Monday, December 15, 2014

காதல் சொன்னானோ?

மால் வண்ணனைப் போற்றும் மார்கழிக்கு வந்தனம்!

சுப்பு தாத்தா பீம்ப்ளாஸ் ராகத்தில் உணர்வுபூர்வமாகப் பாடியதை நீங்களும் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!


செக்கச் சிவந்த வானம் போல

செவ்வரளிப் பூவைப் போல

தொட்டுச் சிவந்த மலரைப் போல

வெட்கிச் சிவந்தாயோ, கண்ணே

வெட்கிச் சிவந்தாயோ?



கண்ணன் வந்தானோ, உந்தன்

மன்னன் வந்தானோ, அவன்

கருவிழியால் உன் மனதைத்

திருடிச் சென்றானோ?



மாயம் செய்தானோ, அவன்

மயக்கம் தந்தானோ, அவன்

மயிலிறகாய் உன் மனதை

வருடி விட்டானோ?



காதல் சொன்னானோ, உந்தன்

காதில் சொன்னானோ, அவன்

குழலைத் தொட்ட இதழினால் உன்

இதழைத் தொட்டானோ?



மாலையிட்டானோ, அவன்

மயங்கி விட்டானோ, உந்தன்

கட்டழகுக் கனிச் சிரிப்பில்

கிறங்கி விட்டானோ?



சிலிர்க்க விட்டானோ, கன்னஞ்

சிவக்க விட்டானோ, அவன்

சின்னச் சின்னக் குறும்பு செய்து

சிணுங்க விட்டானோ?



உள்ளந் தொட்டானோ, உந்தன்

உயிரைத் தொட்டானோ, அவன்

உன்னுடனே ஒன்றெனவே

கலந்து விட்டானோ?

--கவிநயா

Friday, August 15, 2014

காளிங்க நர்த்தனம்!

அனைவருக்கும் இனிய கோகுலாஷ்டமி வாழ்த்துகள்!


சுப்பு தாத்தா கானடாவில் அனுபவித்துப் பாடியது இங்கே... மிக்க நன்றி தாத்தா!



திருமுடி மீதினில் மயிலிறகாடிட
கருங்குழல் கற்றைகள் காற்றினில் ஓடிட
சிறுநுதல் தனிலே வியர்வை துளிர்த்திட
கருமணியென விழியிரண்டும் ஜொலித்திட!

மணமலர் மாலையும் மார்பில் அசைந்திட
எழில்மணி யாரங்கள் இசைந்தொளி வீசிட
கருநிற மேனியைக் காளியன் சுற்றிட
ஈரப் பட்டாடை இடையினைப் பற்றிட!

ஜல் ஜல் ஜல் எனச் சதங்கைகள் ஒலித்திட
கொல் கொல் கொல் எனத் தலைகளை மிதித்திட
நஞ்சுடை காளியன் நலிந்து மடிந்திட
செஞ்சடையனைப் போல் களிநடம் புரிந்திட!

வேய்ங்குழலில் விரல் நாட்டியமாடிட
குழலிசை கசிந்து திசையெங்கும் ஓடிட
தத்தித் தோம் என நர்த்தனம் புரிந்திட
திக்கெட்டும் அவன் திருப்பதம் பணிந்திட!

கிருஷ்ணா கிருஷ்ணா கோவிந்தா
கோகுல கிருஷ்ணா கோவிந்தா
பக்த வத்ஸலா கோவிந்தா
பாண்டு ரங்கா கோவிந்தா!

தேவகி நந்தன கோவிந்தா
தேவர்கள் ரட்சக கோவிந்தா
மாதவ தேவா கோவிந்தா யாதவ தீபா கோவிந்தா!

ராதா மாதவ கோவிந்தா
பாமா ருக்மிணி கோவிந்தா
கோபியர் லோலா கோவிந்தா
கோபால கிருஷ்ணா கோவிந்தா!

கோவிந்தா ஹரி கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா!
 
 
--கவிநயா

படத்துக்கு நன்றி: http://kannan-kadhaigal.blogspot.com/
http://www.dollsofindia.com/product/terracotta-sculpture/vaishnava-kirtaniya-group-krishna-devotees-BX70.html


  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP