Monday, April 14, 2008

ராமநவமி: இராமன் என்னும் கோபக்காரன்!

ஆராவமுதனைப் பாடிப்பற அயோத்திய வேந்தனைப் பாடிப்பற என்கிறார் பெரியாழ்வார்.

எப்போது நம்மால் பறக்கமுடியும்?

மனம் இலேசானால்..

மனம் எப்போ லேசாகும்?

அழுத்தங்கள் அகலும்போதுதான்..

அழுத்தங்கள் எனும் பாரங்கள் எப்போது நமக்குள் வரும்?

கவலையும் கோபமும் சூழும்போது வரும்.

கவலை நம்மைத் தின்று விடுமாம். அதனால் தான் பாரதி என்னைக் கவலைகள் தின்னத்தகாதென்று நின்னைச் சரணடைந்தேன் என்கிறார்.

நம்மைக் கவலையும் கோபமும் ஆட்கொள்ளாமலிருக்க இறைவனை சரணடைய வேண்டுமாம்.

சரி, அந்த இறைவனுக்கே கோபம் வந்தால்..?இறைவனுக்கு நம்மைப்போல காரணமேயின்றி கண்டதற்கும் கோபம் வந்துவிடுமா என்ன?
கருணையே உருவான கடவுளுக்கும் கோபம் வருமளவு நடந்து கொள்வதும் முறையா?
இந்தக் கோபம் சக்கரவர்த்தித் திருமகனை சிலநேரங்களில ஆட்கொண்டதாய் ராமாயணக் காவியத்தில் காண்கிறோம்.
அண்ணலை அந்த நிலைக்குக் கொண்டு வந்தவர்கள் யாரார் எனப் பார்ப்போமா?

ராமனுக்கு இளவரசுப் பட்டாபிஷேகம் செய்வதாய் தீர்மானிக்கப்பட்டு விட்டது ...ஊரே உற்சாகத்தில் மிதக்கிறது.அரச சபையில் அனைவர் முகத்திலும் குதூகலம் நிரம்பிவழிகிறது. ராமனும் சீதையும் பட்டாபிஷேகத்திற்குரிய விரதங்களை அனுஷ்டிக்கிறார்கள்.

இதற்கிடையில் மந்திரையின் பேச்சில் புத்தி தடுமாறி கைகேயி தசரதனிடம் ராமன் 14 வருடங்கள் வனவாசம் போகவேண்டும் என்றும் தனது
மகன் பரதன் முடிசூட்டிக் கொள்ள வேண்டுமென்றும்( வரம்) கேட்டு அதனை பெற்றும் விடுகிறாள்.

இதைக் கேள்விப்பட்ட ராமன் சற்றும் கோபமடையவில்லையாம்.
தந்தை சொல்லைக் காப்பாற்றுவதைவிட சாம்ராஜ்யம் பெரிதல்ல என நினைத்தானாம். ராமனின் முகத்தில் கோபத்திற்கு மாறாக மகிழ்ச்சிதான் தெரிந்ததாம்...'அவ்வாசகம் உணரக்கேட்ட அப்பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா' என்கிறார் கம்பர்.

எம்பெருமான் ஜிதக்ரோத: அதாவது கோபத்தைவென்றவன் ஆகிறார்.
சீற்றமில்லாதானைப்படிப்பற, சீதைமணாளனை பாடிப்பற! என்பது பெரியாழ்வார் வாக்கு.
கோபத்தை வென்ற தாசரதிக்கு எப்போது கோபம் வந்தது?

பிராட்டியை ராவணன் அபகரித்துப் போனதும் காணாமல் துடிக்கிறான் ராமன். மரத்தை, நதியை எல்லாம் கேட்கிறான். ஆவியை சனகன் பெற்ற அன்னத்தை, அமிழ்தின் வந்த தேவியை திகைத்தனை போலும் செய்கை என்று பின்னர் கிஷ்கிந்தா காண்டத்தில் கம்பர் கூறியதுபோல என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கிறான்.

கோபம் அதிகரிக்கிறது.
சக்கர்வர்த்தி திருமகனின் கோபத்தை ஒரு சர்க்கம் முழுவதும் ராமக்ரோத: என்று அரண்யகாண்டம் 64வது சர்கத்தில் வால்மீகி விவரிக்கிறார்.

ஒருகட்டத்தில் ராமன் "என்பிரியபிராட்டியை யார் கவர்ந்து சென்றார்? என்னிடம் திரும்ப ஒப்படைக்காவிட்டால் என்னுடைய பாணங்களால் மூவுலகங்களையும் அழித்துவிடுவேன்" என்று கோபத்துடன் சூளுரைக்கிறார்.

பிராட்டியின் பிரிவினால் மிகவும் கோபமாயிருக்கும் அண்ணனை இளையவர்(கோபத்திற்குப்பெயர்போனவர்)::0 அவரை சமாதானம் செய்கிறார்.
யாரோ ஒருவன் செய்த தவறுக்காக உலகத்திற்கு தண்டனை கொடுக்கலாகாது. கவர்ந்து சென்றவனைக் கண்டுபிடித்து அவனுக்கு
தண்டனை கொடுப்போம்.. ஆகவே நாம் தேடுதல் வேட்டையை செய்வோம்' என்றபின் சக்கரவர்த்தி திருமகனுக்குக் கோபம் தணிந்தது.

ஜிதக்ரோத: எனப்பட்ட ராமனுக்கும் பிராட்டியை ராட்சசன் கவர்ந்து சென்றதில் கோபம் எழுந்தது.
ஆனால் இளையபெருமாளால் சமாதனம் செய்யப்பட்டதும் அந்தக்கோபம் தணிந்தது மீளவும் ஜிதக்ரோதனான்.

அடுத்து வனவாசத்தில் காகாசுரன் சீதையின் உடலைத்தீண்ட அதனின்றும் பெருகிய ரத்தம் கண்டு கட்டுக்கடங்காத கோபம் உண்டாயிற்று
ராமனுக்கு.
காலசர்ப்பதைப் போல மூச்சு விட்டான் ராமன் என்கிறார் வால்மீகி.
ஒரு புல்லை எடுத்து பிரம்மாஸ்த்ர மந்திரத்தை அந்தக் காக்கையின் மேல் ஏவினான். அந்த அளவு கோபமுண்டாகிவிட்டது.

பிறகு காகாசுரன் அடைக்கலமாகி காலில் விழுந்ததும் அவனுக்கு கோபம் தணிந்து உயிர்பிச்சை அளித்தான். சரணம் என்றவரை தள்ளியதில்லை தசரத மைந்தன்.

அதேபோல இலங்கைசெல்ல கடல் அரசன் வழிவிடாதபோது கோபம் வந்தது.
'லட்சுமணா என் தனுசைக்கொண்டுவா.. கொல்லும் பாம்புகள் போன்ற குரூரமான பாணங்களையும் எடுத்துவா.. இந்தக் கடலை முற்றிலும் வற்றச் செய்துவிடுகிறேன். வானர வீரரகள் நடந்தே லங்கை செல்லட்டும் .."என்றதும் கடலரசன் அஞ்சி சரணம் எனப் பணிந்தான். அவனுடைய சரணாகதியை அண்ணலும் ஏற்றுக்கொண்டார்.

ராவணனுடன் போர் செய்கையில் அனுமனை தன் பாணங்களால் காயப்படுத்துகிறான் ராவணன். அதைக்கண்ட ராமனுக்குக் கோபம் வந்தது.
உடனே ராவணனின் ஆயுதங்களை அழித்து அவனை நிராயுதபாணியாக்கி ,'இன்று போய்நாளை வா' என்கிறான் .


இப்படித் தான் அடியார்க்கு தீங்கிழைத்தால் பெருமாளுக்குக் கோபம் மிகுந்து வருமென்பதற்கு பிரஹலாதன் பெரும் சாட்சி.
'அங்கண் ஞாலம் அஞ்ச 'என்றும் 'முளைத்த சீற்றம் விண்கடப்போய் மூவுலகும் பிறவும் அனைத்த அஞ்ச' என்று ஆழ்வார் அருளிச்செய்ததில் இதனை உணரலாம்.

தன் உயிரான இனிய சீதையைக் கவர்ந்ததும், தனக்காக் போராடிய வானர வீரர்களைக் கொன்று குவித்ததும் போன்ற தகாத செயலை செய்ததால் ராவணன் மீது ராமனுக்குக் கோபம் வந்தது. அதுவே ராவணனின் முடிவிற்கும் காரணமானது..

இதைத்தான் ஆண்டாளும், 'சினத்தினால் தென்னிலங்கை கோமானை செற்ற மனதுக்கினியானை' என்று திருப்பாவையில் சொல்கிறாள்.

இறைவனுக்கு நம்மீது கோபம் ஏற்படாத வகையில் நாம் நடந்துகொள்வோம் அப்படியே அறியாது தவறு செய்தாலும் அண்ணலின் பாதங்களை சரணமெனப்பிடித்துவிடுவோம்!
********************************************************************************

எம் எஸ் அவர்களின் இனியகுரலில் இந்தப்பாடல்......இங்கே கேட்கவும்!

முடியொன்றி மூவுலகங்களும் ஆண்டு உன்
அடியேற்கு அருளென்று அவன் பின் தொடர்ந்த
படியில் குணத்துப் பரத நம்பிக்கு அன்று
அடிநிலை ஈந்தானைப் பாடிப்பற
அயோத்தியர் கோமானைப் பாடிப்பற.

காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு
ஓராதான் பொன்முடி ஒன்பதோடு ஒன்றையும்
நேரா அவன் தம்பிக்கே நீளரசீந்த
ஆராவமுதனைப் பாடிப்பற
அயோத்தியர் வேந்தனைப் பாடிப்பற.

11 comments :

jeevagv said...

ஆகா,
அயோத்தியிக் கோமான்

இப்போதெங்கள்
அகமெல்லாம் கோமான்
-
இன்னிசையினால்!

குமரன் (Kumaran) said...

ஆகா. அருமை அருமை திருவரங்கப்ரியா. ஜிதக்ரோதன் அமிதக்ரோதனான படியை அழகாகச் சொன்னீர்கள். தனக்கு அபராதம் செய்தவர்களையும் மன்னித்துவிட்டுவிடுவான்; தன்னடியார்க்கு அபராதம் செய்தவர்களுக்கு மீட்சி அந்த அடியாரை முன்னிட்டு நிகழ்ந்தால் தான் முடியும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதனை இராமாவதார நிகழ்ச்சிகளின் மூலம் நன்கு காட்டிவிட்டீர்கள். சீற்றமில்லாதானைச் சினம் கொள்ள வைக்கும் காரணங்களை நன்கு காட்டியிருக்கிறீர்கள்.

பெரியாழ்வார் திருமொழியை வாசித்திருக்கிறேன். இன்று எம்.எஸ். அம்மாவின் இனிய இசையில் நன்கு அனுபவிக்க முடிந்தது. இயன்றால் இந்த பாசுரங்களின் பொருளையும் இடுங்கள். பின்னூட்டத்தில் இட்டாலும் சரி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மனத்துக்கு இனியான், சினமும் கொள்வதை நன்கு காட்டி இருக்கீங்க ஷைலஜா! அன்னை அண்ணலுடன் இருக்கும் வரை கோபம் என்பதும் இல்லை! வதம் என்பதும் இல்லை!
அயோத்தியின் முடி துறந்த போதும் சினமொன்று இல்லாதான் சீதையுடையான்!

நீங்க சொன்ன அனைத்து நிகழ்ச்சிகளிலும் காகாசுர நிகழ்வின் போது மட்டுமே அன்னை உடன் இருக்கிறாள்! அதனால் அது கோபத்தில் தொடங்கினாலும் வரத்தில் தான் முடிந்தது!

மற்றவற்றுள் எல்லாம் அன்னை அண்ணலுடன் இல்லை! அதனால் தானோ என்னமோ யாருமே தடுப்பார் இன்றி கோபம் எல்லை கடக்கிறது! ஒன்றுமே செய்யாத உலகத்தை அழிக்க சூளுரைப்பது, அனுமனைத் துன்புறுத்தும் இராவணனை தேரறுப்பது, கடலில் உள்ள உயிரனங்களை எல்லாம் மறந்து அழிக்க நினைப்பது....

சீதை அருகிருக்க சீற்றம் இல்லை!
சீற்றமில்லாதானைப் படிப்பற, சீதை மணாளனை பாடிப்பற! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அடுத்து கண்ணபிரானின் கோபம், முருகப்பெருமானின் கோபம், அனுமனின் கோபம் என்று கோபத் தொடர்களைக் கோபமில்லாமல் போடுங்க திருவரங்கப்ரியா! :-)

ஷைலஜா said...

ஜீவா (Jeeva Venkataraman) said...
ஆகா,
அயோத்தியிக் கோமான்

இப்போதெங்கள்
அகமெல்லாம் கோமான்
-
இன்னிசையினால்!

>>>>>>>
அகத்தில் அண்ணல் வந்து விட்டாரென்றால் புறத்தில் இனி மகிழ்ச்சிதானே?

நன்றி ஜீவா வருகைக்கும் கருத்துக்கும்!

ஷைலஜா said...

குமரன் (Kumaran) said...
ஆகா. அருமை அருமை திருவரங்கப்ரியா. ஜிதக்ரோதன் அமிதக்ரோதனான படியை அழகாகச் சொன்னீர்கள்.>>>

நன்றி குமரன்...படித்து கேட்டுமகிழ்ந்ததை பகிர்ந்துகொள்ளும் பேறு இன்றுகிட்டியது.


/பெரியாழ்வார் திருமொழியை வாசித்திருக்கிறேன். இன்று எம்.எஸ். அம்மாவின் இனிய இசையில் நன்கு அனுபவிக்க முடிந்தது. இயன்றால் இந்த பாசுரங்களின் பொருளையும் இடுங்கள். பின்னூட்டத்தில் இட்டாலும் சரி.//

எளிய பாடல்கள்தான்.பொருளை விரைவில் இடுகிறேன்.நமது ஆன்மீகச்செம்மல் அமெரிக்காவிலிருந்து இப்போது வந்து சூறாவளிப்பயணத்தில் சுறுசுறுப்பாயிருக்கும் கேஆர் எஸ் அவர்கள் என்னைவிட அழகாய் அருமையாய் அர்த்தம் சொல்லக்கூடும் !
நன்றி குமரன் வருகைக்கும் கருத்துக்கும்.

ஷைலஜா said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
மனத்துக்கு இனியான், சினமும் கொள்வதை நன்கு காட்டி இருக்கீங்க ஷைலஜா!>>>
நன்றி ரவி.ஏதும் சிறப்பாயிருந்தால் அத்தனையும் போகட்டும் இராமனுக்கே!

// அன்னை அண்ணலுடன் இருக்கும் வரை கோபம் என்பதும் இல்லை! வதம் என்பதும் இல்லை!
அயோத்தியின் முடி துறந்த போதும் சினமொன்று இல்லாதான் சீதையுடையான்!

நீங்க சொன்ன அனைத்து நிகழ்ச்சிகளிலும் காகாசுர நிகழ்வின் போது மட்டுமே அன்னை உடன் இருக்கிறாள்! அதனால் அது கோபத்தில் தொடங்கினாலும் வரத்தில் தான் முடிந்தது!
//
பெண்ணின் பெருமை இது! சக்தியின்றி சிவமே இல்லை! அன்பர்களைக் காப்பதற்காகவே அகலகில்லேன் என்று ஆண்டவன் மார்பில் உறைந்தவள் அல்லவா நம் அன்னை?//

வருகைக்கும் மேலான கருத்துக்கும் மிக்கநன்றி ரவி.

ஷைலஜா said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
அடுத்து கண்ணபிரானின் கோபம், முருகப்பெருமானின் கோபம், அனுமனின் கோபம் என்று கோபத் தொடர்களைக் கோபமில்லாமல் போடுங்க திருவரங்கப்ரியா?>>>>


கண்ணபிரான்(ரவிசங்கரு)க்குக் கோபம் வருமா என்ன?:)

முருகன் கோபத்தை எழுத உங்க அன்பு நண்பர்தான் சரி.கோபத்தையும் இனிய ஜீராபோல எழுதிவிடுவார்!!

அனுமனின் கோபம் லங்கா நாசம்!
அம்மாடியோவ் வேணாம் அதுவராது நமக்கு!!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சூறாவளிப்பயணத்தில் சுறுசுறுப்பாயிருக்கும் கேஆர் எஸ்//

சூறாவளியா? ஒரே கால் வலி தான் போங்க! :-))

//கண்ணபிரான்(ரவிசங்கரு)க்குக் கோபம் வருமா என்ன?:)//

வரும்! வரும்! வரும்! வரும்! :-)))

Anonymous said...

// கண்ணபிரான்(ரவிசங்கரு)க்குக் கோபம் வருமா என்ன?:// -

KRS அண்ணாவுக்கு ஏன் கோபம் வந்தது என்று மதுரையம்பதி அண்ணாவுக்குதான் தெரியும்.....:)

By,
Thambi

ஷைலஜா said...

Anonymous said...
// கண்ணபிரான்(ரவிசங்கரு)க்குக் கோபம் வருமா என்ன?:// -

KRS அண்ணாவுக்கு ஏன் கோபம் வந்தது என்று மதுரையம்பதி அண்ணாவுக்குதான் தெரியும்.....:)

By,
Thambi////



அன்புத்தம்பியே! உங்க மதுர அண்ணன்கிட்ட விஷயம் கேட்டு இந்த திருவரங்க அக்காக்கு சொல்லுங்கப்பா..கண்ணபிரானுக்குக் கோபம் வருமளவு எதுக்கு அப்படி யாரு நடந்திட்டீங்க ம்ம்?:)::)

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP