Tuesday, September 02, 2008

கண்ணனைப் பணி மனமே!



நமக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். எதிரிகளே இல்லை என்று எண்ணிக் கொள்ளத் தான் ஆசை; ஆனால் இல்லாமலா இருக்கிறார்கள். அவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் நண்பர்களும் பகைவர்களும் இல்லை என்று ஆன்றோர்களும் ஆசாரியனும் சொல்கிறார்கள். அவர்கள் இல்லை என்றால் வேறு யார் தான் நண்பனும் பகைவனும்?

'தாமே தமக்கு சுற்றமும்' என்கிறார் மாணிக்கவாசகர். 'ஆத்மைவ ஹி ஆத்மனோ பந்து: ஆத்மைவ ரிபு: ஆத்மன: - தனக்குத் தானே உறவு; தனக்குத் தானே பகை' என்கிறான் கீதாசாரியன்.

இப்படி தனக்குத் தானே உறவாகவும் பகையாகவும் எப்படி இருக்க முடியும்? அதற்கும் விளக்கம் சொல்லியிருக்கிறார்கள் பெரியவர்கள்.

திருப்பாவையில் ஆறாம் பாசுரம் முதல் பதினைந்தாம் பாசுரம் வரை தோழியரை எழுப்பும் பாசுரங்களாக அமைந்திருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் மனமென்னும் தோழிக்கு அறிவென்னும் தோழி கூறும் அறிவுரைகள் என்று பெரியவர்கள் பொருள் சொல்லுவார்கள். இது சரி இது தவறு என்பது அறிவிற்குத் தெரிகிறது; இது பிடிக்கும் இது பிடிக்காது என்பது தான் மனதிற்குத் தெரிகிறது. மனதிற்குப் பிடித்ததெல்லாம் நன்மை அளிப்பன இல்லை. அதனால் தான் அடிக்கடி அறிவு நடுவே வந்து எது நலமோ அதனைச் சொல்ல வேண்டியிருக்கிறது. நல்லதொரு தோழன் என்பான் நம் நலம் விரும்புபவன். அதனால் மனத்திற்கு நல்லதொரு தோழன் அறிவே.

அறிவு சொல்வதை மனம் கேட்டு நடக்கும் போது நமக்கு நாமே நண்பன். அப்படி சொல் பேச்சு கேட்காமல் மனம் போன படி நடந்து கொள்ளும் போது நமக்கு நாமே எதிரி. ஒரு தடவை சொன்னால் கேட்க மாட்டாயா? போகட்டும். மீண்டும் மீண்டும் சொல்கிறேன். அப்போதாவது கேட்கிறாயா பார்க்கிறேன் - என்று சொல்வது போல் நிறைய பாடல்கள் மனத்திற்குச் சொல்பவையாக அமைந்திருக்கின்றன.

நம்மாழ்வாரின் முதல் பாசுரமே 'துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே' என்று மனத்திற்குச் சொல்லும் அறிவுரையாகத் தான் அமைந்திருக்கின்றது. நாயகி சுவாமிகளின் கீர்த்தனைகளிலும் பல மனத்திற்குச் சொல்லுவதாகவே அமைந்திருக்கின்றன.

அப்படி மனத்திற்குச் சொல்லுவதாக அமையும் பாடல்கள் பல தத்துவங்களைச் சொல்லிச் செல்வதையும் பார்க்கலாம். அப்படி இன்றி எளிமையாக ஒரு நாமசங்கீர்த்தனமாக நாமாவளியாக ஒரு கீர்த்தனையை திரு. பாபநாசம் சிவன் அவர்கள் இயற்றியிருக்கிறார்கள். மருகனுக்குப் பிடித்த இராகத்தில் மாமனைப் போற்றும் அந்தப் பாடலை இங்கே பார்ப்போம்.

கண்ணனை பணி மனமே - தினமே
கண்ணனை பணி மனமே

மண்ணில் யசோதை செய் புண்ய ஸ்வரூபனை
மாதவனை நமது யாதவ தீபனை (கண்ணனை)

பாண்டவர் நேயனை பக்தர் சகாயனை
பவள செவ்வாயனை பரமனை மாயனை (கண்ணனை)

மங்கள மூலனை கோகுல பாலனை
மனம் மிகு துளசி மாலனை பாலனை (கண்ணனை)

விண்ணவர் போற்றவே மண்ணில் வரும் வேத
பண்ணனை ஸ்யாமள வண்ணனை தாமரைக் (கண்ணனை)



இராகம்: ஷண்முகப்ரியா
தாளம்: ஆதி
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
பாடியவர்கள்: கே.எஸ். சித்ரா, எஸ்.காயத்ரி, நித்யஸ்ரீ, ப்ரியா சகோதரிகள்

19 comments :

குமரன் (Kumaran) said...

அனைவருக்கும் இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!

Kavinaya said...

கணபதியோட கண்ணனைப் போட்டு (இல்ல... மாத்தி சொல்லணுமோ? கண்ணனோட கணபதி...ஹ்ம்? :) சதுர்த்தி வாழ்த்துகள் சொல்லிட்டிங்க :) பாபநாசம் சிவன் அவர்களின் பாடல் இனிமை. நன்றி குமரா. உங்களுக்கும் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்.

கோவி.கண்ணன் said...

அந்த காலத்தில் தாயும் மகளும் குழந்தை பெற்றுக் கொள்வது நடப்பாக இருந்தது...

அதில மகள் பெற்ற குழந்தைகள் மாமனை மடியில் தூக்கி வைத்துக் கொள்ளும்.

முதல் படம் !!!
:)

மெளலி (மதுரையம்பதி) said...

நல்ல பாடல் குமரன். நன்றி.

உங்களுக்கும் மற்ற கண்ணன் பாடல் வாசகர்களுக்கும் எனது விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

jeevagv said...

விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் குமரன்!
நல்ல பாடலை வழங்கியமைக்கு நன்றிகள்!

Raghav said...

கண்ணனையும், கணபதியையும் ஒருசேர இன்று தான் பார்க்கிறேன்.. தன் பிறந்த நாளை முடித்து விட்டு இப்போ, கொழுக்கட்டை சாப்பிட போயிருக்கார் போல..

கண்ணனைப் பணி மனமே.. நல்லா இருக்கு குமரன். விநாயக சதிர்த்தி முன்னிட்டு விநாயகர்பாடல் தளம் தொடங்குவீங்களோன்னு நினைச்சேன்.

கண்ணன், முருகன், சிவன், அம்மன் பாட்டு எல்லாம் தொடங்கியாச்சே.. பிள்ளையார் பாடல்களும் தொடங்கலாமே..

குமரன் (Kumaran) said...

எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் கவிநயா அக்கா. கண்ணனும் கணபதியும் என்றாலும் சரி கணபதியும் கண்ணனும் என்றாலும் சரி. :-)

நன்றி அக்கா.

குமரன் (Kumaran) said...

மாமன் அவதரிக்கும் போது அதெல்லாம் இயல்பாக நடப்பது தானே கண்ணன்.

நன்றி.

குமரன் (Kumaran) said...

நன்றி மௌலி. தங்களுக்கும் சதுர்த்தி வாழ்த்துகள்.

குமரன் (Kumaran) said...

நன்றி ஜீவா. தங்களுக்கும் சதுர்த்தி வாழ்த்துகள்.

குமரன் (Kumaran) said...

எனக்கும் அப்படி ஒரு எண்ணம் ஓடியதென்னவோ உண்மை தான் இராகவ். ஆனா வரிசையா தொடங்கிட்டு எதுவுமே எழுதாட்டி நல்லா இருக்காதே. அதனால இந்த தடவை தொடங்கலை. :-) இன்னும் விநாயகர் சதுர்த்தி நாள் முடியலை. அதனால நம் நண்பர்கள் யாராவது மனசு வச்சா தொடங்கிடலாம். ;-)

குமரன் (Kumaran) said...

பாட்டுக்கு முன்னாடி சொன்னதெல்லாம் ரொம்ப போரடிக்குதா? யாருமே அதைப் பத்தி ஒன்னும் சொல்லலை? :-)

முகுந்தன் said...

// மனதிற்குப் பிடித்ததெல்லாம் நன்மை அளிப்பன இல்லை. அதனால் தான் அடிக்கடி அறிவு நடுவே வந்து எது நலமோ அதனைச் சொல்ல வேண்டியிருக்கிறது. //

மிக அற்புதமாக சொன்னீர்கள்

//அறிவு சொல்வதை மனம் கேட்டு நடக்கும் போது நமக்கு நாமே நண்பன். அப்படி சொல் பேச்சு கேட்காமல் மனம் போன படி நடந்து கொள்ளும் போது நமக்கு நாமே எதிரி. //

அடிக்கடி நமக்கு நாமே எதிரியாக தானே இருக்கிறோம்?

//கண்ணனை பணி மனமே - தினமே கண்ணனை பணி மனமே
//
இந்த பாடலை யேசுதாஸ் குரலில் கேட்டிருக்கிறேன். தேனாக இருக்கும்.

குமரன் (Kumaran) said...

நன்றி முகுந்தன்.

என்னுடைய அபிமான பாடகர் ஜேசுதாஸ். அவர் இந்தப் பாடலைப் பாடிய சுட்டி இருந்தால் தாருங்கள். மிக்க மகிழ்வேன்.

முகுந்தன் said...

குமரன்,
இணையத்தில் தேடினேன் கிடைக்கவில்லை. என்னிடம் ஒரு கேசட்டில் இருக்கிறது.
எப்படியாவது அதை நெட்டில் போட முடியுமா என்று பார்க்கிறேன்..

குமரன் (Kumaran) said...

நன்றி முகுந்தன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//யாதவ தீபனை//

பேரு நல்லா இருக்கு குமரன்!

//மங்கள மூலனை//

அப்படின்னா?

பாபநாசம் சிவனின் எளிய இனிய பாடல்...
பாட்டு முழுக்கவும் "ஐ"காரம் வருகுது பார்த்தீங்களா?

ரூபனை-தீபனை-மாலனை-பாலனை-பண்ணனை-வண்ணனை-கண்ணனை

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இன்னும் விநாயகர் சதுர்த்தி நாள் முடியலை. அதனால நம் நண்பர்கள் யாராவது மனசு வச்சா தொடங்கிடலாம். ;-)
//

கைலாஷி ஐயா துடிப்பா இருக்காரு!
Sep 18 மகா சங்கட ஹர சதுர்த்தி-னு மெளலி அண்ணாவும் சொன்னாரு! தொடங்கிருவோம்!

குமரன் (Kumaran) said...

மங்கல மூலனைன்னா மங்களங்களுக்கு அடிப்படையானவனைன்னு எடுத்துக்கலாமே இரவிசங்கர்.

ஆமாம். வலைச்சரத்துல சொல்லியிருக்கிறதைப் படிச்சேன். விரைவில் தொடங்கிவிட்டு சொல்லுங்கள். :-)

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP