Saturday, July 20, 2013

அரங்க "வாலி" - சீரங்க ரங்க!

வாலி
* இராமாயண வாலி = நம்முடைய பாதி பலம், அவனுக்குப் போய் விடும்!
* கவிஞர் வாலி =  அவருடைய பாதித் தமிழ், நமக்கு வந்து விடும்!

அரங்கன் காலடியில் பிறந்தாலும்
முருகன் வேலடியில் வாழ்ந்தவர்!

அவர் பொன்னுடலுக்கு.. நம் கரம் கூப்பிய அஞ்சலி!




வாலிக்கு மிகவும் பிடித்தமான = திருவரங்கம் (ஸ்ரீரங்கம்)!
அந்த அரங்கம் கொஞ்சும் பாடலாக = இந்த அஞ்சலி!

அருமையான வாலி வரிகள்!
சொந்த ஊர்ப் பாசத்துல.. கங்கையை விடப் புனிதமான காவேரியாம்!:))
அப்படியே தமிழை ஊற்றித் தந்திருக்குறாரு!

வாலி, இந்தப் பாடலில், சில ஆழ்வார் பாசுரங்களை, நேரடியாவே எடுத்து ஆண்டிருப்பாரு!

* ரங்கனின் பேர்சொல்லி சாமரம் வீசும் 
= "சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்க் திருகுடந்தை" (நம்மாழ்வார்)
* கங்கையின் மேலான காவிரி தீர்த்தம் 
= "கங்கையிற் புனிதமாய காவேரி நடுவில் பாட்டு, பொங்கு நீர் புரந்து பாயும் பூம்பொழில் அரங்கம் தன்னுள் (தொண்டரடிப்பொடியாழ்வார்)


இந்த இசையில் இளையராஜாவும் பின்னி இருப்பார்; அதுவும் வீணை bit ஒன்னு வரும்!
கோவில் தூண்களை அப்படியே Fast Motion-இல் காட்டுவார்கள்! அப்போ ஒலிக்கும் வீணையை, கொஞ்சம் நிறுத்தி, இன்னொரு முறை கேட்டுப் பாருங்கள்!

அப்படியே அரங்கம் என்னும் சுரங்கத்தில் கிறங்கிப் போவீர்கள்!


பாடலுக்கு முன்னுள்ள தொகையறா: 

(கங்கா சங்காச காவேரி 
ஸ்ரீ ரங்கேச மனோஹரி 
கல்யாண காரி கலுசாரி
நமஸ்தேஷூ சுகாசரி)


சீரங்க ரங்க நாதனி்ன் பாதம் வந்தனம் செய்யடி!
சீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி!


இன்பம் பொங்கும் தென்கங்கை நீராடி,
தென்றல் போல நீ ஆடடி!
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி, 

தெய்வ பாசுரம் பாடடி!
(சீரங்க)

கொள்ளிடம் நீர்மீது நர்த்தனம் ஆடும்;
மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும்;
செங்கனி மீதாடும் மாமரம் யாவும்;
ரங்கனின் பேர்சொல்லி சாமரம் வீசும்;


அந்நாளில் சோழ மன்னர்கள் - ஆக்கி வைத்தனர் ஆலயம்
அம்மாடி என்ன சொல்லுவேன் - கோவில் கோபுரம் ஆயிரம்
தேனாக நெஞ்சை அள்ளுமே - தெய்வப் பூந்தமிழ்ப் பாயிரம்

(சீரங்க)

கன்னடம் தாய்வீடு என்றிருந்தாலும்
கன்னி உன் மறுவீடு தென்னகமாகும்!
கங்கையின் மேலான காவிரி தீர்த்தம்
மங்கல நீராட முன்வினை தீர்க்கும்!


நீர் வண்ணம் எங்கும் மேவிட - நஞ்சை புஞ்சைகள் பாரடி
ஊர் வண்ணம் என்ன கூறுவேன் - தெய்வ லோகமே தானடி
வேறெங்கு சென்ற போதிலும் - இந்த இன்பங்கள் ஏதடி

(சீரங்க)

வரிகள்: வாலி
படம்: மகாநதி
குரல்: SPB, மகாநதி ஷோபனா
இசை: இளையராஜா
ராகம்: அம்ச த்வனி




கங்கையின் மேலான காவிரி தீர்த்தம் -ன்னு வாலி எழுதியதற்காக, மதப் பற்றுள்ளவர்கள் யாரும் கோவிச்சிக்க வேணாம்:)
அது வாலி வரி அல்ல! ஆழ்வார் வரி = கங்கையிற் புனிதமாய காவேரி;

ஏன்?

எல்லாரும், "காசி, காசி" -ன்னு சொல்லுவாய்ங்க; மதமும் அப்படித் தான் சொல்லுது!
காசியில் இறக்கணும்; காசியில் கரைக்கணும் -ன்னு எல்லாம், பல மத நம்பிக்கைச் சடங்குகள்! ஆற்றையே சேற்றில் தள்ளும் போக்குகள்!

ஆனால் இம்புட்டு "புனிதம்" மிக்க காசி = 108 திவ்ய தேசமா?
இல்லை!
ஏன் இல்லை?

ஸ்தலம் , மூர்த்தி,  தீர்த்தம், விருக்ஷம் -ன்னு  மத்த எவ்ளோ "புராணங்கள்" இருந்தாலும், அவை திவ்ய தேசங்கள் அல்ல!
ஆழ்வாரின் "ஈரத் தமிழ்" = அதைப் பெற்றால் மட்டுமே திவ்ய தேசம்! இல்லீன்னா வெறும் தேசம்!

கருவறையில் தமிழ் ஒலிக்கும் அரங்கம்!
வேதம் தமிழ்ச் செய்த அரங்கம்!
அந்த அரங்கத்தில் வந்து உதித்த = வாலி வாழ்க!!


இச்சுவை வாலி தந்த, இன்பநல் தமிழை ஏற்று, 
அச்சுவை மோட்சம் ஈவாய், அரங்க மா நகருளானே!

3 comments :

அனைவருக்கும் அன்பு  said...

என்றும் நம்மில் நீங்கா நினைவலைகளை எழுப்பிகொன்டே தான் இருக்கும் அவனின் வரிகள் ............அந்த ஆத்மா சாந்தியடையட்டும்

திண்டுக்கல் தனபாலன் said...

/// நீர் வண்ணம் எங்கும் மேவிட - நஞ்சை புஞ்சைகள் பாரடி...
ஊர் வண்ணம் என்ன கூறுவேன் - தெய்வ லோகமே தானடி...
வேறெங்கு சென்ற போதிலும் - இந்த இன்பங்கள் ஏதடி... ///

ரசித்து எழுத வாலி அவர்களால் மட்டும் முடியும்...

Arun Rajendran said...

நம்ம இசைதெய்வத்தோடு வாலி அவர்களின் பயணம் ”கண்ணன் ஒரு கைகுழந்தை”-யாக கண்ணனை நெஞ்சின்கண் நிறுத்தி தாயாக பாசம் பொங்க எழுதிய பாடலோடு ஆரம்பம்...இந்தப் பாட்டைக்குறித்தும் உங்கள் பதிவு ஒன்றை எதிர்பார்க்கிறேன்...ஏறகனவே எழுதியிருப்பின் சுட்டி தரவும்..:-)

இவண்,
அருண்

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP