Monday, September 28, 2009

மதுரச் சிற்பம்.



ருளைப் பூசி இருந்தது காற்று. குளுமையின் குரலில் ஒரு மெளன கானத்தை இசைத்தவாறே, வீசிக் கொண்டிருந்தது. 'ஸ்... ஸ்' என்று உச்சரித்தவாறு, காற்றை எச்சரித்தவாறு தன் குட்டிகளைச் சிறகுகளால் மெல்லப் போர்த்திக் கொண்டு, கண்கள் வழி உறக்கத்தைக் கசிய விட்டுக் கொண்டிருந்தன தாய்ப் பறவைகள்.

விழிகள் போல் அகண்டும், விரிந்தும் இருந்த பச்சை இலைகள் மேல், இரவின் கருமை இழைந்திருந்தது. வெள்ளிக் கதிர்களின் வெள்ளோட்டம் இன்னும் இந்த கானகத்தின் கடைக்கண் பாதைகளுக்குள் பதியவில்லை.வெண் பனி முத்துக்கள் விழவா, வேண்டாமா என்று சிந்தித்துக் கொண்டிருக்க, இலைகளின் மேல் தடவிச் சென்ற தென்றலின் கரங்கள் அவற்றைத் தள்ளிச் சென்றதில் சிந்தித்தவை சிந்தின.

வானில் இருந்து மினுமினுத்துக் கொண்டிருந்த மீன்களின் ஒளித் துணுக்குகள் சிதறிக் கொண்டிருந்தன. கானகக் குளத்தின் அலையாடிய நீரில் மிதந்து கொண்டிருந்த தாமரை இலைகள் ஒத்திசைவோடு அசைந்து கொண்டிருந்தன. செந்தாமரையின் இதழ்கள் கதிரவனின் ஒளியைக் காணாமல் கூம்பிப் போயிருந்தன.

மயக்கும் குளிரின் ரீங்காரங்கள் மட்டும் இசைந்து கொண்டிருந்த இந்த இரவின் ஆடையில் ஒரு ஜரிகை விளிம்பாக ராதை நடந்து வந்து கொண்டிருந்தாள்.

பட்டு வண்ண ஆடையின் ஓரங்களில் பதித்திருந்த வெண் முத்துகளுக்குப் போட்டியாக அவளது கண்ணீர்த் துளிகள் புள்ளி இட்டிருந்தன. நடக்கையில் தெறித்திட்ட பொற்காசுகளும், நகைகளும், மணியாரங்களும் அவளது கவனத்தைப் பெறவில்லை. பின் எதன் மீது தான் அவளது கவனமெல்லாம்? அவலது கைகளில் பிடித்திருந்த பொற்கூடையில் தான்.

வளது வீட்டுத் தோட்டத்தில் இராதா ஒரு மலர்ப் பந்தல் வளர்த்து வந்தாள். ஆநிரைகளை மேய்த்து விட்டு, மாலை மயங்கும் அந்தியில் மனை திரும்பிய பின், அவளை வேறு எங்கும் காணவியலாது. மலர்த் தோட்டத்தில் தான் காண முடியும்.

சும்மாவா அங்கு மலர்களை வளர்த்தாள்...?

"பூச் செடிகளே! என்னைக் காணவில்லை என்று வருந்தினீர்களா? இதோ வந்து விட்டேன். இது என்ன, நான் வந்தும் நீங்கள் முகம் வாடி இருப்பது ஏன்? ஓ.. நீங்கள் உங்கள் காதலனான கதிரவன் சென்று விட்டானே என்று கவலைப்படுகிறீர்களா? இந்த ஆண்களே இப்படித் தான். நீங்கள் ஏன் அவ்வளவு உயரத்தில் இருக்கும் ஆதவனைக் கண்டு காதல் கொள்ள வேண்டும்? உங்களுக்கு வேண்டியது தான்.

இக் காதலன் வருவான் என்று நாம் இரவெல்லாம் கண் விழித்திருக்க வேண்டியது. ஆனால் அவன் வருவதில்லை. உறங்காமல் பூத்த கண்களோடு, மனதை தேற்றிக் கொண்டு பகல் பொழுதிற்காக காத்திருப்போம். காலம் கண் முன்னே நழுவிச் செல்ல, காதலனது திருமுகம் காண்பதற்குள் கையசைத்து காணாமல் சென்று விடுகிறான். வாழ் நாளெல்லாம் இவ்வாறே கழிகின்றது.

உங்களுக்காவது தினமும் கதிரவன் வருகிறான்.

இந்த மாயக் கண்ணன் இருக்கிறானே? அவனை என்ன சொல்லிச் செல்வது என்றே தெரியவில்லை. வருவான் என்று கை நிறைய பட்சணங்களும் , தின்பண்டங்களும் எடுத்துச் சென்று பார்த்தால் நாளெல்லாம் அவன் வருவதில்லை. மண்ணிற்கும், மரங்களுக்கும் அவற்றை தாரை வார்ப்பதிலே நான் இழக்கின்ற மகிழ்வெல்லாம் அவை பெற்று உய்கின்றன.

வர மாட்டான் என்ற வருத்தத்தில் வாடி அமர்ந்திருக்கையில், எங்கிருந்தோ வந்து குதிப்பான். 'ஏனடி ராதே, எனக்கென்று என்ன கொண்டு வந்தாய்?' என்பான். கோடைக் கால மழைத்துளிகள் போல் அவன் கூறும் மொழிகள் கேட்ட பின் பூக்கின்ற கண்ணீர்த் துளிகள் அவன் கைகளில் துவண்டு விழுகின்றன.

ஆயர்பாடியின் நாயகன், நந்தரின் செல்வமகன் என் முன் கையேந்தி நிற்கையில், கொடுக்க ஏதுமில்லை என்ற வார்த்தைகள் எனக்குள்ளேயே வட்டமிட்டுச் செல்லும். தலை கவிழ்ந்து நான் நிற்பதைக் கண்ணுற்றதும், ஒரு விஷமச் சிரிப்போடு, அந்த மாயவன் குழல் இசைக்கத் தொடங்குவான்.

கேட்பது என்ற ஒன்றை மட்டுமே அறிந்த உயிர் போல் என் அத்தனை உணர்வுகளும் அவன்பால் இழுக்கப்பட்டுச் செல்லும். செவிப் புலன்களின் மடல்களில் தவழ்ந்து செல்லும் அக் குழலோசை, மாய லோகத்தின் மழைக் காலத்தைக் கண் முன் காட்டும். நம்மிடம் கேட்டு வரும் கண்ணன் கொடுத்து மறைவான், பிரபஞ்சத்தின் நாதம் தன்னை..!

இரவின் பிடிக்குள் சிக்கிய வெண்ணிலா மெல்ல மெல்ல கண்களுக்கு முன் மறைந்து, பகலின் வெம்மை இரவி எழுவது போல், மெதுவாகத் தேய்ந்த பின், நிஜவுலகுக்கு நம்மை இழுத்து வரும் அவனது இசை.

மொட்டுக்களே..! மெதுவாகப் புலருங்கள். அவசரம் வேண்டாம். நீங்கள் அலங்கரிக்கப் போவது அக் கருமேனியனின் திருப் பாதங்களை..! வண்டுகள் வருமிடத்து உங்கள் வாசல்களை அடைத்து வையுங்கள். 'இத் தேன் துளிகள் அவனது பாத அணிகளின் பொட்டுத் துளிகள்' என்று கூறி விடுங்கள். இலைகளே! இரவெல்லாம் சேகரித்து வைத்திருக்கும் பனித் துளிகளைப் பகலவனின் கைகளில் அள்ளிக் கொடுத்து விடாதீர்கள்.

பகலெல்லாம் பசுக்களை மேய்த்து விட்டு, வெம்மையின் சூட்டில் பொறிந்து போயிருக்கும் அவன் கால்களை நனைத்து பேறு பெறுங்கள்...."

அப்படியொரு ஆசையோடு வளர்த்து வந்த தோட்டத்தில் இருந்து பார்த்துப் பார்த்துப் பொறுக்கி எடுத்த மலர்களையும், குளிர்ந்த இலைகளையும், மண்ணின் மணம் வீசும் வேர்களையும் அல்லவா அவள் அள்ளிப் போட்டுக் கொண்டு வருகிறாள்!

யர்பாடியில் இருந்து கானகத்திற்குச் செல்லும் பாதை இரவால் போர்த்தப்பட்டிருந்தது. ஒளியின் சிறு துகள்களும் அங்கே தென்படவில்லை. தோட்டத்தின் நீர்க்குளத்தில் அவளோடு சிறகடித்து விளையாடும் அன்னப் பறவைகளை அழைத்துக் கொண்டு ராதா வருகிறாள்.

வேறு ஏதேனும் ஒளி வேண்டுமா என்ன? உயிரின் கயிற்றைப் பிடித்து அசைக்கின்ற மென் அசைவில் அழைக்கின்ற நாத இசை அல்லவா அங்கு ஒளி ஊட்டிக் கொண்டிருந்தது..! காட்டின் இலைகளிலும், கிளைகளிலும், பூக்களிலும், தென்றல் காற்றின் கைப் பிடித்து கானகமெங்கும், வானகமெங்கும் வியாபித்திருந்த கண்ணனின் மென் குழலோசை அல்லவா அங்கு வழி அமைத்துக் கொண்டிருந்தது! தேன் துளிகள் நிரம்பிய காற்றின் அணுக்களில் மயங்கிய மரங்களின் மோனத்தில் இலயித்த இலயிப்பும் அல்லவா அங்கே அவளுக்கு வழி காட்டிக் கொண்டிருந்தது..!

இராதா வந்தே விட்டாள்.

"இராதே..! என் அன்புக்குரியவளே..! ஈதென்ன இவ்வளவு காலம் எடுத்துக் கொள்கிறாய்..? உனக்காக எவ்வளவு காலம் காத்துக் கொண்டிருப்பது..?" அந்த மதுசூதனன் கேட்டான்.

கண்களில் பெருகிய ஈரத்தோடு அவன் முன் தண்டனிட்ட ராதா மொழிந்தாள்.

"கண்ணா..! இரவின் கர்ப்பத்தில் ஆயர்பாடி நுழைந்த மாயவா! சிறிது நேரம் காத்திருப்பதற்குச் சொல்கிறாயே?

உனக்காக எத்தனை யுகங்கள் நான் காத்திருந்தேன்? கழிந்த பிறவிகளின் நிழல்களைச் சுமந்து இப்பிறவியில் உனைக் கண்டு கொண்டேன். பகலின் வெம்மையில் நனைந்த தேகத்தில் பூக்கின்ற வேர்வைத் துளிகள் போல், எத்தனை நினைவுகள்? யமுனா நதிக்கரையில் தோணி ஓட்டிக் கொண்டு செல்கையில், அந்த நீல நிற நீர் உன்னை அல்லவா காட்டியது? நிமிர்ந்து பார்க்கையில் பிரபஞ்சமெங்கும் சூழ்ந்திருந்த அந்தக் கரு வானம், உனது மேனி வண்ணத்தை அல்லவா சொல்லிச் சென்றது?

மனையின் ஒவ்வொரு தூணையும் கேட்டுப் பார். இறந்த அந்த மரங்கள் இன்னும் வளர்ந்து கொண்டே செல்கின்றன, ஏன் தெரியுமா? எனது கண்ணீரால் அவற்றுக்கு நீர்ப் பாய்ச்சுகிறேன். உளறிச் சென்ற தெருக்களின் மண்ணைக் கேட்டுப் பார்.என் பாதங்களின் தடங்களின் அருகில் உனது நிழல் விழுகின்றதா என்று நான் நின்று, நின்று சென்ற நேரங்களைச் சொல்லும். வைகறையில் குளிக்கின்ற யமுனையின் கரைகளைக் கண்டாயானால், நான் பொழிந்த கண்ணீரின் தாரைகள் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறதா என்று கேள். நீ காளிங்கனை வதம் செய்து, குருதியில் கரைய வைத்த யமுனையைத் தூய்மை செய்தது அவை தான் என்று சொல்லும்.

இக்கானகத்தின் மரங்களில் சாய்ந்து பார். உனது மேனியில் வலி உண்டாக்கக் கூடாதென, நான் செதுக்கி வைத்த வனப்பில், வலியைக் கூறும்.

காலங் காலமாய், கற்ப கோடி ஆண்டுகளாய் நாம் சேர்ந்திருந்த கனவுப் பொழுதுகளின் மிச்சங்கள் உனக்கு நினைவிருந்தால், அவை உனக்குச் சொல்லும். ராதா உனக்காக காத்திருந்த வலி நிறைந்த பொழுதுகளின் நிழல்களை..!"

"ராதே..! உனக்குக் கோபம் ஆகாதேடி..! இசை கேளடி ஆதுரமாய்..!" குழலின் நாயகன் இசைக்கலானான்.

"ஏ மாதவா! வெயிலின் வெப்பத்தில் கொதித்திருக்கும் குளத்தின் நீரைக் குளிரச் செய்கின்றது மோகன நிலவின் மயக்கும் கிரணங்கள். புழுக்கத்தின் மேனியிலும் ஈரத்தைத் தூவிப் பூக்கச் செய்யும் பனிக்காற்றின் பரவல். ஆண்டாண்டு காலத்தின் இரவையெல்லாம் கணப்பொழுதில் கலைத்துச் செல்லும் சிறு பொறியின் ஒளி...! அது போல் எத்துணை கோபத்தோடு உன்னோடு ஊடல் கொள்ள ஓடோடி வந்த என் இதயத்தை சாந்தப் படுத்துகின்றது உனது மாயக் குழலோசை.

உனக்காகப் பூத்திருந்த இம் மலர்களை எடுத்துக் கொள். உனது பாதங்களில் ஒரு பூ போல் நானும் விழுந்திருக்க, உனது நாதக் குரலில் இசைக்கின்ற இந்த இரவின் காலத்தில் விடிவே இருக்கக் கூடாதென அருள் செய்ய மாட்டாயா...?"

அங்கே அரங்கேறுகிறது காதலின் பொன் அர்ச்சனை...!

15 comments :

Radha said...

Fantastic read !! I am reminded of the famous Meera film song - "காற்றினிலே வரும் கீதம்...காலமெல்லாம் அவன் காதலை எண்ணி உருகுமோ எனதுள்ளம்..."

Radha said...

எனக்கு மிகவும் பிடித்த ராதா கிருஷ்ணன் படம் இது. சில பாசுரங்கள் நினைவிற்கு வருகின்றன... they can wait. ராதையின் அன்பிலே கண்ணன் கரையட்டும்.

குமரன் (Kumaran) said...

இது மீள்பதிவா வசந்தகுமார்? ஏற்கனவே உங்கள் பதிவில் வெகு நாட்களுக்கு முன்னால் படித்தது போல் தோன்றுகிறது. இது போல் தொடர்ந்து பல இடுகைகள் எழுதியிருந்தீர்கள் என்று நினைக்கிறேன். ஒவ்வொன்றும் மிக அழகான உவமைகளாலும் ஆழ்ந்த பார்வைகளாலும் அழகு பெற்றிருக்கும். ஒவ்வொரு வரியையும் நிதானமாகப் படித்து மனக்கண்ணில் அந்தக் காட்சியை ஓட்டிப் பார்க்கும் விதத்தில் அமைந்திருக்கும். ஒரே நேரத்தில் அந்த இடுகைகள் அத்தனையும் விரும்பிப் படித்தது நினைவிருக்கிறது.

எனக்கும் இந்த இடுகையை இன்னொரு முறை படிக்கும் போது 'காற்றினிலே வரும் கீதம்' பாட்டின் ஒவ்வொரு வரியும் நினைவிற்கு வருகின்றன. நிலா மலர்ந்த இரவினில் தென்றல் உலா வரும் நதியில் நீல நிறத்து பாலகன் ஒருவன் குழல் ஊதி நின்றான்... காலம் எல்லாம்... காலம் எல்லாம் அவன் காதலை எண்ணி உருகுமோ என் உள்ளம்...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இது மீள்பதிவா வசந்தகுமார்//

:)

மீளாப் பதிவு! :)
ராதையிடம் இருந்து கண்ணன் மீளாப் பதிவு!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மதுரச் சிற்பம் அருமை வசந்த்!
கண்ணன் பாட்டில் ஒலி, ஒளி போயி சிற்பம் வேற வந்தாச்ச்ச்சா? :)

கண்ணன் பாட்டில் முதல் பதிவுக்கு வாழ்த்துக்களும்,
என் தோழி கோதையின் சார்பாக இனிய வரவேற்புகளும்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நான் பொழிந்த கண்ணீரின் தாரைகள்
= நீ காளிங்கனை வதம் செய்து, குருதியில் கரைய வைத்த யமுனையைத் தூய்மை செய்தது அவை தான் என்று சொல்லும்//

இறைவா....
இந்த வரிகளை, என்னமோ தெரியலை, பலமுறை வாசித்தேன்! வாசித்துக் கொண்டே இருக்கேன்! :(((

ராதை மனதில்
ராதை மனதில்
என்ன.....
கண் ரெண்டும் தந்தியடிக்க
கண்ணா வா கண்டு பிடிக்க!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ராதையைப் பேதை என்று சொல்வார்கள் உண்டு!
பேதையோ, மேதையோ, ஆத்ம சமர்ப்பணம் = ராதையே!

கண்ணன் அருகில் பல பேர் நிற்கக் கூடும்!
ஆனால் கண்ணனாகவே நிற்க ராதையால் மட்டுமே முடியும்! ஏனென்றால்......
கண்ணன் உடலே ராதை தான்!
கண்ணன் உடலே ராதை தான்!

எந்தவொரு
சுய நலமும்,
சுய சுகமும்,
பிற காதல் பொறாமையும்,
மறுதலித்தலும் இன்றி...
எம்பெருமான் திரு உள்ள உகப்புக்கே இருக்கணும்-ன்னா எப்படி?....என்பதை....

சுலோகங்களும் பொழிப்புரைகளும் சொல்லிக் கொண்டிருக்கும் ஏ ஆன்மீக உலகமே...
ராதையிடம் கற்றுக் கொள்
ராதையிடம் கற்றுக் கொள்!

காதல் எம் பெருமானே
உன் தன்னோடு உறவேல் எமக்கு!
உன் தன்னோடு உறவேல் எமக்கு!
உன் தன்னோடு உறவேல் எமக்கு!

இரா. வசந்த குமார். said...

ராதா...

நன்றிகள். அந்தப் பாட்டிற்கு மற்றுமொரு பதிவு வந்து கொண்டே இருக்கின்றது..! :) படத்திற்கேற்ற பாசுரங்களைச் சீக்கிரம் பதியுங்கள். படிக்க வேண்டும் போல் இருக்கின்றது..!!

***

குமரன்...

நன்றிகள். உண்மை தான். 'கண்ணன் என் காதலன்' என்ற வகையின் கீழ் என் தனி வலைப்பதிவில் சில பதிவுகள் எழுதி வைத்துள்ளேன். அவை நகரின் இரவில் பெய்யும் மழை போல் கவனிப்பாரற்று இருப்பதால், கண்ணன் அன்பர்கள் குவிந்திருக்கும் இத்தளத்தில் பதிந்தால், அனவருக்கும் இன்பம் அளிக்குமே என்று தான் இங்கே கொண்டு வருகிறேன். :)

***

ரவி...

நன்றிகள். நீங்கள் கூறுவதும் உண்மையே..!! நினைத்துப் பாருங்கள். மீரா பஜன்ஸ், ராதை பாடல்கள், ஆண்டாள் பாடல்கள் என்ற பாடல்களும், சித்திரங்களும் தான் பிரபலமாகவும், மனம் கவர்வனவாகவும் இருக்கின்றன. கண்ணனை மணம் செய்து கொண்ட பாமா பாடல்கள், ருக்மணி பாடல்கள் என்று பிரபலமாக உள்ளனவா (என் சிற்றறிவுக்கு எட்டியபடி!)? பாமாவுக்கும், ருக்மணிக்கும் கண்ணன் அன்பில் கரைவதற்கே பொழுது சரியாய்ப் போயிருக்கும் என்பது வேறு விஷயம் . :) ஆண்டாளும் ரங்கனுடன் கலப்பதற்கு முன் தான் பாடல்கள் எழுதியிருக்கிறார். பிற்பாடு எழுதியதாகத் தகவல் இல்லை..! :) அவரும் பாமா, ருக்மணியோடு சேர்ந்து கொண்டார் போலும்..!

காரணம், சேராக் காதல் தான் சுகமானது. அதுவே எந்த படைப்பாளிக்கும், இன்னும் சொன்னால் எந்த மனித மனதிற்கும் நெகிழ்ச்சி தருவதாய் இருக்கின்றது. பார்க்கப் போனால் நாம் எல்லோரும் அந்தக் கண்ணனை எப்போது காண்போம் என்று தவிக்கும் ராதைகள் தானே...!!!

thamizhparavai said...

fantastic vasanth....

Raghav said...

கண்முன்னே எங்கள் ராதையையும், கண்ணனையும் காட்டி விட்டீர்கள் வசந்த்.. படிக்கப் படிக்க அதன் சுவை மனதில் ஒட்டிக் கொள்கிறது..

ராதையின் ஏக்கமும், கோபமும், மயக்கமும், காதலும்.. நாமும் ராதையாக மாட்டோமா என்று ஏக்கம் கொள்ள வைக்கிறது.

Radha said...

//படத்திற்கேற்ற பாசுரங்களைச் சீக்கிரம் பதியுங்கள். படிக்க வேண்டும் போல் இருக்கின்றது..!!//

கண்ணன் குழலூதிய பொழுது ஆயர்பாடி கோபிகைகள், பிருந்தாவனத்தில் வாழ்ந்த பட்சிகள், மிருகங்கள், மரங்கள், இன்னும் இசையை கேட்ட எவரும் எப்படி மயங்கினர் என்று பாடும் பெரியாழ்வார் பாசுரங்கள்...

"இட அணரை இடத் தோளொடு சாய்த்து இரு கை கூட கோவிந்தன் குழல் கொடு ஊதின பொழுது..."
(அணர் - மேல்வாய்ப் புறம்)

"கருங்கண் தோகை மயிற்பீலி அணிந்து, கட்டி நன்கு உடுத்த பீதக ஆடை
அருங்கல உருவின் ஆயர் பெருமான் அவன் ஒருவன் குழல் ஊதின பொழுது..."

தலையை, இடது தோள் பக்கம் சாய்த்து கண்ணன் குழல் ஊதும் இந்தப்
படம், மயிற்பீலி அணிந்து மஞ்சள் நிற ஆடையை அழகாக உடுத்திக் கொண்டு கண்ணன்
நின்று கொண்டிருக்கும் இந்தப் படம்...அருமையோ அருமை.

Radha said...

முழு பாசுரம் இங்கே:

கருங்கண் தோகை மயிற்பீலி அணிந்து,
கட்டி நன்கு உடுத்த பீதக ஆடை
அருங்கல உருவின் ஆயர் பெருமான் அவன்
ஒருவன் குழல் ஊதின பொழுது
மரங்கள் நின்று மது தாரைகள் பாயும்;
மலர்கள் வீழும்; வளர் கொம்புகள் தாழும்
இரங்கும், கூம்பும்; திருமால் நின்ற நின்ற
பக்கம் நோக்கி அவை செய்யும் குணமே.

Kavinaya said...

அருமை, அருமை வசந்த்! காதலாகி கசிந்த அனுபவத்தில் விழுந்த வரிகள் கண்களை கசிய வைக்கின்றன.

ஒவ்வொரு வரியுமே அருமை, எதையென்று எடுத்து பாராட்டுவது?

// உளறிச் சென்ற தெருக்களின் மண்ணைக் கேட்டுப் பார்.என் பாதங்களின் தடங்களின் அருகில் உனது நிழல் விழுகின்றதா என்று நான் நின்று, நின்று சென்ற நேரங்களைச் சொல்லும் //

வாழ்த்துகள்!

ராதா தந்த பொருத்தமான பாசுரத்திற்கும், அழகான படத்திற்கும், நன்றிகள்.

இரா. வசந்த குமார். said...

தமிழ்ப்பறவை...

நன்றிகள்.

***
ராகவ்...

நன்றிகள். நாம் ராதைகளாக இருந்து கரைந்தழுதால் கண்ணன் வந்து விட மாட்டானா என்ன..!! :)

***
ராதா...

பாசுரம் ப்ரமாதம். ஆண்டாள் அப்பா ஆச்சே..! சொல்லணுமா..!!

இரா. வசந்த குமார். said...

கவிநயா அக்கா...

நன்றிகள். ராதையாக மாறி கண்ணனை எண்ணி எழுதுவது அழகாக வருவதும் அவனது விளையாட்டுகளில் ஒன்று தானே..!!!

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP