கிருஷ்ணா - இராதா.
மோகன இரவின் பின்னிலாக் காலம். கருவானத்தின் மேகக் கிழிசல்களில் பரவியிருக்கின்ற வெண் ஒளித்துகள்கள் நிலவின் இருப்பைச் சொல்கின்றன. கருங்குயில்களும், வெண் அன்னமும், நாரைக் கூட்டங்களும், தங்க மீன்களும், பச்சைத் தவளைகளும், கல்லிடுக்கின் தேரைகளும் தத்தம் கூட்டுக்குள் ஒடுங்கி விட்டன.
நள்ளிரவின் கூதற்காற்று என் மனம் போலவே சோக கீதம் பாடிக்கொண்டு வீசுகின்றது. அலையடித்துக் கொண்டிருக்கும் குளிர்க் குளத்தின் இயக்கங்களும் நின்று போய் விட்டன. நான் யாரிடம் என் வேதனையைக் கூறுவேன்?
கோரைப் புற்கள் கூடு கட்டிக் கொண்டுள்ள நீலக் குளமே, உன்னிடம் தான் கூற வேண்டும். என் இதயக் கூட்டுக்குள் சிக்கிக் கொண்ட மதன மோகனைப் போல் உன்னால் என்னைப் பிரிந்து சென்று விட முடியாதல்லவா..?
இல்லை..! இல்லை..! நீயும் என்னை விட்டுச் சென்று விடுவாய். என்னை விட்டு மட்டுமா..? யாருமற்ற தனிமையின் இரவுக் காலங்களில் மட்டும், பால் ஒளியைப் பொழியும் நிலவைச் சுமந்து களித்திருப்பாய். பகல் நேரம் வர வேண்டியது தான். இரவில் கொஞ்சிக் குலாவிய நிலவை மறந்து கதிரோடு சென்று ஒட்டிக் கொள்வாய். பாவம் நிலவு! என்னைப் போல் அதுவும் நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே வர வேண்டும்.
முன்னொரு பிறவி என்று சொல்லத்தக்க காலம் உனக்கு நினைவிருக்கின்றதா?
அது ஒரு மழைக் காலம். மேற்கின் மலைத் தொடர்களில் பொழிந்த செம்மண் நீர் எல்லாம் பாய்ந்து நிறைந்த நீர் நிலைகள். நீல ஆம்பல்கள், செந்தாமரைகள், பச்சை நிறத்தில் எங்கும் படர்ந்த ஆகாயத் தாமரைகள் என்று நாங்கள் அணிகின்ற ஆடைகளுக்கு கொஞ்சமும் குறையாமல் நீயும் அணிந்திருந்தாய். நம் தெருவெங்கும் ஈரம் பூத்திருந்தது. மாலை நேரங்களில் ஒளியால் நிரப்பும் சிறிசிறு விளக்குகள் கொண்ட எங்கள் வீடுகளை விட்டு, வெண்ணிலவின் ஒளியில் குளிக்கின்ற உன்னைத் தேடி வந்து கதை பேசுவோம்.
ஆஹா! என்னவென்று சொல்லுவேன்? அந்த மாயக் கண்ணன் அப்போது நம்மோடு இருந்தான். குளக்கரையில் அமர்ந்து நாங்கள் பேசிக் கொண்டிருக்கையில், இடை புகுவான். இடையைக் கிள்ளுவான். பொல்லாப் பிள்ளையாய் குளத்தில் இறங்கி, நீரை வாரி, வாரி எங்கள் மேல் இறைப்பான். நீயும் அலைகளால் ஆடி அதைக் கண்டு சிரிப்பாய். நாங்கள் கரைமண்ணை எடுத்து அவன் மேல் வீச, அதை அப்படியே விழுங்குவான். எங்கள் கூந்தல் பூக்களை அள்ளி, முகமெங்கும் தூவுவான்.
மரத்தின் மேல் ஏறி அமர்ந்து உலுக்குகையில், மாலையில் பெய்த ஈரத் துளிகள் எங்கள் மேல் தெறிக்கக் கண்டு விழுந்து,விழுந்து சிரிப்பான்.
'இரு..! இரு..! உன் அன்னையிடம் போய்ச் சொல்கிறோம்' என்று சொல்லிப் புறப்படுகையில், மண்ணை அள்ளிப் பூசிக் கொண்டு, 'இரு..! இரு..! உன் அன்னையிடம் போய்ச் சொல்கிறேன்' என்று விஷமச் சிரிப்புச் சிரிப்பான். மீறி யசோதாவிடம் சொல்லச் செல்கையில், ஓடிவந்து கன்னத்தில் முத்தமிட்டுச் செல்வான்.
கள்ளை உண்டவர் பிறகு நடக்க முடியுமோ? தேனை உண்ட வண்டு பிறகு பறக்க விரும்புமோ? அந்த மாதவனின் இதழ் பட்ட பின் அந்த நினைவில், முன்னர் நடந்தது, பின்னர் நடப்பதும் நினைவில் இருக்குமோ?
பின்பொரு நாள், நாங்கள் அந்தக் கோபாலனின் குறும்புகளைப் பேசியவாறு குளிக்க வந்தோம். அந்த மதுசூதனன் எங்கிருந்து கண்டானோ? எப்படி அறிந்தானோ? யார் சொன்னாரோ?, இந்த மரத்தின் மேல் அமர்ந்து கொண்டான். நாங்கள் அதைக் கவனியாமல், குளிக்கப் புகுந்தோம்.
கண்ட மாத்திரத்திலேயே, காண்போர் உள்ளத்தைக் கவர்ந்து கொள்ளும் கண்ணனுக்கு எங்கள் ஆடைகளையும் கவர்வதா கடினம்?. நாங்களும் பலவாறு துதித்தோம்.
'அட கண்ணா! மணிவண்ணா! கோவர்த்தனகிரி நாதா! காளிங்க ஸம்ஹாரி! குழலூதும் கோவிந்தா! ஆடைகளை கொடுத்து விடப்பா! கோபியர் கொஞ்சும் ரமணா! நீ என்ன செய்தாலும் ஏற்றுக் கொள்கிறோம். வெண்ணெய் வேண்டுமா? இனி நீ உறியடித்து பானைகளை உருட்டி, உடைத்து உண்ண வேண்டாம். நாங்களே உனக்கு ஊட்டி விடுகிறோம். ஹே! கோபாலா! உன் இனிமையான குழல் ஓசையில், பசுக்களும், ஆடுகளும், இடையர்களும், வன மரங்களும், பறவைகளும், விலங்குகளும், மலையும், காற்றும் மட்டும் மயங்கி நின்று விடுவதில்லை. நாங்களும் எங்கள் வேலையை விட்டு மெய் மறந்து விடுகிறோம். உன் வாசிப்பைக் கேட்டுக் கொண்டு தயிர் கடைகையில், வெண்ணெய் பொங்கிப் பெருகுகிறது. கிருஷ்ணா! உன் நாத ஓசையில் மயங்காத பேரும் உண்டோ? இதோ, இந்தக் குளத்தை கேட்டுப் பார்! சளசளவெனத் துள்ளிக் குதிக்கும் மீன்களும் அமைதியாகின்றன. அதோ அந்த மலையைக் கேட்டுப் பார்! மேலே வந்து மோதுகின்ற கருமேகங்களும், அமைதியாய் நின்று விடுகின்றன.யுகயுகமாய் ஓடிக் கொண்டிருக்கின்ற கிரகங்களும், சூரியனும், பிரபஞ்ச வெளியும் நின்று விடுகின்றன. அத்தகைய கருணை மகாப் பிரபு! நீ விளையாட கோபியர்கள் நாங்களா கிடைத்தோம்? எங்கள் மனத்தைக் கவர்ந்து விட்ட நாதா, இப்போது எங்கள் மானத்தையும் கவர வந்துள்ளாயோ? ஹே, கருமேக வர்ணா! ஆடைகளைக் கொடுத்து விடப்பா' என்று வேண்டினோம்.
இன்னும் பலவாறெல்லாம் வேண்டிக் கொண்ட பின் தான், அந்த அருமைப் பிள்ளை, ஆடைகளைக் கொடுத்தான். நீயும் கண்டு கொண்டுதானே இருந்தாய்?
அந்த நாட்களெல்லாம் ஒரு கனவாய்ச் சென்று விட்டன. இப்போது நமது மனம் கவர்ந்த மோகனன், ஒரு இராஜ்ஜியத்தின் தலைவன். அந்த நந்த கோபன் குமரன், பல பெரும் சேனைகளுக்கெல்லம் தளபதி. இனி அவன் நம் கோகுலத்திற்கு வருவானா? அவனை எண்ணி,எண்ணி கோபியர்களும், நானும் அந்த நிலவைப் போல் தேய்ந்து கொண்டே வருவதை அறிவானா? அந்த மன்னனைக் காணாமல் மற்றுமொரு இரவு கரைந்து கொண்டிருக்கின்றது என்பதை நிலவே, அவன் மாட மாளிகையின் உப்பரிகைகளில் நிற்கும் போது, சொல்வாயா? கூச்சம் சிறிதும் இல்லாமல், ஆடையைத் தள்ளி விட்டுச் செல்லும் தென்றல் காற்றே, அவனைத் தீண்டும் போதெல்லாம், கோபிகைவனத்தில், இராதா அவனுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறாள் என்று சொல்வாயா?
யாரது..? யாரது? என்னைத் தொடுவது?
ஆ..! ஆ..! யார் நீலமேக வண்ணனா? என் உள்ளம் கவர்ந்த மன்னனா? ஆம்! அவனே தான். இல்லை..!அவனாய் இருக்க முடியாது. எங்கள் கண்ணன் இப்படிச் சிவந்தவனாய் இருக்க முடியாது. அவன் கருநிறத்தான். துவாரகையில், அரண்மனைப் பெண்கள் அனைவரும் முத்தமிட்டு, முத்தமிட்டு என் கண்ணனைச் சிவப்பாக்கி விட்டார்களோ? இல்லை..! என்னைப் பிரிந்துச் சென்று இவ்வளவு நாட்களாகி விட்டதை எண்ணி, வெட்கப்பட்டு இப்படி சிவந்திருக்க வேண்டும்.ஹே பிரபு! இன்னும் ஏன் முதுகுப் புறம் மறைந்து நிற்கிறீர்?
மதனராஜ! உனது மந்தகாசம் பெய்யும் புன்னகையில் அமுதம் உண்ணும் பாக்கியத்தை அருள மாட்டீரா? மஹராஜ! இரவின் கூரையில் வந்து கூடு கட்டி விட்டு, விடிகையில் பறந்து செல்கின்ற கனவு அல்லவே, நீர் இப்போது வந்தது? இனி என்னைப் பிரிய மாட்டீர் அல்லவா?
மோகன குமாரா! பாலாய்ப் பொழியும் நள்ளிரவு நேரத்தில் உன் அருகாமையில் பூங்குழல் எடுத்து எனக்காகக் கொஞ்சம் இசையும். தயவித்து என் வேண்டுகோளுக்கு இசையும். உலகத்து உயிர்கள் எல்லாம் உறங்கி விட்டபின், உனக்காக உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கும் எனக்காகவும், இந்தக் குளத்துக்காகவும், இசைக்க மாட்டீரா?
மீரா பாடல்கள்.
13 comments :
ஆஹா ! மீரா பாடல்களை தான் முதலாவதாக இட வேண்டும் என்று நினைத்திருந்தேன். :)
முந்தைய பதிவை இன்னும் சில தடவைகள் படிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.
அதற்க்குள்ளாக அடுத்த பதிவிற்கு சென்று விட்டீர்களே !!பொறுமையாக வருகிறேன்.
என்ன ஒரு நடை வசந்த்.. மயக்குவது ராதையா இல்லை உங்கள் எழுத்தா என்று தெரியவில்லை.. மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றுகிறது
வசந்த மன மோஹனமே வருக. அருமையான மீராவின் பாடல் எம் எஸ் அம்மாவின் குரலில் ஜோர். வருகைக்கும் இன்னும் பல நல்ல பதிவுகளை தரப்போகும் வசந்துக்கு வாழ்த்துக்கள்
அருமையான பதிவு மற்றும் பாடல். வாழ்த்துக்கள் வசந்த் சார்.
தினம் ஒரு பதிவா வசந்த்?
போட்டுத் தாக்கறீயளே? :))
//ஆம்! அவனே தான். இல்லை..!அவனாய் இருக்க முடியாது. எங்கள் கண்ணன் இப்படிச் சிவந்தவனாய் இருக்க முடியாது. அவன் கருநிறத்தான்..//
மாயோன், சேயோன்!
கருப்பன், சிவப்பன்!
ஹா ஹா ஹா!
இதைப் படிக்கும் போது எனக்கு என் முருகப் பெருமான் ஞாபகம் வராது இருக்க முடியலை! :))
//துவாரகையில், அரண்மனைப் பெண்கள் அனைவரும் முத்தமிட்டு, முத்தமிட்டு என் கண்ணனைச் சிவப்பாக்கி விட்டார்களோ?//
ஹிஹி! இது நல்லா இருக்கே!
அப்பவே துவாரகை பொண்ணுங்க லிப் ஸ்டிக் போடுங்க போல! :)
//இல்லை..! என்னைப் பிரிந்துச் சென்று இவ்வளவு நாட்களாகி விட்டதை எண்ணி, வெட்கப்பட்டு இப்படி சிவந்திருக்க வேண்டும்.//
உம்ம்ம்
இங்கல்லவோ ராதை வாழ்கிறாள்!
கண்ணன் மனம் அறிந்தவள்! அவன் மனத்தால் வெட்கப்படுவதை எண்ணி, அவனுக்கு மேலும் சங்கடம் உண்டாக்க விரும்பாதவள்! இதுவல்லவோ காதல்! இதுவல்லவோ அவன் உள்ள உகப்புக்கு இருத்தல்!
என்னைக் கவனிக்காது தனிமையில் விட்டு விட்டானே என்று புலம்பினாலும்....
அதெல்லாம் அவள் தனிமையில் தான்! மற்றவர் முன் மாற்றுக் குறைக்க மாட்டாள் மன்னவனை!
கண்ணனை அவள் குற்றவாளி ஆக்கி "அழகு பார்ப்பது" அவள் நெஞ்சக் கூண்டில் மட்டுமே! :)
மற்றபடி அவளுக்கு என்றுமே, "பாவம் கண்ணன்!" :))
அவள் பெயர் ராதை!
தமிழில் நப்பின்னை என்றும் சில நெஞ்சங்கள் சொல்லும்!
பிரமாதமாக உள்ளது. பல முறை படித்தேன். முந்தைய பதிவையும். எத்தனை முறை கேட்டாலும் அமிழ்தமாக இனிக்கும் காற்றினிலே வரும் கீதத்திற்கும் நன்றி.
ராதா...
நன்றிகள். 'மீரா'வில் மற்றுமொரு இனிய பாடலும் இருக்கின்றது. அதை எடுத்துக் கொண்டு துவங்குங்கள். என்னைப் போன்ற சுழிகளும் பாசுரங்களைப் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாகச் சொன்னால் மகிழ்வேன்..!
***
ராகவ்...
யார் மயக்குவது என்று சொல்லவும் வேண்டுமா..? அவன் தான். அவனே தான்..! :)
***
தி.ச.ரா. ஐயா..
வாழ்த்த்க்களுக்கு நன்றிகள். தொடர்ந்து நன்றாக எழுத ஆசி கோருகிறோம்.
***
மத்ரையம்பதி ஐயா...
நன்றிகள். ஆமா, அதென்ன ஒரு 'சார்'..? அடியேன் இன்னும் சோட்டா பச்சா தான். அமிதாப் பச்சன் ஆகவில்லை..! :) வசந்த் என்றே சொல்லலாமே..!
***
கே.ஆர்.எஸ்...
புதிய பதிவுகள் இல்லாமல், ஏற்கனவே எழுதி வைத்திருந்ததையே பதிவதால், தினம் ஒன்றாக வந்து கொண்டிருக்கின்றது. புத்தம் புதிதாக எழுத முயன்றால், கொஞ்சம் நேரம் இழுத்து விடும். :)
//இதைப் படிக்கும் போது எனக்கு என் முருகப் பெருமான் ஞாபகம் வராது இருக்க முடியலை!
மாமன் கறுப்பு, மருமான் சிவப்பு..!!
//ஹிஹி! இது நல்லா இருக்கே!
அப்பவே துவாரகை பொண்ணுங்க லிப் ஸ்டிக் போடுங்க போல! :)
:)
ராதை அப்பாவி தான். அதனால் தான் கண்ணனின் காதலியாகவே இருக்கின்றாள். சாமர்த்தியசாலியாக இருந்திருந்தால், முந்தானையில் அவனை முடிந்திருக்க மாட்டாளா..? :)
நப்பின்னை - என்ன அர்த்தம்..?
நல்ல பிள்ளை..?!
படிக்க நேரம் கொடுத்து இரண்டு நாட்களுக்கு ஒரு பதிவாக இடுங்களேன். அவசரமாக படிக்கக் கூடியவையா இவை? அருமை!!
//கவிநயா said...
படிக்க நேரம் கொடுத்து இரண்டு நாட்களுக்கு ஒரு பதிவாக இடுங்களேன். அவசரமாக படிக்கக் கூடியவையா இவை?//
யக்காவுக்கு ரிப்பீட்டே! :)
ஹிஹி! கவிக்கா...நீங்க இந்தப் பின்னூட்டம் போட்டு முடிக்கக்குள்ளாற, வசந்த் அடுத்த பதிவையும் போட்டுட்டாரு! அங்கன வாங்க! :)
//ராதை அப்பாவி தான். அதனால் தான் கண்ணனின் காதலியாகவே இருக்கின்றாள். சாமர்த்தியசாலியாக இருந்திருந்தால், முந்தானையில் அவனை முடிந்திருக்க மாட்டாளா..? :)//
உம்.....
என்னால் ஒன்னும் சொல்ல முடியாது! ராதையை நினைத்துச் சொன்னால் உடைந்து விடுவேன்! :(
ஆனால் ஒன்று மட்டும் சொல்வேன்! ராதைக்கு இப்படி இருக்கவே பிடித்திருக்கு, பாசாங்கு இன்றி!
//நப்பின்னை - என்ன அர்த்தம்..?
நல்ல பிள்ளை..?!//
ஆகா! என்ன இப்படிக் கேட்டுட்டீங்க? நப்பின்னை என்பவள் கண்ணனின் ஆருயிர்க் காதலி, தலைவி - தமிழ்ப் பண்பாட்டில்!
வடக்கே எப்படி ராதை-கண்ணனைப் பற்றிய கதைகள் உண்டோ, அப்படியே நம் தமிழிலும் மாயோன்-நப்பின்னை கதைகள் உண்டு!
இருவரும் கருத்தொருமித்த காதலர்கள்! ஒரே ஒரு வேறுபாடு - பல நாள் காதல்/ஏக்கத்துக்குப் பிறகு, ஏறு தழுவி இந்த ஆய்ச்சியை மணங் கொண்டான் கண்ணன்! காதலி, இல்லத் தலைவியும் ஆனாள்!
வட-தமிழ்ப் பண்பாட்டுக் கலப்புகளின் போது நப்பின்னை காணாமற் போனாள்! :(
ஆனால் ஆழ்வார்கள் அத்தனை பேரும், இவளையே தலைவியாக வைத்துப் பேசுகிறார்கள்!
- நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்!
நப்பின்னை = நற்+பின்னை
//கருங்குயில்களும், வெண் அன்னமும், நாரைக் கூட்டங்களும், தங்க மீன்களும், பச்சைத் தவளைகளும், கல்லிடுக்கின் தேரைகளும் தத்தம் கூட்டுக்குள் ஒடுங்கி விட்டன.//
மலர்களிலே பல நிறம் கண்டேன் திருமாலவன் வடிவம் அதில் கண்டேன்.
கண்ணனின் குறும்புகளை அப்படியே கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள். பாடலும் அருமை. நன்றி இரா. வசந்தகுமார் ஐயா.
கே.ஆர்.எஸ்...
நன்றிகள். நப்பின்னையைக் கேள்விப்பட்டதில்லை. இனிமேல் தான் பிரபந்தங்களைய்ம், ஆழ்வாரையும் தேடிப் படிக்க வேண்டும். நப்பின்னையின் காதலாவது திருமணத்தில் முடிந்ததே.. மகிழ்ச்சி தான்..!!!
***
கைலாஷி ஐயா...
மிக்க நன்றிகள். அதென்னெ, எல்லோரும் வயதான ஆள் என்றே கன்ஃபார்ம் செய்து விட்டார்களா..? 'ஐயா..','சார்...' என்றெல்லாம் சொல்லி விடுகிறார்களே..!! யூத்து தாம்பா..!! நம்ப மாட்டாங்க போலிருக்கே..!!! ம்ம்..!!! :)