Wednesday, May 06, 2009

கள்ளழகரு கிளம்பிட்டாரு கல்யாணம் பார்க்க..

கடந்த ஒரு மாசத்துக்கும் மேலாக நம்ம மதுரை மக்கள் திருவிழா கொண்டாட்டத்துல இருக்காங்க.. இப்போ தான் மிகச் சிறப்பாக வைகை நகர் அரசி, மதுரை அரசாளும் மீனாட்சி அம்மனுக்கும்,  நம்ம சொக்கருக்கும் திருக்குடமுழுக்கு ரொம்ப அற்புதமா நடந்து முடிந்தது. 

அடுத்ததா, மீனாட்சி அம்மன், சொக்கநாதர் திருக்கல்யாணம்.. பவளக்கனிவாய் பெருமாள் திருப்பரங்குன்றத்தில் இருந்து எழுந்தருளி அன்னையை தாரை வார்த்துக் கொடுக்க, பிள்ளைகள் இருவரும் கூடி இருந்து மற்ற சுற்றமும், ஊராரும் கண்டுகளிக்க திருக்கல்யாணம் சிறப்பே நடந்தேறியது. 

எல்லாம் நல்லாதான் நடந்தது... ஆனா முக்கியமா வரவேண்டிய ஒருவர் ஆளே காணோம்.. மதுரையை விட்டு கொஞ்சம் தொலைவில் இருந்தாலும் நெருங்கிய சொந்தம் தான்.. ஆனாலும் வரலை..  என்ன காரணமா இருக்கும் ??

ஒருவேளை பிரயாணம் பண்ணி வர்ற வசதியில்லையோ ? - அப்புடி சொல்ல முடியாது, தங்கப் பல்லக்கில் ஏறி சொகம்மா வரலாம்... இல்லன்னா.. குதிரையில் ஏறி காத்தா பறந்து வரலாம். இருந்தும் ஏன் வரல ?

ஒருவேளை வைகையில வெள்ளம் வந்து வர முடியாமப் போச்சோ ? அதுக்கும் வாய்ப்பு குறைவுதான்.. சரி அதெல்லாம் அவர் வந்ததுக்கப்புறம் கேட்டுக்கலாம்.. முதல்ல அவர் கிளம்பினாரா இல்லையான்னு தெரியலையே !!
கிளம்பிட்டாராம்பா... அழகர் இன்னைக்கு அழகர் மலையை விட்டு திருப்பல்லக்கில் சுந்தரராஜன் கள்ளழகனாக ஆரோகணித்து விட்டார். இதோ நாமும் கண்டு களிப்போம்... வரும் சனிக்கிழமை.. சித்திரை பெளர்ணமி அன்று அதிகாலை ஆற்றில் மண்டூக முனிக்கு சாப விமோசனம் அளிக்க கிளம்பி விட்டார்.. அழகர் ஆற்றில் இறங்கும் நாளில் அந்த நிகழ்ச்சியை காண்போம்.. இப்போ..





கள்ளழகரு கிளம்பிட்டாரு கல்யாணம் பார்க்க
நம்ம கள்ளழகரு கிளம்பிட்டாரு கல்யாணம் பார்க்க
பல்லாக்கு ஏறி..... மாமதுரை நோக்கி...
பல்லாக்கு ஏறி மாமதுரை நோக்கி கிளம்புறாரு.. வரம் எல்லாம் வாரி வாரி வழங்குறாரு
மீனாட்சி கல்யாணம் நடத்தி வைக்க அழகர் வேணும்
தங்கச்சி மீனாட்சி கல்யாணம் நடத்தி வைக்க அழகர் வேணும்

கள்ளழகரு.... நம்ம கள்ளழகரு
கள்ளழகரு கிளம்பிட்டாரு கல்யாணம் பார்க்க
நம்ம கள்ளழகரு கிளம்பிட்டாரு கல்யாணம் பார்க்க

தல்லாகுளம் வந்து சந்தோஷமா சேர்ந்துட்டாரு அழகரு..அழகரு
எதிர்சேவை முடிஞ்சு ராத்திரி தங்க கிளம்பிட்டாரு அழகரு.. அழகரு
வெட்டிவேர் சப்பரத்தில.. ஆயிரம்பொன் சப்பரத்துல
அழகர் ஆண்டாள் மாலையணிஞ்சு பட்டாடை உடுத்திருப்பாரு

தங்கக்குதிரை ஏறி அழகர் வரும் கண்கொள்ளாக் காட்சியைப் பாரு
வளம் கொழிக்கும் வைகை ஆறு மனுசங்களா ஒடும் பாரு

சனங்களோட சந்தோஷம் ஆர்ப்பாட்டம் அமர்க்களம் பாரு 
மதுரை சனங்களோட சந்தோஷம் ஆர்ப்பாட்டம் அமர்க்களம் பாரு

கள்ளழகரு.... நம்ம கள்ளழகரு
கள்ளழகரு கிளம்பிட்டாரு கல்யாணம் பார்க்க
நம்ம கள்ளழகரு கிளம்பிட்டாரு கல்யாணம் பார்க்க

திருமணம் முடிஞ்ச சேதியக் கேட்டு திரும்பிட்டாரு அழகரு.. அழகரு
வண்டியூர நோக்கி பயணம் போக கிளம்பிட்டாரு அழகர்.. அழகரு
ஓடிக்கிட்டே இருப்பாரு ஓரோரு மண்டபமா.
கூடும் சனம் கூட வரக் ஓடிக்கிட்டே இருப்பாரு

விண்ணதிர மண்ணதிர வானவெடி வேடிக்கையோட
விடிவிடியக் கொண்டாட்டம் கோலாகலக் காட்சி பாரு

ஷேசனோட வாகனத்தில் தேனூர நோக்கி கிளம்பிட்டாரு அழகரு.. அழகரு
முனி சாபம் தீர கருடனோட கிளம்பிட்டாரு அழகரு.. அழகரு
இராமராயர் மண்டபத்தில் கோடி சனம் காத்திருக்க
தசாவதார சேவையோடு முத்தங்கி சேவை தந்து 
கள்ளழகர் வேடத்துல மறுபடியும் கிளம்பிட்டாரு

மாமதுரை வீதியெல்லாம் கலக்கிப்புட்டு

கள்ளழகரு.... நம்ம கள்ளழகரு
கள்ளழகரு கிளம்பிட்டாரு கல்யாணம் பார்க்க
நம்ம கள்ளழகரு கிளம்பிட்டாரு கல்யாணம் பார்க்க.

20 comments :

மெளலி (மதுரையம்பதி) said...

நல்லாயிருக்கு பாடல், பதிவு மற்றும் சுட்டி...பாடி லிங்க்கும் கொடுத்திருக்கலாமோ?...

தல்லாகுளம், வண்டியூர், தேனூர் மண்டகப்படின்னெல்லாம் பாடியிருக்கீங்க, ஆனா எங்க ரேஸ் கோர்ஸ் காலனி வருவதைச் சொல்லாம விட்டுட்டீங்களே?....பெருமாளே வந்து வரமளித்தாலும், நீங்க பாடலில் எங்க ஏரியாவுக்கு இடமளிக்காதது ஏனோ? :-)

கூட்டங்களில் சிக்காது பெருமாள் சேவிக்கணும்மானா ரேஸ் கோர்ஸ், கலெக்டர் பங்களா ஏரியாலதான் முடியும்....மலையிலிருந்து கிளம்பி இந்த ஏரியாவுக்கு மதியம் 2-3மணிக்கு வருவார், இதேபோல போகும் போதும் புஷ்ப பல்லக்கில் (இங்கு வரும்போது முன்பெல்லாம் புஷ்பங்கள் உதிர்ந்து, வெறும் நாராக இருக்கும், அந்த அளவுக்கு பெருமாளைப் போட்டுக் குலுக்கிடுவாங்க) வெடி-காலை 5 - 6.0 மணிக்கு வந்துட்டுப் போயிடுவார். முன்பு 7-8 வருடங்கள் தொடர்ந்து பார்க்க முடிந்தது.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கிளம்பிட்டாரைய்யா கிளம்பிட்டாரு!
கூட, கிளம்பிட்டாங்கைய்யா கிளம்பிட்டாங்க! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சரி அதெல்லாம் அவர் வந்ததுக்கப்புறம் கேட்டுக்கலாம்..//

அவரு எப்ப வர்றது? நாங்க எப்போ கேக்குறது?
அதெல்லாம் முடியாது! இப்பனே பதில் சொல்லுலே! எலே அழகப் பய புள்ள, சுந்ந்ந்ந்ந்தர ராசா, எனை ஆள வந்த கோவிந்தா, எலே அழகரு, பதில் சொல்லுலே, பதில் சொல்லு...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சப்பரத்துல அழகர் ஆண்டாள் மாலையணிஞ்சு//

அது! அந்தப் பயம் இருக்கட்டும்! :)

Divyapriya said...

பதிவு, பாட்டு ரெண்டுமே ரொம்ப நல்லா இருக்கு ராகவ்...அழகர் ஆத்துல இறங்கறது பத்தி கூட ஒரு பதிவ போடுங்க...நான் அழகர் கோவிலுக்கே போனதில்லை...இப்ப அழகர் சிலைய பாக்கும் போது தான், அவருக்கு ஏன் இந்த பேரு வந்துச்சுன்னு தெரியுது :))

முகுந்தன் said...

பகிர்ந்துகொண்டதற்கு ரொம்ப நன்றி ராகவ்.. பாட்டும்,பதிவும் கொள்ளை அழகு:)

முகுந்தன் said...
This comment has been removed by the author.
Raghav said...

//மதுரையம்பதி said...
நல்லாயிருக்கு பாடல், பதிவு மற்றும் சுட்டி...//

வாங்க மெளலிண்ணா.. முதலில் நாளை அழகர் ஆற்றில் இறங்குவதற்கு பாடல் போடலாம்னு நினைச்சேன்.. அப்ப தான் இந்தப் பாட்டைப் பார்த்தேன்.. சரி அழகர் கிளம்புறத முதல்ல போடுவோம்னு போட்டேன்..

அழகர் மலையானுக்கு கோவிந்தோவ்..

Raghav said...

//ஆனா எங்க ரேஸ் கோர்ஸ் காலனி வருவதைச் சொல்லாம விட்டுட்டீங்களே//

ஆஹா ஆமாண்ணா.. மறந்துட்டேன் தான்.. நானும் பொதுவாக ரேஸ்கோர்ஸ் மைதானம் சென்று தான் பார்ப்பேன்.. அழகான அழகனை ஆசை தீர அனுபவிக்கலாம்.. நாளைக்குப் பாடல்ல வீடியோலயே காட்டிடலாம் :)

Raghav said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
கிளம்பிட்டாரைய்யா கிளம்பிட்டாரு! //

ஆமாண்ணா.. ஆமா.. முதல்ல இப்புடி தலைப்பு வைக்கலாம்னு பாத்தேன்.. :) சரி வேண்டாம்னு பாட்டோட முதல் வரியையே தலைப்பா வைச்சுட்டேன்.

Raghav said...

//அவரு எப்ப வர்றது? நாங்க எப்போ கேக்குறது?//

அவரு கிளம்பியாச்சு ஓய்.. அதைக் கேக்குறதுக்காக தான் லட்சோப லட்சம் மக்கள் எதிர்க்க வர்றாங்க.. ஆனா என்ன பண்ணுறது... அழகனைக் கண்ட மாத்திரத்தில் அனைத்தும் மறந்து விடுகிறது..

Raghav said...

//இப்பனே பதில் சொல்லுலே! எலே அழகப் பய புள்ள, சுந்ந்ந்ந்ந்தர ராசா, எனை ஆள வந்த கோவிந்தா, எலே அழகரு, பதில் சொல்லுலே, பதில் சொல்லு.//

ஆறு வார்த்தையா கேக்குறீங்க :)
அதுக்கு நீங்க காஞ்சிபுரம்ல போகனும்.. இவர்க்கு தெரிஞ்சதெல்லாம் காதல் ஒண்ணுதானே.. :)

Raghav said...

//Divyapriya said...
பதிவு, பாட்டு ரெண்டுமே ரொம்ப நல்லா இருக்கு ராகவ்...//

ரொம்ப நன்றி திவ்யா..

//.அழகர் ஆத்துல இறங்கறது பத்தி கூட ஒரு பதிவ போடுங்க..//
தங்கள் சித்தம் அடியேன் பாக்கியம் :) நாளைக்கு தான் அழகர் ஆற்றில் இறங்கும் நாள்.. போட்டுடலாம்.

Raghav said...

//இப்ப அழகர் சிலைய பாக்கும் போது தான், அவருக்கு ஏன் இந்த பேரு வந்துச்சுன்னு தெரியுது :))//

ஆமாங்க கொள்ளை அழகர் அவர். அபரஞ்சி எனப்படும் தங்கத்தால் ஆனவர். எனக்கு அழகரைப் பாக்கும்போதெல்லாம் அவர் கன்னத்தைப் பிடிச்சு கிள்ளணும் போலத் தோணும். :) அவ்ளோ அழகு..

அழகர் அழகு.. அதனால் அழர் வரும் குதிரை அழகு.. குதிரையில் இறங்கும் காட்சி அழகோ அழகு.

Raghav said...

//முகுந்தன் said...
பகிர்ந்துகொண்டதற்கு ரொம்ப நன்றி ராகவ்.. பாட்டும்,பதிவும் கொள்ளை அழகு:)//

வாங்க முதலாளி.. நன்றி.. அண்ணி, கேஷவ் நலமா.. அழகரை நாளைக்கும் வந்து சேவிங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

பதிவு நல்லா இருக்கு.. பாட்டும்.. நீங்க மதுரையா? முடிஞ்சா மின்னஞ்சல் பண்ணுங்க நண்பா..

//மதுரையம்பதி ...//

அண்ணே.. சாயங்காலம் அண்ணா நகர்ல இன்னும் ப்ரீயா பார்க்கலாமேன்னே.. ஆனா பாருங்க.. கூட்டத்தோட கூட்டமா போய் பாக்குறதுதான் நம்ம வழக்கம்..

Raghav said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
பதிவு நல்லா இருக்கு.. பாட்டும்..//

நன்றி பாண்டியன்.. நான் பரமக்குடி..மதுரைக்குப் பக்கம் தான்

குமரன் (Kumaran) said...

நல்ல பாட்டு. முன்னுரையும் ரொம்ப நல்லா இருக்கு இராகவ்.

Kavinaya said...

உங்க புண்ணியத்துல அழகர் கிளம்பறதையும் பார்த்தாச்சு. பாடல் நல்லாருக்கு. நன்றி ராகவ்.

Newittpvdw said...

பதிவு நல்லா இருக்கு.. பாட்டும்.. நீங்க மதுரையா? முடிஞ்சா மின்னஞ்சல் பண்ணுங்க நண்பா.. //மதுரையம்பதி ...// அண்ணே.. சாயங்காலம் அண்ணா நகர்ல இன்னும் ப்ரீயா பார்க்கலாமேன்னே.. ஆனா பாருங்க.. கூட்டத்தோட கூட்டமா போய் பாக்குறதுதான் நம்ம வழக்கம்..

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP