Monday, July 08, 2013

இளையராஜா: என்னை என்ன செய்தாய் வேய்ங்குழலே?

இளையராஜா இசையில், "இவன்" என்றொரு படம் வந்தது!
பார்த்திபன் படம்!
படத்தில், ராஜாவின் விரல்கள் பாய்ந்து பாய்ந்து மீட்டும் புல்லாங்குழல்!

சிந்து பைரவி முதலான பல படங்களில், இளையராஜா கர்நாடக இசையைத் தந்தாலும்...,
அதை ஓரளவு "மெல்"லிசையாக்கியே ஓட விட்டிருப்பார்; பாடகர்களும் மரபிசைப் பாடகர்கள் அல்லர்!

ஆனால், இந்தப் பாட்டில் =?
அதை, அதாகவே  ஓடவிட்டு, "மரபிலே இசை கொஞ்சும்" ராஜா!

அட, படத்தில், சுப்புடு நடிக்க ஒப்புக் கொண்டதே = ராஜாவுக்காகத் தானே?
இது விமர்சகர் சுப்புடுவின் "வியப்பிலும் வியப்பே"!

* "ரீதி கெளளை" முதற்கொண்டு, பலப்பல ராகங்கள்... ராஜாவின் பாதையில்!
* ஆனால், இந்தப் பாட்டிலோ, "சிம்மேந்திர மத்யமம்";
ராஜாவின் ராகங்கள் -ன்னு ஆய்வே செய்வார்கள் அறிந்தவர்கள்; (நான் அறியாதவன்)

"அசைந்தாடும் மயிலொன்று காணும்" என்கிற பாட்டு போல் களம் அமைக்கும் ராஜா! - என்னை என்ன செய்தாய் வேய்ங்குழலே?

* வேய் = மூங்கில்
* வேய்ங் குழல் = மூங்கிலால் செய்த குழல்!

உலோகத்திலும் குழல் செய்வாங்க! ஆனா மூங்கில் குழலே = புல்லாங்குழல்!
புல் + ஆம் + குழல்!

மூங்கில் = புல் வகைத் தாவரம் (Bamboo is a type of grass)
அந்தப் புல்லில் + இருந்து + குழைந்து எழுமிசை = புல் + ஆம் +குழல்!புல்லாங்குழலில் எழுவது = காதலா? காமமா?
* மனதின் இசையா?
* மங்கையைக் கவரவே எழுப்பும் இசையா?

ஏதோ ஒன்னு... ஆனா பெரும்பாலும் அது துன்பத்தில் எழும் இசை!
ஐய்யய்யோ!
கண்ணன் குழலிசை துன்பம் தரக் கூடியதா என்ன?

= ஆடு மாடுகளுக்கெல்லாம் இன்பம் தரும் இசை...
= அவளுக்கு மட்டும் எப்போதும் துன்பம் தரும் இசை...

ஆண்டாள், இன்பத்தில் சங்கையும், துன்பத்தில் குழலையும் பாடுகின்றாள்!

* முதலிரவுக்குக் காத்திருக்கும் பெண்ணாக = சங்கில் நிறைந்திருக்கும் அவன் எச்சில் ருசி
* அவனைக் காணாத பெண்ணாக = புல்லாங்குழலில் குறைந்திருக்கும் அவன் எச்சில் ஈரம்

இப்படியான புல்லாங்குழல்...
இவளையும், இவனையும் என்ன செய்தது?? கேளுங்கள்!
என்னை என்ன செய்தாய் வேய்ங்குழலே?
எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லையே!

நாளும்...சுக நாதம்...தந்து
அனல் மெழுகாய், இந்த இள மனம் இளகிடவே
(என்னை என்ன செய்தாய்)
-----

என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன்
என்னுள் என்னைக் கண்டு நல்லின்பம் படைத்து நின்றேன்

வேறு ஞாபகங்கள் வருடாமல் நானிருந்தேன்
யாரோ…?அவன் யாரோ…?
யமுனா நதி தீரத்தில்... அமர்ந்தொரு இசைக் கலையால்
(என்னை என்ன செய்தாய்)

************************************************
மழைக் கம்பி குத்தாமல் இருக்க
குடைக் கம்பியாய் ஒதுங்கினேன்
குடை அல்ல அது; 
உன் குரல் அருவிக் குற்றாலம்

கானம் கேட்க கண் மூடப் போய்க்
காணாமலே போனேன் நான்;
விட்டுக் கூடு பாய்ந்திருப்பேனோ எனத்
தட்டுத் தடுமாறித் தேடிக்
காதுகளால் இரைந்து கிடக்கும்
உன் கால்-அடிவாரம் வந்தடைந்தேன்

அடடா... தாளமிடும் கைக்கும், தட்டப்படும் உன் தொடைக்கும் 
இடையே நான்...
சிக்கிக் கொண்டிருப்பதைக் கண்டுகொண்டேன்!

ஏதோ காது கொடுக்க வந்தவன், 
வெறும் காதோடு மட்டுமே போகிறேன் போ!
************************************************

மூங்கில் போலே, விளைந்தொரு மங்கை இருக்க
துளைக்கும் வண்டாய், மனதினைத் துளைத்தாய் நீயே!
தூங்கும் யாழாய்த், தனிமையில் தோகை இருக்க
மீட்டும் விரலாய், நரம்பினில் நடந்தாய் நீயே!

வண்ண மலர் உண்டு! வெள்ளி அலை உண்டு!
வருடிடும் காற்றென உலவப் போ!
பற்றும் கொடியொன்று, பசும் புல் மடியுண்டு
நீர்த் துளியைப் போல் தழுவப் போ!

இசைகள் நுழையாத செவிகள் பல உண்டு
உனது திறமைகள் அங்கு பலிக்குமோ?
நீயும் விளையாட நூறு இடம் உண்டு
அனுதினம் வருத்துதல் நியாயமோ?
(என்னை என்ன செய்தாய்)

படம்: இவன்
குரல்: சுதா ரகுநாதன்
வரி: வாலி
இசை: இளையராஜா

சுதா ரகுநாதனின் மரபிசையில் என்றுமே எனக்கு மதிப்புண்டு! சினிமாவிலும் சுதா பாடி இருக்காங்க (மார்னிங் ராகா, மந்திரப் புன்னகை, உளியின் ஓசை, வாரணமாயிரம்...)

தவறாக எண்ண வேண்டாம்;
இந்தப் பாடலை மட்டும் - என்னை என்ன செய்தாய் வேய்ங்குழலே - சுதா ரகுநாதனுக்குப் பதிலாக...
சுசீலாம்மா (or more than that) வாணி ஜெயராம் பாடி இருந்தால் எப்படி இருக்கும்?

மனசுக்குள் ஒரு பூ பூக்குது! யோசித்துப் பார்க்கிறேன்; அந்தப் புல்லாங்குழலையே கேட்கின்றேன்!


ஒரு சின்னப் பின்னுரை:

என்னை என்ன செய்தாய் வேய்ங்குழலே? -ன்னு முருகனைக் கேட்க எனக்கு மனசுக்குள்ளொரு ஏக்கம்!

*கோதையோ, ராதையோ = கண்ணனைக் கேட்கலாம்!
*ஆனால் நான் யாரைக் கேட்பது? = முருகனைத் தானே!

ஆனா, முருகன், புல்லாங்குழல் வாசிப்பானா?
வா-சிப்பான்!
"குழலன் கோட்டன் குறும் பல்லியத்தன்" -ன்னு திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் பாடுறாரு!

அதனால் வாசிப்பான்!
அவனை  யாசிப்பேன்!
முருகா - என்னை என்ன செய்தாய் வேய்ங்குழலே?
முருகா - எனக்கும் உனக்கும் ஒரு இன்பம் இல்லையே!1 comments :

குமரன் (Kumaran) said...

நிறைய முறை கேட்டிருக்கிறேன். இன்று தான் வரிகளைக் கவனித்துக் கேட்டேன். நன்றி இரவி.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP