Sunday, August 24, 2008

கண்ணன் பிறந்த இரவு-2: தமிழ்த் தியாகராஜர் தாலாட்டு!

இன்னிக்கு கண்ணன் பிறந்த இரண்டாம் இரவு! வாங்க ஒரு அருமையான தாலாட்டை, தமிழில் தாலாட்டை, இன்னிக்கி இரவு கேட்டுக் கொண்டே தூங்குவோம்!
* நேற்று சிறையில்! இன்று ஆயர் துறையில்!
* நேற்று தேவகி! இன்று யசோதை!
* நேற்று தனிமை! இன்று கோகுலக் கூட்டம்!
* நேற்று புயல் வெள்ளம்! இன்று இன்ப வெள்ளம்!
இப்படி ஒரே நாளில், ஒரே இரவில், எப்படி எப்படியெல்லாம் மாற்றம்!

பொதுவாக பெரிய இசைக் கலைஞர்களிடம் ஒன்றைக் கவனித்திருக்கலாம்! விருத்தம் என்ற இயற்பாவைப் பாடி விட்டு, அப்புறம் இசைப்பாவை பாடுவாங்க!
இங்கும் அதே போல் திருப்பாணாழ்வார் விருத்தத்தை முதலில் பாடி விட்டு, அப்புறம் கிருதியைப் பாடுறாங்க நித்யஸ்ரீ!

திருப்பாணாழ்வாரைப் பற்றிப் பலரும் அறிந்திருக்கலாம்! தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்து, அரங்கன் மேல் கொண்ட காதலால், அர்ச்சகரிடம் கல்லடி வாங்கியவர்! பாணர் மேல் பட்ட கல்லால், அரங்கன் நெற்றியில் இரத்தம்!
பிழையுணர்ந்த அர்ச்சகர், பாணரைத் தோள் மேல் தூக்கி வைத்து, சன்னிதிக்குள் அழைத்து வருகிறார்! பாணரும் அமலன் ஆதிப் பிரான் என்னும் பாசுரம் பாடி, பெருமாளின் அடி முடி சேவையைச் சேவிக்கிறார்!

அதில் இருந்து ஒரு விருத்தம் + பின்னால் ஒரு கிருதி!
கிருதி என்னும் கீர்த்தனையைப் பாடியது தமிழ்த் தியாகராஜர்!
தமிழ்த் தியாகராஜரா? யாருங்க அவரு?

பாபநாசம் சிவன் என்னும் பெரும் இசைக்கலைஞர்! இசைப்பாடல்கள் புனைந்தவர்! நம் அண்மைக் காலத்தில் வாழ்ந்தவர்! தமிழிசைக்குப் பெரும் தூண்!
பல தமிழிசைப் பாடல்களை ராகங்களோடு எழுதிக் குவித்தவர்! அவர் தரும் அருமையான தமிழ்த் தாலாட்டு! அதுவும் தமிழ் இராகமான குறிஞ்சியில்!

குறிஞ்சிப் பாட்டைக் கேட்டுக்கிட்டே தூங்கலாமா?
அப்படியே கண்ணனின் தொட்டிலை ஆட்டி விட்டுக் கொண்டே நீங்களும் தூங்குங்க!
இன்னிக்கி காலை முழுதும் கோகுலத்தில் கண்ணன் பிறந்த நாள் கொண்டாட்டங்கள்! ஓய்வு ஒழிச்சலே இருந்திருக்காது உங்களுக்கு!
இதோ பாட்டு, நித்யஸ்ரீ அவர்களின் ஏகாந்தமான குரலில்!

ஆலமா மரத்தின் இலைமேல், ஒரு பாலகனாய்,
ஞாலம் ஏழும் உண்டான், அரங்கத்து அரவின் அணையான்,
கோல மாமணி ஆரமும், முத்துத் தாமமும் முடிவில்லதோர் எழில்,
நீல மேனி ஐயோ! நிறை கொண்டது என் நெஞ்சினையே!


இங்கே ஐயோ என்பது ஆனந்த ஐயோ! நீல மேனி ஐயோ!
ஆலமர இலை! பாலகன்! உலகமேழும் உண்டான்! உண்டு விட்டு அரங்கத்துப் பாம்பில் தூங்குகின்றான்! அவன் மணியாரம்! முத்துமாலை! முடிவில்லாத அழகு!
நீல மேனி ஐயோ! என் நெஞ்சினையே எடைக்கு எடை நிறை கொண்டு, நிறைத்து விட்டதே!

கண்ணே என் கண்மணியே! கண்ணனே கண் வளராய்!
மண்ணுலகில் என் வாழ்வு, வளம் பெற வந்துதித்த

(கண்ணே)

குயிலிசை குழலோசை உன் கொஞ்சு மொழிக்கு இணையாமோ?
கொண்ட மனச் சஞ்சலங்கள் பஞ்சாய்ப் பறந்திடுமே!

(தாலோ தாலேலோ)

தேடாத என் நிதியே! திகட்டாத தெள்ளமுதே!
வாடாத மென் மலரே! மனத்துள் இனிக்கும் தனித்தேனே!

(தாலோ தாலேலோ)

ராகம்: குறிஞ்சி
தாளம்: திஸ்ர ஆதி
வரிகள்: பாபநாசம் சிவன்

8 comments :

Raghav said...

ஆஹா ஆஹா.. என்ன ஒரு அருமையான பாட்டு.. இன்னைக்கெல்லாம் கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு, அப்படியே கண்ணனை தொட்டில்ல போட்டு தாலாட்டுற மாதிரியே இருக்கு.

Raghav said...

நிறை கொண்டது என் நெஞ்சினையே! உங்க பதிவு, பாட்டு. இந்த வாரம் முழுதும் கொண்டாட்டம் தொடரணும்னு விண்ணப்பிக்கிறேன்.

Kavinaya said...

அருமையான பாடல். சுகமாக கண் செருகுது நமக்கே...

//முடிவில்லதோர் எழில்,
நீல மேனி ஐயோ! நிறை கொண்டது என் நெஞ்சினையே!//

என் நெஞ்சினையும்தான் :)

குறும்பெல்லாம் கொஞ்சம் தள்ளி வைத்து
குட்டிக் கண்ணா நீ கண் வளராய்!

Raghav said...

கண்ணே என் கண்மணியே கண் வளராய்.. என்ன ஒரு அழகு.. கேட்டுக்கொண்டே இரூக்க என்னையே நான் மறக்குறேன்..

என் மனம் நிறைந்த நன்றிகள் ரவி அண்ணா..

Anonymous said...

//குயிலிசை குழலோசை உன் கொஞ்சு மொழிக்கு இணையாமோ?
கொண்ட மனச் சஞ்சலங்கள் பஞ்சாய்ப் பறந்திடுமே! \\ பாட்டைக்கேட்டா எல்லாமே மறக்குதே. சஞ்சலங்கள் மட்டும் மிஞ்சுமா என்ன? அருமையா இருக்கு

jeevagv said...

இன்றைக்கு எங்கள் கண்மணி இந்தப் பாட்டைக் கேட்டவாறே உறங்கிவிட்டாள்!
வழங்கியமைக்கு நன்றிகள் KRS!
நித்யஸ்ரீ பாடும் இந்தப் பாடல் தொகுப்புக்குப் பெயரும் 'குறிஞ்சி'. இந்தப்பாடலின் இராகத்தையே தொகுப்புக்கும் வைத்திருந்தார்கள். பாடல் தொகுப்பிலுள்ள இதர பாடல்களும் தமிழிசை நித்தலங்கள்.

மெளலி (மதுரையம்பதி) said...

நல்ல பாடல், வழங்கியமைக்கு நன்றி.

Unknown said...

என் உலாவியில் musicindiaonline கேட்கவே முடிவதில்லை:(

கிருஷ்ணர் எங்கள் வீட்டுக்கும் வந்தார்:-)

ஆமா, அங்க "கீத" பஜனைக்கு வரலியா?

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP