Wednesday, September 19, 2007

66. ட்ரிப்ளிக்கேன் - சீர்காழி பாட்டு!

சென்னையில் ஒரு பகுதி ட்ரிப்ளிக்கேன்!
ட்ரிப்ளிக்கேன், திருப்ளிக்கேன் என்று பலவாறாகச் சென்னைத் தமிழில் (ஆங்கிலேயர்) சிக்கிப் பாடுபடும் அழகுத் தமிழ்ச் சொல் திருவல்லிக்கேணி! அது என்னா அல்லிக் கேணி? அல்லி ராணி குளிச்ச குளமா? :-))
ஹிஹி...அப்படி இல்லீங்க!

அல்லி மலர்கள் பூத்துக் குலுங்கும் குளம் (கேணி) = அல்லிக் கேணி!
திருமகள் மணவாளன் வாழ்வதால், "திரு" சேர்ந்து = திருவல்லிக்கேணி ஆனது!
இப்போ கொஞ்சம் பராவாயில்லை!
குளத்தில் தண்ணீர் உள்ளது. சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டு சுத்தமாகவும் உள்ளது!
அல்லி மலர்கள் தான் காணோம்! ஆறுதலான விடயம்: பேருந்துகள், தொடர்வண்டி நிலையம் எல்லாவற்றிலும் திருவல்லிக்கேணி என்றே எழுதியிருக்கிறார்கள்!

அந்நியன் படத்தில் அம்பி உலா வரும் இடம், அரெஸ்டாகும் குளம், எல்லாம் இது தான்! மாநிலக் கல்லூரி (Presidency College), கண்ணகி சிலை, மெரீனா கடற்கரை, பெரிய மசூதி, ஆர்க்காடு நவாப்பின் அமீர் மகால் என்று பல பிரபலங்கள் உள்ள திருவல்லிக்கேணி!
108 திவ்யதேசங்களில் ஒன்று! பாடியவர்கள்: பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கை மன்னன், இராமானுசர், மணவாள மாமுனிகள்! இவர்கள் எல்லாரும் கால்பட்ட இடமா சென்னை? ஆகா....!பெருமாள் பெயர் வேங்கடகிருஷ்ணன். பெரிய மீசை வைத்த நெடிய மேனி நெடியோன்!
உற்சவருக்குத் தான் பார்த்தசாரதி என்னும் திருநாமம்!
பக்தன் பார்த்தனைக் காப்பாற்ற, பீஷ்மர் விட்ட அம்புகளை எல்லாம் தான் ஏற்றுக் கொண்டு, முகமே புண்ணாகிப் போன கண்ணனின் முகத்தை (ஊற்சவர்) இங்கு கண்கூடாகக் காணலாம்!

இன்னொரு முக்கியமான சேதி!
கண்ணபிரான் ஒரே குடும்ப சகிதமாக அருள் பாலிப்பது இந்தியாவிலேயே இந்த ஒரு தலத்தில் தான்!
நடுவில் வேங்கட கிருஷ்ணன்-உடன் ருக்மிணி பிராட்டி
அவர்களோடு கண்ணனின் தம்பி, சாத்தகி!
அவன் வலப்புறம் அண்ணன் பலராமன்
இடப்புறம் மைந்தன் அநிருத்தன், பேரன் பிரத்யும்னன்
- என்று குடும்ப சகிதமாக கண்ணன்! கருவறையில் சற்று எக்கிக் காண வேண்டும்!
இன்னும் எவ்வளவோ சொல்லலாம்...இப்போ பாட்டுக்கு வருவோம்!

அனானி optionஇல் பின்னூட்டம் இடும் அன்பு நண்பர் கி.பாலு, வரியும் ஒலியும் மின்னஞ்சலில் அனுப்பி வைத்தார்!
சீர்காழி கோவிந்தராஜன் பல பெருமாள் பாட்டுக்களைச் சினிமாவில் பாடியிருந்தாலும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிக்கு என்றே மிகவும் விரும்பிப் பாடிய கண்ணன் பாட்டு!
அதுவும் சும்மா பாட்டு மட்டும் இல்லை! - இது பேண்ட் (Band) வாத்தியப் பாட்டு!

கண்ணனின் உற்சவத்தில் சுவாமி வரும் நடையழகை "தொம் தொம்" என்று ஒலிக்கும் பாட்டு! நீங்களே கேட்டுச் சொல்லுங்க!


Geethaisonna-Seerg...
கீதை சொன்ன கண்ணன் வண்ணத் தேரில் வருகிறான்
கேட்டவர்க்கு கேட்ட படி வாழ்வு தருகிறான்

வள்ளல் வருகிறான்
அன்பு வள்ளல் வருகிறான்..

நீலமேனி கோலம் காண கண்கள் மறுக்குமோ - அவன்
நிமிர்ந்த தோளும் விரிந்த மார்பும் நெஞ்சம் மறக்குமோ?
தீரன் வடிவும் மீசை அழகும் வெற்றி ரகசியம் - அவன்
பாரத போர் நடத்திவைத்த யுக்தி அதிசயம்

அது முக்தி ரகசியம்..
(கீதை சொன்ன கண்ணன்)


அல்லிக்கேணி குளத்தின் அருகில் கள்ளன் சிரிக்கிறான்.
அன்பு கொண்டு வருபவர்க்கு ஒன்று உரைகிறான்..
சொல்லும் மந்திரம் எட்டெழுத்தில் சொர்க்கம் தோன்றுதே
சொல்லச் சொல்ல ஐயன் தோற்றம் வானில் நீண்டதே
விஸ்வரூபம் தோன்றுதே..
(கீதை சொன்ன கண்ணன்)


பார்த்தனுக்குப் பாடம் சொன்ன கீர்த்தன் வருகிறான்
பசித்தவர்க்கு விருந்தளிக்க அமுது கொணர்கிறான்
காப்பதற்குக் கையில் ஏந்தும் சங்குச் சக்கரம் - அவன்

கழல்களுக்கு விளக்கம் தானே பிரம்ம சூத்திரம்
நான்கு வேத சாஸ்திரம்..

(கீதை சொன்ன கண்ணன்)

18 comments :

வடுவூர் குமார் said...

பாட்டை கேட்டுக்கொண்டே பின்னூட்டம் போடலாம் என்றால்... முடியவில்லை. :-)
இந்த பாடலை கேட்டு பல வருடங்களாகி விட்டது.
இதுவரை திருவல்லிக்கேணி ஒரே ஒரு தடவை தான் போயிருக்கேன்.குடும்பசகிதராகா காட்சியா? நவம்பரில் பார்த்துக்கொள்ளலாம்.

VSK said...

கம்பீரமான சொல்லாடல்.
கம்பீரக் குரலில் சீர்காழி பாட,
மிக மிக அற்புதம்.

1976-ல் குரோம்பேட்டையில் எங்கள் பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகக் கச்சேரியில் இந்தப் பாட்டைப் பாடியது நினைவுக்கு வருகிறது.

இலவசக்கொத்தனார் said...

அருமையான வரிகள். இன்னும் பாடலைக் கேட்கவில்லை. பிறகு கேட்கிறேன். வழக்கம்போல் நன்றி கேஆர்எஸ்.:)

dubukudisciple said...

Kannabiran ellam poteenga..
DD akka porantha idamnu podama poiteengale
:-(

மடல்காரன்_MadalKaran said...

மிக்க நன்றி! கண்ணபிரான் ரவிசங்கர். அருமையான விளக்கம். கலக்கிட்டீங்க.!
அன்புடன், கி.பாலு

enRenRum-anbudan.BALA said...

அருமையான பாடலுக்கு நன்றி.

//அந்நியன் படத்தில் அம்பி உலா வரும் இடம், அரெஸ்டாகும் குளம், எல்லாம் இது தான்! மாநிலக் கல்லூரி (Presidency College), கண்ணகி சிலை, மெரீனா கடற்கரை, பெரிய மசூதி, ஆர்க்காடு நவாப்பின் அமீர் மகால் என்று பல பிரபலங்கள் உள்ள திருவல்லிக்கேணி!
//
பிரபல பதிவர் எ.அ.பாலாவை விட்டுட்டீங்களே ;-)

எ.அ.பாலா

குமரன் (Kumaran) said...

இது வரை கேட்காத பாடல் இரவிசங்கர். மிக நன்றாக இருக்கிறது. அற்புதம்.

திருவல்லிக்கேணிக்குச் சென்று வேங்கடகிருஷ்ணனை வணங்கும் போதெல்லாம் எனக்குத் தோன்றும் ஒரு எண்ணம். முழுக்குடும்பம் என்று சொல்லப்படும் இவர்கள் நால்வரும் சுவாமியின் வியூஹ திருவுருவங்களோ என்று. அதற்கேற்ப அநிருத்த பிரத்யும்னர்கள் இருக்கிறார்கள். பலராமன் சங்கரஷண உருவமோ? வேங்கடகிருஷ்ணன் வாஸுதேவ உருவமோ?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
இது வரை கேட்காத பாடல் இரவிசங்கர். மிக நன்றாக இருக்கிறது. அற்புதம்.//

எல்லாப் புகழுரையும் கி.பாலுவையே சாரும்!

//முழுக்குடும்பம் என்று சொல்லப்படும் இவர்கள் நால்வரும் சுவாமியின் வியூஹ திருவுருவங்களோ என்று//.

பலராமனுக்கு இன்னொரு பெயர் சங்கரஷணன்! கர்ப்பம் மாறியதால் இந்தப் பெயர்!
வேங்கடகிருஷ்ணன் வாஸுதேவ ரூபமே தான்!
அநிருத்தன் பிரத்யும்னன் இருக்காங்க!
வியூகம் - நான்கு ரூபங்களும் வந்து விட்டன!
அப்போ சாத்யகி யாரு குமரன்?

குமரன் (Kumaran) said...

வேங்கடகிருஷ்ணன் மாதவனான (ருக்மிணி உடனுறை) பரவாஸுதேவன். சாத்யகி வ்யூஹ வாஸுதேவன். சரியா? :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வடுவூர் குமார் said...
பாட்டை கேட்டுக்கொண்டே பின்னூட்டம் போடலாம் என்றால்... முடியவில்லை. :-)//

முடியுமே...அந்த widget கீழே இருக்கும் எழுத்துச் சுட்டியைச் சொடுக்குங்க! புதுப் பக்கத்தில் இசை ஒலிக்கும்!

//குடும்ப சகிதராகா காட்சியா? நவம்பரில் பார்த்துக்கொள்ளலாம்//

அவசியம் தரிசனம் பண்ணி வாங்க குமார் சார். கருவறைக்குள் எக்கிப் பார்த்தா இன்னும் நல்லாத் தெரியும்! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//VSK said...
கம்பீரமான சொல்லாடல்.
கம்பீரக் குரலில் சீர்காழி பாட,
மிக மிக அற்புதம்.//

சீர்காழின்னாலே கம்பீரம் தானே SK?

//1976-ல் குரோம்பேட்டையில் எங்கள் பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகக் கச்சேரியில் இந்தப் பாட்டைப் பாடியது நினைவுக்கு வருகிறது.//

நீங்க பாடினீங்களா SK?
ரிப்பீட்டு! ஒன்ஸ் மோர் ப்ளீஸ்! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இலவசக்கொத்தனார் said...
அருமையான வரிகள். இன்னும் பாடலைக் கேட்கவில்லை. பிறகு கேட்கிறேன். //

அவசியம் கேளுங்க கொத்ஸ் அண்ணா! :-)
பேண்ட் ம்யூஜிக் ஒங்களுக்குப் பிடிக்கும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//dubukudisciple said...
Kannabiran ellam poteenga..
DD akka porantha idamnu podama poiteengale
:-(//

அடடா...என்ன ஒரு பெரும் பாவம் செய்து விட்டேன்!
சுதாக்கா சுறுசுறுப்பா விளையாடிய சூப்பர் இடம் திருவல்லிக்கேணி! போதுமா? :-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மடல்காரன் said...
மிக்க நன்றி! கண்ணபிரான் ரவிசங்கர். அருமையான விளக்கம். கலக்கிட்டீங்க.!//

கலக்கினது நீங்க தான் பாலு!
பாடல் இது வரை பலர் கேட்டிராத பாடல்! அதைக் கொடுத்த உங்களுக்குத் தான் நன்றி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//enRenRum-anbudan.BALA said...
அருமையான பாடலுக்கு நன்றி.
//
பிரபல பதிவர் எ.அ.பாலாவை விட்டுட்டீங்களே ;-)//

அண்ணா...சீனியர் பாலா...
திருவல்லிக்கேணி கிரிக்கெட் மேட்ச்-னா கட்டாயம் அது நீங்க தான்! உங்களை விட முடியுமா! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
வேங்கடகிருஷ்ணன் மாதவனான (ருக்மிணி உடனுறை) பரவாஸுதேவன். சாத்யகி வ்யூஹ வாஸுதேவன். சரியா? :-)//

ஹிஹி...அப்படி இருக்க வாய்ப்பில்லைன்னு நினைக்கிறேன்
சாத்யகி கசின் பிரதர் தானே குமரன்? ஷினி வம்சத்தில் பிறந்த மாவீரன். பாண்டவ தூதனாய் கண்ணன் செல்லும் போது இவனும் உடன் செல்வான் அல்லவா? கண்ணனின் உற்ற தோழனும் கூட!

குமரன் (Kumaran) said...

சாத்யகி கண்ணனின் உடன்பிறந்தோன் என்பதால் தானே குடும்பத்தோடு இருக்கும் இந்த சன்னிதியில் அவருக்கும் இடம் இருக்கிறது. குடும்பம் என்ற போது மட்டும் அவருக்கு இடம் உண்டு. வியூஹ மூர்த்தி என்னும் போது வாய்ப்பில்லையா? கசின் பிரதர் என்பதால் தள்ளிவைத்துவிட வேண்டுமா? என்ன சொல்றீங்க இரவிசங்கர்? :-)

வாய்ப்பு கிடைத்தால் உங்கள் ஆசிரியர் திரு. வேங்கட கிருஷ்ணனிடம் கேட்டுச் சொல்லுங்கள். இந்த நான்கு திருவுருவங்களும் மரபு வழி குடும்ப உறுப்பினர்களாகச் சொல்லப்பட்டாலும் நான்கு வியூஹ மூர்த்திகளாக இருக்க வாய்ப்பிருக்கின்றதா என்று.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
சாத்யகி கண்ணனின் உடன்பிறந்தோன் என்பதால் தானே குடும்பத்தோடு இருக்கும் இந்த சன்னிதியில் அவருக்கும் இடம் இருக்கிறது//

மிகவும் உற்ற நண்பனும் கூட! அதான் பூரிசிரவசு போரில், பார்த்தனை மிகவும் மன்றாடிக் கேட்பான் கண்ணன், சாத்யகியைக் காப்பாற்ற!

//கசின் பிரதர் என்பதால் தள்ளிவைத்துவிட வேண்டுமா? என்ன சொல்றீங்க இரவிசங்கர்? :-)//

கசின் என்பதற்காக எல்லாம் சொல்லவில்லை குமரன். பரவாசுதேவன் போல் வ்யூக வாசுதேவன் என்று முக்கியத்துவம் பெறும் அளவுக்கு சாத்யகியின் பங்கு சொல்லப்படவில்லை! அதான் சொன்னேன்!

//வாய்ப்பு கிடைத்தால் உங்கள் ஆசிரியர் திரு. வேங்கட கிருஷ்ணனிடம் கேட்டுச் சொல்லுங்கள்.//

கேட்டுச் சொல்கிறேன்!
பெரியாரைக் காண்பதுவும் நன்று. அவர் வாயில் பெரியார் சொல் கேட்பதுவும் நன்று!

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP