Sunday, May 04, 2008

92. தசாவதாரம்: கமல் பாட்டி பாடும் "முகுந்தா முகுந்தா"!

அட, நம்ம அசின் பொம்மலாட்டம் காட்டுறாங்கடே! தசாவதாரம் கதை இன்னும் ஃபுல்லாத் தெரியலை! ஆனா ஒரு விட்டுக்குள்ளாற மறைப்பாத் துணியைக் கட்டி, பின்னாடி இருந்து நிழல்-லயே பொம்மலாட்டம் நடத்துறாங்க அசின் & கோ. அசின் சும்மா துள்ளலாத் தான் இருக்காய்ங்க! :-)
(பொம்மலாட்டம் - தோல் பாவை ஆட்டம் பற்றித் திருக்குறள் கூட ஒன்னு இருக்கு! என்னான்னு கண்டு புடிங்க பார்ப்போம்)

சின்னப் பசங்க எல்லாம் கிருஷ்ணர்-கோபிகள் வேடம் கட்டி இருக்குதுங்க! வயசான பாட்டிகள் எல்லாம் கூட வேசம் கட்டுதுங்க! ஒரு பாட்டி இராவணன் மாதிரி பத்து தலையை வச்சிக்கிட்டு வாலாட்டது! திடுதிப்புனு பார்த்தா...பாட்டி இருமிக்கிட்டே பாடுது!
அடங் கொக்க மக்கா....நம்ம கமல் பாட்டியா அது??? :-)) நீங்களே பார்த்துச் சொல்லுங்க!


அழகான வீணை இசையுடன் துவங்குது பாட்டு! மிகவும் அழகான வாலி வரிகள்! நல்ல இசைக் கவிதை! அதுவும் துள்ளலான சாதனா சர்கம் குரலில்! குட் ஜாப் ஹிமேஷ் ரசம்சாதம்! :-) (அது என்னாங்க ரெஷாமிய்யா, மியா மியான்னு பேரு சரியா வாயில் வரலீங்க...)
இந்தாங்க...முழுப் பாடலையும் கேட்டுக்கிட்டே படிங்க!




முகுந்தா முகுந்தா - கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா - பிருந்தாவனந்தா அனந்தா
(முகுந்தா முகுந்தா)
வெண்ணை உண்ட வாயால் மண்ணை உண்டவா
பெண்ணை உண்ட காதல் நோய்க்கு மருந்தாக வா

(முகுந்தா முகுந்தா)
என்ன செய்ய நானோ தோல் பாவை தான்
உந்தன் கைகள் ஆட்டி வைக்கும் நூல் பாவை தான்

(முகுந்தா முகுந்தா)

(.....மிருதங்கம் கொட்டுகிறது!
ஜெய ஜெய ராம், ஜெய ஜெய ராம், சீதா ராம், ஜெய ஜெய ராம்
அசுரர் வந்தால் புன்னகைத்து பார்ப்பாய்...கொஞ்ச நேரம் ஆட விட்டு அவர் கணக்கைத் தீர்ப்பாய்-ன்னு அழகாச் சொல்லறாரு வாலி)


நீ இல்லாமல் என்றும் இங்கே - இயங்காது பூமி
நீ அறியாச் சேதி இல்லை - எங்கள் கிருஷ்ண சுவாமி
பின் தொடர்ந்து அசுரர் வந்தால் - புன்னகைத்து பார்ப்பாய்
கொஞ்ச நேரம் ஆட விட்டு - அவர் கணக்கைத் தீர்ப்பாய்


உன் ஞானம் போற்றிடாத - விஞ்ஞானம் ஏது?
அறியாதார் கதை போலே - அஞ்ஞானம் ஏது?
அன்று...அர்ஜுனனுக்கு நீ உரைத்தாயே - பொன்னான கீதை!
உன் மொழி கேட்க, உருகுகிறாளே - இங்கே ஓர் கோதை!


வாராது போவாயோ, வாசு தேவனே?
வந்தாலே வாழும், இங்கு என் ஜீவனே!
(ஜெய்..முகுந்தா முகுந்தா)

(இப்போ மனமயக்கும் கிட்டார் இசை....கூடவே ஜலதரங்கம்! சும்மாச் சொல்லக் கூடாது...ஹிமேஷ் ரெஷாம்மியா கலக்கி இருக்காரு! அவதாரங்கள் பட்டியல் - தசாவதாரத்தில் கிட்டத்தட்ட பாதிப் பட்டியல் போடறாங்க!)
மச்சமாக நீரில் தோன்றி மறைகள் தன்னைக் காத்தாய்
கூர்மமாக மண்ணில் தோன்றி பூமி தன்னை மீட்டாய்
வாமனன் போல் தோற்றம் கொண்டு வானளந்து நின்றாய்
நரன் கலந்த சிம்மமாகி ஹிரணியனைக் கொன்றாய்
ராவணன் தன் தலையைக் கொய்ய ராமனாக வந்தாய்
கண்ணனாக நீயே வந்து காதலும் தந்தாய்


இங்கு உன்னவதாரம் ஒவ்வொன்றிலும் நான்
உன் தாரம் ஆனேன்
உன் திருவடி பட்டால் திருமணமாகும்
ஏந்திழை ஏங்கு கிறேனே
மயில் பீலி சூடி நிற்கும் - மன்னவனே
மங்கைக்கு என்றும் நீயே - மணவாளனே!

(முகுந்தா முகுந்தா)

ஒவ்வொரு அவதாரத்திலும் பெருமாளுடன் திருமகளும் உருவமாகவோ, அருவமாகவோ வருவதை அழகா எளிய இனிய தமிழில் சொல்லுறாரு கவிஞர் - உன்னவதாரம் ஒவ்வொன்றிலும் நான் உன் தாரம் ஆனேன்!
அகலகில்லேன்! உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே ஆவோம்! உனக்கே நாம் ஆட் செய்வோம்! என்ற பாசுர வரிகள் எல்லாம் மனதில் இழையோடுகின்றன!


(பாட்டியின் ஸ்டைலான குரலில்...இருமிக் கொண்டே...)
உசுரோடு இருக்கான் - நான் பெற்ற பிள்ளே
ஏனோ இன்னும் தகவல் வரலே..
வானத்தில் இருந்து வந்து உதிப்பான்
சொன்னால் கேளுங்க அசடுகளே
வாடா மன்மதா...அழகா வாடா
உடனே வாடா.... வாடா.....
கோவிந்தா கோபாலா....)


முகுந்தா முகுந்தா - கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா - பிருந்தாவனந்தா அனந்தா



படம்: தசாவதாரம்
இசை: ஹிமேஷ் ரெஷாம்மியா
குரல்: சாதனா சர்கம், கமலஹாசன்
வரி: வாலி

19 comments :

ஷைலஜா said...

..//பாட்டி இருமிக்கிட்டே பாடுது!
அடங் கொக்க மக்கா....நம்ம கமல் பாட்டியா அது??? :-)) நீங்களே பார்த்துச் சொல்லுங்க!///

கமல்பாட்டியா? !! படம்பார்த்தாதான் உறுதியா சொல்லமுடியும்!

சாதனாசர்கம் குரல் சொர்க்கம் !

வீடு காட்சி எல்லாம் அச்சுஅசல் ஸ்ரீரங்கம் வீதில ஐய்யங்காராத்துல எடுத்தமாதிரி இருக்கே?:) அந்த பொம்மலாட்டம் அருமை..ஆமா இப்போல்லாமும் பொம்மலாட்டம் நடக்குதா? அந்தக்கலைபற்றி ஆராய்ந்து எழுதணும்னு நினச்சிட்டே இருக்கேன் எப்போமுடியுமோ தெரியல..தசாவதாரப்பாட்லை கண்ணன் பாட்டுல சேர்த்திட்டீங்க ரவி ஜோரா இருக்கு!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஷைல்ஸ்
இம்புட்டுக் காலையில எழுந்து என்ன கண்ணன் பாட்டு கேட்டுக்கிட்டு இருக்கீங்க!
சிற்றஞ் சிறுகாலே வா? மணி ஏழு!
போயி தூங்குங்க! :-))

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கமல் பாட்டிதான்.
இந்தப் படத்தில் சிறிதே தெரியும் பாட்டியின் முகம் தொலைக்காட்சியில் விளக்கமாகவே தெரிகிறது.
தோல்பாவை அருமை.
இது கண்ணன்பாட்டில வந்ததும் அற்புதம்.
தசாவதாரம் டைட்டில் பாட்டு கூட நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள். நன்றி ரவி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வீடு காட்சி எல்லாம் அச்சுஅசல் ஸ்ரீரங்கம்//

ஆகா...இப்படி இலவசமா திருவரங்கப்ரியா திருவரங்கம் போயி வராங்களா?

//ஆமா இப்போல்லாமும் பொம்மலாட்டம் நடக்குதா?//

எங்கூரு வாழைப்பந்தல்-ல திரெளபதி அம்மன் விழா போது நடக்கும் ஷைலுக்கா!

//அந்தக் கலை பற்றி ஆராய்ந்து எழுதணும்னு நினச்சிட்டே இருக்கேன்//

அச்சோ! சீக்கிரம் எழுதுங்க! ஃபோட்டா ஏதாச்சும் வேணும்னாச் சொல்லுங்க! ஊர்ல இருந்து கொண்டாரச் சொல்லுறேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அடங்கொக்க மக்கா!
அந்த தசாவதாரம் பதிவுனால, இந்த அழகான தசாவதாரப் பாட்டைப் பார்க்க மக்கள் வரலியா என்ன? :-))

கோபிநாத் said...

நான் சொல்லாமுன்னு வந்தேன் ஆனா வல்லிம்மாவே சொல்லிட்டாங்க...அருமையான பாடல் ;)

G.Ragavan said...

நுண்மான் நுழைபுலன் இல்லான் எழில்நலம் மண்மான் புனைபாவை யற்று

இதுதான் அந்தக் குறள்

G.Ragavan said...

சாதனா சர்கம் சிறப்பாப் பாடியிருக்காங்க.

சாதனா சர்கம் சோதனா நரகம்னு முந்தி கிண்டல் பண்ணுவேன். இப்ப அந்தக் கிண்டலைத் திரும்ப வாங்கிக்கிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//G.Ragavan said...
நுண்மான் நுழைபுலன் இல்லான் எழில்நலம் மண்மான் புனைபாவை யற்று//

நன்றி ஜிரா!

குமரன் பின்னூட்ட விதிப்படிங்க பாட்டுக்குங்க பொருள்ங்க சொல்லணுங்க ஜிராங்க! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஜிராவைத் தொடர்ந்து இதோ இன்னும் சில குறட்பாக்கள் - பொம்மலாட்டம் - பாவைக் கூத்து பற்றி

இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண் மா ஞாலம்
மரப்பாவை சென்று வந்தற்று.

யாசிப்பவர்கள்/வேண்டுபவர்கள், தம்மை நெருங்கக் கூடக் கூடாது என்று சொல்லுற மனிதர்களுக்கும், மரத்தால் செய்யப்பட்டு ஆட்டப்படும் வெறுமனே பொம்மைகளுக்கும் வேறுபாடே இல்லை.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நாண் அகத்தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர் மருட்டி அற்று.

உயிர் இருப்பது போல் கயிறால் ஆட்டி வைக்கப்படும் பொம்மைக்கும், மனதில் நாணம் என்னும் ஓர் உணர்வு இல்லாமல் உலகில் நடமாடுபவருக்கும் பெருசா வேறுபாடு ஒன்னும் இல்லை.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//G.Ragavan said...
சாதனா சர்கம் சிறப்பாப் பாடியிருக்காங்க.//

ஆமா! பெருசா டேமிள் கொலை எல்லாம் ஒன்னும் பண்ணல!
கமல் சொல்லிக் கொடுத்திருப்பாரு போல!

//சாதனா சர்கம் சோதனா நரகம்னு முந்தி கிண்டல் பண்ணுவேன்//

இது வேறயா!
நானு அப்பறம் இங்க இருக்குற என் ஈழ நண்பி ஒருத்தியும் வேற மாதிரி கிண்டல் பன்ணுவோம்!
சாதனா மேல் சோதனா போதுமடா சாமீ-ன்னு! :-)
(சாதனா சர்கம்-இன் தமிழ்ப்பாட்டை மட்டும் தான்)

//இப்ப அந்தக் கிண்டலைத் திரும்ப வாங்கிக்கிறேன்//

நான் உடனே வாபஸ் வாங்க முடியாது! அவளையும் கேட்டுட்டு சொல்லுறேன்!

மெளலி (மதுரையம்பதி) said...

என்னது பொம்மலாட்ட பொம்மையின்னு சொல்லிப்புட்டு, மரப்பாச்சி பொம்மை, மண் பொம்மை பத்தியெல்லாம் குறள் எடுத்து விடற மாதிரியிருக்கு....சாமியோவ், கொஞ்சம் வெளக்குங்கய்யா!!!!

மெளலி (மதுரையம்பதி) said...

என்னாங்க இது தலைவி சாதனாவை வேதனா படவைகிறீங்க இப்படி....

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மதுரையம்பதி said...
என்னது பொம்மலாட்ட பொம்மையின்னு சொல்லிப்புட்டு, மரப்பாச்சி பொம்மை, மண் பொம்மை பத்தியெல்லாம் குறள் எடுத்து விடற மாதிரியிருக்கு....சாமியோவ், கொஞ்சம் வெளக்குங்கய்யா!!!!//

அண்ணாச்சிக்கு மரப்பாச்சியில் சந்தேகம்! :-)
பொம்மலாட்ட பொம்மைகளில் பல விதம்-ங்க!
மரப்பாவை/மண்பாவை/புனைபாவை அப்படின்னு பல வகைகள்! அதுனால பொதுவா பொம்மலாட்டத்தைப் பாவைக்கூத்து-ன்னு இலக்கியம் பேசும்!

அதுல மரப்பாவை (wooden doll)/புனைபாவை (fabricated doll) - இதெல்லாம் கயிறு கட்டி நேராகவே ஆட்டுவாங்க! மண்பாவையைப் பொதுவா நிழல் காட்டித் தான் ஆட்டுவாங்க!

குறள் மட்டுமில்லாம எட்டுத்தொகை நூல்களில் இந்தப் பாவைக் கூத்து பேசப்படும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மதுரையம்பதி said...
என்னாங்க இது தலைவி சாதனாவை வேதனா படவைகிறீங்க இப்படி....
//

ஓ அப்ப தலைவி கீதாம்மா இல்ல!
சாதனா! உம்....இருங்க கீதாம்மா கிட்ட சொல்லுறேன்! ;-))

Kavinaya said...

ரொம்ப லேட்டா வந்துட்டேன் போல. பொம்மலாட்டம் பார்க்க முடியல :(

Sridhar V said...

கேட்ட உடனே பிடித்த பாடல்.

பாடல் வரிகளும் பிரமாதம். வாலிக்கு வெகு இயல்பாக வார்த்தைகள் வந்து விழுகின்றன. நல்லதொரு அனுபவமாக இருந்தது.

இந்த படத்தின் பல்வேறு ஆச்சர்யங்களில் இந்த பாவை கூத்தும் அது நடத்தும் கிருஷ்ணவேணி பாட்டியும் (குள்ளமாக தெரிகிறார்) ஒன்று. 90 வயதான பாட்டி என்பதினாலோ என்னவோ கொஞ்சம் மேக்கப் அதிகமாக்த்தான் இருக்கிறது. இன்னொரு வேடத்தில் 7.5 அடி உயர ஆப்கானியனாக வேறு வருகிறார். இறுதி காட்சியில் எல்லாரும் இணைந்து வேறு வருகிறார்கள். :-)

நல்லாத்தான் கிளப்புறாங்கய்யா... ஆவலை! :-)

ராஜேஷ் said...

வரிகளில் சில தவறுகள்
இதோ

இங்கு உன்னவதாரம் ஒவ்வொன்றிலும் தான்
உன் தாரம் நானே

வானத்தில் இருந்து வந்து குதிப்பான்
சொன்னால் கேளுங்க அசடுகளே
ஆராவமுதா...அழகா வாடா


மிக‌வும் அழகான‌ பாட‌ல் வாலி வாலிதான்

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP