Friday, July 24, 2009

திருப்பாவை பாடிய செல்வியின் பிறந்த தினம் - வாழ்த்த வர்றீங்களா?இன்று விரோதி வருடம், ஆடி மாதம், 9ம் தேதி பூர நட்சத்திரம் (ஜூலை 25) ரொம்ப்ப்ப்ப முக்கியமான நாளுங்க.. நிறைய பேருக்கு தெரிந்தது தான், அதனால எல்லாரும் சேர்ந்து நம்ம திருப்பாவைச் செல்விக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லிருங்க.. எப்புடி வாழ்த்துறதுன்னு கேக்குறீகளா? நமக்கு Happy Birthday to you பாட்டைத் தவிர வேற எதுவும் தெரியாதேப்பான்னு சொல்றது கேக்குது. இதோ என்னோட ஸ்வீட் அத்தை எப்புடிக் கொஞ்சிக் கொஞ்சி பாடுறாங்கன்னு கேளுங்க.

திருப்பாவைச் செல்விக்கு அறிமுகம் வேண்டாம்.. என்ன இப்புடிச் சொல்லிட்டேனேன்னு பாக்காதீங்க, நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் மொத்தம் எத்தனை பாட்டுன்னு கேட்டா எத்தனை பேருக்குத் தெரியும் சொல்லுங்க பாப்போம் :) ஆனா ஆண்டாள்னு சொன்ன உடனே திருப்பாவை முப்பது பாட்டும் தான் தோணும். மார்கழித் திங்கள் கை நிறைய பொங்கல்ங்கிற முதல் வரியாவது கண்டிப்பாக எல்லாருக்கும் தெரியும் தானே :)

இன்னைக்கு இங்க இப்போ ஆண்டாள் பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சியா பதிவுலக வரலாற்றில் முதன்முறையாகன்னு எல்லாம் விளம்பரப்படுத்தாம எங்க அத்தை அந்தக் குட்டிப் பெண்ணை பத்தி ஒரு பாட்டு பாடப் போறாங்க.. அதனால் ஆண்டாளை வரவேற்பதற்கு முன் எங்க அத்தையை இங்க அறிமுகப்படுத்துறதுல நான் பெருமைப்பட்டுக்குறேன் :)ஸ்ரீவில்லிபுத்தூர் கமலா என்று எங்களால் செல்லமாக அழைக்கப்படும் எங்க அத்தை ஒருமுறை பெங்களூர் வந்தப்போ, அவங்களோடவும், சில உறவினர்களுடனும் வெளியில் சென்றிருந்தோம்.. மற்றவர்கள் ஷாப்பிங் செய்ய்ச் செல்ல, அத்தையும் நானும் அலைய வேண்டாம் என்று ஒரு இடத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். அத்தை பேசவில்லை, பாட ஆரம்பித்து விட்டார்கள்.. கண்ணனை, கோதையை, ஆசார்ய இராமானுசரை, ஸ்ரீமத் வேதாந்த தேசிகரை என்று ஒவ்வொருவருக்காகவும் தன்னை மறந்து, அதிக மக்கள் நடமாடும் பகுதியில் பாடிக் கொண்டே இருந்தார். எங்களைச் சுற்றி ஒரே ரசிகப் பெருமக்கள். சரி போதும் போதும்... இதோ நமது முக்கிய விருந்தாளி, வந்து
விட்டாள்.

கட்டியம் சொல்பவர், நம் ஆண்டாள் வருகையை உரத்த குரலில் சொல்கிறார்.. வாருங்கள் அனைவருமாக வரவேற்போம்.

‘ஆண்டாள் வந்தாள்!
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி வந்தாள்!
பட்டர்பிரான் திருமகள் வந்தாள்!
பாட வல்ல நாச்சியார் வந்தாள்!
திருப்பாவை பாடிய செல்வி வந்தாள்!
ஞான செழிப்புமிக்க கோதை வந்தாள்!
அன்பை அருளச் செய்த ஆண்டாள் வந்தாள்!
திருமாலைப் பிரியாத நிலமகள் வந்தாள்!
உடையவள் வந்தாள்!
தோகை மயிலாள் வந்தாள்!
ஞானத் தலைவி வந்தாள்…’’

இதோ எம் தலைவியை,
மாணிக்கம், வைரத்தினாலான ஊஞ்சலில் அமரவத்து,
பட்டர்பிரான் கட்டி வைத்த திருநந்தவனத்தில் இருந்து தொடுத்து வந்த மலர் மாலை கொண்டு வந்து சார்த்தி,
அரங்கன் மார்பில் சாற்றிய சந்தனம் கொடுத்து,
கண்ணனின் தோள் அங்கவஸ்த்திரம் கொண்டு பொன்னாடை போர்த்தி,
திருமாலிருஞ்சோலை அழகனுக்கு நிவேதனம் செய்த அக்கார அடிசில் தந்து,
அவளின் உற்ற தோழியாம், பச்சைக்கிளி வந்து அவள் கையில் அமர,
ஒரு அதிஅற்புதமானதொரு சூழல்


அரங்கன் வந்து காப்பு கட்ட கனாக் கண்ட ஆண்டாளைப் போல, நம்முடன் ஆண்டாள் மீண்டும் வந்து இருக்க மாட்டாளா என்று நான் தினம் கனவு காண்கிறேன்..

சரி ஆண்டாளைக் காக்க வைக்க வேண்டாம்.. பிறந்ததினக் கொண்டாட்டத்திற்கு நிறைய இடங்களுக்கு செல்ல வேண்டி இருக்கும்.. அதனால் அத்தையின் பாட்டைக் கேட்டுக் கொண்டே.. ஆண்டாளின் ஊஞ்சலை மெதுவாக ஆட விட்டுக் கொண்டாடுவோம் வாருங்கள்.

ஆடிப்பூரத்துத்த ஆடிப்பூரத்துதித்த ஆண்டாள் நம் கோதை...
ஆண்டாள் நம் கோதை...
அணியரங்கருடன் ஊஞ்சல் அணியரங்கருடன் ஊஞ்சல்
ஆடினாள் அப்போதே.... ஆடிரூஞ்சல்..

பாடிப்பாமாலை தந்த பாடிப்பாமாலை தந்த
பட்டர்பிரான் கோதை... பட்டர்பிரான் கோதை..
பணியரங்கருடன் ஊஞ்சல்.. பணியரங்கருடன் ஊஞ்சல்...
ஆடினாள் அப்போதே..லாலி..

ஸ்ரீலத்துழாயடியில்.. ஸ்ரீலத்துழாயடியில்..
சிசுவாய் மலர்ந்தாள்.. கோதை சிசுவாய் மலர்ந்தாள்
நாதன் வடபத்ரர்க்கு.. மாலை சூட்டிக் கொடுத்தாள் ஆடிரூஞ்சல்..

திருப்பாவை பாடித்தந்த.. திருப்பாவை பாடித்தந்த
தீஞ்சுவைக் கனியே.. தீஞ்சுவைக் கனியே..
பன்னிரு ஆழ்வாரில்.. பாங்கான கோதாய்.. பாடிரூஞ்சல்..

திருவாடிப் பூரத்து.. திருவாடிப் பூரத்து
ஜெகத்துதித்தாள் வாழி...
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழி.. ஆடிர் ஊஞ்சல்.

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெரியாழ்வார் பெற்றெடுத்த
பெண்பிள்ளை கோதாய்..பெண்பிள்ளை கோதாய்..
பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னான கோதாய்.. ஆடிர் ஊஞ்சல்..

ஒருநூற்று நாற்பத்து.. ஒருநூற்று நாற்பத்து
மூன்றுரைத்தாள் வாழி.. உயர் அரங்கற்கே கண்ணி
உகந்தளித்தாள் வாழி.. ஆடிர் ஊஞ்சல்..

மருவாரும் திருமல்லி.. மருவாறும் திருமல்லி
வளநாடு வாழி..வண்புதுவை நகர்க்கோவை...
வண்புதுவை நகர்க்கோவை.. மலர்ப்பதங்கள் வாழி லாலி.. லாலி..


சூடிக் கொடுத்த சுடர்க்கொடி வடபெருங்கோயிலுடையான் திருவடிகளே சரணம்49 comments :

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராகவ்,
உங்கள் அத்தையைப் பார்த்ததும் கேட்டதும் ஒரு சந்தோஷம். எனக்கும்
ஸ்ரீவில்லிபுத்தூரில் கமலி என்றொரு சினேகிதி இருந்தாள். அது ஒரு 55 வருடங்களுக்கு முன்னால்.


உங்கள் அத்தையும் நீங்களும் கொடுத்து வைத்தவர்கள். அதை நானும் அனுபவிக்க நீங்கள் கொடுத்தீர்கள். அந்த ஆண்டாளுக்கே நன்றி.
அபூர்வமான படத்தைக் காணெங்கள் கண்கள் பாக்கியம் செய்திருக்கின்றன.


எத்தனை கோடி நன்றி சொல்லுவேன்!!
அத்தைக்கு என் நமஸ்காரங்கள்.
அளித்த ரவிக்கும் என் நன்றி.

மதுரையம்பதி said...

அருமை ராகவ். காலையில் இனிய பாடலை, மனமுருகி பாடியதைக் கேட்க தந்தமைக்கு நன்றிகள் பல.

அவர் பாடிய மற்றவற்றையும் பிறகொரு சமயம் வலையேற்றுங்கள்.
எனது நமஸ்காரங்களையும் அவருக்குத் தெரிவித்திடுங்கள்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

Happy Birthday dee my thozhi Kothai! :))

வாவ்! வாவ்! வாவ்!
அத்தை தான் எத்தனை எத்தனை பாட்டு பாடி எனக்குக் கொடுத்து இருக்காங்க! :))

உச்சரிப்பும், தமிழ் ழகர, றகர, லகர, ளகரங்கள் இந்த வயதிலும் கணீர்-ன்னு வருகிறது! மூச்சு வாங்காமல் நீண்ட கவிதையைப் பாடுவதும்....அவள் அருளாலே அவள் கவி பாடி....

இன்னுமொரு நூற்றாண்டு இரும்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் மொத்தம் எத்தனை பாட்டுன்னு கேட்டா எத்தனை பேருக்குத் தெரியும் சொல்லுங்க பாப்போம் :) ஆனா ஆண்டாள்னு சொன்ன உடனே திருப்பாவை முப்பது பாட்டும் தான் தோணும்//

:))

//மார்கழித் திங்கள் கை நிறைய பொங்கல்ங்கிற முதல் வரியாவது கண்டிப்பாக எல்லாருக்கும் தெரியும் தானே :)//

எல்லாருக்கும் தெரியுதோ இல்லையோ, ஆனா எனக்குத் தெரியாது! :))

திருவாசிரியம் = Teachers Day Book-aa?
திருச்சந்த விருத்தம் = Appdinaa ennanga?
திருவெழுக்கூற்று இருக்கை = Aiyo! Ippo ethukku vaiyareenga? :)

திருப்பாவை?
முப்பது பாட்டும் தெரியலீன்னாக் கூட, திருப்பாவை-ன்னு ஒன்னு இருக்குறது எனக்கு ரொம்ப ரொம்ப நல்லாத் தெரியுமே! ரெம்பாவாய்-ன்னு முடியுமே! அதானுங்களே? :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அரங்கன் மார்பில் சாற்றிய சந்தனம் கொடுத்து,கண்ணனின் தோள் அங்கவஸ்த்திரம் கொண்டு பொன்னாடை போர்த்தி//

உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை உடுத்துக் கலத்ததுண்டு! :)

அரங்கன் மார்புச் சந்தனத்தை நீயே வைத்துக் கொள் கோதை!
உன் கைவிரல் மருதாணிப் பச்சையைக் களைவாயே! அதை அடியேன் உன் தோழனுக்கு கொடுடீ! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//பணியரங்கருடன் ஊஞ்சல்//

அணி அரங்கருக்கும் பணி அரங்கருக்கும் என்ன வித்தியாசம் ராகவ் ஐயா? :)

//பன்னிரு ஆழ்வாரில்.. பாங்கான கோதாய்.. பாடிரூஞ்சல்//

அஞ்சு குடிக்கு "ஒரு" சந்ததியாய்
ஆழ்வார்கள்
தஞ்செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய்

//மருவாறும் திருமல்லி// (எ.பி)
= மருவாரும் திருமல்லி = வாசனை மணக்கும் மல்லி நாட்டு வில்லிபுத்தூர்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வண்புதுவை நகர்க்கோவை.. மலர்ப்பதங்கள் வாழி லாலி.. லாலி..//

லாலி தாயி
லாலி தோழீ
என் கண்ணுக்கினிய ஆண்டாள் திருவடிகளே சரணம்!
என் மனத்துக்கினிய ஆண்டாள் திருவடிகளே சரணம்!
என் உயிரினுக்கினிய ஆண்டாள் திருவடிகளே சரணம்! சரணம்!

ஹரி ஓம்!

தமிழன் வேணு said...

மிகவும் அற்புதமான வலைப்பதிவு! சூடிக்கொடுத்த சுடர்க்கொடியின் திரு அவதார நாளில், நானும் எனக்குத் தெரிந்த அளவில், ஒரு திரைப்படப் பாடலின் மெட்டில் எனது சிற்றறிவுக்கு எட்டிய ஒரு வாழ்த்துப்பாடலை எழுதியிருக்கிறேன்.

’மூன்று தெய்வங்கள்,’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’வசந்தத்தில் ஓர் நாள் மணவறையோரம்,’ என்ற பி.சுசீலா பாடிய பாடலின் மெட்டில் இப்பாடலை எழுதியுள்ளேன்.

பூரநன்னாளில் புவனத்தில் வந்து
பூமாலை போல் பிறந்தாளே-கோதை
பாமாலை பல புனைந்தாளே-கோதை
பாமாலை பல புனைந்தாளே!

கள்ளூறும் பூமாலை தான்சூடிப் பின்னே
கண்ணனுக் குவந்தளித்தாளே!-கோதை
கன்னியர்க்கெல்லாம் மார்கழிநோன்பை
கவிமலர் தொடுத்தளித்தாளே-கோதை
வில்லிபுத்தூரின் விளக்கினில் பூமி
விளங்கிட ஒளிகொடுத்தாளே-கோதை
விளங்கிட ஒளிகொடுத்தாளே-கோதை
பாமாலை பல புனைந்தாளே!

வாரணமாயிரம் வலஞ்சூழ வந்து
நாரணன் தனிலுறைந்தாளே-கோதை
வாழியவென்று வானுடன்வையம்
வாழ்த்திட அருள்புரிந்தாளே-கோதை
எற்றைக்கு மேழேழ் பிறவிக்கும் மாலின்
உற்றவளாய்ப் பிறந்தாளே-கோதை
உற்றவளாய்ப் பிறந்தாளே
பாமாலை பல புனைந்தாளே!

பூரநன்னாளில் புவனத்தில் வந்து
பூமாலை போல் பிறந்தாளே-கோதை
பாமாலை பல புனைந்தாளே-கோதை
பாமாலை பல புனைந்தாளே!

(சொற்குற்றம், பொருட்குற்றம் இருப்பின் பொருத்தருள்க! சற்றே அவசரத்தில் எழுதியது!)

தமிழன் வேணு

Raghav said...

//வல்லிசிம்ஹன் said...
அன்பு ராகவ்,//

ரொம்ப நன்றி வல்லியம்மா! அன்பு ராகவ்னு சொன்னது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.

//எனக்கும்
ஸ்ரீவில்லிபுத்தூரில் கமலி என்றொரு சினேகிதி இருந்தாள். //
எங்க அப்பா, அத்தை எல்லாரும் ஸ்ரீவில்லிபுத்தூர் தான்மா.. இப்பவும் அத்தை அங்கதான் இருக்காங்க.

//எத்தனை கோடி நன்றி சொல்லுவேன்!!
அத்தைக்கு என் நமஸ்காரங்கள்.//

நன்றியெல்லாம் எதுக்கும்மா.. அன்பா கூப்புட்டீங்களே.. அது போதும் எனக்கு.. நமஸ்காரத்தை அத்தைக்கு அனுப்பிர்றேன்.

Raghav said...

//மதுரையம்பதி said...
அருமை ராகவ். காலையில் இனிய பாடலை, மனமுருகி பாடியதைக் கேட்க தந்தமைக்கு நன்றிகள் பல. //

ரொம்ப நன்றி மெளலி அண்ணா..
70 வயது தாண்டியும் நல்லா பாடுறாங்கண்ணா..அவங்க சொல்ற மாதிரி ஆண்டாள் கருணை தான்

ஷைலஜா said...

ஆஹா அருமை அருமை ராகவ்! அமெரிக்க நேரப்படி காலை அஞ்சரைக்கு எழுந்து முதல்ல உன் பதிவில் ஆண்டாளைகக்ண்டு குளிர்ந்தேன் இதோ அத்தைப்பாட்டைக்கேட்டுவிட்டு வந்து விவரமாய் பின்னூட்டமிடறேன் என்ன?

ஆண்டுஸ்க்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்து சொல்லிடு!

நா. கணேசன் said...

நல்ல ஊஞ்சல் பாட்டு!
அருமை.

நா. கணேசன்

Raghav said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
Happy Birthday dee my thozhi Kothai! :))//

உங்க தோழியை பிறந்த நாள் ட்ரீட் எங்களுக்கெல்லாம் கொடுக்கச் சொல்லுங்க

Raghav said...

//உச்சரிப்பும், தமிழ் ழகர, றகர, லகர, ளகரங்கள் இந்த வயதிலும் கணீர்-ன்னு வருகிறது! மூச்சு வாங்காமல் நீண்ட கவிதையைப் பாடுவதும்....அவள் அருளாலே அவள் கவி பாடி....
//

நன்றி நன்றி.. எங்க வீட்டு கல்யாணங்கள்ல பாட்டு, டான்ஸ்ன்னு அமர்க்களப்படுத்துவாங்க.. அதிலும் ஸ்ரீனிவாசன் பூமிதேவி கல்யாணம் பாடும்போது அவ்வளவு அருமையா இருக்கும். எங்க குடும்பத்தில் அதிகம் படித்த முதல் பெண்மணியும் அவர்தான்.

Raghav said...

//திருப்பாவை?
முப்பது பாட்டும் தெரியலீன்னாக் கூட, திருப்பாவை-ன்னு ஒன்னு இருக்குறது எனக்கு ரொம்ப ரொம்ப நல்லாத் தெரியுமே! ரெம்பாவாய்-ன்னு முடியுமே! அதானுங்களே? :)//

என்னா நக்கலு.. உங்க மார்கழிப் பதிவுல நான் சொன்னது எனக்கேவா.. முடியல அழுதுருவேன்

Raghav said...

//(எ.பி)
= மருவாரும் திருமல்லி //

நன்றிண்ணா.. திருத்திட்டேன்

Raghav said...

//தமிழன் வேணு said...
மிகவும் அற்புதமான வலைப்பதிவு! //

வாங்க வேணு ஐயா.. ரொம்ப நன்றி.. இந்த வலைப்பதிவின் பிதாமஹர்களான குமரன், கே.ஆர்.எஸ்க்கு தான் சேரும்.. நானெல்லாம் அணில் தான்.

Raghav said...

//சூடிக்கொடுத்த சுடர்க்கொடியின் திரு அவதார நாளில், நானும் எனக்குத் தெரிந்த அளவில், ஒரு திரைப்படப் பாடலின் மெட்டில் எனது சிற்றறிவுக்கு எட்டிய ஒரு வாழ்த்துப்பாடலை எழுதியிருக்கிறேன்.//

அருமையா இருந்ததுங்க.. மெட்டுப் போட்டு பாடிப் பார்த்தேன்.. நீங்களேப் பாடி பதியுங்களேன் ஐயா.

Raghav said...

//கள்ளூறும் பூமாலை தான்சூடிப் பின்னே
கண்ணனுக் குவந்தளித்தாளே!//

அடடா.. கவிதை வரிகள் அட்டகாசமா இருக்கு.. எல்லா வரிகளுமே பிரமாதம்.

இன்று ரொம்பவே சந்தோஷமா இருக்கு. ஆண்டாளுக்கு தான் நன்றி சொல்லணும்

Raghav said...

//ஷைலஜா said...
ஆஹா அருமை அருமை ராகவ்! //

நன்றிக்கா.. காலையில் இங்கு ஆண்டவன் ஆச்ரமத்தில் திருப்பாவை, நாச்சியார் திருமொழி கோஷ்டி அருமையாக இருந்தது. கோதா ஸ்துதி சாற்றுமறையில் பெண்களும் கலந்து கொண்டு பிரமாதப்படுத்தி விட்டனர்.

Raghav said...

//நா. கணேசன் said...
நல்ல ஊஞ்சல் பாட்டு!
அருமை.//

நன்றி கணேசன் ஐயா ! ஊஞ்சல்ல அமர்ந்திருக்குறது ஆண்டாள் ஆச்சே.. அதான் அருமையா இருக்கு..

Srinivasan said...

அன்புள்ள ராகவ்,, மிக நன்றி. உங்கள் அத்தையின் பாடல் நல்ல நாளில் அளிக்கப்பட்ட திரு ஆண்டாளின் அருளன்றி வேறில்லை. தன்யோஸ்மி.
தாஸன்
அன்பில் ஸ்ரீனிவாஸன்
புதுதில்லி

Raghav said...

//Srinivasan said...
அன்புள்ள ராகவ்,, மிக நன்றி. உங்கள் அத்தையின் பாடல் நல்ல நாளில் அளிக்கப்பட்ட திரு ஆண்டாளின் அருளன்றி வேறில்லை//

மிகவும் நன்றி ஸ்வாமி... தினமும் ஆண்டாளின் அழகு முகம் பார்த்துப் பார்த்து வளர்ந்தவர் ஆயிற்றே அதான் பாடலில் உருகியிருப்பார். தங்கள் வருகையால் மிகவும் மகிழ்ந்தேன்.

Anonymous said...

அத்தையின் பாடல் மீண்டும் இணைய தளத்தில்,,,,

அருமையோஅருமை.ஆடிப்பூரத்தன்று இணைய தளத்தில் ஒரு ஆன்மீக சக்கரைப் பொங்கல்.

அத்தைக்கு எல்லாரும் ஒரு ”ஓ ” போடுங்க.

ஆண்டாளுக்கு எல்லாரும் ஒரு “ஜே” போடுங்க.

பதிவு போட்ட தம்பி ராகவனுக்கு ஒரு “ஜோ” போடுங்க...

ஷைலஜா said...

//

இன்னைக்கு இங்க இப்போ ஆண்டாள் பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சியா பதிவுலக வரலாற்றில் முதன்முறையாகன்னு எல்லாம் விளம்பரப்படுத்தாம எங்க அத்தை அந்தக் குட்டிப் பெண்ணை பத்தி ஒரு பாட்டு பாடப் போறாங்க.. அதனால் ஆண்டாளை வரவேற்பதற்கு முன் எங்க அத்தையை இங்க அறிமுகப்படுத்துறதுல நான் பெருமைப்பட்டுக்குறேன் //

ரொம்பப் பெருமைபடவேண்டியவிஷ்யம் ராகவ் நம் குடும்பத்தில் முன்னோர்கள் பலர் அறிவுமிக்கவர்கள் அவர்கள்காலத்தில் இதுபோல வசதி இல்லை அன்று குடத்தில் இட்ட விளக்குகள் தான் எத்தனை எத்தனை!

ஷைலஜா said...

அத்தையின் பாட்டை நானும் கற்றுக்கொண்டு இனி நம்ம வீட்டு(முக்கியமா ராகவ் கல்யாணத்துல):0 பாடிக்கலக்கப்போறேனே:)

ஷைலஜா said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//அரங்கன் மார்பில் சாற்றிய சந்தனம் கொடுத்து,கண்ணனின் தோள் அங்கவஸ்த்திரம் கொண்டு பொன்னாடை போர்த்தி//

உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை உடுத்துக் கலத்ததுண்டு! :)

அரங்கன் மார்புச் சந்தனத்தை நீயே வைத்துக் கொள் கோதை!
உன் கைவிரல் மருதாணிப் பச்சையைக் களைவாயே! அதை அடியேன் உன் தோழனுக்கு கொடுடீ’’//


>>>>>>>>>>>>>>>. அட அட! அந்தப்ப்ச்சைல அவ தன் மாலின் மாமலை மேனியைக்காண்பாள் உஙக்ளுக்குத்தரமாட்டா ரவி!

ஷைலஜா said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//பணியரங்கருடன் ஊஞ்சல்//

அணி அரங்கருக்கும் பணி அரங்கருக்கும் என்ன வித்தியாசம் ராகவ் ஐயா? :)

//

>>>>>>>>>>>>>>>.......
பணியரங்கருடன் ஊஞ்சல்..... பணிந்து அரங்கனுடன் ஊஞ்சல் ஆடறாள்னு சொல்லலாம். பணிந்து=மணமகள் தலைகுழிந்து?

ஷைலஜா said...

படங்களை எங்க எடுத்தே ராகவ்? விழியில்புகுந்து மனசை நிரப்புகிறது.

ஷைலஜா said...

//
பூரநன்னாளில் புவனத்தில் வந்து
பூமாலை போல் பிறந்தாளே-கோதை
பாமாலை பல புனைந்தாளே-கோதை
பாமாலை பல புனைந்தாளே!

(சொற்குற்றம், பொருட்குற்றம் இருப்பின் பொருத்தருள்க! சற்றே அவசரத்தில் எழுதியது!)

தமிழன் வேணு

4:23 AM, July 25, 2009

//

வேணு சார், அருமையா எழுதிட்டீங்க. அனுமதி தந்தா இந்தப்பாடலை நான் பாடிட முயலுவேன்!

Raghav said...

//ஷைலஜா said...
அத்தையின் பாட்டை நானும் கற்றுக்கொண்டு இனி நம்ம வீட்டு(முக்கியமா ராகவ் கல்யாணத்துல):0 பாடிக்கலக்கப்போறேனே:) //

ஆஹா.. சூப்பர்க்கா.. உங்களுக்கு கம்பெனி தர நிறைய பேர் இருக்காங்க.. நாட்டிய நிகழ்ச்சியே ஏற்பாடு பண்ணிடலாம்க்கா..

Raghav said...

//ஷைலஜா said...
படங்களை எங்க எடுத்தே ராகவ்? விழியில்புகுந்து மனசை நிரப்புகிறது//

உங்க ஊர்லயும், எங்க ஊர்லயும் எடுத்தது தான்க்கா..

Raghav said...

//அத்தைக்கு எல்லாரும் ஒரு ”ஓ ” போடுங்க.//

போட்டாச்சு சுந்தர் அண்ணா..

ஆண்டாளுக்கு எல்லாரும் ஒரு “ஜே” போடுங்க.

ஆண்டாளுக்கு ஜே !!

//பதிவு போட்ட தம்பி ராகவனுக்கு ஒரு “ஜோ” போடுங்க..//

ஹி ஹி.. ஜோ சூரியாவுக்கு மட்டும் தான்..

ரொம்ப நாள் கழித்து பதிவுலகத்துக்கு வந்துருக்கீங்க.. சீக்கிரம் பதிவுகள் போட ஆரம்பிங்கண்ணா..

R.DEVARAJAN said...

அரங்கனும், ஆண்டாளும் ஒரு சேர்த்தியில் அமர்ந்திருப்பது பொரி முகம் தட்டும் திருக்கோலத்தைக் கண்முன் நிறுத்துகிறது.

ஆண்டாள் வாழ்க !
அத்தையாரும் வாழ்க !!
மேலும் பல பாடல்களைக் கேட்கும் பேறு கிடைக்க வேண்டும்

தேவ்

தமிழன் வேணு said...

//இந்த வலைப்பதிவின் பிதாமஹர்களான குமரன், கே.ஆர்.எஸ்க்கு தான் சேரும்.. நானெல்லாம் அணில் தான்//

யாராக இருப்பினும் சரி, ’எந்தரோ மாகானு பாவுலு அந்தரிகி வந்தனமு’

தமிழன் வேணு said...

//அருமையா இருந்ததுங்க.. மெட்டுப் போட்டு பாடிப் பார்த்தேன்.. நீங்களேப் பாடி பதியுங்களேன் ஐயா.//

பாடத்தெரிந்திருந்தால் நிச்சயம் பாடியிருப்பேன். எழுதுகிற முயற்சியில் மட்டுமே இன்னும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன்.

sury said...

ராகவ் அவர்களோட அத்தை பாடின பாட்டு கன ஜோர் அப்படின்னு சொல்லி விட்டுடாமே,
இந்தக் கிழம் நானும் பாடுவேனாக்கும் என்று அடம் பிடித்து பாடி, ரெகார்டு பண்ணி, அதை
யூ ட்யூபிலே வேறு போட்டு அமக்களம் பண்றது.

எங்க மாமியார் ஊஞ்சல் பாட்டு பாடற மாதிரியே இருக்கு.

ஏதாவது காபி ரைட் இருந்து உங்க மேலே கேஸ் போட்டு விடுவான்னா எனச் சொல்லியும்
கேட்கல்லையே !!

யாருக்காச்சும் அது போல காபி ரைட் இருந்தா கோவிச்சுக்காதீங்க... பாவம் கிழவர்.
உங்களுக்கு நேரம் இருந்தா, , அவரது பாட்டை க்கேட்டுகிட்டே , நான் ஒரு கப் டிகிரி காபி தர்றேன்
அதையும் சுவைச்சு குடிக்க எங்க வீட்டுக்கு வாங்க..

மீனாட்சி பாட்டி.

Raghav said...

//R.DEVARAJAN said...
அரங்கனும், ஆண்டாளும் ஒரு சேர்த்தியில் அமர்ந்திருப்பது பொரி முகம் தட்டும் திருக்கோலத்தைக் கண்முன் நிறுத்துகிறது.//

ஆமாம் தேவ் ஐயா.. ஆண்டாள், அரங்கன் வந்து காப்பு கட்டுவது போல் கனவு கண்ட காட்சி அது.

//ஆண்டாள் வாழ்க !
அத்தையாரும் வாழ்க !!
மேலும் பல பாடல்களைக் கேட்கும் பேறு கிடைக்க வேண்டும் //

ஹா ஹா.. நன்றி நன்றி..
கண்டிப்பாக பதிகிறேன் ஐயா..

Raghav said...

// sury said...
ராகவ் அவர்களோட அத்தை பாடின பாட்டு கன ஜோர் //

ரொம்ப டாங்கீஸ் பாட்டி :)

// நானும் பாடுவேனாக்கும் என்று அடம் பிடித்து பாடி, ரெகார்டு பண்ணி, அதை யூ ட்யூபிலே வேறு போட்டு அமக்களம் பண்றது. //

லிங்க் கொடுங்க.. அனைவரும் பார்த்து மகிழட்டும்.

//நான் ஒரு கப் டிகிரி காபி தர்றேன்
அதையும் சுவைச்சு குடிக்க எங்க வீட்டுக்கு வாங்க..//

கண்டிப்பா.. காபி ரைட்டா ரெண்டு கப்பா காஃபி தருவீங்கள்ல :)

sury said...

http://www.youtube.com/watch?v=CoMxCovbQNQ

//லிங்க் கொடுங்க.. அனைவரும் பார்த்து மகிழட்டும்.//

Here it is quoted above.
அத்தைக்கு என் நமஸ்காரங்கள்.
meenakshi paatti.

Divyapriya said...

அத்தை பாட்டு மிக அருமை, கேக்கவே இனிமையா இருக்கு...அவங்க படமும் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு...

குமரன் (Kumaran) said...

அருமையான இடுகை இராகவ். அருமை.

//பிதாமஹர்களான குமரன், கே.ஆர்.எஸ்//

தாத்தாக்களா நாங்க? சரி தான் போங்க. அதான் வயசான மாதிரியே இருக்கு.

Raghav said...

//Divyapriya said...
அத்தை பாட்டு மிக அருமை, கேக்கவே இனிமையா இருக்கு...அவங்க படமும் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு..//

டாங்கீஸ் திவ்யா.. இன்னும் நிறைய பாட்டு வரும் :)

Raghav said...

//குமரன் (Kumaran) said...
அருமையான இடுகை இராகவ். அருமை.
//

நன்றி குமரன். நல்ல இருக்கீங்களா.

//தாத்தாக்களா நாங்க? சரி தான் போங்க. அதான் வயசான மாதிரியே இருக்கு.//

ஹி ஹி.. நீங்க தாத்தாக்கள் இல்ல குமரன் தாதா :)

Srinivas said...

//
ஹி ஹி.. ஜோ சூரியாவுக்கு மட்டும் தான்.. //

அப்போ தங்களுக்கு யாரோ!!!
ஓகே ஓகே ..எனக்கு தெரியும்....இருந்தாலும் தங்களின் வாயால் கேட்டால் சந்தோசமடைவேன்..
இதையே ஒரு பதிவாக போட்டால் மிக்க மகிழ்ச்சியடைவேன் .

Raghav said...

//Srinivas said...
அப்போ தங்களுக்கு யாரோ!!!
ஓகே ஓகே ..எனக்கு தெரியும்....இருந்தாலும் தங்களின் வாயால் கேட்டால் சந்தோசமடைவேன்..
இதையே ஒரு பதிவாக போட்டால் மிக்க மகிழ்ச்சியடைவேன் //

கும்மியடிக்கிறதுக்குன்னே வந்துட்டியா :)
எனக்கு யாருங்குறத விட உனக்கு யாருங்குறது தான் இப்ப முக்கியம் கண்ணா.. உனக்காக வேணும்னா ப்ரு பதிவு போடுறேன்.. "ஸ்ரீனிவாஸின் சில்மிஷங்கள்” அப்புடின்னு ஓகேவா :)

Srinivas said...

//கும்மியடிக்கிறதுக்குன்னே வந்துட்டியா :)
எனக்கு யாருங்குறத விட உனக்கு யாருங்குறது தான் இப்ப முக்கியம் கண்ணா.. உனக்காக வேணும்னா ப்ரு பதிவு போடுறேன்.. "ஸ்ரீனிவாஸின் சில்மிஷங்கள்” அப்புடின்னு ஓகேவா :)//


Adhu Romba Kashtam naa...
Tamanna, Shriya , Trisha and Asin pathi laam eludhanum...Ellaarum Poraamai paduvaargal...Ungalai patri eludhinaal dhaan nandraaga irukkum

BALAJI K said...

ஆஹா! என்ன அழகான ஊஞ்சல் பாட்டூ! அத்தையின் அருமையான குரலில், சுத்தமான தமிழ் உச்சரிப்பில் , கேட்க மிகவும் ரம்மியமாக இருந்தது! அத்தைக்கு எனது நமஸ்காரத்தைச் சொல்லவும் ! இது அவர்களே எழுதிய வரிகளா? மிக அருமை! மிக்க நன்றி ! - கே.பாலாஜி

ProfOhio said...

I have once listen to the audio of the song...the link seems to have gone now..Is there anyway we can listen to it again!

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP