Friday, April 23, 2010

பித்துக்குளி ஹிட்ஸ்: பால் வடியும் முகம் நினைந்து நினைந்து!

கண்ணன் பாட்டு மக்களே, வணக்கம்!
இன்னிக்கி எனக்கு மிகவும் பிடிச்ச முருக-தாசர் ஒருத்தரு..."கண்ணா, என் பால், அன்-பால், உன் பால் வடியும் முகம், ஹைய்யோ"-ன்னு உருகிப் போயி பாடுறாரு! யாரு அந்த முருகதாசர்-ன்னு கேட்கறீங்களா?

நம்ம பித்துக்குளி முருகதாசரே தான்!
அவர் பாடுவது:
பால் வடியும் முகம் நினைந்து நினைந்தென் உள்ளம்
பரவசம் மிகவாகுதே - கண்ணா!

மொதல்ல பித்துக்குளியார் பற்றி லைட்டாப் பார்ப்போம்! அப்பாலிக்கா பாட்டுக்குப் போவோம்! ஓக்கேவா?
மொதல்ல எப்பமே அடியார்கள்! அடியார்கள் வாழ..அரங்கநகர் வாழ..சடகோபன் தண் தமிழ் நூல் வாழ :)



பித்துக்குளி-ன்னாலே என்ன ஞாபகத்துக்கு வரும்?
எனக்கு முருகன் ஞாபகம் வருவான்! :)
அப்பறமா முருகதாஸ்-இன் கூலிங் க்ளாஸ், தலையில் காவி Scarf! :)
மனுசன் அப்பவே என்ன ஸ்டைலா இருக்காரு-ன்னு பாருங்க! :))

பித்துக்குளி முருகதாஸ் அவர்களின் இயற்பெயர் பாலசுப்ரமணியம்! கோயம்புத்தூர் காரரு!

இந்தக் கொங்கு நாட்டுத் தங்கம், எதையும் கொஞ்சம் வித்தியாசமா பண்ணும்!
கர்நாடக பாடல்களை, அப்படியே இழு இழு-ன்னு இழுக்காம, அதை பஜனை ஸ்டைலில், மக்களோடு மக்களாச் சேர்ந்து, பாடிக் காட்டியவர்!
இதனால் தான், இந்தக் காலத்திலும், ஹார்மோனியம் மட்டுமே வச்சிக்கிட்டு, கல்லூரி மாணவர்களைக் கூடப் பித்துக்குளிக்கு, "ஓ" போட வைக்குது!

Fast Beat காவடிச் சிந்தை, செஞ்சுருட்டி/சுருட்டி/நாதநாமக் கிரியை-ன்னு போடறது தப்பில்லை! ஆனா காவடிச் சிந்தின் அந்த ஜீவனான "துள்ளல்" போயிறக் கூடாதுல்ல?
பண்டிதர்கள் அதை இழுத்து இழுத்தே ஜீவனைப் போக்கிருவாங்க! :)
ஆனால் நம்ம பித்துக்குளியார் காவடிச் சிந்தைக் கேளுங்க! சுருட்டி ராகமும் இருக்கும்! காவடியைச் "சுருட்டிக்"கிட்டு போகாமலும் இருக்கும்! :)

சான்றாக, இந்தப் பாட்டையே எடுத்துக்கோங்க!
பால் வடியும் முகம் - கண்ணா, என்பது ஊத்துக்காடு வேங்கட கவியின் கீர்த்தனை! நடனத்துக்குன்னே பாடப்பட்ட அழகான கண்ணன் பாடல்கள்! இதை எப்படி முருகதாஸ் Handle பண்றாரு?
* முதலில் பச்சை மாமலை போல் மேனி-ன்னு, ஆழ்வாரை Hum பண்ணி ஆரம்பிக்கறாரு!
* அடுத்து, ஒரு டெம்ப்போ உருவாக்க, மெல்லிய பஜனை...மக்களோடு!
* அடுத்து, பாஆஆஆஆஆல் வடியும் முகம்...நினைந்து நினைந்து உள்ளம்.....பரவசம் மிகவாகுதே....கண்ணாஆஆஆஆ!

கேட்டுக்கிட்டே பதிவை வாசிக்க, இதோ சொடுக்குங்கள்: பித்துக்குளியின் மாயக்குரலில், மாயோன் பாட்டு - பால் வடியும் முகம்! Bhajan Version, here

பால் வடியும் முகம்...



பால் வடியும் முகம்
நினைந்து நினைந்தென் உள்ளம்
பரவசம் மிக வாகுதே - கண்ணா!
(பால் வடியும்)

நீலக் கடல் போலும் நிறத்தழகா - எந்தன்
நெஞ்சம் குடி கொண்ட
அன்று முதல் இன்றும்
எந்தப் பொருள் கண்டும்
சிந்தனை செலா தொழிய
(பால் வடியும்)
நீர் வடியும் முகம்...

வான முகட்டில் சற்றே
மனம் வந்து நோக்கினும்
மோன முகம் வந்து தோனுதே!

தெளிவான தண்ணீர் தடத்தில்
சிந்தனை மாறினும்
சிரித்த முகம் வந்து காணுதே!

கானக் குயில் குரலில்
கருத்(து) அமைந்திடினும் - உன்
கானக் குழலோசை மயக்குதே!

கருத்த குழலொடு நிறுத்த மயில் சிறகு - இறுக்கி அமைத்த திறத்திலே
கான மயிலாடும் மோனக்குயில் பாடும் - நீல நதியோடும் வனத்திலே
குழல் முதல் எழிலிசை, குழைய வரும் இசையில் - குழலொடு மிளிர் இளங் கரத்திலே
கதிரும் மதியும் என நயன விழிகள் இரு - நளினமான சலனத்திலே

காளிங்கன் சிரத்திலே
பதித்த பதத்திலே
என் மனத்தை இருத்திக்
கனவு நனவினொடு
பிறவி பிறவி தொறும்
கனிந்துருக வரம்தருக பரங்கருணை....
(பால் வடியும்)

வரிகள்: ஊத்துக்காடு வேங்கட கவி
ராகம்: நாட்டக் குறிஞ்சி
தாளம்: ஆதி
குரல்: பித்துக்குளி முருகதாஸ்

இசைக் கருவிகளில்:
* வீணை

பாடகர் குரலில்:
* மகராஜபுரம் சந்தானம்
* சுதா ரகுநாதன்
* நித்யஸ்ரீ
* செளம்யா



பித்துக்குளியாருக்கு இப்போ வயசு 95 இருக்கும்-ன்னு நினைக்கிறேன்! அன்பர்களால், "முருகா"-ன்னே அழைக்கப்படுகிறார்!
"நான்" என்ற சொல்லே அவர் வாயில் வராது! ஒன்லி "அடியேன்"! இல்லீன்னா தன்னையே கூட "அவன்"-ன்னு தான் சொல்லிப்பாரு! :)
எளியோர்களின் தத்துவத்தால் வைணவம் பிடிச்சிப் போய், அடியேன், அடியேன்-ன்னு சொல்லிக்கிட்டாலும், முருகன் தான் மனத்துக்கு இனியான்! என்னையப் போலவோ? :)

பாடிய கேசட்டுகளில் எக்கச்சக்கமான கண்ணன் பாடல்கள்! அது என்னமோ தெரியலை........பஜனை-ன்னு வந்துட்டாலே, இந்தக் கண்ணன் தான் சரியான பஜனை பார்ட்டி போல! :)

திருப்புகழ் பாடல்கள் பலவும், தன் ஸ்டைலில் பாடி இருக்கார்! ஆழ்வார் பாசுரங்களும் அப்படியே! ரொம்ப அருமையா இருக்கும்! ஆனால் மிகவும் ஹிட்டானது என்னவோ..கார்த்தி கேயா, கலியுக வரதா பாட்டு தான்! முருகனருள் வலைப்பூவில் அப்பறமா இடறேன்!
சினிமாவிலும் பாடி உள்ளார் - நாடறியும் நூறுமலை! குன்னக்குடி இசையில், தெய்வம் படத்துக்காக!

சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடித் துறவறத்தில் திளைத்தவர்........சுமார் அறுபது வயதில், உடன் பாடிடும், தேவி சரோஜா என்ற அம்மையாரை மணந்து கொண்டார்!
முதலில் சாஸ்திரோத்காரமான மடங்களில் எதிர்ப்பு கிளம்பினாலும், கண்ணன் அருளால், எதிர்ப்புகள் அடங்கின! தேவி முருகதாஸ் + பித்துக்குளி முருகதாஸ் இணைந்து, ராதா கல்யாணம் பாடல்களை எல்லாம் பாடிப் பிரபலம் ஆக்கினர்!

எல்லாஞ் சரி! "ஊத்துக்குளி" வெண்ணெய் தெரியும்! அது என்ன "பித்துக்குளி"?
சின்ன வயசில், தெருவில் விளையாடும் போது, ரோட்டுல போற ஒருவர் மேல கல்லெறிஞ்சி இருக்கான் இந்த வாலுப்பையன்!
அடிபட்ட பெரியவரோ பரம பெருமாள் பக்தரும், மகா ஞானியுமான பிரம்மானந்த பரதேசியார்! நெற்றியில் இரத்தம் வடிய...
"அடேய்...நீ என்ன பித்துக்குளியா (பைத்தியமா)? ஒரு நாள் இல்லை ஒரு நாள், என்னையப் போலவே நீயும் ஆகப் போற பாரு!"-ன்னு சொல்ல...

* அப்படியே ஆகி,
* பித்துக்குளியாகி,
* கண்ணன்-முருகனில் நம்மையும் பித்துக்குளியாக்கும்,
பித்துக்குளி முருகதாசர் திருவடிகளே சரணம்!!!

இவர் கச்சேரிக் காசு பலவும் போகுமிடம் = அனாதைச் சிறார் விடுதிக்கு! எங்கூருக்கு அருகில் உள்ள வாலாஜாப்பேட்டை "தீனபந்து அனாதைச் சிறுவர் ஆசிரமம்" தான் அது!
பித்துக்குளி ஐயா-அம்மா! உங்கள் சிறியேனை ஆசீர்வதியுங்கள்! - பெருகாதல் உற்ற தமியேனை, முருகா நீ, பிரியாது பட்சம் மறவாதே! பிரியாது பட்சம் மறவாதே! முருகாஆஆஆ...எந்தப் பொருள் கண்டும் சிந்தனை செலா தொழிய......

18 comments :

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஆயில்யன் said...

பஜனை டைப் பாடல்களை முதன்முதலாக கேட்ட ஞாபகங்கள் தாலாட்டுகின்றது :) அலைபாயுதேவும் கண்ணா கண்ணா என்று உருகும் பாடல்களும் கேட்க கேட்க சுவைக்கிறது ஆன்மீகம் !

நன்றி பாஸ்

இரா. வசந்த குமார். said...

/*கருத்த குழலொடு நிறுத்த மயில் சிறகு - இறுக்கி அமைத்த திறத்திலே
கான மயிலாடும் மோனக்குயில் பாடும் - நீல நதியோடும் வனத்திலே
குழல் முதல் எழிலிசை, குழைய வரும் இசையில் - குழலொடு மிளிர் இளங் கரத்திலே
கதிரும் மதியும் என நயன விழிகள் இரு - நளினமான சலனத்திலே
*/

ஆஹா... ஆஹா...

என்ன ஒரு வார்த்தைப் பொழிவு...! பாடிப் பார்க்கும் போது, தமிழ் மீதேறி அப்படியே ரோலர் கோஸ்டர் போறாப்ல இருக்கு..!! தமிழ் பாடுவதற்கான மொழிங்கறது இன்னும் உறுதியாகின்றது..!!!

Radha said...

அற்புதமான பாடல்.

பிறவி பிறவி தொறும்
கனிந்துருக வரம்தருக

பிறவி பிறவி தொறும்
கனிந்துருக வரம்தருக

பிறவி பிறவி தொறும்
கனிந்துருக வரம்தருக

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இரா. வசந்த குமார். said...
ஆஹா... ஆஹா...
என்ன ஒரு வார்த்தைப் பொழிவு...! பாடிப் பார்க்கும் போது, தமிழ் மீதேறி அப்படியே ரோலர் கோஸ்டர் போறாப்ல இருக்கு..!!//

ஊத்துக்காடு ரோலர் கோஸ்டர்கள் இது போல் நெறைய உண்டு, வசந்த்! மனுசன் சும்மா பொளந்து தாக்குவாரு! அத்தனையும் ஜதி சேரும்! நாட்டியத் தாரகை கவி-க்கா வந்து சொல்லட்டும்! :)

//தமிழ் பாடுவதற்கான மொழிங்கறது இன்னும் உறுதியாகின்றது..!!!//

ஆம்!
பாடுவதற்கான மொழி!
பாட்டும் தமிழே! பாவமும் தமிழே!
பாடும் தமிழ் நான் பாட வைத்-தேனே!
பாட்டும் தமிழே! பாவமும் தமிழே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Radha said...
அற்புதமான பாடல்.
பிறவி பிறவி தொறும்
கனிந்துருக வரம்தருக/

பரங்கருணை = Grace, Radha, Grace! நீ எப்படி அடுத்த லைனைச் சொல்லாமப் போகலாம்? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆயில்யன் said...
பஜனை டைப் பாடல்களை முதன்முதலாக கேட்ட ஞாபகங்கள் தாலாட்டுகின்றது :)//

ஓ...நீங்களும் பஜனைப் பார்ட்டியா, ஆயில்ஸ் அண்ணாச்சி? :)

//அலைபாயுதேவும் கண்ணா கண்ணா என்று உருகும் பாடல்களும் கேட்க கேட்க சுவைக்கிறது ஆன்மீகம் !//

ஆமா! இவர் பாடுற அலைபாயுதே ரொம்ப வித்தியாசமா, நல்லா இருக்கும்! சீர்காழி வெங்கலக் குரல்-ன்னா இவரு வெள்ளி போல் உருகும் குரல்!

//நன்றி பாஸ்//

கண்ணன் தான் பாஸ்! நாங்க தாஸ்! :)
(nandita dass-aa nu kEkkatheenga..naan uNmai cholla maatten :)

தக்குடு said...

பித்துக்குளியாருடைய பாடல்கள் எனக்கும் பிடிக்கும். எங்க ஊர்ல இவருடைய பஜனை நடந்த போது , இவருக்கும்,இவருடைய கோஷ்டிக்கும் உணவு உபசாரம் பண்ணும் பாக்யம் கிடைச்சது...:)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தக்குடுபாண்டி said...
பித்துக்குளியாருடைய பாடல்கள் எனக்கும் பிடிக்கும்//

சூப்பரு!

//எங்க ஊர்ல இவருடைய பஜனை நடந்த போது , இவருக்கும்,இவருடைய கோஷ்டிக்கும் உணவு உபசாரம் பண்ணும் பாக்யம் கிடைச்சது...:)//

அடடா! பித்துக்குளியாருக்கே அன்னமிட்ட கையா உங்க கை? அதால என்னையவும் கொஞ்சம் ஆசீர்வாதம் பண்ணுப்பா கணேசா!

Anonymous said...

Very nice writeup, not only the song but also Pithukuli. He can do wonders with his harmonium. Can you also post his nandalala & alai payuthey?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// Anonymous said...
He can do wonders with his harmonium.//
Exactly! Correct-aa chonneenga! He always prepares the song notes on his harmonium only! The start of any of his song will start with his old-styled harmonium!

//Can you also post his nandalala & alai payuthey?//
அலைபாயுதே முன்பே பதிவிட்டது!
நந்தலாலா தொகுப்பில் நிறைய பாடல்கள் உள்ளன! ஒவ்வொன்றாய்..:)

jeevagv said...

அருமையான பாட்டை அழகாக பதிவிட்டமைக்கு நன்றிகள் கேஆர்.எஸ்!
அன்பர்கள் சொன்னதுபோல, ஊத்துக்காடரின் சொற்சுவை தேன்சுவை!

என்னை மிகவும் கவர்ந்த இடம் :
"காளிங்கன் சிரத்திலே".

சிரத்திலே நர்த்தனம் பதித்த இடத்திலே மனத்தை பதித்திட,
பிடித்தது படர்ந்திட, படர்ந்தது
தொடர்ந்திட, வேணும் பரங்கருணை!

ஊத்துக்காடில் காளிங்க நர்த்தனர், வேங்கடகவி அவர்களின் குலதெய்வம். அவரது "காளிங்க நர்த்தன தில்லானா" மிகவும் அற்புதமான உருவாக்கம்.

குமரன் (Kumaran) said...

எந்த வயசுக்கண்ணனைப் பாடும் பாட்டு இது?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஜீவா (Jeeva Venkataraman) said...
அருமையான பாட்டை அழகாக பதிவிட்டமைக்கு நன்றிகள் கேஆர்.எஸ்!//

எப்படி இருக்கீங்க ஜீவா? ஆளே ரொம்ப காணோம்! ஆன்மீகப் பதிவர்கள் எல்லாருமே லீவு எடுத்துக்கிட்டா எப்படி? :)

//அன்பர்கள் சொன்னதுபோல, ஊத்துக்காடரின் சொற்சுவை தேன்சுவை!//

ஆமாம்! சொற்கள் தானா வந்து விழுகிறது பாட்டுக்கு-ன்னு!

//என்னை மிகவும் கவர்ந்த இடம் :
"காளிங்கன் சிரத்திலே"//

என்னைக் கவர்ந்த இடம்...
அன்று முதல் இன்றும்
எந்தப் பொருள் கண்டும்
சிந்தனை செலா தொழிய :)
பிறவி பிறவி தொறும்
கனிந்துருக வரந்தருக பரங்கருணை

//ஊத்துக்காடில் காளிங்க நர்த்தனர், வேங்கடகவி அவர்களின் குலதெய்வம். அவரது "காளிங்க நர்த்தன தில்லானா" மிகவும் அற்புதமான உருவாக்கம்//

இசை இன்பத்தில் போடலாமே! அப்படியே quiet ஆயிருச்சி இசை இன்பம்! நானும் quiet ஆயிட்டேன்! :)
ஊத்துக்காடு, முத்துசாமி தீட்சிதர் போலவே நவாவர்ணக் கீர்த்தனைகளும் செய்திருக்காராமே! அப்படியா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
எந்த வயசுக்கண்ணனைப் பாடும் பாட்டு இது?//

கேள்வி புரியலையே குமரன் அண்ணா!
கண்ணன் என்னும் தலைவனை நினைத்து, தலைவி பாடுவது போல எனக்குத் தோனுது! அறிந்தவர்கள் சொன்னால் தெரிஞ்சிக்கிடலாம்!

Unknown said...

அன்புடையீர்,
இன்று முருகதாசர் பால் ...... பாட்டு கேட்டு மகிழ்ந்தேன். இந்த வலையில் உள்ள நீங்கள் தொகுத்துள்ள எல்லாப் பாடல்களையும் தொடர்ச்சியாக (ஒவ்வொன்றாக அழுத்தாமல்) கேட்கும் வழி உண்டா.
அன்புடன்
ராதாகிருஷ்ணன்
radhamadal@gmail.com

KABEER ANBAN said...

நாம சங்கீர்த்தனத்தை எளிமைப்படுத்தியதில் முருகதாஸருக்கு பெரும்பங்கு உண்டு. வெகுநாட்களுக்குப் பிறகு அவரது குரலில் பாடலை கேட்க முடிந்ததில் மகிழ்ச்சி.

அழகான கண்ணன் பாட்டை கேட்க செய்தமைக்கு நன்றி

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//R. said...
இந்த வலையில் உள்ள நீங்கள் தொகுத்துள்ள எல்லாப் பாடல்களையும் தொடர்ச்சியாக (ஒவ்வொன்றாக அழுத்தாமல்) கேட்கும் வழி உண்டா//

கீழே "கண்ணன் பாட்டில் தோன்றிய காணொளிகள்"-ன்னு இருக்கு பாருங்க! அதைச் சொடுக்கினால், இங்கு பதிவிட்ட பல வீடியோ பாடல்களை ஒரே மூச்சில் கேட்க/பார்க்க முடியும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// KABEER ANBAN said...
நாம சங்கீர்த்தனத்தை எளிமைப்படுத்தியதில் முருகதாஸருக்கு பெரும்பங்கு உண்டு. வெகுநாட்களுக்குப் பிறகு அவரது குரலில் பாடலை கேட்க முடிந்ததில் மகிழ்ச்சி.//

வாங்க கபீரன்பன் ஐயா!
நாம சங்கீர்த்தனம் என்பதே பொது ஜன மெட்டு தான்!
அதே சமயம் உயர்ந்த கர்நாடகப் பாடல்களையும் நாம சங்கீர்த்தன அளவில் கொடுக்க முடியும் என்பதைக் காட்டியவர்களில் பித்துக்குளியின் பங்கு மிக முக்கியமானது! தாங்கள் ரசித்துக் கேட்டமை கண்டு மகிழ்ச்சி!

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP