Saturday, August 09, 2008

102. ஸ்ரீனிவாசன் பூமிதேவி கல்யாணம் இந்த நானிலமே கொண்டாடும் வைபோகம்

"வரது, தாயாருக்கு ஏகாந்தம் சாத்தியாச்சா, மாலைகள் இன்னும் வரல, போய் என்னன்னு பாத்துட்டு வரச் சொல்லு. நான் ஒரு நிமிஷத்துல் வந்துர்றேன்.. நம்ம ரவிசங்கருக்கு இன்னைக்கு பிறந்தநாள், அர்ச்சனை பண்ண கண்ணன் அன்பர்கள் வந்துருக்கா, நான் பேசிட்டு வந்துர்றேன்.."

"வாங்கோ கண்ணன் அன்பர்களே.. அடியேன் ஒப்பில்லா அப்பன் சன்னதி அர்ச்சகர். என்னப்பனுக்கும், பூமிதேவிக்கும் நடக்கப்போற திருக்கல்யாணத்தை தரிசிக்க வந்துருக்கேள், ரொம்ப சந்தோஷம். "

திருமகள் நாயகனாம் திருமால் அர்ச்சாவதாரம் கொண்டு விளங்கும் 108 திவ்யதேசங்களில், இந்த நெஞ்சை அள்ளும் தஞ்சை மாவட்டத்தில் திருவிண்ணகர் என்று போற்றப்படும் துளஸீ வன ஷேத்ரத்தில் எம்பெருமான் தன் ஒப்பார் இல் அப்பனாக எழுந்தருளியுள்ளார். அவரோட திருக்கல்யாண வைபவம் எவ்வளவு சிறப்பா நடக்குதுன்னு உங்களோட இருந்து நானும் ஸேவிக்கிறேன்.


"மார்க்கண்டேய மகரிஷி பூமிதேவித் தாயாரை மகளாக அடையும் பாக்கியம் பெற்றவர். தேவியின் ஐந்து வயது இருக்கும் போது, பங்குனி மாசம், சிராவணத்தின் போது, எம்பெருமான் வயோதிகர் வேடத்தில் பெண் கேட்டு வந்து நின்றார். மார்க்கண்டேயருக்கு முதல்ல வந்துருக்கிறது யாருன்னு தெரியல, அதனால போயும் போயும் ஒரு கிழவருக்கா நம்ம சின்னப்பொண்ணக் கொடுக்குறது, அதுதான் தகுமோ என்று முடியாதுங்குறார். பெருமாள் விடுறதா இல்லை, பிடிவாதமா நிக்குறார். பெரியவாள் பிடிவாதம் பிடிப்பா தெரியும், இங்க பெருமாளே பிடிவாதமா இருக்கார். என்ன பண்ணலாம்னு மகரிஷி யோசிச்சார். அய்யா, எம் பொண்ணுக்கு அஞ்சு வயசு தான் ஆகுறது, சமைக்கக் கூட தெரியாது, உப்பு கூடப் போடத் தெரியாது, அதனால நீவீர் நல்லா சமைக்கத் தெரிஞ்ச பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கங்கோ அப்படின்னார். "

"வயசானாலே கண்டிப்பா நல்ல சாப்பாடு வேணும்னு நினைப்பு வரும், உப்பு கூட சரியாப் போடத் தெரியாதுங்கிற உண்மைய சொன்னா வந்தவர் போயிருவார்னு நினைததார். "

"எங்க போரது.. விடாப்பிடியா நின்னுட்டார்.. உம்ம பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக நான் உப்பை தியாகம் பண்றேன் ஓய்.. இப்போ என்ன சொல்றேள்னார், மகரிஷி ஆடிப்போயிட்டார். அப்புறம் புறக்கண்ணை மூடி அகக்கண்ணை திறந்து பாததா, நிக்கிறவர் ஓங்கி உலகளந்த உத்தமன், பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பன் தன் ஒப்பார் இல் அப்பன் அல்லவா இவன் என்று மனமகிழ்ந்து தன் பெண்ணை பூமிதேவிப்பிராட்டியை கன்னிகாதானம் பண்ணிக் கொடுக்குறார். அந்த வைபவத்தை தான் சேவிக்கப் போறோம். அப்படியே உக்காந்து ஸேவிங்கோ. "
"என்னடா வரது, எல்லாம் தயாரா. சரி ஆத்துல போய் மாமியை ஆரத்தி கரைச்சுண்டு சீக்கிரம் வரச் சொல்லு, டீ.வி பாத்துண்டே உக்காந்துரப்போறா. டிரஷ்டி வந்துட்டார் போலிருக்கே நான் ஆரம்பிக்கிறேன். "

"சீர்பாதம் தாங்கி ... எல்லாரும் இருக்கேள் தானே, சரி வாத்யம் , பந்தம் எல்லாம் ரெடியா.. மாலை மாற்றுக்கு பெருமாளை ஏளப்பண்ணுங்கோ.. "
மீனாய் ஆமையாய் பன்றியாய் அரி உருவாய்
வானாய் உயர்ந்த வாமன்னாய் கோவ ராமனாய்
ரகு ராமனாய் அண்ணனாய் கள்ள கண்ணனாய்
வெண்பரி மன்னனாய் காண்பது வண்புகழ் நாரணனே.
பெருமாளும், தாயாரும் திருமஞ்சனம் கண்டருளி தயாராக இருக்கிறார்கள். பெருமாள் ஒரு புறம், தாயார் மறுபுறம் இருக்க, ஒரு அர்ச்சகர் பெருமாள் அணிந்திருந்த மாலை ஒன்றை எடுத்துக் கொண்டு கையிலே உயர்த்திப் பிடித்துக் கொண்டு அபினயத்துடன் தாயாரை நோக்கி செல்கிறார், அதே போன்று தாயாரிடம் இருந்து ஒரு அர்ச்சகர், கையில் தாயார் மாலையுடன், அபினயத்துடன் பெருமாளை நோக்கி வருகிறார். இப்படி பெருமாளும், தாயாரும் மூன்று முறை மாலை மாற்றிக் கொள்கின்றனர்.
"சரி ஊஞ்சலுக்கு ஏழப் பண்ணுங்கோ.. வழி வழி.. சீர்பாதம்... புறப்படலாம்..
முதல்ல பெருமாளை ஏழப்பண்ணு, தாயாரை கொஞ்சம் பெருமாளை பாத்த மாதிரி ஏழப்பண்ணு."

"எல்லாரும் உக்காரலாமே.. பின்னால உள்ளவங்களும் பாக்கனும்ல.".
தீபாராதனை .. மங்கள வாத்யம் முழங்குகிறது ...
வேதம், பிரபந்தத்தின் வாயிலாக அடியேன் செய்யும் விண்ணப்பம்,


ஒப்பில்லா அப்பன், பிராட்டியின் கழுத்தில் அணியப்போகும் மாங்கல்யம்..


"எல்லோரும் திருமாங்கல்யத்தை ஸேவிங்கோ.. மாங்கல்ய தாரணம் ஆகப்போறது.. வாத்யம் வாத்யம் ..."

Get this widget Track details eSnips Social DNA


"ஆரத்தி எடுக்க வாங்கோ, கோதை கண்ணூஞ்சல் பாட்டு பாடு.. "
கண்ணூஞ்சல் ஆடிருந்தாள்
கண்ணூஞ்சல் ஆடிருந்தாள்
ஸ்ரீபூமிதேவி கண்ணூஞ்சல் ஆடிருந்தாள்
பொன்னூஞ்சலில் பூரித்து மன்னன் விண்ணகரனுடன்
பொன்னூஞ்சலில் பூரித்து மன்னன் விண்ணகரனுடன்
மார்க்கண்டர் மனம் மகிழ
கல்யாண.. திருக்கல்யாண.. திருக்கல்யாண உத்ஸவத்தில்
கண்ணூஞ்சல் ஆடிருந்தாள்
ஸ்ரீபூமிதேவி கண்ணூஞ்சல் ஆடிருந்தாள்.

"ஆரத்தி தட்டுல ரெண்டு அஞ்சு ரூபா காசு போட்டாச்சா.., சரி"

"இப்போ பொறியிடுதல், பெருமாளோட சடாரியையும், தாயாரோட சடாரியையும் கையில ஏழப்பண்ணின்டு, ஹோமகுண்டத்தில பொறி இடுவா..
அப்புறம், அம்மிக்கல்ல சுத்தி சடாரிய வைச்சு வைச்சு அம்மி மிதிப்பா"

"வாரணமாயிரம் சாற்றுமறை தொடங்கட்டும்"
"என் தோழி சொல்லாய் நீ கண்ட கனவெல்லாம்.. "


பெருமாள் திருக்கல்யாணத்தை ஸேவிக்க வந்த அனைவருக்கும் எம்பெருமான் கிருபை உண்டாக பிரார்த்திக்கிறேன். நீங்காத செல்வம் நிறைந்து வாழ அடியேன் பெருமாளிடம் விண்ணப்பிக்கிறேன். பெருமாளை அடிக்கடி ஸேவிக்க வங்கோ. நான் உத்தரவு வாங்கிக்கிறேன்.



இராகவன்: ஒப்பிலா அப்பன் திருக்கல்யாணத்தை நல்லபடியா சொல்லனும்கிற ஒருவித பயத்தோடே எழுதியிருக்கேன். நல்லா இருந்தா ஒருமுறை ஒப்பிலாஅப்பனை வணங்கவும். தவறுகள் இருப்பின் உங்களால முடிஞ்ச அளவு என்னை கோவிச்சுக்கலாம்.

43 comments :

M.Rishan Shareef said...

என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

Kavinaya said...

கண்ணனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

அருமையான பதிவு. படங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஒவ்வொன்றும் கொள்ளை அழகு. எழிலான வர்ணனை. நன்றி ராகவ்.

மெளலி (மதுரையம்பதி) said...

KRSக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

//அருமையான பதிவு. படங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஒவ்வொன்றும் கொள்ளை அழகு. எழிலான வர்ணனை. நன்றி ராகவ்.//

repeateaaaaaaaaaa

Anonymous said...

ஒப்பிலி அப்பன் பாடல்:
http://jeeveesblog.blogspot.com/2008/05/blog-post_25.html

Unknown said...

கேஆரெஸ்: பிறந்தநாள் வாழ்த்துக்கள். நூறாண்டு காலம் பக்தி மழை பொழிக!

இராகவ்: படங்களும் பதிவும் அருமை. வாழ்த்துக்கள்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

திவ்ய தம்பதிகள் திருக்கல்யாண வைபோகத்தில்
அடியேன் பிறந்தநாளும் கொண்டாடிக் கொடுத்த ராகவ் - நன்றிப்பா!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கவி அக்கா, மெளலி அண்ணா, நண்பா ரிஷூ, கெபி அக்கா - dankees :)

Raghav said...

நன்றி கவிநயா அக்கா, மெளலி அண்ணா, கெ.பி. போன வாரமே போட்டுருக்கனும். வேலை ஜாஸ்தியாயிருச்சு. கடைசியில் ரவி அண்ணா, பிறந்தநாள் அப்போ அமைஞ்சுருச்சு.

Unknown said...

அருமையான பதிவு.

முகுந்தன் said...

Belated wishes KRS....

ராகவ்,
இரண்டு மூன்று முறை இந்த வைபவத்தை ஒப்பிலியப்பன் கோவிலில் கண்டு மகிழ்ந்திருக்கிறேன்...
மீண்டும் நேரே பார்த்த உணர்வு. ரொம்ப அற்புதமான படங்கள்.

//தவறுகள் இருப்பின் உங்களால முடிஞ்ச அளவு என்னை கோவிச்சுக்கலாம்.//

அவனை பற்றி படிக்கும்போது எந்த தவறும் கண்ணுக்கு தெரியாது.
உங்களுக்கு ஒப்பிலியப்பன் அருள் என்றும் கிடைக்க நான் வேண்டிக்கொள்கிறேன்...

குமரன் (Kumaran) said...

மிகவும் அருமையாக இருந்தது இராகவ். திவ்ய தம்பதிகளின் திருமண வைபவம் கண் முன்னே நடந்தேறியது. சேர்த்திச் சேவையும் அருமையாக அமைந்தது. மிக்க நன்றி.

குமரன் (Kumaran) said...

'மாம் ஏகம் சரணம் வ்ரஜ' என்று கைகாட்டி என்னை அழைக்கும் பொன்னப்பன் மணியப்பன் என்னப்பன் ஒப்பார் மிக்கார் இல்லாத ஒப்பிலியப்பன் திருமுன் இரவிசங்கர் திருநட்சத்திர வைபவத்திற்காக அர்ச்சனை செய்ய அடியேனும் வந்தேன். பெருமாளின் திருவடிகளின் பெருமைகள் என்றென்றும் அடியோங்கள் பேசிக் கொண்டிருக்கும் பேற்றினைத் தர வேண்டி எங்களுக்காக பெருமாளின் சரணங்களில் அவனது ஆயிரம் பெயர்களைச் சொல்லி அருச்சனை செய்யுங்கள்.

குமரன் (Kumaran) said...

தாயாருக்கு ஏகாந்தம் சாத்துதல் என்றால் என்ன?

அடியேன் கோத்திரம் மார்கண்டேய மகரிஷி கோத்திரம். திருக்கடையூரில் சிரஞ்சீவித்துவம் பெற்றபின்னர் திருவிண்ணகரில் மகரிஷி வாழ்ந்தார் போலும். அவருடைய திருமகளாக திருமகளே ஒத்த பூமிப்பிராட்டி அமைந்தது மிகப் பெருமை. அடியேனுக்கும் அதில் மிகப்பெரிய மகிழ்ச்சி.

திவ்ய தம்பதிகளின் தரிசனத்துடன் ஆசார்ய சார்வபௌமன் நிகமாந்த தேசிகனின் திருத்தரிசனமும் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி.

குமரன் (Kumaran) said...

எந்நாள் எம்பெருமான் உன் தனக்கு அடியோம் என்று எழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடு பெற்று உய்ந்தது காண்
செந்நாள் தோற்றித் திருமதுரையுள் சிலை குனித்து ஐந்தலைய
பைந்நாகத் தலை பாய்ந்தவனே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே

அல்வழக்கு ஒன்றும் இல்லா அணிகோட்டியர் கோன் அபிமான துங்கன்
செல்வனைப் போலத் திருமாலே நானும் உனக்கு பழவடியேன்
நல்வகையால் நமோ நாராயணாயவென்று நாமம் பல பரவி
பல்வகையாலும் பவித்திரனே உன்னைப் பல்லாண்டு கூறுவனே

Raghav said...

//திவ்ய தம்பதிகள் திருக்கல்யாண வைபோகத்தில்
அடியேன் பிறந்தநாளும் கொண்டாடிக் கொடுத்த ராகவ் - நன்றிப்பா!//

காரணன் நீயே
காரியமும் நீயே..

Raghav said...

//முகுந்தன் said...
Belated wishes KRS....

ராகவ்,
இரண்டு மூன்று முறை இந்த வைபவத்தை ஒப்பிலியப்பன் கோவிலில் கண்டு மகிழ்ந்திருக்கிறேன்... //

மிகவும் பாக்கியசாலி.. ஒரே ஒருமுறை ஒப்பிலியப்பனை தரிசித்துள்ளேன். வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் செல்ல வேண்டும்.

//மீண்டும் நேரே பார்த்த உணர்வு. ரொம்ப அற்புதமான படங்கள்.//
ரொம்ப நன்றி முகுந்தன். ஒப்பில்லா அழகன் அல்லவா அவன்.. அதுதான் படங்களும் அழகு..

Raghav said...

//sharevivek said...
அருமையான பதிவு.
//

வாங்க விவேக். ரொம்ப நன்றி.

Raghav said...

// குமரன் (Kumaran) said...
மிகவும் அருமையாக இருந்தது இராகவ். திவ்ய தம்பதிகளின் திருமண வைபவம் கண் முன்னே நடந்தேறியது. சேர்த்திச் சேவையும் அருமையாக அமைந்தது. மிக்க நன்றி.
//

எல்லாம் உங்ககிட்ட இருந்து கத்துகிட்டது தான் குமரன். நாந்தான் உங்களுக்கு நன்றி சொல்லனும்

//பெருமாளின் திருவடிகளின் பெருமைகள் என்றென்றும் அடியோங்கள் பேசிக் கொண்டிருக்கும் பேற்றினைத் தர வேண்டி எங்களுக்காக பெருமாளின் சரணங்களில் அவனது ஆயிரம் பெயர்களைச் சொல்லி அருச்சனை செய்யுங்கள்.//

கண்டிப்பாக குமரன். எமனேஸ்வரத்துல வரதராஜன் சன்னதில அவர் பேருக்கு ஒரு அர்ச்சனை பண்ணச் சொன்னேன். அவன் புகழ் பாடும் பேறு பெற்றுள்ளவர்கள் நீங்கள் இருவரும். நீங்கள் தான் அரங்கனிடம் மிக நெருக்கமானவர்கள். எனக்கும் அருளச் சொல்லி நீங்கள் தான் முறையிட வேண்டும்.

Raghav said...

//தாயாருக்கு ஏகாந்தம் சாத்துதல் என்றால் என்ன? //

பெருமாள் விக்ரகத்தை புறப்பாட்டு தொட்டியில் வைத்துக் கட்டுவதற்கு ஏகாந்தம் சாற்றுதல் என்று சொல்வர். அஷ்டபாதம் இருக்காது. வேறு ஏதாவது விளக்கம் உண்டா என்று எனக்கு தெரியவில்லை.

//திவ்ய தம்பதிகளின் தரிசனத்துடன் ஆசார்ய சார்வபௌமன் நிகமாந்த தேசிகனின் திருத்தரிசனமும் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி.//

ஒப்பிலாஅப்பன் தேரோட்ட உத்ஸவ புகைப்படம்.

குமரன் (Kumaran) said...

விளக்கங்களுக்கு நன்றி இராகவ். அஷ்டபாதம் என்றால் என்ன?

Raghav said...

//குமரன் (Kumaran) said...
விளக்கங்களுக்கு நன்றி இராகவ். அஷ்டபாதம் என்றால் என்ன?
//

உங்களுக்கு தெரியாத விளக்கமா குமரன். நான் சின்னப்பையன், எனக்கு எதுக்கு நன்றி எல்லாம்.

பெருமாள் அலங்காரத்திற்கு பயன்படுத்தும் கை, கால்களை அஷ்டபாதம்னு சொல்லுவாங்க.

குமரன் (Kumaran) said...

இன்றைக்கு இரண்டு டெக்னிகல் சொற்களைக் கற்றுக் கொண்டேன். நன்றி இராகவ். :-)

Vijay said...

ராகவ்,
உங்கள் பதிவிற்கு நிறைய தடவை வந்தாலும் கமெண்ட் எழுதாமலேயே போயிருகேன்.

உங்கள் பதிவைப் படித்த பிறகு திருக்கல்யாண உத்சவததை நேரில் பார்த்த அனுபவம்.
உப்பிலியப்பன் கோவில் திருநாகேச்வரத்தில் தானே இருக்கிறது? ஒரு முறை அங்கே போயிருக்கிறேன். எவ்வளவு பிரம்மாண்டமான மூர்த்தி?

உப்பில்லாமல் தான் என் மகள் சமையல் செய்வாள் என்று சொன்னதன் விளைவாக, அங்கே கோவிலில் உப்புப்போடாத பதார்த்தம் தான் சுவாமிக்கு நிவேதனம் செய்வார்கள்.

அன்புடன்,
விஜய்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பெருமாளின் திருவடிகளின் பெருமைகள் என்றென்றும் அடியோங்கள் பேசிக் கொண்டிருக்கும் பேற்றினைத் தர வேண்டி எங்களுக்காக பெருமாளின் சரணங்களில் அவனது ஆயிரம் பெயர்களைச் சொல்லி அருச்சனை செய்யுங்கள்.
//

அஸ்ய யஜமானஸ்ய
தைர்ய ஸ்தைர்ய
வீர்ய விஜய
ஆயுர் ஆரோக்ய
ஐஸ்வர்ய அபிவிருத்த யர்த்தம்,
இஷ்ட காம்யார்த்த சித்த யர்த்தம்,

*** பாகவத ப்ரீத யர்த்தம் ***

ஸ்ரீ பூமி நாயிகா சமேத ஸ்ரீ ஓப்பிலியப்ப ஸ்வாமி,
திவ்ய சரணார விந்தயோஹோ,
துளசீ தள குங்குமார்ச்சன சகஸ்ர நாம பூஜாம் கரிஷ்யே!

குமரன், அடியோங்கள் எல்லாரும் குணானுபவங்கள் பேசிக் கூடி இருந்து குளிர்ந்தேலோ-ன்னு அர்ச்சனை சங்கல்பம் செய்து கொண்டதற்கு மிகவும் நன்றி!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கண்டிப்பாக குமரன். எமனேஸ்வரத்துல வரதராஜன் சன்னதில அவர் பேருக்கு ஒரு அர்ச்சனை பண்ணச் சொன்னேன்//

நன்றி ராகவ்!
வேற என்ன சொல்றது தெரியலை!

//அவன் புகழ் பாடும் பேறு பெற்றுள்ளவர்கள் நீங்கள் இருவரும். நீங்கள் தான் அரங்கனிடம் மிக நெருக்கமானவர்கள்//

அரங்கனின் அருள் மழைச் சக்ரவர்த்திகள் அடியார்கள் அனைவரும்!
எல்லாரும் இந்நாட்டு மன்னர்! :)

//எனக்கும் அருளச் சொல்லி நீங்கள் தான் முறையிட வேண்டும்//

இராமானுஜ சம்பந்தா சம்பந்தம் உடையவர் அனைவருக்கும் பகவத் பரிபூர்ண கைங்கைர்யம் உண்டு!

நீங்காத செல்வம் நீ நிறைந்து வாழ்க!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

திவய் தம்பதிகளின் படங்கள் அனைத்தும் அருமை!
தீபாராதனப் படமும், ஆசார்யர் வேதாந்த தேசிகரோடு அம்மையப்பன் இருக்கும் படமும் தனியாகச் சேமித்துக் கொண்டேன், உங்க அனுமதி இல்லாமல்! :)

திருமாங்கல்ய அணுக்க தரிசனத்துக்கும் (Closeup) நன்றி!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சீர்பாதம் தாங்கி ... எல்லாரும் இருக்கேள் தானே//

விளக்கம் ப்ளீஸ்! :)

குமரன் (Kumaran) said...

இரவிசங்கர்.

அருச்சனையும் உறுதிமொழியும் வடமொழியில் தான் இருக்க வேண்டுமா என்று யாராவது வந்து கேட்பதற்குள் தமிழில் உறுதிமொழியைச் சொல்லி அருச்சனையும் செய்துவிடுங்கள். :-)

Ramya Ramani said...

அருமை :))

நன்றி ராகவ்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

திருமாங்கல்யம், தாலி கட்டுதல் என்பது பின்னாளில் வந்த ஒன்று சிலர் கருதுகிறார்கள்!

ஆண்டாள் வாரணமாயிரத்தில், மாங்கல்யதாரணம் பற்றிக் குறிப்பிடாததால், அந்தக் காலத்தில் தாலி கட்டுதல் வழக்கம் இல்லை என்பது ஒரு சாரார் கருத்து!

ஆனால், ஆண்டாள் அவ்வாறு மாங்கல்யதாரணம் பற்றி மட்டும் வெளிப்படையாகக் குறிப்பிடாததற்கு வேறு காரணங்கள் இருக்கு!

மங்கல நாண் பற்றிச் சிலப்பதிகாரம் பேசுகிறது! சிலப்பதிகார காலத்தில் இருந்த வழக்கம் நடுவில் நின்று போயிருக்க முடியுமா, மீண்டும் துளிர்த்து எழுந்திருக்க முடியுமா? தெரியவில்லை!

தாலம்-தாலி என்பது பற்றி இராம.கி ஐயா ஒரு அருமையான பதிவை இட்டிருந்தார்! மங்கல நாண் பூணுதல் நெடுநாள் வழக்கம் தான் என்பது அவர் துணிபு!

ஆகமங்களில் (பாஞ்சராத்ரம்/ வைகானசம்/ சிவாகமம்/ சாக்தாகமம்) மாங்கல்ய தாரணம் சொல்லப் பட்டிருக்கா?
பின்னாளைய வழக்கம் என்றால் ஆகமத்தில் இருக்காது தானே?

அர்க்கியம், ஆசமனீயம் என்று பல உபசாரங்களைக் குறிப்பிடும் ஆகமங்கள், திருக்கல்யாண உற்சவம் பற்றியும் சொல்லும்! அதில் மாங்கல்ய தாரணம் சொல்லப் பட்டிருக்கா? கேட்டு அறியத் தர முடியுமா?

தி. ரா. ச.(T.R.C.) said...

அஸ்ய யஜமானஸ்ய
தைர்ய ஸ்தைர்ய
வீர்ய விஜய
ஆயுர் ஆரோக்ய
ஐஸ்வர்ய அபிவிருத்த யர்த்தம்,
இஷ்ட காம்யார்த்த சித்த யர்த்தம்,

*** பாகவத ப்ரீத யர்த்தம் ***

ஸ்ரீ பூமி நாயிகா சமேத ஸ்ரீ ஓப்பிலியப்ப ஸ்வாமி,
திவ்ய சரணார விந்தயோஹோ, ஸமஸ்த லோக சாந்த்யர்த்தம்
துளசீ தள குங்குமார்ச்சன சகஸ்ர நாம பூஜாம் கரிஷ்யே

நன்றி ராகவ்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஒப்பிலியப்பன் கோவிலுக்கு பிரபந்தத்தில் வரும் பெயர் திருவிண்ணகர்.
(நந்திபுர விண்ணகரம், பரமேச்சுர விண்ணகரம் வேறு)

ஒப்பிலியப்பன் கோவிலின் ஆழ்வார் பாசுரங்கள் சில!

மிகவும் புகழ் பெற்ற நம்மாழ்வார் பாசுரம்!
என்னப்பன்-பொன்னப்பன்-மணியப்பன்-முத்தப்பன்-தன்னொப்பார் இல்லப்பன் என ஐந்து பெருமாளாய் மாறனுக்கு காட்சி தந்த பாசுரம் இது தான்!

என்னப்பன் எனக்கு ஆயிகுளாய் என்னைப் பெற்றவளாய்,
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என் அப்பனுமாய்,
மின்னப்பொன் மதிள்சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்த அப்பன்,
தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தன தாள்நிழலே!


திருமங்கையாழ்வார் இந்தத் தலத்து பெருமாளை மட்டும் வித்தியாசமாகப் பாடி இருப்பார்.

ஆண்டாய் உனைக் காண்பதோர் அருளெனக்கு அருளுதியேல்,
வேண்டேன் மனை வாழ்க்கையை
விண்ணகர் மேயவனே
- அப்படின்னு பத்து பாட்டிலும் திருப்பித் திருப்பிச் சொல்லுவாரு! அப்பவே ரிப்பீட்டே இருந்திருக்கு போல! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@திராச
//ஸமஸ்த லோக சாந்த்யர்த்தம்//

இதுக்குத் தான் நீங்க வேணும்ங்கிறது!
குருவே சரணம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
இரவிசங்கர்.
அருச்சனையும் உறுதிமொழியும் வடமொழியில் தான் இருக்க வேண்டுமா என்று யாராவது வந்து கேட்பதற்குள்...//

ஹா ஹா ஹா
அப்படி எல்லாம் வேண்டாம் குமரன்! அவர்கள் என்ன கேட்பது? நாமே விரும்பிச் செய்திடுவோம்! வேதம் தமிழ் செய்த மாறன் அருளால் அர்ச்சனையா தமிழ் செய்ய முடியாது? :))

சங்கல்பம்=உறுதிமொழி
அர்ச்சனை=போற்றுதல்
ஒரு குறிப்பிட்ட நலம் வேண்டி உறுதி மொழி எடுத்துக் கொண்டு, போற்றி வழிபடுதலே சங்கல்பம்-அர்ச்சனை!

Raghav said...

//இராமானுஜ சம்பந்தா சம்பந்தம் உடையவர் அனைவருக்கும் பகவத் பரிபூர்ண கைங்கைர்யம் உண்டு!

நீங்காத செல்வம் நீ நிறைந்து வாழ்க!!//

ரொம்ப நன்றி ரவி அண்ணா. எனக்கு இராமானுஜர் சம்பந்தம் உண்டான்னு தெரியல.. உங்களைப்போல் அரங்கன் அனுக்ரஹம் பெற்றவர்கள் சம்பந்தம் இருப்பதே போதும்

Raghav said...

ரவி அண்ணா, தி.ரா.ச ஐயா அர்ச்சனை சங்கல்பம் நன்றாக இருந்தது.

நன்றி நன்றி. ஏன் ரெண்டு முறை நன்றி? கோவில்களில் சாற்றுமறை முடிந்தவுடன் பிரசாதம் கொடுப்பர். அப்போது, அர்ச்சகருக்கு மட்டும் இரண்டு முறை கொடுக்க வேண்டும். இங்கே அர்ச்சனை சங்கல்பம் செய்து வைத்த உங்கள் இருவருக்கும் இருமுறை நன்றி சொல்வது தானே சரி.

Raghav said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஒப்பிலியப்பன் கோவிலுக்கு பிரபந்தத்தில் வரும் பெயர் திருவிண்ணகர்.
//

அரிமேய விண்ணகரம், நந்திபுர விண்ணகரம் காழிச்சீராம விண்ணகரம் என்று திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்ததில் ஏன் ஒப்பிலியப்பன் திருத்தலம் திருவிண்ணகர் என்று மட்டும் உள்ளது. சிறப்பான காரணம் எதுவும் உண்டா ?

Raghav said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//சீர்பாதம் தாங்கி ... எல்லாரும் இருக்கேள் தானே//

விளக்கம் ப்ளீஸ்! :)
//
பெருமாள் வாகன புறப்பாட்டின் போது, பெருமாளை தங்கள் தோளில் சுமந்து வருபவர்களை சீர்பாதம் தாங்கிகள் என்று அழைப்பார்கள்.

Raghav said...

//Ramya Ramani said...
அருமை :))

நன்றி ராகவ்//

டாங்கீஸ் ரம்யா...

// விஜய் said...
ராகவ்,
உங்கள் பதிவிற்கு நிறைய தடவை வந்தாலும் கமெண்ட் எழுதாமலேயே போயிருகேன்.
//

கமெண்ட் எழுதுற அளவுக்கு நான் இன்னும் வரலயே :)

//உப்பிலியப்பன் கோவில் திருநாகேச்வரத்தில் தானே இருக்கிறது? ஒரு முறை அங்கே போயிருக்கிறேன். எவ்வளவு பிரம்மாண்டமான மூர்த்தி?
//

திருநாகேச்வரம் அருகில் உள்ளது. மிகப் பிரம்மாண்டமான மூர்த்தி. தன் ஒப்பார் இல் அப்பன் அல்லவா அவன். ஆரத்தி காட்டும் போது, பெருமாளின் வலக்கரத்தில் "மாம் ஏகம் சரணம் விரஜ" தெளிவாக தெரியும். ஒரே ஒருமுறை தான் சென்றுள்ளேன்.

//உப்பில்லாமல் தான் என் மகள் சமையல் செய்வாள் என்று சொன்னதன் விளைவாக, அங்கே கோவிலில் உப்புப்போடாத பதார்த்தம் தான் சுவாமிக்கு நிவேதனம் செய்வார்கள். //

அங்கு மட்டுமல்ல, நிறைய கோவில்களில் அவ்வழக்கம் உண்டு.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

தமிழில் சங்கல்பம்: (உறுதிப்பாடு)
....
எனும் இன்னாரின் நலம் வேண்டி
துணிவும் நல் உறுதியும் வேண்டி
உயிர்ப்பும் வெற்றியும் வேண்டி
ஆயுளும் உடல்நலமும் வேண்டி
நீங்காத செல்வம் நிறைய வேண்டி
எண்ணிய எண்ணியாங்கு எய்த வேண்டி

***அடியார்கள் மனங் குளிர வேண்டி ***
உலகம் அமைதியில் மகிழ வேண்டி

பூமகள் உடனுறை எம்பெருமான் ஒப்பிலியப்பன் திவ்ய மங்களத் திருவடிகளில் சரணம் அடைந்தே...

துழாய் மலர்க் குங்குமார்ச்சனை, ஆயிரம் போற்றிகள் அடியோங்கள் செய்கின்றோமே!

*****************************
வடமொழி சங்கல்பம்:

அஸ்ய யஜமானஸ்ய
தைர்ய ஸ்தைர்ய
வீர்ய விஜய
ஆயுர் ஆரோக்ய
ஐஸ்வர்ய அபிவிருத்த யர்த்தம்,
இஷ்ட காம்யார்த்த சித்த யர்த்தம்,

*** பாகவத ப்ரீத யர்த்தம் ***

ஸ்ரீ பூமி நாயிகா சமேத ஸ்ரீ ஓப்பிலியப்ப ஸ்வாமி,
திவ்ய சரணார விந்தயோஹோ, ஸமஸ்த லோக சாந்த்யர்த்தம்
துளசீ தள குங்குமார்ச்சன சகஸ்ர நாம பூஜாம் கரிஷ்யே

தி. ரா. ச.(T.R.C.) said...

பாரதகண்டே ஜனிஷ்யானாம் விதேசே கர்த்தவ்யம் கர்த்தானாம் ஸ்கல ஜனானாம் தைர்ய ஸ்தைர்ய
வீர்ய விஜய
ஆயுர் ஆரோக்ய
ஐஸ்வர்ய அபிவிருத்த யர்த்தம்,
இஷ்ட காம்யார்த்த சித்த யர்த்தம்

பாரத நாட்டில் பிறந்து வெளிநாட்டில் பணிபுரியும் எல்லா மக்களின் நலம் வேண்டி
துணிவும் நல் உறுதியும் வேண்டி
உயிர்ப்பும் வெற்றியும் வேண்டி
ஆயுளும் உடல்நலமும் வேண்டி
நீங்காத செல்வம் நிறைய வேண்டி
எண்ணிய எண்ணியாங்கு எய்த வேண்டி
இது கேஆர்ஸ் உங்களைப் போன்றவர்களுக்காக இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்

குமரன் (Kumaran) said...

மொழி பெயர்ப்பு அருமையாக இருக்கிறது இரவிசங்கர். நன்றி. :-)

தி.ரா.ச ஐயாவிற்கும் நன்றிகள்.

Divyapriya said...

ரொம்ப நல்லா இருந்தது இராகவன்…அன்னிக்கே போஸ்ட் பாத்துட்டாலும், அவசரமா படிக்க விரும்பல, அதான் இன்னிக்கு ஃபிரியா இருக்கும் போது நிதானமா ரஸிச்சு படிச்சேன்…அப்டியே திருக்கல்யாணத்த பாத்த மாதிரி இருந்தது…உப்பிலியப்பன் கோவிலுக்கு போயிருந்தாலும், திருக்கல்யாணத்த பாத்ததில்லை, அந்த குறை இன்னிக்கு தீந்துந்துச்சு…ரொம்ப நன்றி! மென்மேலும், இது போல நிறையா எழுதுங்க…

Btw, சொல்ல மறந்துட்டனே, நீங்க அர்ச்சகர் மாதிரி இருந்து எழுதியிருக்கும் விதம் ரொம்ப அருமை…வாழ்த்துக்கள்.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP