Saturday, December 24, 2011

சத்தம் போடாதே!

முன்னெல்லாம் ஆயர்பாடியில் திருட்டு பயமே இல்லையாம். அதனால, யாருமே வீட்டை பூட்ட மாட்டாங்களாம். கிருஷ்ணன் பொறந்தோன்ன, கதையே மாறிப் போச்சு. இந்த வெண்ணெய் திருடிக்கு பயந்து எல்லாரும் வீட்டை பூட்டி வெக்க ஆரம்பிச்சிட்டாங்க! ஆனா, எப்படிப் பூட்டினாலும் அவன் திருடறதை தடுக்கவே முடியறதில்லை.


ஒரு நாள், யசோதா வெண்ணெய் கடைஞ்சு உறியில் கட்டி வெச்சிட்டு, அடுக்களைல வேலையா இருந்தாளாம். அப்ப மெதுவா பூனை போல அங்கே வந்த கண்ணன், இருந்த வெண்ணெயெல்லாம் வழிச்சு எடுத்து சாப்பிட்டுட்டானாம். கையில வெண்ணெய் ஒட்டியிருந்தா தெரிஞ்சு போயிரும்னு, எல்லா விரலையும் அழகா நாக்கால சுத்தம் பண்ணிட்டான். கை ரெண்டையும் உத்தரீயத்தில் நல்லா தொடச்சிட்டான். அப்பதான் அடுப்பு வேலைய முடிச்சிட்டு வந்தா யாசோதா. அவ எங்கே போயிட்டு வந்தாலும், அவளோட மொத வேலை என்ன தெரியுமோ? வெண்ணெய் இருப்பை செக் பண்றதுதான்! இப்பவும் அதான் செய்தா. ஆனா, வெண்ணெய் இருந்த இடமே தெரியலை!

“கண்ணா, இங்கே வா!”, அம்மா குரல்ல இருந்தே, கண்டுபிடிச்சிட்டான்னு தெரிஞ்சு போச்சு கண்ணனுக்கு.

எப்படிடா சமாளிக்கிறதுங்கிற யோசனையோட, “என்னம்மா?”, அப்படின்னு கொஞ்சிக் கொஞ்சி குழலைப் போலவே குழையற குரல்ல அப்படி ஒரு செல்லமா கேக்கறான்.

அம்மாவுக்கு மனசு உருகின உருக்கத்துல கோவமே மறந்துரும் போல ஆயிருச்சு! நினைவுபடுத்தி வரவழைச்சுக்கிட்ட கோவத்தோட, “வெண்ணெய் தின்னியா?”ங்கிறா.

“ஊஹூம். இல்லையேம்மா. நீ வேணா பாரு…”, தாமரைப்பூ போல செவந்த உள்ளங்கை ரெண்டையும் விரிச்சு, இப்படியும் அப்படியுமா திருப்பித் திருப்பிக் காட்டறான். “ஐயோ பாவம், இந்த பால் வடியும் மொகத்தையா சந்தேகப்பட்டோம்”, அப்படின்னு சொல்ற மாதிரி மொகத்தில் அப்படி ஒரு பாவம்!

ஆனா என்ன, மொகத்தில் பாலுக்கு பதிலா வெண்ணெய்! அவ்வளவு கவனமா ரெண்டு கையையும் சுத்தம் பண்ணினவன், வாயைத் துடைக்க மறந்துட்டான்! வாய் ஓரமா, வெண்ணெய் மெய் மறந்து உட்கார்ந்திருந்தது! அதோட ஆனந்தம் அதுக்கு! அம்மாகிட்ட நல்ல்லா மாட்டிக்கிச்சு புள்ளை!

“உன்னை என்ன பண்றேன் பாரு!”

விறிவிறுன்னு போயி தாம்புக்கயிறை எடுத்துக்கிட்டு வர்றா. அவன் இடுப்பைச் சுத்தி கயிறைக் கட்டி, பிறகு அந்தக் கயிறை உரலோட கட்டி அவனை உக்கார வெக்கிறா.


ஆனா, மறு நாளும் இதே கதை! அடுத்த நாளும்; அதற்கு அடுத்த நாளும்… இப்படியே. உறியை எப்படி இடம் மாத்தி வெச்சாலும், கண்ணன்கிட்ட இருந்து வெண்ணெயைக் காப்பாத்த முடியலை. என்ன பண்ணலாம்னு மண்டையைப் பிச்சிக்கிட்ட பிறகு, யசோதைக்கு ஒரு யோசனை தோணுது!

அன்றைக்கு குட்டிக் கண்ணனுக்கு குளிப்பாட்டி, அலங்காரம் பண்ணும்போது, அவனுக்கு கழுத்துல, இடுப்புல, கைல, கால்ல, இப்படி, நெறய்ய நகை போட்டு விடறா. சாதாரண நகை இல்லை, லேசா அசைஞ்சாலும் சத்தம் செய்யற மாதிரி நகை! அவன் கொஞ்சம் அசைஞ்சாலும், இவ எங்கே இருந்தாலும் கேக்குமாம்! அதோட மட்டும் இல்லாம, வெண்ணெயை உறில கட்டும் போது, மூடியைத் தொறந்தா, உடனே சத்தம் போடற மாதிரி, ஒரு மணியையும் கட்டி வெக்கிறா! “இன்னிக்கு எப்படித் திருடறான்னு பாக்கிறேன்”, அப்படின்னு மனசுக்குள்ள நினைச்சுக்கறா.

அவன் மேல கிடந்த நகையெல்லாம், “ஆகா, நம்ம பரந்தாமனை அலங்கரிக்க என்ன பாக்கியம் பண்ணியிருக்கோம்”னு நினைச்சு, சந்தோஷத்தில் இயல்பை விட அதிகமாவே சத்தம் போட்டுச்சாம்! ஆனா நம்ம குட்டிப் பயல், தன் மேல கிடந்த நகைகளோட ஒரு ரகசிய ஒப்பந்தம் பண்ணிக்கிறான்: “நீங்கள்லாம் என்மேல அன்பு வெச்சிருக்கது உண்மையா இருந்தா, நான் வெண்ணெய் திருடப் போகும் போது நீங்கள்லாம், சத்தமே போடாம இருக்கணும்!” அப்படின்னு! அவன் வார்த்தைக்கு மறு வார்த்தை உண்டா, என்ன? “என் உகப்பு பெரிதில்லை; உன் திருமுக உகப்போ பெரிது”, அப்படின்னு அவையும் பேசாம, சத்தம் போடாம, அவன் அசையும் போதெல்லாம் மூச்சைப் பிடிச்சுக்கிட்டு, கஷ்டப்பட்டு சும்மா இருந்ததாம். அப்படியே மெதுவா பானையை எட்டிட்டான். அப்பதான் அங்கே இருந்த மணியை பார்த்தான்!

“ஆகா, நம்ம அம்மா இவ்வளவு ப்ளான் பண்ணியிருக்காளா”ன்னு நெனச்சவன், அந்த மணிகிட்டயும் அதே மாதிரி ஒப்பந்தம் செய்துகிட்டானாம். “நான் வெண்ணெய் திருடும் போது நீ சத்தம் போடக் கூடாது”, அப்படின்னு! அந்த மணியும் ஒத்துக்கிச்சாம்.

பானையை எடுத்தான், மணி அடிக்கலை.
மூடியைத் தொறந்தான், மணி அடிக்கலை.
வெண்ணெயை அள்ளினான், மணி அடிக்கலை.
அள்ளின வெண்ணெயை வாயில் வெச்சான், அவ்வளவுதான்! ‘கிணி கிணி’ன்னு மணி வேகமா அடிச்சிருச்சு!

கண்ணனுக்கே ஷாக் ஆயிடுச்சு! “நான் சொன்னது மறந்து போச்சா! ஏன் அடிச்சே?” அப்படின்னு கோவிச்சுக்கறான்.

“என்ன கண்ணா பண்ணுவேன்? உனக்கு நெய்வேத்தியம் பண்ணும்போதெல்லாம் சத்தம் போட்டே பழகிட்டேனே? அந்த பழக்க தோஷம்தான். என்னை மன்னிச்சிரு”, அப்படின்னு சொல்லுச்சாம், அந்த மணி!

அன்றைக்கும் தாம்புக் கயிறுதான், உரல்தான். பா…வம் நம்ம குட்டிக் கண்ணன்!

--கவிநயா

பி.கு.: மணி விஷயம், ஒரு உபன்யாசகர் சொல்லக் கேட்டது.

16 comments :

Lalitha Mittal said...

கதை ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப அருமை!அந்த உபன்யாசகர் (யார்?) எங்கிருந்தாலும் மேலும் மேலும் இத்தகைய கதைகளைச் சொல்லி பக்தி வளர்க்கவேண்டும் என்று அரங்கனை வேண்டுகிறேன்.

In Love With Krishna said...

Super!!!!!!!!!
Totally enjoyed the whole story!!!
Andha mani-kku evvvvvalavu kurumbu? :p
This post made my day. :)

சின்னப் பையன் said...

எஸ். இந்த கதையை நானும் கேட்டிருந்தாலும், உங்க நடையில் மிக மிக அருமை.

குறும்புக்கார கண்ணனும் அவனது மணியும் - சூப்பர்.

குமரன் (Kumaran) said...

இன்னைக்குப் படுக்கைக் கதை இது தான் குழந்தைகளுக்கு. எத்தனை செய்திகள் இந்தக் கதையில். நைவேத்தியம் செய்யும் போது மணியடிப்பது, எப்படி திருட்டுத்தனம் செய்தாலும் மாட்டிக்கொள்வோம், உன் திருமுகக்குறிப்பே வேண்டியது இன்னும் நிறைய இருக்கு. :-)

Kavinaya said...

//கதை ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப அருமை!அந்த உபன்யாசகர் (யார்?) எங்கிருந்தாலும் மேலும் மேலும் இத்தகைய கதைகளைச் சொல்லி பக்தி வளர்க்கவேண்டும் என்று அரங்கனை வேண்டுகிறேன்.//

நன்றி லலிதாம்மா! அவர் பெயர் தெரியலை. டி.வி.யில் ஒரு முறை தற்செயலாக கேட்டேன் (பார்த்தேன்?). மணியின் வேலை ரொம்பப் பிடிச்சிருந்ததால் மனசில் நின்னுடுச்சு :)

Kavinaya said...

//Super!!!!!!!!!
Totally enjoyed the whole story!!!
Andha mani-kku evvvvvalavu kurumbu? :p
This post made my day. :)//

உங்களுக்கு அவ்ளோ பிடிச்சதில் மிக்க மகிழ்ச்சி, ILWK :) மிக்க நன்றி.

Kavinaya said...

//எஸ். இந்த கதையை நானும் கேட்டிருந்தாலும், உங்க நடையில் மிக மிக அருமை.

குறும்புக்கார கண்ணனும் அவனது மணியும் - சூப்பர்.//

மிகவும் நன்றி சின்னப் பையன்!

Kavinaya said...

//இன்னைக்குப் படுக்கைக் கதை இது தான் குழந்தைகளுக்கு. எத்தனை செய்திகள் இந்தக் கதையில். நைவேத்தியம் செய்யும் போது மணியடிப்பது, எப்படி திருட்டுத்தனம் செய்தாலும் மாட்டிக்கொள்வோம், உன் திருமுகக்குறிப்பே வேண்டியது இன்னும் நிறைய இருக்கு. :-)//

குழந்தைகள் எப்படி ரசித்தாங்கன்னு சொல்லுங்க! மிகவும் நன்றி குமரன் :)

Lalitha Mittal said...

யாருமே பாடலையே என்று நான் அங்கலாய்த்த பாரதியின் காதல் கீதத்தை ஒருவருக்கு இருவராக ,[குமரனுக்கு பின்] இப்போ சுப்புசாரும் பாடிஇணைத்துட்டார்.

கண்ணன்பாட்டு அன்பர்கள் முன் பதிவுக்குச் சென்று ,சுப்புசார் மிகுந்த
bhaaவத்துடன் பாடியுள்ள பாரதிப்பாட்டை கேட்டு ரசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நாடி நாடி நரசிங்கா! said...

ம் ! சுவாரஸ்யம்

நாடி நாடி நரசிங்கா! said...

விஜய் டிவி 8th or 9th பக்தி திருவிழாவில் மிக அருமையாக சொல்லி இருந்தார் . கேட்டவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள்
Youtube -இல் இருந்தால் தேடி பார்த்து கொள்ளவும்

அவர் பெயர்
ஸ்ரீ உ வே தாமல் ராமகிருஷ்ணன்

Sankar said...

o.. Krishana.. its very cute and sweet.. :)

Kavinaya said...

//அவர் பெயர்
ஸ்ரீ உ வே தாமல் ராமகிருஷ்ணன்//

நன்றி ராஜேஷ் :) ஆமாம், அவர் வெகு அருமையாகச் சொன்னார். நான் பாதியிலிருந்துதான் கேட்டேன் :(

Kavinaya said...

//o.. Krishana.. its very cute and sweet.. :)//

ஆமால்ல :) நன்றி சங்கர்.

Radha said...

பறக்கும் தேரில் பிள்ளையார்,பைங்கிளிகள்,பஞ்சவர்ணகிளிகள், பானை நிறைய வெண்ணெய் என்று கண்ணன் ஜாலியாக இருக்கிறான்...

"வைகலும் வெண்ணெய்
கைகலந்து உண்டான்
பொய் கலவாது என்
மெய் கலந்தானே."
(நம்மாழ்வார் திருவாய்மொழி)

Kavinaya said...

அருமையான பாசுரத்தை எடுத்துத் தந்தமைக்கு நன்றி, ராதா.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP