எங்காவது சிங்கம் சிரிக்குமா? நீர் கேட்டதுண்டா? அவையில் யாராவது இதைப் பார்த்ததுண்டா?”//

ஹா ஹா ஹா
அன்று பிரகலாதன் மன உறுதியை மெய்ப்பிக்கத் தூணில் தோன்றியவன்..
இன்று கம்பன் கவி உறுதியை மெய்ப்பிக்க மேட்டில் தோன்றினானோ?

மேட்டழகிய சிங்கர் ஆலயம், கம்பன் காலத்துக்கு முன்பே உண்டா, இல்லை இதற்கு அப்பறம் எழுப்பப்பட்டதா-க்கா?

ஆளரிப் பெருமாள் செய்த கரக் கம்பம், சிரக் கம்பம் பற்றி அழகாகப் பதிவிட்டமைக்கு நன்றி!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

* சுவாதி = நரசிம்ம ஜெயந்தி!
Happy Birthday Narasimha!

* இன்று விசாகம் = என் முருகன், மற்றும் மாறன் நம்மாழ்வார் பிறந்தநாளோ? கூடவே, என் தோழன் ராகவன் பிறந்தநாளும் கூட! :)

Happy Birthday Muruga!
Happy Birthday MaaRa!
Happy Birthday Ragava! :)

ஷைலஜா said...

வருகை தந்தவர்களுக்கும் கருத்து சொன்னவர்களுக்கும் நன்றி. சில கேள்விகளுக்கான பதில்களை நிதானமா வந்து தரேன் இப்போ கொஞ்சம் பிசி!

In Love With Krishna said...

Beautiful post!
I didn't know this story till now, so thanks a lot!

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP