Monday, December 14, 2009

அப்புறம் என்ன ஆச்சு?

வாங்க வாங்க! மார்கழியைக் கொண்டாட வாங்க!
மாலவனைக் கொண்டாட வாங்க! அவனோட
மங்கை நல்லாளைக் கொண்டாட வாங்க!


மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்!
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.



ந்தக் குட்டிக் கிருஷ்ணனைப் பாருங்க... அவன் தான் எப்பேர்ப்பட்ட அழகு! கொழுக் மொழுக்னு! துறுதுறு கண்ணும், கூரான மூக்கும், பவழச் செவ்வாயும், கொழுகொழு கன்னங்களும்.... அடடா... அவனைப் பார்த்தாலே அவனை இறுகக் கட்டி அணைச்சு முத்து முத்தா கொடுத்துக்கிட்டே இருக்கணும் போல இருக்குல்ல! அந்த கண்ணன் ஏற்கனவே இருக்கற அழகு பத்தாதுன்னு மேற்கொண்டு அழகு படுத்தி விட்டிருக்கா அவன் அம்மா.

சுருள் சுருளா, கருகருன்னு இருக்கிற தலை முடியில மயிலறகு. நெற்றில பொட்டு. கண்ணுல மை. கன்னத்துல திருஷ்டிப் பொட்டு வேற. இடுப்புல மஞ்சள் பட்டாடை. கால்ல கிண்கிணிச் சலங்கை. கைல அவனை விடப் பெரீசா ஒரு புல்லாங்குழல்!

அவன் சுறுசுறுப்பா ஓடிக்கிட்டும், மழலை மொழி பேசிக்கிட்டும், குறும்பு பண்ணிக்கிட்டும் இருக்கற அழகை இன்னைக்கெல்லாம் பார்த்துக்கிட்டே இருக்கலாம். அவன் பக்கத்துல இருக்கும்போது கால் கூட தானா அவனை தொடர்ந்துகிட்டே இருக்கும். கண்ணோ அவனைத் தவிர வேற எதயும் பார்க்க மாட்டேன்னு அடம் பிடிக்கும். வாயும் தன் பங்குக்கு அவன் பேரைத் தவிர எதையும் சொல்லாது. இப்படி எல்லா புலன்களையும் ஒருங்கே கவர்ந்துக்கிற அப்படி ஒரு செல்லம் அவன்!

அவனைப் பெற்ற பேற்றை நினைச்சுக்கிட்டே, அந்த சுகத்தை அனுபவிக்கறதுக்காக, மூச்சை ஆழமா இழுத்து, ஒரு நொடி, ஒரே ஒரு நொடிதான் கண்ண மூடினா, அவன் அம்மா யசோதா. அடுத்த நொடி, அந்தப் பய காணாம போயிட்டான்! உடனே பதறிட்டா. எழுந்து ஓடி ஓடி. 'கண்ணா.... கண்ணா"ன்னு கூப்பிட்டு, தேடித் தேடி சலிச்சுட்டா. எங்கேதான் போனானோ இந்தக் குறும்புக் கண்ணன்?

அவனை நினைச்ச உடனேயே உதடு தானா புன்னகைக்குது! மனசு கோவத்தை நினைவுபடுத்திக்கிட்டு, "ஏய் உதடே, உனக்கென்ன சிரிப்பு வேண்டியிருக்கு?!" அப்படின்னு மெரட்டுது. "வரட்டும் அவன். என்ன செய்யறேன் பாரு இன்னிக்கு?" அப்படின்னு கறுவுது. மறுபடியும் தேடல் தொடருது.

அதோ.... அங்க... அந்த மரத்துக்கு கொஞ்சம் பின்னால மஞ்சள் துணி மாதிரி தெரியுதே... கிட்ட போய் பார்க்கலாம். பூனை மாதிரி சத்தம் செய்யாம போய் பாக்கிறா யசோதா. கண்ணன் இன்னும் ரெண்டு தோழர்களோட சேர்ந்து மண்ணு தின்னுக்கிட்டிருக்கான்!

வந்ததே கோவம் அந்தம்மாவுக்கு! பூனை மாதிரி போனவ புலி மாதிரி உறுமி, "வாடா இங்கே"ன்னு காதப் புடிச்சு திருகி, அழைச்சுக்கிட்டு வந்தா. "இம்புட்டு வெண்ணெயும் தயிரும் மோருமா சாப்பிடறியே. நான் குடுக்கிறது பத்தாதுன்னு, இருக்கிற வீட்ல எல்லாம் திருடி வேற சாப்பிடற. அதுவும் பத்தலையா ஒனக்கு? மண்ணு வேற வேணுமா? துப்பு... துப்பு!"

நீல நிறக் குழந்தையோட காது செக்கெச் செவேல்னு ஆயிருச்சு. "நானா மண்ணு தின்னேன்? மண்ணும் திங்கல, ஒண்ணும் திங்கலயே. மண்ணுன்னா என்னன்னு கூட எனக்குத் தெரியாதே...", அப்படிங்கிற மாதிரி ரொம்....பப் பா....வமா முழிச்சுக்கிட்டு நிக்கறான் குழந்தை.

"என்னடா ஒண்ணும் தெரியாத மாதிரி நிக்கிற? வாயை இப்ப தெறக்க போறியா இல்லையா?"

அவனோட சின்ன வாயை வலுக்கட்டாயமா திறக்கிறா! அப்புறம் என்ன ஆச்சுன்னுதான் உங்களுக்கே தெரியுமே!


--கவிநயா

21 comments :

வல்லிசிம்ஹன் said...

கண்ணன் இன்னிக்கே வந்துட்டானா. அட என் கண்ணா உன்னழகை
என்னவென்று சொல்வேன்.
கவிநயா நீங்கள் கண்ணனை வர்ணித்த அழகுக்காக உங்கள் மனசுக்குப் பாரிஜாதம் தருகிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கவிக்கா மற்றும் அன்பர் அனைவருக்கும்.....
இனிய மார்கழி வாழ்த்துக்கள்!

இந்த முறை மார்கழி, அமெரிக்கா-க்கு முந்தி(Dec-15)! இந்தியாவுக்குப் பிந்தி(Dec-16)! :)
ஸோ, கவிக்கா, கண்ணன் உங்க வீட்டுக்குத் தான் மொதல்ல திருட வாரான்! :)

//கைல அவனை விடப் பெரீசா ஒரு புல்லாங்குழல்!//

ஹிஹி! இதுக்காகவே அவனைக் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா மொத்தி அனுப்புங்க! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அப்புறம் என்ன ஆச்சுன்னுதான் உங்களுக்கே தெரியுமே!//

இல்லையே! தெரியாதே!
அப்பறம் என்ன ஆச்சு-க்கா?

.....ரொம்....பப் பா....வமா முழிச்சுக்கிட்டு நிக்கறேன் நானும்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கதிர் மதியம் போல்முகத்தான்//

கதிரும் மதியும் முகத்தில் இருக்கு-ன்னா,
அப்போ உலகம் வாயில் தான் இருக்கு!

கதிரும் மதியும் ரெண்டு கண்கள்!
அதுக்கு நடுல வாயி-உலகம்! :)

நீங்க வர்ணிச்சது கூட, இந்தப் பாசுரத்துக்கு அழகாப் பொருந்தி விட்டது-க்கா!

இரா. வசந்த குமார். said...

அன்பு கவிநயா அக்கா...

அருமை...அருமை...! எளிமையான வார்த்தைகளில் கண்ணனை அழகாய் எழுதியிருக்கிறீர்கள். ஆமா, அப்புறம் என்ன ஆச்சு..? பார்ட் - 2 அடுத்து வருது பாருங்க..!!! :)

Radha said...

:) Very happy Margazhi to all of us !! :)

Radha said...

"சென்ற நாள்,செல்லாத,செங்கண்மால் எங்கள் மால்
என்ற நாள்; எந்நாளும் நாளாகும் - என்றும்
இறவாத எந்தை இணை அடிக்கே ஆளாய்
மறவாது வாழ்த்துக என் வாய்."

இன்றே தான் மார்கழி. :)

தி. ரா. ச.(T.R.C.) said...

March 16 is markazhi begins.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ராதா கொடுத்த பாசுரத்துக்கு எசப்பாட்டாக....

இந்தநாள் இல்லாது இனியுமால் இனியமால்
எந்தநாள் எந்நாளும் நாளாமால்
- பிந்தியும்
துறவாது கண்ணனின் துவர்இதழ் அமுதினை
மறவாது மாந்தும்என் வாய்!

:)
இது ஆழ்வார் வெண்பா அன்று!
ஆழாதான் வெண்பா!
தளை தட்டிச்சின்னா என்னைய
தட்டிறாதீக-ப்பா! :)

//இன்றே தான் மார்கழி. :)//

நீங்க கணக்கு பண்ணாச் சரியாத் தான் இருக்கும் ராதா! :)

Kavinaya said...

//கவிநயா நீங்கள் கண்ணனை வர்ணித்த அழகுக்காக உங்கள் மனசுக்குப் பாரிஜாதம் தருகிறேன்.///

ஆகா, மனசு குளிர்ந்து போச்சு வல்லிம்மா :) உங்களுக்குப் பிடிக்கும்னு தெரியும் :)

எங்க ஊர்ல இன்னிக்குதான் மார்கழி. காலையில் கோவில்ல போய் திருவெம்பாவை, தீருப்பாவை, எல்லாம் படிச்சுட்டு, சுடச் சுட பொங்கல் சாப்டு வந்தாச்! அதான் எங்க ஊர் நேரத்துக்கு பதிவும் :)

முதல் ஆளாக வந்து ஆசி அளித்தமைக்கு மிக்க நன்றி அம்மா.

Kavinaya said...

//ஸோ, கவிக்கா, கண்ணன் உங்க வீட்டுக்குத் தான் மொதல்ல திருட வாரான்! :)//

ஆகா, கண்ணா! என் அதிர்ஷ்டத்தை என்னன்னு சொல்றது? :)

//ஹிஹி! இதுக்காகவே அவனைக் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா மொத்தி அனுப்புங்க! :)//

அவனையாவது...மொத்தறதாவது... :) அதுவும் நான்? 'முத்தி' (முத்தம் கொடுத்து) ங்கிறதை மாத்திச் சொல்லிட்டீங்க போல :)

Kavinaya said...

//இல்லையே! தெரியாதே!
அப்பறம் என்ன ஆச்சு-க்கா?

.....ரொம்....பப் பா....வமா முழிச்சுக்கிட்டு நிக்கறேன் நானும்! :)//

இத நானு நம்பணுமா? வசந்த் மாதிரி அப்பாவி புள்ளைங்க வேணா நம்புவாங்க :)

Kavinaya said...

//கதிரும் மதியும் ரெண்டு கண்கள்!
அதுக்கு நடுல வாயி-உலகம்! :)

நீங்க வர்ணிச்சது கூட, இந்தப் பாசுரத்துக்கு அழகாப் பொருந்தி விட்டது-க்கா!//

ஆமால்ல? இதுக்குதான் நீங்க வேணுங்கிறது :)

நன்றி கண்ணா.

Kavinaya said...

//அருமை...அருமை...! எளிமையான வார்த்தைகளில் கண்ணனை அழகாய் எழுதியிருக்கிறீர்கள்.//

நன்றி வசந்த்!

//ஆமா, அப்புறம் என்ன ஆச்சு..? பார்ட் - 2 அடுத்து வருது பாருங்க..!!! :)//

பார்த்துட்டேனே. உங்க எழுத்துல பெரிய்ய பிரச்னை - பிடிச்சதுன்னு குறிப்பிட்டு எடுத்துக் காட்டறது ரொம்ப கஷ்டம். ஏன்னா எல்லாமே நல்லாருக்கே!

Kavinaya said...

//:) Very happy Margazhi to all of us !! :)//

இந்தப் புன்னகை என்ன விலை? :)

//"சென்ற நாள்,செல்லாத,செங்கண்மால் எங்கள் மால்
என்ற நாள்; எந்நாளும் நாளாகும் - என்றும்
இறவாத எந்தை இணை அடிக்கே ஆளாய்
மறவாது வாழ்த்துக என் வாய்."

இன்றே தான் மார்கழி. :)//

நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்!

நன்றி ராதா.

Kavinaya said...

//March 16 is markazhi begins.//

வாங்க தி.ரா.ச. ஐயா. மார்கழி, எங்களுக்கு ஆரம்பிச்சிருச்சு. அதான் :) வருகைக்கு நன்றி.

Kavinaya said...

இப்பதான் கவனிச்சேன், டிசம்பர்னு சொல்றதுக்கு பதில் மார்ச்னு போட்டுட்டீங்க போல!

Kavinaya said...

//இது ஆழ்வார் வெண்பா அன்று!
ஆழாதான் வெண்பா!
தளை தட்டிச்சின்னா என்னைய
தட்டிறாதீக-ப்பா! :)//

யாருக்கும் (குறிப்பா எனக்கு) தலை(ளை) எது காலு எதுன்னே தெரியாது :) அதோட ராதா சொன்ன மாதிரி நீங்க 13 ஆச்சே!

//நீங்க கணக்கு பண்ணாச் சரியாத் தான் இருக்கும் ராதா! :)//

யாரை? ஐ மீன்... எதை? :)

குமரன் (Kumaran) said...

மார்கழின்னா மாலவன் மட்டும் இல்லை; மாதொருபாகனும் நினைவுக்கு வரணும்ன்னு யாராவது சண்டைக்கு வரலையா இன்னும்?! பரவாயில்லையே! :-)

கண்ணன் பாட்டுல மாதவன் மட்டும் தான் வரமுடியும்; சிவன் பாட்டுல தான் மானிடன் வரமுடியும்ன்னு நம்ம இரவி சொல்லுவார்! (மானிடன் - மான் + இடன்; மானை இடப்புறம் கொண்டவன்; கலைமானா பெண்மானான்னு கம்பரைத் தான் கேக்கணும்).

எங்க வீட்டுல ஒருத்தன் எப்பப் பாத்தாலும் கோபாலா கோபாலான்னு சொல்லிக்கிட்டு இருக்கான். அவங்க அக்கா கோவில்ல வாங்குன கோலாட்டக் கோலை கையில வச்சிக்கிட்டு கீஷ்ட்டு கோபாலான்னு சொல்லிக்கிட்டு கோணல் மாணலா நிக்குறான். அவன் உயரத்துக்கு அந்த கோல் ரொம்பவே பெரிசா இருக்குது. :-)

கதையை ரொம்ப நல்லா சொல்றீங்க அக்கா!

Radha said...

//எங்க வீட்டுல ஒருத்தன் எப்பப் பாத்தாலும் கோபாலா கோபாலான்னு சொல்லிக்கிட்டு இருக்கான்.//
genes.:-))

Kavinaya said...

//கண்ணன் பாட்டுல மாதவன் மட்டும் தான் வரமுடியும்; சிவன் பாட்டுல தான் மானிடன் வரமுடியும்ன்னு நம்ம இரவி சொல்லுவார்!//

கேள்வியும் குமரனே, பதிலும் குமரனே :)

//அவன் உயரத்துக்கு அந்த கோல் ரொம்பவே பெரிசா இருக்குது. :-)//

ச்சோ ச்வீட் :)

//genes.:-))//

ராதாவுக்கு ஒரு ரிப்பீட்டு :)

//கதையை ரொம்ப நல்லா சொல்றீங்க அக்கா!//

ரொம்ப நன்றி குமரா.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP