Saturday, March 13, 2010

வாராதிருப்பானோ...



அந்தி படர்ந்த வானிடை,
ஆம்பல் மலரிடை, யாழுடைத்
தந்தி அதிரும் ஒலியிடைத்
தங்க மதிய மழையிடை
நந்தன் திருமகன் நாயகன்
நாதப் பெருவொளி காண்கிறேன்.
வந்தெனைச் சேருவ தென்று
வருந்தி யழிதல் வெயில்பூ.

மண்ணில் தவழ்ந்த வயதிலும்
மங்கை மலர்ந்த பொழுதிலும்
வெண்ணெய்க் குழையும் இதழ்களை
வேதம் பொழியும் விழிகளை
எண்ணி யுருகி அழுகிறேன்.
ஏங்கி மருகிக் கரைகிறேன்.
கண்ணன் கரங்கள் தழுவிடும்
காலம் வரைநான் தரைமீன்.

ஆண்டாள். அவளுடை நாளில்
அகிலம் தருமெதும் கைக்கொள
வேண்டாள். அரங்கன் அணிந்திடா
வேற்றுவர்க் கார மெனிலதைத்
தீண்டாள். அவன்கைத் தலம்பிடித்
துத்திருப் பெண்ணுறை மாரினை
யாண்டாள். கனவில் களிமனக்
கண்ணனே, வேண்டும் புரைநீர்.

மீரா, கிரிதரன் பாலொரு
மீளா அன்பினை ஏந்தினாள்.
வேறா ருமிசைத் தாலும்
வெளியிடா சொல்லால், அவனுடன்
சேரா திருக்கும் மனதைச்
சுமந்துத் திரியும் கவலையைத்
தீரா வரியால் எழுதிட,
தீனனே, நானோர் உளிக்கல்.

சூடிக் கொடுத்தக் கொடியுமல்ல
சூழ்ந்த நகரப் பெருமானைப்
பாடித் தொடுத்த மொழியுமல்ல
பாதஞ் சரணஞ் செயுவாரைத்
தேடி நடக்கத், திருக்கோயில்
தூணில் அமர்ந்துத் தரிசனைக்கு
வாடிப் பறக்கும் வெளுத்தபுறா
வடித்த வரிகள் கருப்பிள்ளை.

(தொடரும்...)

***

Pic Courtesy :: http://www.dollsofindia.com/dollsofindiaimages/paintings2/religious_poster_QD16_l.jpg

4 comments :

Raghav said...

அய்யோ!!

வெயில்பூவாக, தரைமீனாக, புரைநீராக, உளிக்கல்லாக உருவகப்படுத்தியதும்..

நந்தன் திருமகன் நாயகனையும்..

வேதம் பொழியும் விழிகளையும்..

என்ன சொல்ல வசந்த்.. கண்ணன் உங்கள் மனக்கண்ணில் நிச்சயம் தோன்றியிருக்க வேண்டும்..

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வெண்ணெய்க் குழையும் இதழ்களை
வேதம் பொழியும் விழிகளை
எண்ணி யுருகி அழுகிறேன்.
ஏங்கி மருகிக் கரைகிறேன்//

அழுகிறேன்!
அழுகிறேன்!

//அவனுடன்
சேரா திருக்கும் மனதைச்
சுமந்துத் திரியும் கவலையைத்
தீரா வரியால் எழுதிட,
தீனனே, நானோர் உளிக்கல்//

நான் வெறுங் கல் அல்ல! உளிக்கல்!
நீ வடிக்கவென்றே நொடித்து நிற்கும் உளிக்கல்!

உயிரோடை said...

அருமை ம‌ன‌முருகி போகிறேன்

Sankar said...

Damn good.. am all in tears.. :)

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP