Monday, August 25, 2008

கண்ணன் பிறந்த இரவு-3: சொக்க வைக்கும் தாலாட்டு-மணி நூபுர தாரி!

மூன்றாம் இரவில், முத்தாய்ப்பான இரவில், குழந்தையை மட்டுமல்லாது, நம்மையே சொக்க வைக்கும் ஒரு அருமையான தாலாட்டைக் கேட்கலாம்! இது தமிழில் இல்லை! அதனால் என்ன? நேற்று இரண்டு இரவுகளும் தமிழ்த் தாலாட்டைக் கேட்டோம் அல்லவா? இன்று சற்று வித்தியாசமாக! நாட்டியத் தாலாட்டு! நடனம் ஆடிக் கொண்டே தாலாட்டு!

இந்தப் பாடலை எழுதியது "அலை பாயுதே" புகழ் - ஊத்துக்காடு வேங்கடகவி! பல அருமையான தமிழிசைப் பாடல்களைத் தந்துள்ளார்! கொஞ்சம் போல வடமொழிப் பாடல்களும் எழுதி உள்ளார்!

இந்தப் பாட்டுக்கு மெளலி அண்ணா/குமரன்/கவி அக்கா யாராச்சும் பொருள் சொன்னாங்கனா, மிகவும் மகிழ்வேன்!



மன்னார்குடி இராஜகோபால ஸ்வாமி (மன்னார்சாமி) மேல் பாடிய பாட்டு இது!
மன்னார்குடி 108 திவ்ய தேசங்களுள் ஒன்றல்ல எனினும் இது ஒரு அபிமான ஸ்தலம்!


மன்னார்குடி இராஜகோபாலனை இன்னிக்கி எல்லாம் வைச்ச கண்ணு வாங்காம பார்த்துக்கிட்டு இருக்கலாம்! அம்புட்டு அழகு! சொக்கத் தங்கம்! அவன் கையில் குழலும், காலடியில் பசுவும், தங்க விக்ரகமாய் மின்னும்!
நீங்களே பாருங்க! படங்களைக் கிளிக்கிப் பெரிதாக்கிப் பாருங்க!

குழந்தை இல்லாதவர்கள், எம்பெருமான் கண்ணனை, இராஜகோபாலனை, இங்கு மடியேந்தப் பண்ணுவார்கள்!
தட்சிணத் துவாரகை என்று பெயர் பெற்ற தலம்! மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் செய்துள்ளார்!

ஊத்துக்காடு கவியின் பல பாடல்கள், மன்னார்குடி இராஜகோபாலனைச் சுற்றியே இருக்கும்!
* பாடலை நாட்டியப் பாணியில் இங்கே கேட்கலாம்!
* பம்பாய் சகோதரிகள் பாட, இங்கே கேட்கலாம்!

அருணா சாய்ராம்:



மணி நூபுர தாரி ராஜ கோபால
மணி நூபுர தாரி
கங்கண கிங்கிணி கண
(மணி நூபுர தாரி)

(மணி=மாணிக்கம்; நூபுரம்=சிலம்பு, கொலுசு; மணி நூபுர தாரி = மாணிக்க மணிச் சதங்கைகள், கங்கண-கிங்கிணி-கண என்று ஒலிக்க, இராஜ கோபாலக் குழந்தை ஓடி வருகிறான்!)

மணி கோமேதக லோகிதக நீல
மரகத வால வாயுஜ ஜால
மகுட விராஜித சிகுர மனோகர
முடிர சமகர களேபர கிங்கிணி கண

(மணி நூபுர தாரி)

மாணிக்கம், கோமேதகம், செம்பவழம், நீலம், பச்சை மரகதம் என்று பல அணிமணிகள் குழந்தைக்கு! தலையில் மகுடம் அலங்கரிக்க, அழகான கூந்தல் மேகம் போல் பரவ, குழந்தை ஓடி வரும் களேபரத்தில், கங்கண-கிங்கிணி-கண என்று ஒலிக்கிறதே!

மலயஜ ரஞ்சன யக்ஷ கர்த்தம
வர்ணக மிஷ்ரத அனுபோத
திலக மகைக சுகந்த விலேபன
திரிபுவன ப்ரகடித ப்ரதாப

ஜலதர நீல சமத்யுதி பால
ஸ்வாமி ஸ்ரீ ராஜ கோபால


லலாம கலோல லலித லலாட
மாலாத மால சுவர்ண கபோல
லாலித கோப கோபீ ஜன லோல
காளிங்க லீல கருணா லவால! - லல!
(மணி நூபுர தாரி)

ராகம்: நீலாம்பரி
தாளம்: ஆதி
வரிகள்: ஊத்துக்காடு வேங்கடகவி

செட்டியார் திருக்கோலத்தில், கையில் தராசுடன், இராஜகோபாலன்

Sunday, August 24, 2008

கண்ணன் பிறந்த இரவு-2: தமிழ்த் தியாகராஜர் தாலாட்டு!

இன்னிக்கு கண்ணன் பிறந்த இரண்டாம் இரவு! வாங்க ஒரு அருமையான தாலாட்டை, தமிழில் தாலாட்டை, இன்னிக்கி இரவு கேட்டுக் கொண்டே தூங்குவோம்!
* நேற்று சிறையில்! இன்று ஆயர் துறையில்!
* நேற்று தேவகி! இன்று யசோதை!
* நேற்று தனிமை! இன்று கோகுலக் கூட்டம்!
* நேற்று புயல் வெள்ளம்! இன்று இன்ப வெள்ளம்!
இப்படி ஒரே நாளில், ஒரே இரவில், எப்படி எப்படியெல்லாம் மாற்றம்!

பொதுவாக பெரிய இசைக் கலைஞர்களிடம் ஒன்றைக் கவனித்திருக்கலாம்! விருத்தம் என்ற இயற்பாவைப் பாடி விட்டு, அப்புறம் இசைப்பாவை பாடுவாங்க!
இங்கும் அதே போல் திருப்பாணாழ்வார் விருத்தத்தை முதலில் பாடி விட்டு, அப்புறம் கிருதியைப் பாடுறாங்க நித்யஸ்ரீ!

திருப்பாணாழ்வாரைப் பற்றிப் பலரும் அறிந்திருக்கலாம்! தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்து, அரங்கன் மேல் கொண்ட காதலால், அர்ச்சகரிடம் கல்லடி வாங்கியவர்! பாணர் மேல் பட்ட கல்லால், அரங்கன் நெற்றியில் இரத்தம்!
பிழையுணர்ந்த அர்ச்சகர், பாணரைத் தோள் மேல் தூக்கி வைத்து, சன்னிதிக்குள் அழைத்து வருகிறார்! பாணரும் அமலன் ஆதிப் பிரான் என்னும் பாசுரம் பாடி, பெருமாளின் அடி முடி சேவையைச் சேவிக்கிறார்!

அதில் இருந்து ஒரு விருத்தம் + பின்னால் ஒரு கிருதி!
கிருதி என்னும் கீர்த்தனையைப் பாடியது தமிழ்த் தியாகராஜர்!
தமிழ்த் தியாகராஜரா? யாருங்க அவரு?

பாபநாசம் சிவன் என்னும் பெரும் இசைக்கலைஞர்! இசைப்பாடல்கள் புனைந்தவர்! நம் அண்மைக் காலத்தில் வாழ்ந்தவர்! தமிழிசைக்குப் பெரும் தூண்!
பல தமிழிசைப் பாடல்களை ராகங்களோடு எழுதிக் குவித்தவர்! அவர் தரும் அருமையான தமிழ்த் தாலாட்டு! அதுவும் தமிழ் இராகமான குறிஞ்சியில்!

குறிஞ்சிப் பாட்டைக் கேட்டுக்கிட்டே தூங்கலாமா?
அப்படியே கண்ணனின் தொட்டிலை ஆட்டி விட்டுக் கொண்டே நீங்களும் தூங்குங்க!
இன்னிக்கி காலை முழுதும் கோகுலத்தில் கண்ணன் பிறந்த நாள் கொண்டாட்டங்கள்! ஓய்வு ஒழிச்சலே இருந்திருக்காது உங்களுக்கு!
இதோ பாட்டு, நித்யஸ்ரீ அவர்களின் ஏகாந்தமான குரலில்!

ஆலமா மரத்தின் இலைமேல், ஒரு பாலகனாய்,
ஞாலம் ஏழும் உண்டான், அரங்கத்து அரவின் அணையான்,
கோல மாமணி ஆரமும், முத்துத் தாமமும் முடிவில்லதோர் எழில்,
நீல மேனி ஐயோ! நிறை கொண்டது என் நெஞ்சினையே!


இங்கே ஐயோ என்பது ஆனந்த ஐயோ! நீல மேனி ஐயோ!
ஆலமர இலை! பாலகன்! உலகமேழும் உண்டான்! உண்டு விட்டு அரங்கத்துப் பாம்பில் தூங்குகின்றான்! அவன் மணியாரம்! முத்துமாலை! முடிவில்லாத அழகு!
நீல மேனி ஐயோ! என் நெஞ்சினையே எடைக்கு எடை நிறை கொண்டு, நிறைத்து விட்டதே!

கண்ணே என் கண்மணியே! கண்ணனே கண் வளராய்!
மண்ணுலகில் என் வாழ்வு, வளம் பெற வந்துதித்த

(கண்ணே)

குயிலிசை குழலோசை உன் கொஞ்சு மொழிக்கு இணையாமோ?
கொண்ட மனச் சஞ்சலங்கள் பஞ்சாய்ப் பறந்திடுமே!

(தாலோ தாலேலோ)

தேடாத என் நிதியே! திகட்டாத தெள்ளமுதே!
வாடாத மென் மலரே! மனத்துள் இனிக்கும் தனித்தேனே!

(தாலோ தாலேலோ)

ராகம்: குறிஞ்சி
தாளம்: திஸ்ர ஆதி
வரிகள்: பாபநாசம் சிவன்

Saturday, August 23, 2008

கண்ணன் பிறந்த இரவு-1: நாத்திக ஆரரிரோ!

கண்ணன் பிறந்தநாள் இன்று இரவு! எத்தனையோ தாலாட்டுகள் பின்னாளில் பாடினாலும், குழந்தையின் முதல் தாலாட்டு, மோகனத் தாலாட்டு அல்லவா? அதுவும் அதை நாத்திகக் கருத்து கொண்டவர் எழுதிப் பாடினால்?
அனைவரையும் வம்பிழுக்க வந்த குழந்தைக்கு ஆத்திகமாவது? நாத்திகமாவது? எல்லாருமே அதற்கு வெண்ணெய் தான்! :)

இந்த இரவு மிகவும் கடினமான இரவு, குழந்தைக்கு!
சிறை விட்டு, ஆற்றைக் கடந்து, ஆழி போல் மின்னி, வலம்புரி போல் நின்றதிர்ந்து, இடி மின்னல், புயல் மழையில்...
பிறந்ததுமே அதற்குப் பயணம் தொடங்கி விட்டது!
உலகத்தையே பயணிக்க வைக்கும் குழந்தை, இன்று, தானே பயணிக்கிறது!
ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஒர் இரவில், ஒருத்தி மகனாய் வளர, விதிப்பவன் தனக்கே விதித்துக் கொண்டான்!!

கண்ணனை, நாஸ்தி நாஸ்தி - இல்லை இல்லை! என்று சொன்ன ஒருவன், தூண் முழுதும் தேடினான்! இன்னொருவன் ஊர் முழுதும் தேடினான்!
நாஸ்தி நாஸ்தி என்பவர்களும் அண்ணலிடம் காட்டும் ஆஸ்தி அலாதியானது! :)
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதியே! எல்லார்க்கும் பொதுவில் நடம் இடுகின்ற சிவமே!(மங்களமே)!!

இன்று கண்ணக் குழந்தைக்குத் தாலாட்டு பாடுபவர் யார்?
கவிஞர் வைர-முத்து! படம் சிப்பிக்குள்-முத்து! :)
கவிஞர் பகுத்தறிவுக் கவிஞர் தான்! ஆனால் பாசத்தில் குறை வைத்தாரில்லை!

தேர்ந்த சொற்களை எளிமையாகப் போட்டு, தன்னையே தாயாக்கிக் கொள்கிறார், பெரியாழ்வார் வழியில்!
கெளசல்யை நானே! யசோதை நானே! மலையன்னை நானே! பார்வதியும் நானே!
அன்பான சொற்களைப் போட்டு, தன்னையே அடியார் ஆக்கிக் கொள்கிறார்!
ஆழ்வாரும் நானே! கம்பநாடன் நானே! வால்மீகி நானே! தியாகய்யர் நானே!
கவிஞர் வைரமுத்து அவர்களே! - இன்னுமொரு நூற்றாண்டு இரும்!

இதே பாடல், ஸ்வாதி முத்யம் என்ற தெலுங்கு படத்திலும் சிறப்பாக இருக்கும்! சுசீலாம்மாவின் தேன் குரலில், இன்று கண்ணக் குழந்தை பயணக் களைப்பு தீரத் தூங்கட்டும்!
இன்று இரவு இந்தத் தாலாட்டு! தொடர்ந்து மூன்று இரவுகள், மூன்று தாலாட்டுகளைத் தர முயல்கிறேன்!



அது சரி, லாலி என்றால் என்ன? ஆரிராரோ என்றால் என்ன?
தமிழகத் தாய்மார்கள் பெரும்பாலும் பாடுவது ஆரிராரோ! ஆனால் இந்தப் பாட்டில் வைரமுத்து இரண்டையுமே பாடித் தூங்க வைக்கிறார்!
லாலி, லாலி - கேட்க இங்கே சொடுக்கவும்.

kris2

லாலி லாலி லாலி லாலி!
லாலி லாலி லாலி லாலி!

வரம் தந்த சாமிக்குப் பதமான லாலி!
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி!
குறும்பான கண்ணனுக்குச் சுகமான லாலி!
ஜெகம் போற்றும் தேவனுக்கு வகையான லாலி!

(வரம் தந்த சாமிக்கு)
ஆரிராரி ஆரிராரோ
ஆரிராரி ஆரிராரோ

கல்யாண ராமனுக்கு கௌசல்யை நானே!
யது வம்ச வீரனுக்கு யசோதை நானே!
கரு யானை முகனுக்கு மலையன்னை நானே!
பார் போற்றும் முருகனுக்குப் பார்வதியும் நானே!

(வரம் தந்த சாமிக்கு)
ஆரிராரி ஆரிராரோ
ஆரிராரி ஆரிராரோ

ஆனந்தக் கண்ணனுக்கு ஆழ்வாரும் நானே!
ஸ்ரீராமன் பாட வந்த கம்ப நாடன் நானே!
ராம ராஜனுக்கு வால்மீகி நானே!
ஆகாய வண்னனுக்குத் தியாகைய்யர் நானே!

(வரம் தந்த சாமிக்கு)

115858699_771cce968c


ஆரி-ராரி ஆரி-ராரோ
ஆரி-ராரி ஆரி-ராரோ

யார் தவம் ஈந்து வந்துதித்தாய் இருநிலத்தில்?
யார் ஈந்தவன் நீ?

யார் ஈ? யார் ஈ? யார்-ஹரி-ரோ?
உன்னை
யார் ஈ? யார் ஈ? யார்-அறி-ரோ?
கண்ணா, யார்-அறி-வாரோ?
(இந்தப் பாடல் என்னைப் பல நினைவுகளுக்கு இட்டுச் செல்லும்! எத்தனை முறை பாடியிருப்பேன் என்று எனக்கே தெரியாது! இரவில் துவங்கிடும் இந்தப் பாடல், விடிய விடிய, விடிந்து, அலுவலகம் செல்லும் வரை ஒலித்த பாடல்! கண்ணைப் பார்த்து, ஆரி-ராரோ என்ற வாயசைப்புக்கே அமைதி வந்து விடும்!)


பாடல்: வரம் தந்த சாமிக்கு
படம்: சிப்பிக்குள் முத்து
வரிகள்: வைரமுத்து
இசை: இளையராஜா
குரல்: பி.சுசீலா

இது, இவர்கள் வீட்டுக் கண்ணன்! தொங்கக் கிருஷ்ணுடா நூவு? :)


ஸ்வாதி முத்யம் படத்தில்! (தமிழ் வீடியோ இருந்தா, யாராச்சும் கொடுங்கப்பா!)

Friday, August 22, 2008

கண்ணன் பிறந்தான்… எங்கள் மன்னன் பிறந்தான்..!!


குட்டிக் கண்ணனை பார்த்ததுமே கட்டிக் கொள்ள ஆவல் பிறக்கிறதல்லவா!
நீல வண்ணக் கண்ணனுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!!

பூம்பிஞ்சுப் பாதம் எடுத்து
பூப்போல அடிகள் பதித்து
பூவைப்பூ வண்ணக் கண்ணன்
புவிமகிழ பிறந்து வந்தான்!!


ஏற்கனவே எழுதின ஒரு பாடலை இடலாம்னுதான் வந்திருக்கேன். ஆனாலும் கண்ணனை நினைச்சோன்ன பிறக்கிற கவிதையை தடுக்க முடியல :) பரவாயில்ல, இதை இப்ப முடிக்காம இன்னொரு மழைக்காலத்துக்கு சேமிச்சு வச்சுக்கறேன்!

கண்ணன்னாலே ஒரு தனி சிறப்பு இருக்கு. செல்லக் குழந்தையாகவும், விளையாட்டுப் பிள்ளையாகவும், தோள் கொடுக்கும் தோழனாகவும், உள்ளங்கவர் கள்வனாகவும், கீதாசிரியனாகவும், பரம்பொருளாகவும், இப்படி பல பரிமாணங்கள்ல அவனை சுலபமாக பாவித்துக் கொள்ளலாம்! ஆனா இன்னைக்குதானே அவனுடைய பிறந்த நாள்… அதனால அவனை இன்னைக்கு சின்னக் குழந்தையா மட்டும் பார்த்து கொஞ்சிக்கலாம் :) என்ன சொல்றீங்க?


நம்ம கண்ணன் (கேஆரெஸ்) முருகனருள் 100-வது பதிவுக்காக முருகன் மேல ஒரு காவடிச் சிந்து எழுதியிருந்தார். அதை பார்த்து எனக்கும் ஒரு காவடிச் சிந்து எழுதணும்னு ஆசை வந்தது, அப்போதான், “ஏங்க்கா, கண்ணன் காவடி சிந்து ஒண்ணு எழுதுங்களேன்; கண்ணன் பாட்டுல போடலாமே”ன்னு சொன்னார். அதன்படி எழுதின பாடல்தான் இங்கே.

இந்த பாடலை உற்றுக் கவனிச்சீங்கன்னா ஒரு ரெண்டு அல்லது மூணு இடத்துல கேஆரெஸ் உடைய முத்திரை (சுத்தத் தமிழ்ல சொன்னா அவருடைய ‘டச்’!) தெரியும் – அவர் இந்த பாடல்ல சில சொற்களை மாற்றியிருக்கார், அதைத்தான் சொல்றேன். எல்லாம் கண்டு பிடிக்க முடியலைன்னாலும், அவருடைய வாசகரா இருக்கவங்க, ஒரு இடம் கண்டிப்பா கண்டுபிடிச்சிரலாம்! எங்கே, சொல்லுங்க பார்ப்போம்!


இந்த பாடலை மாதவிப் பந்தலாரும், இந்த வார தமிழ்மண நட்சத்திரமும், மனமுவந்து பாடியும் தந்திருக்காங்க. அவங்க ரெண்டு பேருக்கும் மனமார்ந்த நன்றிகள்!

குமரன் குரலில்:




கேஆரெஸ் குரலில்:



பாடல் வரிகள்:

கண்ணன் என் னும்மன்னன் பிறந்தான் நெஞ்சம் தவழ்ந்தான் - நந்த
கோபனின் செல்வனாய் வளர்ந்தான் - அந்த
ஆயர் குடி ஆயர் இடை மாயன் அவன் ஆயன் என
நடந்தான் வையம் அளந்தான் - அவன்
திரிந்தான் லீலை புரிந்தான்


ஆவின் இனங்களை மேய்த்தான் வீடு சேர்த்தான் - கண்ணன்
பூவின மாதரை ஈர்த்தான் - வண்ண
மலர் கொய்துச் சூடி, அவள் ஆடை கள வாடி
சிரிப்பான் பின்னல் பிரிப்பான் - அதை
மறைப்பான் மனம் கரைப்பான்


கிண்கிணிச் சலங்கை ஒலிக்க சிந்து படிக்க - கண்கள்
குறும்பில் மின்னியே ஜொலிக்க - சின்னக்
கண்ணன் அவன் வெண்ணை இதழ் கன்னம் இட்டு மின்னல் எனக்
கவர்வான் தின்று மகிழ்வான் - பின்னர்
ஒளிவான் பிடி படுவான்


புல்லாங் குழலினை எடுப்பான் கானம் படிப்பான் - புவி
எல்லாம் மயங்கிட இசைப்பான் - கன்னல்
மொழி பேசும் கண்ணன் அவன் மயிற்பீலி அசைய
வருவான் உள்ளம் நுழைவான் - இன்பம்
தருவான் தமிழ்ப் பெருமான்!

***
முதல் பதிவே கண்ணன் பிறந்த நாளுக்கு எழுத முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி. வாய்ப்பளித்த கேஆரெஸ்ஸுக்கும், கண்ணன் பாட்டு குழுவிற்கும், முக்கியமாய் கார்மேக வண்ணனுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

படங்களுக்கு நன்றி: குமரன்,மற்றும், http://flickr.com/photos/swarupdas/2186797767/,


***

அன்புடன்
கவிநயா

Saturday, August 09, 2008

102. ஸ்ரீனிவாசன் பூமிதேவி கல்யாணம் இந்த நானிலமே கொண்டாடும் வைபோகம்

"வரது, தாயாருக்கு ஏகாந்தம் சாத்தியாச்சா, மாலைகள் இன்னும் வரல, போய் என்னன்னு பாத்துட்டு வரச் சொல்லு. நான் ஒரு நிமிஷத்துல் வந்துர்றேன்.. நம்ம ரவிசங்கருக்கு இன்னைக்கு பிறந்தநாள், அர்ச்சனை பண்ண கண்ணன் அன்பர்கள் வந்துருக்கா, நான் பேசிட்டு வந்துர்றேன்.."

"வாங்கோ கண்ணன் அன்பர்களே.. அடியேன் ஒப்பில்லா அப்பன் சன்னதி அர்ச்சகர். என்னப்பனுக்கும், பூமிதேவிக்கும் நடக்கப்போற திருக்கல்யாணத்தை தரிசிக்க வந்துருக்கேள், ரொம்ப சந்தோஷம். "

திருமகள் நாயகனாம் திருமால் அர்ச்சாவதாரம் கொண்டு விளங்கும் 108 திவ்யதேசங்களில், இந்த நெஞ்சை அள்ளும் தஞ்சை மாவட்டத்தில் திருவிண்ணகர் என்று போற்றப்படும் துளஸீ வன ஷேத்ரத்தில் எம்பெருமான் தன் ஒப்பார் இல் அப்பனாக எழுந்தருளியுள்ளார். அவரோட திருக்கல்யாண வைபவம் எவ்வளவு சிறப்பா நடக்குதுன்னு உங்களோட இருந்து நானும் ஸேவிக்கிறேன்.


"மார்க்கண்டேய மகரிஷி பூமிதேவித் தாயாரை மகளாக அடையும் பாக்கியம் பெற்றவர். தேவியின் ஐந்து வயது இருக்கும் போது, பங்குனி மாசம், சிராவணத்தின் போது, எம்பெருமான் வயோதிகர் வேடத்தில் பெண் கேட்டு வந்து நின்றார். மார்க்கண்டேயருக்கு முதல்ல வந்துருக்கிறது யாருன்னு தெரியல, அதனால போயும் போயும் ஒரு கிழவருக்கா நம்ம சின்னப்பொண்ணக் கொடுக்குறது, அதுதான் தகுமோ என்று முடியாதுங்குறார். பெருமாள் விடுறதா இல்லை, பிடிவாதமா நிக்குறார். பெரியவாள் பிடிவாதம் பிடிப்பா தெரியும், இங்க பெருமாளே பிடிவாதமா இருக்கார். என்ன பண்ணலாம்னு மகரிஷி யோசிச்சார். அய்யா, எம் பொண்ணுக்கு அஞ்சு வயசு தான் ஆகுறது, சமைக்கக் கூட தெரியாது, உப்பு கூடப் போடத் தெரியாது, அதனால நீவீர் நல்லா சமைக்கத் தெரிஞ்ச பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கங்கோ அப்படின்னார். "

"வயசானாலே கண்டிப்பா நல்ல சாப்பாடு வேணும்னு நினைப்பு வரும், உப்பு கூட சரியாப் போடத் தெரியாதுங்கிற உண்மைய சொன்னா வந்தவர் போயிருவார்னு நினைததார். "

"எங்க போரது.. விடாப்பிடியா நின்னுட்டார்.. உம்ம பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக நான் உப்பை தியாகம் பண்றேன் ஓய்.. இப்போ என்ன சொல்றேள்னார், மகரிஷி ஆடிப்போயிட்டார். அப்புறம் புறக்கண்ணை மூடி அகக்கண்ணை திறந்து பாததா, நிக்கிறவர் ஓங்கி உலகளந்த உத்தமன், பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பன் தன் ஒப்பார் இல் அப்பன் அல்லவா இவன் என்று மனமகிழ்ந்து தன் பெண்ணை பூமிதேவிப்பிராட்டியை கன்னிகாதானம் பண்ணிக் கொடுக்குறார். அந்த வைபவத்தை தான் சேவிக்கப் போறோம். அப்படியே உக்காந்து ஸேவிங்கோ. "
"என்னடா வரது, எல்லாம் தயாரா. சரி ஆத்துல போய் மாமியை ஆரத்தி கரைச்சுண்டு சீக்கிரம் வரச் சொல்லு, டீ.வி பாத்துண்டே உக்காந்துரப்போறா. டிரஷ்டி வந்துட்டார் போலிருக்கே நான் ஆரம்பிக்கிறேன். "

"சீர்பாதம் தாங்கி ... எல்லாரும் இருக்கேள் தானே, சரி வாத்யம் , பந்தம் எல்லாம் ரெடியா.. மாலை மாற்றுக்கு பெருமாளை ஏளப்பண்ணுங்கோ.. "
மீனாய் ஆமையாய் பன்றியாய் அரி உருவாய்
வானாய் உயர்ந்த வாமன்னாய் கோவ ராமனாய்
ரகு ராமனாய் அண்ணனாய் கள்ள கண்ணனாய்
வெண்பரி மன்னனாய் காண்பது வண்புகழ் நாரணனே.
பெருமாளும், தாயாரும் திருமஞ்சனம் கண்டருளி தயாராக இருக்கிறார்கள். பெருமாள் ஒரு புறம், தாயார் மறுபுறம் இருக்க, ஒரு அர்ச்சகர் பெருமாள் அணிந்திருந்த மாலை ஒன்றை எடுத்துக் கொண்டு கையிலே உயர்த்திப் பிடித்துக் கொண்டு அபினயத்துடன் தாயாரை நோக்கி செல்கிறார், அதே போன்று தாயாரிடம் இருந்து ஒரு அர்ச்சகர், கையில் தாயார் மாலையுடன், அபினயத்துடன் பெருமாளை நோக்கி வருகிறார். இப்படி பெருமாளும், தாயாரும் மூன்று முறை மாலை மாற்றிக் கொள்கின்றனர்.
"சரி ஊஞ்சலுக்கு ஏழப் பண்ணுங்கோ.. வழி வழி.. சீர்பாதம்... புறப்படலாம்..
முதல்ல பெருமாளை ஏழப்பண்ணு, தாயாரை கொஞ்சம் பெருமாளை பாத்த மாதிரி ஏழப்பண்ணு."

"எல்லாரும் உக்காரலாமே.. பின்னால உள்ளவங்களும் பாக்கனும்ல.".
தீபாராதனை .. மங்கள வாத்யம் முழங்குகிறது ...
வேதம், பிரபந்தத்தின் வாயிலாக அடியேன் செய்யும் விண்ணப்பம்,


ஒப்பில்லா அப்பன், பிராட்டியின் கழுத்தில் அணியப்போகும் மாங்கல்யம்..


"எல்லோரும் திருமாங்கல்யத்தை ஸேவிங்கோ.. மாங்கல்ய தாரணம் ஆகப்போறது.. வாத்யம் வாத்யம் ..."

Get this widget Track details eSnips Social DNA


"ஆரத்தி எடுக்க வாங்கோ, கோதை கண்ணூஞ்சல் பாட்டு பாடு.. "
கண்ணூஞ்சல் ஆடிருந்தாள்
கண்ணூஞ்சல் ஆடிருந்தாள்
ஸ்ரீபூமிதேவி கண்ணூஞ்சல் ஆடிருந்தாள்
பொன்னூஞ்சலில் பூரித்து மன்னன் விண்ணகரனுடன்
பொன்னூஞ்சலில் பூரித்து மன்னன் விண்ணகரனுடன்
மார்க்கண்டர் மனம் மகிழ
கல்யாண.. திருக்கல்யாண.. திருக்கல்யாண உத்ஸவத்தில்
கண்ணூஞ்சல் ஆடிருந்தாள்
ஸ்ரீபூமிதேவி கண்ணூஞ்சல் ஆடிருந்தாள்.

"ஆரத்தி தட்டுல ரெண்டு அஞ்சு ரூபா காசு போட்டாச்சா.., சரி"

"இப்போ பொறியிடுதல், பெருமாளோட சடாரியையும், தாயாரோட சடாரியையும் கையில ஏழப்பண்ணின்டு, ஹோமகுண்டத்தில பொறி இடுவா..
அப்புறம், அம்மிக்கல்ல சுத்தி சடாரிய வைச்சு வைச்சு அம்மி மிதிப்பா"

"வாரணமாயிரம் சாற்றுமறை தொடங்கட்டும்"
"என் தோழி சொல்லாய் நீ கண்ட கனவெல்லாம்.. "


பெருமாள் திருக்கல்யாணத்தை ஸேவிக்க வந்த அனைவருக்கும் எம்பெருமான் கிருபை உண்டாக பிரார்த்திக்கிறேன். நீங்காத செல்வம் நிறைந்து வாழ அடியேன் பெருமாளிடம் விண்ணப்பிக்கிறேன். பெருமாளை அடிக்கடி ஸேவிக்க வங்கோ. நான் உத்தரவு வாங்கிக்கிறேன்.



இராகவன்: ஒப்பிலா அப்பன் திருக்கல்யாணத்தை நல்லபடியா சொல்லனும்கிற ஒருவித பயத்தோடே எழுதியிருக்கேன். நல்லா இருந்தா ஒருமுறை ஒப்பிலாஅப்பனை வணங்கவும். தவறுகள் இருப்பின் உங்களால முடிஞ்ச அளவு என்னை கோவிச்சுக்கலாம்.

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP