Wednesday, June 18, 2008

98. பதிவர் கவிநயாவின் கனவில் வந்த கண்ணன்!

உங்க கனவில் இது வரை யார் யாரெல்லாம் வந்திருக்காங்க? சத்தியமா தசாவதார அசின் இல்லை-ன்னு நீங்க சொல்லுறது காதில் விழுகிறது! :-)
* கனவுல காதலன், காதலி தான் பொதுவா வருவாங்க! வில்லன் எதிரி யாராச்சும் வந்திருக்காங்களா?
* கனவுல பார்த்த இடத்தையோ, பொருளையோ கொஞ்ச நாள் கழிச்சி நேரில் பார்த்து இருக்கீங்களா?
* எத்தனை பேர் கனவில் ஆலயமோ, இறைவனோ வந்திருக்கான்? ஒளிவு மறைவு இல்லாமச் சொல்லுங்க பார்ப்போம்!

சூழலுக்கும் சமயத்துக்கும் ஏற்றாற் போல, நமக்கு விதம் விதமா கனவு வருது இல்லீங்களா? கனவைப் பற்றித் தனியா கனவு சாஸ்திரமும் இருக்கு! ஃபிராய்டு தியரியும் இருக்கு! இது ரெண்டுத்துக்கும் நடுவுல பலப்பல புராணக் கதைகள், இதிகாசங்கள்-னு பல உலக மொழிகளில் இருக்கு!

"கனவைப் பற்றிய ஒரு தொடர் பதிவை இடுங்களேன் அண்ணா" என்று முன்பொரு முறை அன்புத் தம்பி சீவீஆர் கேட்டிருந்தார்! அதற்கான நேரம் இப்போ வந்துருச்சின்னு தான் நினைக்கிறேன்! :-)
அதுக்கு முன்னாடி இன்னிக்கி ஒரு கண்ணன் பாட்டு! அது கனவுப் பாட்டா மலரப் போகுது!

கவி அக்கா என்று நான் அழைக்கும் பதிவர் கவிநயா அவர்களைப் பற்றி, நான் தனியாக என்ன சொல்லி விட முடியும்?
காலச் சக்கரம் சுத்துதோ இல்லியோ, இவர் பதிவுச் சக்கரம் சுத்திக் கொண்டே இருக்கும்! தானும் பதிவிட்டு, பல பதிவுகளில் பல விதமான மறுமொழிகளையும் இட்டு, ஒட்டு மொத்த நேரத்தையும் கைக்குட்டைக்குள் அடைத்து வைத்துக் கொள்ள வேண்டுமா? அக்காவை அணுகுங்கள்!

முடிந்தால் அவர் குரலை ஒரு முறை கேளுங்கள்! பாட்டு பாடிக் கொடுக்க ஏற்ற வாகான குரல்! சாக்கு சொன்னால், சாக்கைப் போக்காக்கிப் பாட்டை அவரிடம் வாங்கி விடுங்கள்!
வாஷிங்டன் ஏரியாவில் உள்ள ஆலயத்தில், முருகப் பெருமான் மேல் பாட்டெழுதி, ஒரு குழுவையே பாட வைத்தவர் கவிதாயினி கவிநயா!

அவர் கனவில் கண்ணன் எப்படி வந்தான் என்பதை, அவர் மை போட்டுச் சொல்கிறார்! பார்க்கலாமா?



கனவில் வந்த கண்ணன்

நீல இரவில் வண்ணக் கனவில்
சின்ன ஓலை வந்தது!
ஓலை அதிலே புன்னகைக் கண்ணனின்
அழைப்பு இருந்தது

அழைப்பை ஏற்றுச் சென்றதும் கண்ணன்
என்னுடன் வந்து விட்டான்

என்னுடன் வந்த சின்னக் கண்ணன்

முல்லைப் பூ மொட்டவிழ்ந்தது போலே
மெதுவாய்ச் சிரிக்கிறான்

மல்லிகைப் பூப் போல் மலர்ந்தே கண்ணன்
மகிழ்வாய்ச் சிரிக்கிறான்

தாமரைப் பூப் போல் இதழ்களை விரித்தே
அழகாய்ச் சிரிக்கிறான்

ரோஜாப் பூப் போல் சிரித்தே கண்ணன்
வாவா என்கிறான்

நீல வண்ணக் கண்ணனை அணைக்க
நெஞ்சம் ஏங்கியதே

பாலன் அவனைப் பிடிக்கக் கைகள்
இரண்டும் தாவியதே


தாவிய கைகளில் தட்டுப் பட்டதோ
தலையணை மட்டுந்தான்

தேடிக் களைத்த மனமும்
இது கனவே என்றது

அறிந்து கொண்ட அறிவும் வந்து
ஆறுதல் சொன்னது

கனவில் வந்த சின்னக் கண்ணன்
நனவில் வருவானோ

நனவில் வந்தே கண்ணன் என்னை
மகிழச் செய்வானோ?


-- கவிநயா



வள்ளுவர் கனவு பற்றி எந்த அதிகாரத்தில் சொல்கிறார்? சொல்லுங்க?

கோதையின் கனவு பற்றி எல்லாருக்கும் தெரியும்! மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத, மாதவிப் பந்தல் கீழ்(ஹா ஹா ஹா), கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி என்று பாடிய கோதையரும் உண்டு! இதோ இன்னொரு கனவுப் பாசுரம்!

நாளை வதுவை மணமென்று நாளிட்டு,
பாளை கமுகு பரிசுடைப் பந்தற் கீழ்,
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான்,ஓர்
காளை புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்.


ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை,
வேயர் புகழ் வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல்,
தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்,
வாயு நன்மக்களைப் பெற்று மகிழ்வரே!


இங்கு இவரைத் தட்டி, என்ன ஆச்சு கோதைக் கனவு? என்று உரிமையாகத் தட்டி, அ-தட்டியே கேட்கலாம்! பாசுரப் பொருளும் அங்கிட்டே இருக்கு!:-)
துயில்பவனுக்குக் கனவு வரும்!
துயில்பவனே கனவில் வந்தால்?
ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தமே!

12 comments :

வல்லிசிம்ஹன் said...

ஆனி மாசத்திலேயே கோதை வந்துவிட்டாளா ரவி.:)

பாட்டு அற்புதம்.
அவர் பாடின கவிதையும் அப்படியே.

நூறாவது பதிவுக்கு இப்பவே வாழ்த்துகள் சொல்றேன்.
இன்னும் ஆயிரம் பாட்டுகள் போட்டு
நாங்களும் கேட்கவேண்டும். பாட்டைவிட இனிமை அதுவும் கண்ணன் பாட்டுக்கு ஈடு எது.
வாழ்த்துக்கள் மா.

ஷைலஜா said...

//உங்க கனவில் இது வரை யார் யாரெல்லாம் வந்திருக்காங்க? சத்தியமா தசாவதார அசின் இல்லை-ன்னு நீங்க சொல்லுறது காதில் விழுகிறது!//

this is A sin!!!(kidding)!!!!


//முடிந்தால் அவர் குரலை ஒரு முறை கேளுங்கள்! பாட்டு பாடிக் கொடுக்க ஏற்ற வாகான குரல்! சாக்கு சொன்னால், சாக்கைப் போக்காக்கிப் பாட்டை அவரிடம் வாங்கி விடுங்கள்//

பாட்டு இங்க அவர்குரலில் இல்லையா?கண்ணபிரான்ரவிசங்கருக்கு மட்டும் ஸ்பெஷலா?::) இதுக்குத்தான் பேர்ல கண்ணன் இருக்கணுமா?:):)

//தேடிக் களைத்த மனமும்
இது கனவே என்றது

அறிந்து கொண்ட அறிவும் வந்து
ஆறுதல் சொன்னது//

அழகிய வரிகள்!

//மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத, மாதவிப் பந்தல் கீழ்(ஹா ஹா ஹா), கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி //!

மாதவிப்பந்தலில் நாங்கள்ளாம் வந்துவந்து போறது கனவில்லை ரவி!!!!!

//வள்ளுவர் கனவு பற்றி எந்த அதிகாரத்தில் சொல்கிறார்? சொல்லுங்க? //

1211வது குறள் முதல்1220வரை கனவுநிலை உரைத்தல்....சரியா?
அப்பால் சரியில்லை என வேண்டா
முப்பாலும் படித்த
முத்துத்தம்பியே!!!

Kavinaya said...

ஆஹா, கண்ணா! இந்தப் பாட்டைத்தான் சொன்னீங்களா! கிட்டத்தட்ட 20 வருஷம் ஆச்சு, இதை எழுதி :) அதோட, என்னென்னமோ சொல்லிட்டீங்க என்னைப் பத்தி - எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. அதுக்கெல்லாம் தகுதியான ஆளு நானில்லை. ஆனா இந்தப் பாட்டையும் (என்னையும்) சேர்த்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றி! என்னைப் பாடச் சொல்லாததுக்கும்! கண்ணன் பாட்டு வாசகர்கள் தப்பிச்சாங்க! :)

//கோதையின் கனவு பற்றி எல்லாருக்கும் தெரியும்! மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத, மாதவிப் பந்தல் கீழ்(ஹா ஹா ஹா), கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி என்று பாடிய கோதையரும் உண்டு!//

:)) மாதவிப் பந்தலாரைக் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன்னு இன்னும் யாரும் பாடலயா? :)

கோதைக் கனவுக்காரரை எப்படிக் கேட்டாலும் அவர் கனவு கலையறதா இல்லை, இப்போதைக்கு :)

//துயில்பவனுக்குக் கனவு வரும்!
துயில்பவனே கனவில் வந்தால்?
ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தமே!//

சூப்பர் முத்தாய்ப்பு!

மெளலி (மதுரையம்பதி) said...

ஊய்ய்ய்!!!!!!!
(விசில் சப்தமாக நினைத்துக்கோங்க)

பாட்டப் போடுங்கப்பா...

(ஆமாம், அந்த ஹெட் போன் லேடிதான் திருமதி கவிநயா-வா :-) )

மத்தபடி இந்த பாட்டை நான் படிக்கல்ல அப்படின்னு கவிதாயினிக்குச் சொல்லிக்கறேன் :)

Raghav said...

கண்ணன் கவிதையை கவித்துவமாக சொன்ன கவி கவிநயா... ( எப்புடி, நாங்களும் கவிதையா பேசுவோம்ல...)

கவிநயா அக்கா பாடனும்னா, கண்ணபிரான் ஆடனும்னு ஏதாவது condition போட்டுருப்பாங்க, அதனால தான் பாட்டு மிஸ்ஸிங்னு நினைக்கிறேன்.

jeevagv said...

பாதி கனவும் பாதி நனவும் சேர்ந்து பாட்டு சூப்பர். பாட்டை எழுதிய நயமானவருக்கும் பாட்டைக் பாடிக் கேட்ட ஆயனுக்கும் வாழ்த்துக்கள்!
அப்படியே, இடையில் ஒரு கேள்வியுமா? 122வது அதிகாரம்தானே?

குமரன் (Kumaran) said...

கோதை இன்னும் கனவு கண்டு கொண்டே இருக்கிறாள். அவள் எழுந்து திருப்பாவை பாட இன்னும் நாளாகும் போலிருக்கிறது இரவிசங்கர். :-)

பாருங்க கவிநயா அக்கா. நீங்க முருகனருள் பதிவுக்காகப் பாட்டு எழுதிக் கொடுத்தா அதுக்கு முன்னாடி முருகனின் மாமன் தனக்குரிய மரியாதையை வாங்கிக் கொண்டான். :-) மாமனுக்கு முதல் மரியாதை. மருகனுக்கு அடுத்த மரியாதை. இப்படிச் சொன்னா ஒருத்தர் கோவிச்சுகுவார்ன்னு தெரியும். ஆனா தற்செயலா நடந்ததைப் பத்தி சொல்லாம இருக்க முடியலை. :-) அப்படி யாராச்சும் ஏதாச்சும் சொன்னா இன்னொரு பாட்டு பாடிற மாட்டோம்?

கண்ணன் முகம் கண்ட கண்கள் மன்னர் முகம் காண்பதில்லை
கண்ணனுக்குத் தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை. :-)

Kavinaya said...

//பாட்டு இங்க அவர்குரலில் இல்லையா?கண்ணபிரான்ரவிசங்கருக்கு மட்டும் ஸ்பெஷலா?::) இதுக்குத்தான் பேர்ல கண்ணன் இருக்கணுமா?:):)//

நீங்க வேற, மைபாக்கா. நான் பாடியெல்லாம் காட்டல அவருக்கு. பாடமயே பயந்துட்டாரு. அதானே கண்ணா? :))

Kavinaya said...

//மத்தபடி இந்த பாட்டை நான் படிக்கல்ல அப்படின்னு கவிதாயினிக்குச் சொல்லிக்கறேன் :)//

படிக்காமயே விசிலடிச்ச செ.அ. அவர்களின் வெ.த. அவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்! படிச்சுட்டு வாங்க சாரே!

Kavinaya said...

வல்லிம்மாவுக்கும் ஜீவாவிற்கும் நன்றி! ஆயனும் பாடிக் கேட்கலங்க. ஆனா, அந்த ஆயன் கேட்டிருக்க வாய்ப்பிருக்கு! :)

//கவிநயா அக்கா பாடனும்னா, கண்ணபிரான் ஆடனும்னு ஏதாவது condition போட்டுருப்பாங்க//

இல்ல, நான் பாடாம இருக்கணும்னா.. அப்படின்னுதான் கண்டிஷன் போட்டேன், ராகவன் :)

Kavinaya said...

//மாமனுக்கு முதல் மரியாதை. மருகனுக்கு அடுத்த மரியாதை. இப்படிச் சொன்னா ஒருத்தர் கோவிச்சுகுவார்ன்னு தெரியும். ஆனா தற்செயலா நடந்ததைப் பத்தி சொல்லாம இருக்க முடியலை. :-) //

அது சரி, குமரா. நீங்கதான் இப்ப எந்தக் கட்சின்னு தெரிஞ்சு போச்சே! :)

Dr.N.Kannan said...

பாட்டை எங்கு கேட்பது. எல்லாச்சுட்டியும் எங்கெங்கோ காட்டுது, பாட்டுப் பாடலை!

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP