Saturday, July 30, 2011

வீரராகவர் விரதம் - 2


மிக வேகமாக ஓட்டி வந்த தேரை தாருகன் சரியாக மகாராணி சத்தியபாமாவின் மாளிகைக்கு எதிரில் லாவகமாக நிறுத்தினார். சற்று தொலைவில் இருக்கும்போதே தேர்ப் புரவிகள் எழுப்பிய சத்தத்தைக் கேட்டு துவாரகாதீசன் வந்துவிட்டார் என்பதை அறிந்த ருக்மிணி பிராட்டியும் பாமா தேவியும் வாசலை நோக்கி விரைந்தனர். திடீரென அதே நேரத்தில், துவாரகா நகரத்தையே உலுக்கிவிடும் அளவிற்கு  "கிருஷ்ணாஆஆஆஆஆ...கிருஷ்ணாவோஓஓஓஓஓ..." என்ற பேரலறல் கேட்டது. அவ்வளவு தான். அந்த நீலமேக கருணைக் கடல் தேரை விட்டு வேகமாகக் கீழே குதிக்கிறார் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கும் போதே தரையில் கால் பதிக்காமலேயே புவி ஈர்ப்பு விசையை மீறி விண்ணில் தாவினார். திடீரென தன் எஜமானன் விண்ணில் பறப்பதை அறிந்த கருடன் ஆச்சர்யமும் வெட்கமும் அடைந்து, ஆனால் உடனே சுதாரித்துக் கொண்டு தன் பெரிய சிறகுகளை விரித்துக் கொண்டு அவசரமாக அவரைப் பின் தொடர்ந்தது.
மேற்படி காட்சியை ருக்மிணி பிராட்டி மிகுந்த ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். பாமாவின் கண்களிலோ கண்ணீர்.

"நாராயண ! நாராயண ! " என்றபடியே அவர்களிருந்த இடம் நோக்கி திரிலோக சஞ்சாரியான நாரதர் வந்தார்.

"வாருங்கள் நாரதரே !" என்று அவரை பட்ட மகிஷிகள் இருவரும் வரவேற்றனர்.

"மிக அவசர காரியம் போலிருக்கிறது ! " என்றார் நாரதர்.

"ஆம். கருடனால் கூட இன்று அவர் அவசரத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை." என்றார் ருக்மிணி பிராட்டி.

"பட்ட மகிஷிகளைக் கூட பொருட்படுத்தாமல் பகவான் தனியாகச் செல்கிறார் என்றால் யாரோ உயர்ந்த பக்தராக இருக்க வேண்டும்." என்றார் நாரதர்.

"துவரகாதீசர் என்னைப் பொருட்படுத்தாவிடினும் பரவாயில்லை. ருக்மிணி அக்காவையாவது அழைத்துச் சென்றிருக்கலாமே." என்றார் பாமா. இந்த வார்த்தைகளைச் சொல்லும் பொழுதே அவர் குரல் தழுதழுக்க ஆரம்பித்திருந்தது.

"இது என்ன அம்மா ! நீங்கள் பேசுவதைப் பார்த்தால் அந்த நீலமேக ஷ்யாமளன் தங்களை அழைத்துச் செல்வேன் என்று சொல்லிவிட்டு ஏமாற்றி விட்டார் என்பது போலிருக்கிறதே ! " என்றார் நாரதர்.

"நாரதரே ! இது துவாரகா என்பது நினைவிருக்கட்டும். உங்கள் வேலையை இங்கே காண்பிக்க வேண்டாம். எச்சரிக்கை !" என்றார் ருக்மிணி பிராட்டி.

"நாரதரை கடிந்து என்ன பிரயோஜனம் அக்கா ! அவர் உண்மையைத் தானே சொல்கிறார் !" என்றார் பாமா.

"ஆஹா ! நான் ஏனம்மா இங்கு வந்து கலகம் செய்யப் போகிறேன்.  அடடா ! இந்த அபாண்டமான குற்றச்சாட்டை விசாரிக்க இப்பொழுது எனது நாதன், கோவிந்தன், மாதவன், மதுசூதனன், உத்தமன், சத்யசந்தன், தீனதயாளன், பரம காருண்யன் இங்கில்லாமல் போய்விட்டானே. இருக்கட்டும். ஆனால் ஒன்று மட்டும் எனக்கு நிச்சயமாகத் தெரியும்." என்று சொல்லிய நாரதர் சற்று நிதானித்து,
"ராதாவின் தங்கம் யாருக்கும் வாக்கு கொடுத்து ஏமாற்றியதாக எந்த யுகத்திலும், எந்த கல்பத்திலும் இல்லை. நாராயண ! நாரயண ! " என்றார் நாரதர்.

இந்த வார்த்தைகளைக் கேட்ட பாமா தேவி, "ஒரு பேச்சிற்கு கூட 'பாமாவின் தங்கம்' என்று சொல்லக் கூடாதா...." என்று அங்கலாய்த்தார்.

"நாராயணா ! நாராயணா ! இன்று நான் என்ன பேசினாலும் விவகாரம் ஆகிவிடும் போலிருக்கிறதே." என்றார் நாரதர்.
"சற்று நன்றாக யோசித்து பாருங்கள் அம்மா ! தங்கள் மாளிகையில் தங்கத்திற்கு மதிப்புத் தான் உண்டா? துவாரகாதீசன் எடைக்கு எடை தங்க ஆபரணங்கள் வைக்க உங்களைத் தவிர எவரேனும் யோசிக்கக் கூட முடியுமா ? " என்று நாரதர் சொல்லும் பொழுதே ருக்மிணி பிராட்டியின் கண்களில் கோபத்திற்கான அறிகுறி தென்பட்டது.
"அதாவது அம்மா...பாமா தேவியின் மாளிகையில் தங்கம் மிகச் சாதாரணமான ஒரு பொருள். பிருந்தாவன ஜனங்கள் எல்லாம் தங்கள் உயிராகக் கொண்டாடுபவரை 'பாமாவின் தங்கம்' என்று சொன்னால், அவரை எல்லோரையும் போல சாதாரணமானவர் என்று குறிப்பது போல் ஆகிவிடுமே...என்று தான்...சொல்ல வந்தேன்..." என்று சர்ச்சைக்குரிய ஒரு நீண்ட விளக்கத்தை நாரதர் அளித்தார்.

"நாரதரே, அன்புற்றவரை பிரிவுறும் நோய்...அதனை நீர் அறியீர். நாம் எவர் மேல் அதிகப் பிரேமை வைத்திருக்கிறோமோ அவரால் உதாசீனப்படுத்தப்பட்டால் அடையும் வேதனை...அதனையும் நீர் அறியீர்...உமக்கு எல்லாமே வேடிக்கை தான். விஷயத்தை தெளிவாக அறிந்து கொண்டு அமைதியாக இரும்." என்று ருக்மிணி பிராட்டி ஆணையிட்டார்.

"நாரயணா ! நாரயணா ! யாரையும் புண்படுத்தும் எண்ணமில்லை அம்மா ! விஷயம் என்னவென்று தெரிந்து கொள்ள எனக்கும் ஆவலாகத் தான் இருக்கிறது."

"துவரகாதீசர் இன்று இரவு தனக்கு மிகவும் பிரியமான ஒரு உயர்ந்த பக்தனுக்கு தரிசனம் தர வேண்டும் என்று முன்னரே பாமாவிடம் சொல்லி இருந்தார். ஆனால் யார் அந்த பக்தர் என்று யாருக்கும் தெரியாது. சற்று முன்னர் கூட பக்தனுக்கு தரிசனம் தர வேண்டும் என்று சொல்லி பாமாவை தயாராக இருக்கச் சொல்லி ஆள் அனுப்பினார். யாராக இருக்கும் என்று நானும் பாமாவும் பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் அவர் இங்கு வந்ததும் தெரியவில்லை. மாயமாய் மறைந்ததும் புரியவில்லை. மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த பாமா ஏமாற்றம் அடைந்துள்ளாள்." என்று ருக்மிணி பிராட்டி விஷயங்கள் நடந்த சூழ்நிலையை விவரித்தார்.

"இப்பொழுது நன்றாக புரிகிறது அம்மா ! பாமா தேவியின் கட்சியில் அடியேனும் உள்ளேன் என்று தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். துவாரகாதீசன் அடியேனையும் இதே காரணம் பற்றி இங்கு வரச் சொல்லியிருந்தார். அடியேனுக்கும் பெருத்த ஏமாற்றம் தான். வெளியில் சொல்லிக் கொள்ளவில்லை. அவ்வளவு தான். ஆனால் ஜனார்த்தனர் எதைச் செய்தாலும் அதில் ஒரு பொருள் இருக்கும் என்று அமைதியாக இருக்கிறேன். நாராயணா ! " என்றார் நாரதர்.

"ஆமாம் பாமா. 'கிருஷ்ணாவோ' என்ற அந்த அபயக் குரல் என் காதுகளில் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. எந்த உயிர்க்கு தாங்க முடியாத துன்பமோ ? ஜனார்த்தனர் எப்பொழுதும் உயிர்களுக்கு அபயம் அளிப்பதிலேயே கண்ணாக இருப்பார் என்பது நீ அறியாததா? " என்று பாமா தேவையை ருக்மிணி பிராட்டி தேற்றினார்.

"ஆனால் பட்டமகிஷி பாமாதேவியின் பேரில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் வைத்திருக்கும் அன்பினை யாரும் குறைவாக எடைபோட வேண்டாம் என்று விண்ணப்பித்துக் கொள்கிறேன்..." என்றபடியே நாரதர் பாமா தேவியின் பக்கம் திரும்பினார்.

"உங்களுக்காக அன்றோ யதுகுலதிலகம் பாரிஜாத மரத்தை இந்திரலோகத்தில் இருந்து துவரகாவிற்கு கொணர்ந்தார்...அந்தப் பரந்தாமன், சர்வேஸ்வரன், புருஷோத்தமன், பகவான் வாசுதேவன், உங்கள் ஒரு வார்த்தைக்கு மதிப்பளித்து, தவறு தவறு, உங்கள் கள்ளம் கபடமில்லா அன்பிற்கு கட்டுப்பட்டு ஒரு தராசு தட்டில் அமர்ந்து தன்னை எடைபோடும்படி தாழ்த்திக் கொண்டானே ! ஆனால் இன்று ஏதோ மிக அவசரமான காரியம் தான் என்று நினைக்கிறேன். இல்லையேல் அந்தக் கருணை மாமுகில் நிச்சயம் தங்களை உதாசீனப்படித்தி விட்டுத் தனியே சென்று இருக்க மாட்டார்." என்றார் நாரதர்.

"நாரதரே ! ஒரே சமயத்தில் அமிழ்தமும் விஷமும் கலந்த வார்த்தைகளைச் சொல்கிறீர் " என்றார் பாமா.

"ஆஹா ! இதே வார்த்தைகளை ஒரு சமயம் சீதாதேவியும் உரைத்ததாகக் கேள்வி." என்றார் நாரதர்."

"அது எப்பொழுது நாரதரே ? " என்று ருக்மிணி பிராட்டி வினவினார்.

"ராமன் தன்னைப் பிரிந்து சொல்ல முடியாத துயரத்தில் காட்டில் பித்துப் பிடித்தவன் போல அலைகிறான் என்று அசோக வனத்தில் சீதாப் பிராட்டியிடம் அனுமன் சொல்லியபொழுது..." என்று நாரதர் சொல்லி முடிப்பதற்குள் பாமாதேவி மூர்ச்சையாகி இருந்தார். நல்ல வேளையாக கீழே விழ இருந்தவரை ருக்மிணி பிராட்டி பிடித்துவிட்டார்.

"ஆஹா ! சீதை, அசோக வனம் என்று கேட்டாலே இவள் மூர்ச்சையாகி விடுவாள். தாங்கள் வந்த காரியம் ஆனதா நாரதரே ? " என்று ருக்மிணி பிராட்டி கேட்கவும், நாரதர், " இன்று நான் எதை செய்தாலும் எல்லோரும் தவறாக நினைக்கிறார்கள் அம்மா. இன்னொரு நாள் வருகிறேன். விடை கொடுங்கள். ஆனால் ஒரு விஷயம் மட்டும் இன்று அறிந்து கொண்டேன்..."

"நீங்கள் அறிந்து கொண்டதை இன்னொரு சமயம் வந்து சொல்லவும். இப்பொழுது நான் பாமாவை கவனிக்க வேண்டும்.  இப்பொழுது விடை பெறுகிறீரா ?" என்று விரட்டாத குறையாக நாரதரை ருக்மிணி பிராட்டி அனுப்பி வைத்தார்.

*****************************************************************************

"இரவெலாம் கண்ணில் நீரருவி பெருகும்" என்று சென்ற பதிவில் இடம்பெற்ற மீராப் பாடலைப் பற்றி நாரதருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். அந்தப் பாடல் ஆழ்வார் திருமகள் ஆண்டாள், சத்யபாமா பாவனையில் பாடியுள்ள, "என்பு உருகி இனவேல் நெடுங்கண்கள் இமைப் பொருந்தா பல நாளும்..."  என்ற நாச்சியார் திருமொழி பாசுரத்தை நினைவுபடுத்துகிறது என்றேன். அப்பொழுது தான் நாரதர் தனக்கு ஒரு முறை துவாரகாவில் பாமாதேவியின் தூய அன்பினை அறிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் அமைந்தது என்று சொல்லி மேற்படி நிகழ்ச்சிகளை விவரித்தார். மேலும் அன்று தான் ருக்மிணி பிராட்டியிடம் சரியாக விடை பெற்று கொள்ள முடியவில்லை என்றும், அவரைப் பார்த்து சமாதானம் செய்து கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காகத் தான் திருவல்லிக்கேணி வந்ததாகவும் உரைத்தார். [இதன் பின்னர் டீக்கடையில் நடந்த உரையாடல் இந்தப் பதிவில் இல்லை.]

நாரதர் விளக்கிய மேற்படி துவாரகா நிகழ்ச்சியில் ஜனார்த்தனர் எங்கே சென்றார் என்ற கேள்விக்கு விடையாக இந்த சூர்தாஸ் பஜன் அமைந்துள்ளது. இதுவும் இரவின் அமைதியில் கேட்க வேண்டிய இன்னொரு அற்புதமானப் பாடல்.


ஆனையின் துயர் தீர்த்த அம்மான் தன்னையும் காக்க வேண்டும் என்று சூரதாசர் பிரார்த்திக்கிறார். பாடலை இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

[பாடல்]
ஹே கோவிந்த ! ஹே கோபால ! ஹே கோவிந்த
ராகோ சரண அப்தோ ஜீவனஹாரே

நீர பிவன ஹேது கயோ சிந்து கேகி நாரே
சிந்து பீச்ச பஸத க்ராஹ சரணதரி பசாரே

சார ப்ரஹர யுத்த பயோ லேகயோ மஜ்தாரே
நாகே கானதுப் ந லாகே க்ருஷ்ண கோ புகாரே

த்வாரகா மே ஷபத கயோ ஷோர பயோ த்வாரே
சங்க சக்ர கதா பதும கருடல சிதாரே
சூர கஹே ஷ்யாம சுனோ ஷரணஹே திஹாரே
அபகி பார பார் கரோ நந்த கே துலாரே

[பொருள்]
ஹே கோவிந்தா ! ஹே கோபாலா ! என் வாழ்வின் இறுதிக்கட்டம் வந்துவிட்டது. அபயமளிப்பாய் ! ஷ்யாமா!  நான் சொல்வதைக் கேட்பாய். அன்றொருநாள் தன் நீர் வேட்கையைத் தணிக்க வேழமொன்று சிந்துவில் இறங்கியது. அப்போது அங்கு வாழ்ந்து வந்த முதலை ஒன்று அந்த வேழத்தின் காலைக் கவ்வியது. பல காலம் அந்த முதலையிடம் போராடி சோர்வுற்ற அந்த வேழம், தன் இறுதி நெருங்கிவிட்டதை எண்ணி "கிருஷ்ணா" என்று அலறியது. அந்த அபயக்குரல் துவாரகாவில் ஏற்படுத்திய அதிர்வு அடங்குமுன், நீ சங்கு சக்ர கதாதாரியாய் கருடாரூடனாய் அவ்விடம் சென்று அந்த யானைக்கு நற்கதி அளித்தாயே ! அவ்வாறே நானும் உன்னை சரணடைந்து விட்டேன். நந்தனின் செல்லமே ! காலம் தாழ்த்தாமல் என்னையும் கரை சேர்ப்பாய்.



19 comments :

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ராதாவின் தங்கமே நன்றி! :)
ராதாவின் தங்கமே வாழ்க!
ராதாவின் தங்கமே பாடுவாய்!

//தன் பின்னர் டீக்கடையில் நடந்த உரையாடல் இந்தப் பதிவில் இல்லை//

ராதாவின் தங்கமே டீக்குடிப்பாய்! அந்த டீ ரொம்ப நல்லா இருக்கும்! ஒரு முறை ராதா வாங்கிக் குடுத்தான்! செம டேஸ்ட் :)

Radha said...

எல்லா நன்றிகளும் => நாரதருக்கே. :-) பெரிய பதிவாய் இருக்கே, ஒரு ஆளாவது படிப்பாங்களா என்றெலாம் எதைப் பத்தியும் கவலைப்படாம எழுத வச்சிட்டார்.
கிருஷ்ணன், ருக்மிணி, சத்யபாமா, சீதை, ராமன், அனுமன், கருடன் எல்லோரையும் வைத்து ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற என் நீண்ட நாளைய ஆசையை நிறைவேற்றி வைத்த நாரதருக்கு நன்றி சொல்லிக் கடமைப்பட்டிருக்கிறேன். :-)

Radha said...

ராதாவின் தங்கத்தை கண்டு கொண்டமைக்கு கூடுதல் நன்றி. :-)

Kavinaya said...

இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம்! சீக்கிரமே முடிஞ்சு போச்சு :(

//ரதர் விளக்கிய மேற்படி துவாரகா நிகழ்ச்சியில் ஜனார்த்தனர் எங்கே சென்றார் என்ற கேள்விக்கு விடையாக இந்த சூர்தாஸ் பஜன் அமைந்துள்ளது.//

பாடல் இனிமையாக இருக்கு. இருந்தாலும் என்னைப் போன்ற பொருள் தெரியாதவங்களுக்காக விளக்கம் தந்தா நல்லா இருக்கும்.

Radha said...

//இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம்! சீக்கிரமே முடிஞ்சு போச்சு :(
//
அக்கா, கிண்டல் ஒன்றும் இல்லையே. உண்மையா தான் சொல்றீங்களா? :-) பாடல் பொருள் எல்லாம் இந்தப் பதிவிலேயே கொடுத்தால் அனுமார் வால் மாதிரி முடிவே இல்லாமே போகுமேன்னு யோசிச்சேன். இன்று அதனையும் சேர்க்கிறேன்.

Lalitha Mittal said...

பதிவு படு ஜோர்!



அதென்ன நாரதருடன் டீ?கல[க]ப்பட டீயோ?



மொழிபெயர்க்க ஆரம்பித்தேன்;நான் கொஞ்சம் வளவளா;அதனால் உன் [கவினயாவுக்கு]பதிலைப் படித்ததும் முயற்சியை விட்டுட்டேன்.

நாடி நாடி நரசிங்கா! said...

கவிநயா said...
இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம்! சீக்கிரமே முடிஞ்சு போச்சு :(

:)))

நாடி நாடி நரசிங்கா! said...

துவாரகாதீசன் யாரு? துவாரகை + ஈசன் .. துவாரகையில் உள்ள சிவனா!
ரொம்ப Think பண்றேனோ
:)

Radha said...

லலிதாம்மா, நிச்சயம் உங்கள் மொழிபெயர்ப்பை எனக்கு மின்னஞ்சல் செய்யவும். மிகவும் உதவியாக இருக்கும்.

Radha said...

ராஜேஷ்,
துவாரகாவில் கண்ணனை "துவாரகாதீஷ்" என்று அழைக்கிறார்கள் என்று கேள்வி. துவராபதி, துவரைக்கோன், துவாரகா நாதன் என்றும் எழுதி இருக்கலாம். ஏனோ துவாரகாதீசன் என்று வந்து விட்டது. வட இந்திய எழுத்தாளர் எழுதிய ஒரு புத்தகத்தைப் படித்ததன் தாக்கம் என்று நினைக்கிறேன். நீங்க ரொம்ப யோசனை செய்து என்னையும் யோசிக்க வைக்கிறீர்கள். :-)

Radha said...

//அதென்ன நாரதருடன் டீ?கல[க]ப்பட டீயோ?
//
வீரராகவர் விரதம் என்பதற்கு சம்பந்தமாய் எதாவது தோன்றும் வரை நாரதர் என்னுடன் அலைந்து கொண்டிருப்பார். :-) [பயம்/கவலை வேண்டாம். அடுத்தப் பதிவுடன் தொடர் முடிந்து விடும். ]

குமரன் (Kumaran) said...

இராஜேஷ்,

ஈச என்பது பொதுவாகத் தலைவன் என்று பொருள் தரும் சொல். வைணவம் மூன்று தத்துவங்கள் என்று சொல்லும் போது, சித், அசித், ஈஸ்வரன் (அறிவுள்ளது - உயிர்; அறிவில்லாதது - உடல்/உலகம்; ஈஸ்வரன் - கடவுள்/இறைவன்) என்று சொல்லும். இங்கே ஈஸ்வரன் என்பதற்குப் பொருளாக நாராயணனைக் குறிக்கும். அதனால் ஈசன்/ஈஸ்வரன் என்றால் சிவபெருமானை மட்டும் குறிக்காது. அதற்கு இறைவன் என்று தான் பொருள். அந்த வகையில் பார்த்தால் துவாரகாதீசன் என்றால் துவாரகைக்கு இறைவன் என்று பொருள் தந்து கண்ணனைக் குறிக்கும்.

நம்மாழ்வாரின் ஒரு பாசுரம் இங்கே தருகிறேன்.

ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திருவேங்கடத்தானுக்கு
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என் கண்
பாசம் வைத்த பரஞ்சுடர் சோதிக்கே!

Kavinaya said...

//அக்கா, கிண்டல் ஒன்றும் இல்லையே. உண்மையா தான் சொல்றீங்களா? :-)//

உண்மை, உண்மையைத் தவிர வேறில்லை! :)

பாடல், பொருள் சேர்ப்பதற்கும் நன்றி ராதா.

Radha said...

//ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திருவேங்கடத்தானுக்கு
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என் கண்
பாசம் வைத்த பரஞ்சுடர் சோதிக்கே!
//
அருமை அருமை அருமை !

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@ராஜேஷ்
ஈசன் = சிவபெருமான் தான்!

* வேங்கடேசன் = வேங்கடத்தில் இருக்கும் சிவபெருமான்
* துவாரகாதீசன் = துவாரகையில் இருக்கும் சிவபெருமான்
* ரங்கேசன் = அரங்கத்தில் இருக்கும் சிவபெருமான்

:)))
முனியே, நான்முகனே, முக்கண்-அப்பா!

In Love With Krishna said...

@Radha:
Ellam seri...but u did nt finish the post!
Nicer read though :)

Radha said...

லலிதாம்மா, பாடல் பொருள் தந்து உதவியதற்கு மிக்க நன்றி. :-)

Radha said...

@ilwk,
பதிவினை முடிக்கத் தெரியவில்லை என்பது தான் உண்மை. :-) கைக்கு வந்ததை எழுதிவிட்டேன். அதனால் என்ன, பரவாயில்லை. துவாரகா நாதனை நினைக்க ஒரு வாய்ப்பு என்றளவில் திருப்தி இருக்கிறது. :-)

நாடி நாடி நரசிங்கா! said...

:)))
முனியே, நான்முகனே, முக்கண்-அப்பா!

---:_)

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP