Thursday, May 27, 2010

யேசுதாஸ் & மலேசியா வாசுதேவன்: தேடினேன் தேவதேவா-தாமரைப் பாதமே!

காபி அண்ணாச்சி றேடியோஸ்பதி பதிவில் ஒரு புதிர் போட்டிருக்காரு!
அது சம்பந்தமான... ஆனால் புதிருக்கு விடை அல்லாத... பாட்டினை, இன்னிக்கி கண்ணன் பாட்டில் போட்டுருவோமா?

அதுவும் இராகவன் பொறந்த நாள் அதுவுமா, ஒரு பொருத்தமான படம், பொருத்தமான பாட்டு வரிகள்! - ராகவேந்திர ராகவேந்திர "ராகவா"! ராகவேந்திர ராகவேந்திர "ராகவா"! :) தேடினேன் தேவதேவா - தாமரைப் பாதமே!


படத்தில், பாடல் என்னவோ க்ளைமாக்ஸ் பாடல் தான் என்றாலும்,
பாடலின் வரிகளும், ராகமும் = "சுபமான" ஒன்று தான்! ராகம்: "சுப" பந்துவராளி! வைகறையில், வைகைக் கரையில், வந்தால் வருவேன் உன்னருகில் - என்ற மெட்டு போலவே இருக்கும்! தேடினேன் தேவதேவா - தாமரைப் பாதமே!

முன்பு, அதே ராகவேந்திரா படத்தில் வரும், இன்னொரு சூப்பரான பாட்டைக் கண்ணன் பாட்டிலே போட்டிருக்கோம்! = ராம நாமம் ஒரு வேதமே! ராக தாளமொடு கீதமே...
இன்னிக்கி அந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் பாடல்! யேசுதாஸின் மாயக் குரலில்! கூடவே மலேசியா வாசுதேவனும் பாடி இருக்காரு!

* யேசுதாஸ், பாடல் வரிகளில் தோய...
* மலேசியா, சரண வரிகளில் தோய்கிறார்!
- குருவேஏஏஏஏஏ சரணம் என்று தோய்கிறார்!

நீ வாழும் இடம் வந்து, நான் சேர வேண்டும்! - என்று ஆழமான உணர்வுகளை, மெல்லிய முகத்தில், மெல்லீதாகக் காட்டி நடிப்பாரு நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! வாங்க பாட்டைப் பார்ப்போம்!



குரல்: யேசுதாஸ், மலேசியா வாசுதேவன்
இசை: இளையராஜா
வரிகள்: ?
படம்: ஸ்ரீ ராகவேந்திரா


அழைக்கிறான் மாதவன்! ஆநிரை மேய்த்தவன்!
மணி முடியும், மயில் இறகும்,
எதிர் வரவும், துதி புரிந்தேன்!
மாதவா கேசவா ஸ்ரீதரா ஓம்!

தேடினேன் தேவதேவா - தாமரைப் பாதமே!
வாடினேன் வாசுதேவா - வந்தது நேரமே!


ஞான வாசல் நாடினேன்!
வேத கானம் பாடினேன்!
கால காலம் நானுனை!
தேடினேன் தேவ தேவா - தாமரைப் பாதமே!

காதில் நான் கேட்டது - வேணு கானாம்ருதம்!
கண்ணில் நான் கண்டது - கண்ணன் பிருந்தாவனம்!


மாயனே நேயனே!
மாசில்லாத தூயனே!
ஆத்ம ஞானம்
அடைந்த பின்னும்
தேடினேன் தேவதேவா - தாமரைப் பாதமே!


குருவே சரணம்! குருவே சரணம்!
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா
குருவே சரணம்! குருவே சரணம்!


ஞானத் திருமேனி காண வர வேண்டுமே!
சீதப் பூவண்ணப் பாதம் தொழ வேண்டுமே!
பக்தன் வரும்போது பாதைத் தடையானதேன்?
காட்டுப் பெருவெள்ளம் ஆற்றில் உருவானதேன்?


தாயாகித் தயை செய்யும் தேவா!
தடை நீங்க அருள் செய்ய வாவா!
நான் செய்த பாவம், யார் தீர்க்கக் கூடும்?
நீ வாழும் இடம்வந்து, நான் சேர வேண்டும்!

குருவே சரணம்! குருவே சரணம்!
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா
குருவே சரணம்! குருவே சரணம்!

ராகவேந்திர ராகவேந்திர ராகவா! - குரு
ராகவேந்திர ராகவேந்திர ராகவா!
ராகவா! ராகவா! ராகவா! ராகவா!




பாடலைப் பிரிச்சி மேய்ஞ்சா, பல கருத்துக்கள் உள்ளடங்கி இருக்கும்!
குமரன் வந்து சொல்லட்டும்! சாம்பிளுக்கு ஒன்னு:

ஞான வாசல் நாடினேன்! வேத கானம் பாடினேன்!
ஆத்ம ஞானம் அடைந்த பின்னும் தேடினேன் தேவதேவா!


அதான் ஆத்ம ஞானம் அடைஞ்சாச்சே! அப்பறம் என்ன இன்னும் தேடினேன் தேடினேன்-ன்னு தேடுறது? - லாஜிக் இடிக்குதே-ன்னு பாக்கறீயளா? :)

அடுத்த வரியிலேயே விடையும் இருக்கு!
தேடினேன் தேவதேவா - தாமரைப் பாதமே! = திருவடிச் சரணம்! சரணாகதி!

என்ன தான் ஞான வாசல் நாடினாலும்,
வேத கானம் பாடினாலும்...
அவை, அவரவருடைய ஆத்ம அளவில் மட்டுமே=ஆத்ம சாஷாத்காரம்!

ஆனால் அவரவர் ஆத்மாவையும் தாண்டி...
அவரவர் ஆத்மாவுக்கு உள்ளேயும்....
அவரவர் ஆத்மாவுக்கு ஆதாரமாய்....
ஒன்னு இருக்கு!
அது ஆத்மாவுக்கு எல்லாம் ஆத்மா - அந்தராத்மா - பரமாத்மா!

என்ன தான் மாங்கு மாங்கு-ன்னு ஞான கர்ம யோகங்கள் செஞ்சாலும்...
அவை "நம் ஆத்மாவை" மட்டுமே நமக்கு உணர்த்திக் காட்டும்!
அதனால் தான், ஆத்ம ஞானம் அடைந்த பின்னும்...இன்னும் தேடினேன்-ன்னு பாடுறாரு!

ஆத்ம ஞானம் அடைஞ்ச பின்னால்?
அம்புட்டு தானா?
ஞான யோகம், கர்ம யோகம் தான் பரமா? முடிஞ்ச முடிவா?
இல்லை!
ஆத்ம ஞானம் அடைந்த பின்னும்...தேடினேன் தேவ தேவா....எதை?

தாமரைப் பாதமே!
தாமரைப் பாதமே!

சரணம் சரணம் என்னும் சரணாகதி! அதுவே நமக்கு கதி!

ஆத்ம ஞானம் அடைந்த பின்னும்...அந்த ஆத்மா "தான் தான்"-ன்னு அப்படியே தான் இருக்கும்!
அதை அவனுக்குச் சமர்ப்பணம் பண்ணி விடுவது தான் = ஆத்ம சமர்ப்பணம் = சரணாகதி!

என்ன தான் ஞான வாசல் நாடினாலும்...வேத கானம் பாடினாலும்...தேடிக்கிட்டே தான் இருப்போம்...
ஆத்ம ஞானம் "அடைந்த பின்னும் தேடினேன்"...

தேடினேன் தேவதேவா
தாமரைப் பாதமே!
தாமரைப் பாதமே!!

Tuesday, May 25, 2010

சிரித்தது செங்கட் சீயம்!







இன்று நரசிம்ம ஜயந்தியை முன்னிட்டு இந்தப்பதிவு!


அன்று ஸ்ரீரங்கம் அரங்கன் கோயிலில் ஒரே ஆரவாரம்! ‘ஆதிகவியான வால்மீகியின் இராமாயண காவியத்தை தமிழில் செய்து அரங்கேற்றத் துணிந்த இந்தக் கம்பன் என்பவன் யாராம்?” என்று ஒருவருக்கொருவர் வியப்பும் திகைப்்புமாகக் கேட்டுக்கொண்டனர்.

திருவரங்க நகரம் அந்த நாளில் தமிழிலும் வடமொழியிலும் தேர்ந்த பண்டிதர்களைக்கொண்டிருந்தது. அங்கே தங்களது புலமைக்குப்பாராட்டு கிடைப்பதை விரும்பாத புலவர்களே இல்லை.

இங்கு தனது இராமாயணக்காதை அரங்கேறுவதே தனக்குச்சிறப்பு என்று கம்பன் நினைத்தான்.

.

கம்பனின் கதையைக்கேட்டுத்தான் பார்க்கலாமே என்று சிலர் ஆர்வமுடன் முன்வந்தனர். அவர்களின் முயற்சியில்

அரங்கன் கோயிலில் பிராட்டியாரின் சந்நிதி முன்பாக இருக்கும் நாலுகால் கல்மண்டபத்தில் அரங்கேற்ற ஏற்பாடுகள் ஆயத்தமாயின.

வால்மீகியான தெய்வ மாக்கவி மாட்சி தரிக்கவே இதை நான் புனைந்தேன் என்றான். கம்பன்.

பிறகு இராமாயணக்காதையை தான் இயற்றிய பாடல்களுடன் கூற ஆரம்பிக்கிறான்.

. பல புலவர்களும், கதை கேட்பவர்களும், அமர்ந்திருக்கும் அந்த இடத்தில் அப்போது, யுத்த காண்டம் அரங்கேற்றம் ஆரம்பிக்கின்றது.

”விபீஷணன் ராவணனுக்கு எவ்வளவோ அறிவுரைகள் கூறினான் காமத்தில் மதி இழந்த இராவணன் அவைகளைப்பொருட்படுத்தாமல் விபீஷணனை இகழத்தொடங்கினான்.

“விபீஷணா! மானுடர் வலியர் என்றாய்! ஏன்...? அச்சமோ? அவர்பால் அன்புமோ உனக்கு? கூனியின் சூழ்ச்சியால் அரசிழந்து வனம் புகுந்து என் சூழ்ச்சியால் தன் மனைவியை இழந்தும் கழிந்துபோகா உயிரைச் சுமந்து கொண்டிருக்கும் மனிதர்களின் வலிமையை உன்னைத்தவிர யார் மதிப்பர்? அவனோ என்னை வெல்லுவன்?’ என்று கத்தினான் .

“மனம் வருந்திய விபீஷணன்,”அண்ணா!! நீர் இராமன் என்னும் நாராயணனைக் கேவலமாய் நினைக்கவேண்டாம். ஒப்புயர்வில்லாத வீரர்கள் அந்த நாராயணனைப் பகைத்து அழிந்து போயிருக்கின்றனர் அத்தகையவர்களில் ஒருவன் தான் இரணியன் என்பவன்.” என்று சொல்லி இரணியனின் வரலாற்றையும் கூறினான்.

இப்படி கம்பன் கூறும்போது, சில பண்டிதர்கள் திகைத்தனர்.


”உமக்கு நரசிம்மாவதாரம் எழுத ஆசையிருந்தால், தனியாக எழுதிவிடலாமே! இங்கு எதற்கு இதைச் சேர்க்க வேண்டும்?” என்று சீறினார் ஒருவர்.


மற்றவர்.” ஆமாம்! இதை ஒப்புக் கொள்ள முடியாது! அனைத்தும் தவறு “ என்று பொங்கி எழுந்தார்.

”: புலவர்களே! அமைதி! கம்பர் என்ன சொல்கிறார் என்று முதலில் கேட்கலாம்! கம்பரின் ராமாயணம் முடிவதற்குள் இறைவனின் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால், இந்த ராமாயணம் காப்பியமாக அனுமதிக்கப் படாது. அதுவரையில் நாம் பொறுமை காக்க வேண்டியது அவசியம். கம்பரே! நீர் தொடரும்!” என்று அவைத்தலைவர் அனுமதி அளித்தார்.

பெருமூச்சுடன், கம்பர் தொடர்ந்தார்

நசை திறந்து இலங்கப் பொங்கி, 'நன்று நன்று' என்ன நக்கு;
விசை திறந்து உருமு வீழ்ந்தது என்னவே, தூணின் வென்றி
இசை திறந்து, உயர்ந்த கையால் எற்றினான்; என்றலொடும்;
திசை திறந்து, அண்டம் கீறிச் சிரித்தது செங்கட் சீயம்!



அவ்வளவுதான்.......


ஒரு புலவர் (வேகமாக எழுந்து,” புலவரே! பாடலை மீண்டும் படியுங்கள்!” என்றார்

கம்பர் படிக்க, புலவர் பொருள் கேட்க, கம்பர் பாடலை விளக்கினார்.

”'சிரித்தது செங்கட் சீயம்' என்கிறீரே! எங்காவது சிங்கம் சிரிக்குமா? நீர் கேட்டதுண்டா? அவையில் யாராவது இதைப் பார்த்ததுண்டா?”

அவையில் சிரிப்பு!;


கம்பர், இந்தச் சிரிப்பையும் கிண்டல் பார்வைகளையும் பொருட்படுத்தாமல் அடுத்த பாடலை ஆரம்பித்தார்.

அவைத் தலைவர் இப்போது,”புலவரே! அவர் கேள்விக்கு விளக்கமளித்து விட்டு, அடுத்த பாடலுக்குச் செல்லுங்கள்!” என்றார் உத்தரவிடும் குரலில்.

கம்பர் திகைத்தார்.தன்னிலை மறந்து காவியம் எழுதும் போது கடவுளின் ஆணையாக வந்த சொற்களை கடவுளே அறிவார்! .அபிராமி பட்டருக்கும் இதே நிலைதானே ஏற்பட்டது?


அவையில் பலத்த சிரிப்பொலி ...

“மாட்டிக்கொண்டான் கம்பன் ...அவன் ராமாயணக்காதை முற்றிலும் அரங்கேற்ற சாத்தியமே இல்லை இனி! “

முணுமுணுத்து மகிழ்ந்தது ஒருகூட்டம்.

திடீரென்று அவர்களின் பலத்த சிரிப்பையும் மீறி, ஒரு சிரிப்பு! அனைவரையும் நடுங்க வைக்கும் சிரிப்பு! எல்லோரும், சிரிப்பு வந்த திசையை நோக்குகின்றனர்)

கம்ப மண்டபத்தின் மிக அருகில் கல்படிக்கட்டுகள் கொண்ட மேட்டுப் புறத்திலே உள்ள சந்நிதி கோபுரத்திலிருந்து ஒரு அதிர்வு உண்டானது. பூகம்பமோ என மக்கள் நிமிர்ந்து அச்சத்துடன் பார்த்தனர்.

ஆ !என்ன இது கோபுரத்தில் பதிக்கப்பெற்றிருந்த நரசிம்மனின் சிலை.. இல்லை இல்லை இது சிலையில்லையே ?நரசிம்மர் உயிரோடு அல்லவா இருக்கிறார்! கோலாகலமாய் சிரிக்கிறாரே!

ஒருக்கணம்தான் எல்லாம்!


திகைப்பும் பயமுமாய் கண்டவர்களுக்குக் காட்சி தந்து மறைகிறார் நரசிம்மப்பெருமான்.

“கம்பனே! உன் கவிதையை யாம் ஏற்றுக்கொண்டோம்! வால்மீகியின் கவிதையைப்போல நின் கவிதையும் என்றும் மக்கள் மனத்தில் நிலைத்து வாழட்டும்” என்பதாகக்கையை உயர்த்தி ஆசி கூறி வாழ்த்தினார். அடுத்த கணம் உயிர்பெற்ற சிலை மறுபடி சிலையானது.ஆனால் தூக்கிய திருக்கரம் தூக்கியபடியே இருந்தது.


அனைவரும் மெய்சிலிர்த்தனர் . கம்பனைப்போற்றி வணங்கினர்.

இன்றும் அரங்கன் கோயிலில் அந்த கம்ப மண்டபம் இருக்கிறது ! அதற்குப் பக்கத்தில் சற்றே எதிரே அந்த மேட்டழகிய சந்நிதியும் இருக்கிறது !தூக்கிய திருக்கரமுடன் தம்மைக் காணவரும் பக்தர்களுக்கு இன்றும் அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார் அன்று கம்பனைக்காத்த நம் பெருமான் நரசிம்மன்!


'ஆடிஆடி அகம் கரைந்து இசை

பாடிப்பாடிக் கண்ணீர்மல்கி எங்கும்

நாடிநாடி, நரசிங்கா என்று

வாடி வாடும் இவ் வாள்நுதலே. '



'.

Wednesday, May 05, 2010

கண்ணனைக் கண்டாயோ மல்லிக் கொடியே !!

இடம்: பெங்களூர்
நேரம்: அழகிய மதிய நேரம்..

காண்பவை: கணினி, கடிகாரம் ஒரு மணி 35 நிமிடம் காட்டிக் கொண்டிருந்தது. பிஸி பேளா பாத்-ம், தயிர் வெங்காயமும்.. கொஞ்சம் காராபூந்தி சேர்த்து.. உண்ட மயக்கம் உண்மையான தொண்டருக்கும் உண்டு என்பதை உணர்த்தும்படி இராகவ் தூங்கிக் கொண்டிருக்கிறன்.


திடீரென்று முதுகில் ஒரு அடி விழுகிறது. டொம்ம்ம்ம். திடுக்கிட்டு விழிக்கும் ராகவ்,

ராகவ்: எவ அவ ??

தலையில் மலர் கிரீடம், கையில் குழலுடன் உள்ள ஒரு கபடதாரி: எவன் அவன்னு கேளுப்பா..


ராகவ்: சரி சரி.. இப்போ என்ன விஷயம்.. ஏதாவது கஸ்டமர் மீட்டிங்கா..

கபடதாரி: நான் உனக்கு கஸ்டமரா.. கஷ்டம்டா முருகா!!

ராகவ்: முருகாவா??? கண்டுபிடிச்சிட்டேன்.. கே.ஆர்.எஸ் தானே நீங்க..

கபடதாரி: சே! கண்ணன் வேஷம் போட்டாலும் கண்டுபிடிச்சுடுறாங்கப்பா..

ராகவ்: ஹி ஹி.. கண்ணன் வேஷம் போட்டா போதுமா.. ராதா ராதான்னு சொல்லிருந்தாலும் நம்பியிருப்பேன்.. முருகா முருகான்னு ஒரு வார்த்தை போதுமே..

கபடதாரி: சரி சரி.. சும்மாதானே இருக்க.. கண்ணன்பாட்டுல ”என்னை”க் கண்டதைப் பற்றி ஒரு பாடல் எழுதேன்..

ராகவ்: அப்படியே ஆகட்டும்.. என் ஞான ஆசார்யரே!!..

கபடதாரி: ஸ்ஸ்ஸ்ஸ்.. முடியல..

ராகவ்: சரி.. பாடல் ஜேசுதாஸ் ஐயாவ பாடச் சொல்லட்டுமா..

கபடதாரி: ம்.. அவரும் இருக்கட்டும்.. அப்புடியே புதுசா ஏதாவது செய்யு.. நான் அடுத்ததா.. ராதாவை போய் பாட்டு போடச் சொல்லி டகால்ட்டி பண்ணணும்.. வரட்டா...

***

கண்ணனைக் கண்டு பலநாட்கள் ஆகிவிட்டதாம் இந்தப் பேதைக்கு.. யாரைக் கேட்பது?? எங்கு போய்க் கேட்பது?? நான் வளர்த்த மல்லிக் கொடியிடம் கேட்போம்.. அதுதான் என் உற்ற தோழி.. என் நிலைமையை கண்ணனுக்கு தன் வாசத்தின் மூலம் கொண்டு சேர்த்து விடும்.

என் மல்லிக் கொடியே எனக்காக தூது செல்வாயா!!.. என் பாடலை கேட்பாயா.


கண்ணனைக் கண்டாயோ மல்லிக் கொடியே!
கண்ணனைக் கண்டாயோ மல்லிக் கொடியே!

கண்மணி வண்ணனின் குழல் ஓசையைக் கேட்டாயோ!
கண்ணனைக் கண்டாயோ மல்லிக் கொடியே!
கண்மணி வண்ணனின் குழல் ஓசையைக் கேட்டாயோ!
கண்ணனைக் கண்டாயோ மல்லிக் கொடியே!

வெண்ணிலாவில் அவன் என்னுடன் களிக்கையில்!
கண்ணே கண்ணே என்று ஆவலுடன் அழைத்த!

கண்ணனைக் கண்டாயோ மல்லிக் கொடியே!
கண்மணி வண்ணனின் குழல் ஓசையைக் கேட்டாயோ!
கண்ணனைக் கண்டாயோ மல்லிக் கொடியே!

எண்ணமெல்லாம் நான் செய்கிறேன் என்றான்!
எண்ணமெல்லாம் நான் செய்கிறேன் என்றான்!
திண்ணம் உன்னை நான் செய்விடேன் என்றான்!

கண்ணிமை மூடினேன்ன்ன்ன்ன்ன்..
கண்ணிமை மூடினேன்.. லலிதா சோதரன்
கண்ணிமை மூடினேன்..லலிதா சோதரன்
கண்முன்னே இருந்தான் எங்கோ மறைந்தான்!

கண்ணனைக் கண்டாயோ மல்லிக் கொடியே!
கண்மணி வண்ணனின் குழல் ஓசையைக் கேட்டாயோ!
கண்ணனைக் கண்டாயோ மல்லிக் கொடியே!

***
ஜனனி அவர்கள் பாடிய கர்னாடிக் ஃப்யூஷன்




ஜேசுதாஸ் ஐயாவின் தேமதுரத் தமிழில்,




Monday, May 03, 2010

MLV & S.ஜானகி: கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்!

கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் - இது பாரதியார் பாடல்-ன்னு பலருக்கும் தெரியும்!
ஆனால், சினிமாவில், இதை இரண்டு பெரும் பாடகிகள் பாடியுள்ளனர் என்று தெரியுமா? = எம்.எல்.வசந்தகுமாரி (ஸ்ரீவித்யா அவர்களின் தாயார்) & எஸ்.ஜானகி!

இருவரும், அவர்களுக்கே உரித்தான குரல் வெளிச் சோலைகளில்! கேட்டீங்க-ன்னா உங்களுக்கே தெரியும்! ஒன்று கம்பீரக் குரல், ஒன்று கண்ண்ணன்ன்ன் என்னும் மென் குரல்! :)

சரி, அது என்ன தங்கமே தங்கம்? யார் அது?
பாரதியார் யாரைத் "தங்கமே தங்கம்"-ன்னு கூப்பிடுகிறார்?
= கண்ணனையா? ராதையையா?
ரெண்டு பேரையுமே இல்லை! யாரை-ன்னு சொல்லுங்க பார்ப்போம்!

இந்தப் பாட்டை, கண்ணன் பாட்டுக் குழுவில் ஒருவரான ராதாமோகன் அவர்களுக்குச் சமர்பிக்கின்றேன்! :)
அவரு தான் அடிக்கடி தங்கமே தங்கம்-ன்னு மின்னஞ்சல் போடுவாரு! நாங்க வெள்ளியே வெள்ளி-ன்னு பதில் போடுவோம்! சரி தானே இராகவ்? :)



படம்: ஏழை படும் பாடு / தெய்வத்தின் தெய்வம்
குரல்: எம்.எல்.வசந்தகுமாரி / எஸ்.ஜானகி
இசை: CR சுப்பராமன் / ஜிரா (எ) ஜி.ராமநாதன்
வரிகள்: சுப்ரமணிய பாரதியார்

MLV அம்மா பாடுவது:

ஜானகி பாடுவது:
கண்ண்ண்ண்ண்ண்ண்ணன்-ன்னு குழையும் போது, குழலோசை மட்டும் கேட்கும்! அப்படியே தந்தி இழுக்க...வீணை இசையைக் கேட்கத் தவறாதீர்கள்!
அதே போல், தங்கம்ம்ம்ம்-ன்னு முடிக்கும் போது, டொய்ங்க்-ன்னு ஒத்தை இழுப்பு வீணைத் தந்தியும் மறவாது கேளுங்கள்!


கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்
எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம் - பின்னர்
ஏதெனிலும் செய்வோமடி தங்கமே தங்கம்!
(கண்ணன் மனநிலையை..)

ஆற்றங்கரை அதனில் முன்னம் ஒருநாள் - எனை
அழைத்துத் தனி இடத்தில் பேசியதெல்லாம்
தூற்றி நகர் முரசு சாற்றுவேன் என்று
சொல்லி வருவாயடி தங்கமே தங்கம்!
(கண்ணன் மனநிலையை..)

சோரம் இழைத்து இடையர் பெண்களுடனே - அவன்
சூழ்ச்சித் திறமை பல காட்டுவ தெல்லாம்
வீர மறக் குலத்து மாதரிடத்தே
வேண்டிய தில்லையென்று சொல்லி விடடீ!

பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் - மிகப்
பீழை இருக்குதடி தங்கமே தங்கம்
பண்ணொன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான் - அதைப்
பற்றி மறக்கு தில்லை பஞ்சை உள்ளமே.


நேர முழுதிலும் அப்பாவி தன்னையே - உள்ளம்
நினைந்து மறுகுதடி தங்கமே தங்கம்
தீர ஒருசொல் இன்று கேட்டு வந்திட்டால்
பின்பு தெய்வம் இருக்குதடி தங்கமே தங்கம்!
(கண்ணன் மனநிலையை..)

மரபிசையில்...நித்ய ஸ்ரீ பாடுவது:



இவை பாரதியாரின் "கண்ணன் என் காதலன்" பாடல்கள்!

"தங்கமே தங்கம்" யாரு-ன்னு கண்டு புடிச்சாச்சா? அவள் தான், தூது செல்லும் உற்ற தோழி! அவள் பேர் என்ன?
தன் பாங்கியை (தோழியை) அனுப்பப் பார்க்கிறாள்! தோழியோ தயங்குகிறாள்!
"தங்கமே தங்கம்" என்று அவளைக் கெஞ்சி, சென்று, பார்த்து வரச் சொல்கிறாள்!
கண்ணனின் மனநிலை எப்படி இருக்கு என்று கண்டு வரச் சொல்கிறாள்!

அய்யய்யோ, கண்ணனோட மனநிலையா? மனநிலை சரியில்லாதவன் ஆயிட்டானா என்ன கண்ணன்?

ஹா ஹா ஹா!
அடிப் பாவி, நீ தான்டி மனநிலை சரியில்லாதவளா ஆயிட்ட!
ஒரு நாளைக்கு ஒரு வேளை - மதிய வேளை உணவு மட்டும் தான்!
உறக்கம் இல்லை! விழிப்பும் இல்லை! ஒப்புக்கு வாழ்ந்துகிட்டு இருக்க!
கண்களிலோ தினப்படிக்கு வற்றாத குற்றாலம்!
அவன் பழைய மடல்களை எல்லாம் தேடித் தேடி எடுத்துப் படிச்சிக்கிட்டு இருக்க!

இதுல உன் மனநிலையைத் தான் முதலில் செக் பண்ணனும்! நீ என்னடா-ன்னா கண்ணன் மனநிலையைக் கண்டு வரச் சொல்லுறியே! ஏய், இனி என்னடீ பண்ணப் போற நீயி?

தீர ஒருசொல்...இன்று...கேட்டு வந்திட்டால்...
பின்பு...தெய்வம் இருக்குதடி, தங்கமே தங்கம்!
முருகத் தெய்வம் இருக்குதடி, தங்கமே தங்கம்!

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP