Thursday, December 17, 2009

2.கண்ணனைக் குளிப்பாட்டுதல்.



சுமந்து கொணர்ந்த சுகமான சாந்தைக்
கமகமக்கும் வாசப் புகையில் - சமப்படுத்திப்

பச்சைப் பயிற்றுமாவில் பாங்காய்க் கலந்திட்டுக்
கச்சை முடிச்சிட்டுக் கண்ணனின் - உச்சியில்

காய்த்த சுடுஎண்ணெய்ச் சேர்த்துச் சுருள்முடியில்
தேய்த்து நுரைத்திட்டாள் தாயாக - வாய்த்த

யமுனைநதித் தீரத்தின் யாதவ அம்மை
அமுதெனப்பால் தந்த யசோதா. - குமுறும்

முகில்வண்ணன் கொஞ்சும் முகுந்தன் முகத்தில்
அகிற்புகை சாற்றி அளவாய்ச் - சகிக்கும்

கடலைமா வைப்பயத்தம் மாவுடன் கூட்டி
உடலில் தடவிட்டு ஊறிக் - குடத்தில்

நதியெடுத்துக் கோபாலன் மேனியைக் கொஞ்சம்
புதிதாக்க ஊற்றிப் புறத்தை - அதிரூபம்

பண்ணுகையில் ரீங்காரம் போலும் அழுவது
மண்ணுயிர்க்கு ஓங்காரம் போல்!

***

Image Courtesy :: http://images.exoticindiaart.com/hindu/little_krishna_gets_a_bath_ha39.jpg

கே.ஆர்.எஸ். சொன்ன ஐடியாவைக் கொண்டு அந்தாதி முயற்சி. கே.ஆர்.எஸ்ஸுக்கு நன்றிகள். :)

7 comments :

thamizhparavai said...

நல்லாக்கீதுப்பா...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பண்ணுகையில் ரீங்காரம் போலும் அழுவது
மண்ணுயிர்க்கு ஓங்காரம் போல்!//

ஆகா! அழுகையில் ஓங்காராமா?
கண்ணன் "ஓ"-ன்னு அழுதானா?
இல்லை "ஓம்"-ன்னு அழுதானா? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கே.ஆர்.எஸ். சொன்ன ஐடியாவைக் கொண்டு அந்தாதி முயற்சி. கே.ஆர்.எஸ்ஸுக்கு நன்றிகள். :)//

அட. அது ஆழ்வார் ஐடியா-ங்க!
ஆழ்வாருக்கு நன்றிகள்-ன்னு சொல்லுங்க!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மார்கழி-02

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
செய்யுங் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்

பையத் துயின்ற பரமன் அடி பாடி,
நெய் உண்ணோம்; பால் உண்ணோம்; நாட்காலே நீராடி

மை இட்டு எழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்;
செய்யாதன செய்யோம்; தீக்குறளைச் சென்று ஓதோம்;

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யும் ஆறு எண்ணி உகந்து ஏலோர் எம்பாவாய்.

உலகத்தில் வாழ்பவர்களே! நாமும் நம் பாவை நோன்பிற்காகச் செய்ய வேண்டிய முறைகளைக் கேளுங்கள்!

பாற்கடலில் அமைதியாக உறங்குகின்ற பரமனின் திருவடிகளைப் பாடுவோம். நெய் உண்ண மாட்டோம். பால் உண்ண மாட்டொம். அதிகாலையில் நீராடுவோம்.

கண்களில் மையிட மாட்டோம். கூந்தலில் மலர்களைச் சூடமாட்டோம். செய்யக் கூடாதவற்றைச் செய்ய மாட்டொம். தீமையான கோள் சொல்வதை செய்யமாட்டோம்.

மாணவர்களுக்கும் துறவிகளுக்கும் முடிந்த அளவிற்கு பொருள் உதவி செய்வோம். உய்யும் வழியினை எண்ணி மகிழ்ந்திருப்போம்.

பிரிச்சி மேய்ஞ்ச விளக்கப் பதிவு இங்கே!

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

நன்றிகள். :)

***

அன்பு கே.ஆர்.எஸ்...

/*ஆகா! அழுகையில் ஓங்காராமா?
கண்ணன் "ஓ"-ன்னு அழுதானா?
இல்லை "ஓம்"-ன்னு அழுதானா? :)*/

கண்ணன் இனிப்பாய் அழுவது நமக்கெல்லாம் ஓம்காரம் தானே..! :)

/*அட. அது ஆழ்வார் ஐடியா-ங்க!
ஆழ்வாருக்கு நன்றிகள்-ன்னு சொல்லுங்க!*/

அத்தனை ஆழ்வார்களுக்கும் ஆழ்ந்த நன்றிகள்...!

Kavinaya said...

//புறத்தை அதிரூபம் பண்ணுகையில்//

இந்த வார்த்தைப் பிரயோகத்தை ரசித்தேன் வசந்த்.

//பண்ணுகையில் ரீங்காரம் போலும் அழுவது
மண்ணுயிர்க்கு ஓங்காரம் போல்!//

இதையும்.

இரா. வசந்த குமார். said...

அன்பு கவிநயா அக்கா...

மிக்க நன்றிகள்.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP