Tuesday, December 25, 2007

75. வீரமணியும் கோவி.கண்ணனும் "நைசாக" பாடிய கண்ணன் பாட்டு!

நம்ம கோவி.கண்ணன் அண்ணாச்சி, தலை குனிந்த வண்ணம், வெட்கத்துடன், ஒரு கண்ணன் பாட்டை மனமுருகப் பாடினார். அதுவும் வீரமணி ஐயாவின் ஊக்கத்தால்!
பாரதப் போர் முடிச்ச கண்ணன், பெரிய மீசையுடன் காட்சி தரும் திருவல்லிக்கேணி கோயில் பற்றி ஒரு அற்புதமான பாட்டு!

அடங் கொக்கமக்கா! கோவி எப்போ ரகசியமா ட்ரிப்ளிக்கேன் கோயிலுக்குப் போனாரு?
திருவல்லிக்கேணி தான் ட்ரிப்ளிக்கேன்-ன்னு வழக்கு மாறிப் போச்சு, சரி! எங்க கோவி எப்போய்யா வழக்கு மாறினாரு? சொல்லவே இல்ல!
சிங்கையின் சிங்கங்களுக்குக் கூடத் தெரியாதேப்பா! டிபிசிடி...ஒங்களுக்கு ஏதாச்சும் வெவரம் தெரியுமுங்களா?
SK ஐயா, நீங்கனாச்சும் கோவியை ட்ரிப்ளிக்கேன் மார்க்கெட்ல பாத்தீங்களா?

பாட்டு பாடி முடிஞ்சதும், கண்ணன் அருளால், கோவி கண்ணனுக்குக் கை மேல பரிசு!
என்னடா இது கலியுக கப்ஸா-ன்னு நினைக்கறீங்களா? :-)

மேல படியுங்க! ஓவர் டு கோவி அண்ணா!



கண்ணன் பாட்டு இடுகைகளைத் தொடர்ந்து படித்து ரசித்து வரும் வாசகன் என்ற முறையில் எனக்கும் அவர்களைப் பாராட்டும் வண்ணம் ஒரு இடுகை எழுத ஆவல் தான்.
வெறும் இடுகையாக எழுதாமல் நான் அறிந்த கண்ணன் பாடல்கள் பலவற்றில் ஒன்றை இந்த இடுகையில் சிறப்பிக்கலாம் என்று கருதி இதனை எழுதுகிறேன்.
கண்ணன் பாடல்கள் பதிவு குழுவினருக்கு எனது பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்.

சிறுநகரங்களில் வளர்பவர்களுக்கே கிடைக்கும் சில அனுபவம் எனக்கும் கிடைத்தது. சிறுநகரத்தில் சிறுவயதில் வாழ்ந்து வளர்ந்ததால் மார்கழிக் குளிரினையும் சோம்பலையும் விரட்டும் அதிகாலை வேளை, கோவில்களில் போடப்படும் பக்திப் பாடல்களை கேட்டும், பரங்கிப் பூவில் அலங்கரிக்கப்பட்ட வண்ணக் கோலங்களைப் பார்த்தும் வளர்ந்தவன் என்ற முறையில் மார்கழி மாதத்தில் எனக்கு நெருக்கம் அதிகம்;
கூடவே எனது பிறந்த நாள் மார்கழியில் வந்து செல்கிறது என்பதால் தமிழ் மாதத்தில் மார்கழி மீது தனிப்பட்ட ஈர்ப்பு :)
இனி இடுகைக்கு.

கருப்புச் சட்டைக்காரர் K.வீரமணி என்றாலே இருவர் தான் நினைவுக்கு வருவர் :-)
அதில் ஒருவர் தமிழ்ப் பற்றாளர்.
இன்னொருவர் இறைப் பற்றாளர். இரண்டாமவர் பாடிய ஐயப்பன் பாடல்கள் நினைவுக்கு வராமல் இருக்குமா?

ஐயப்பன் பாடல்களால் அவர் புகழ்பெற்றாரா? அவரால் ஐயப்பன் பாடல்கள் புகழ்பெற்றதா? என்றால் நான் சொல்வது இரண்டாவது தான்.
கார்த்திகை - மார்கழி மாதங்களில் அந்த குரல் கேட்காத தமிழகக் கோவில்களே இல்லை எனலாம். ஐயப்பன் பாடல் மட்டுமின்றி அவர் மனைவி ராதாவுடன் இணைந்து பாடிய அம்மன் பாடல்கள், கண்ணன் பாடல்கள் மிகவும் பரவசமூட்டுபவை.

எங்கள் வீடு பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ளதால், மார்கழி மாதம் முழுவதும் காலை 4 மணி முதல் காலை 8 மணி வரையிலும் அதே போன்று மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை பக்திப் பாடல்கள் நாள் தோறும்!
கேட்டு மனப்பாடமே ஆகி இருக்கிறது; திருவிளையாடல், சரஸ்வதி சபதம் ஆகிய படங்களின் வசனங்கள் மனப்பாடம் ஆனது. கார்த்திகை ஒண்ணாம் தேதியில் தொடங்கி காணும் பொங்கல் வரை, நாள் தோறும் இருமுறை ஒவ்வொரு பாடல்களையும் கேட்டு வ(ளர்)ந்திருக்கிறேன்.

அப்படிப்பட்ட பாடலில் ஒன்றாக K.வீரமணி - அவரது துணைவியார் பாடிய
கண்ணன் பாடல்களில் ஒன்றான 'பாரெல்லாம் புகழ்ந்திடும் சாரதி' என்ற பாடல் மிகவும் பிடித்த பாடல்.

ஏழாம் வகுப்பு படிக்கும் போது பாட்டுப் போட்டி நடக்கிறது என்று பெற்றோர்களிடம் சொல்ல, இந்த பாடலைப் பள்ளியில் பாடச் சொல்லி பயிற்சி கொடுத்தார் அப்பா.
வீட்டில் நன்றாகப் பாடினாலும் பள்ளியில் பலர் முன்னிலையில் பாடுவதற்கு கூச்சமாகத் தான் இருந்தது. இசைக்கருவிகள் எதுவும் இல்லாமல் வாய்பாட்டாகப் பாடவே ஐந்து நிமிடங்கள் பிடிக்கும் நீளமான பாடல்.

எவர் முகத்தையும் பார்க்காது தரையைப் பார்த்து வெட்கத்துடன் நடுக்கத்துடன் பாடியது நன்றாக நினைவிருக்கிறது. பாடி முடித்ததும் பலத்த கைத்தட்டுகள் கிடைத்தது;
அதன் பிறகு ஒவ்வொரு வகுப்பிற்கும் அழைத்துச் சென்று பாடச் சொன்னார்கள். நன்றாகப் பாடினேன்.
ஆண்டுவிழாவில் முதல் பரிசு என்று அறிவித்து. நூல் ஒன்றைப் பரிசாக கொடுத்தார்கள்.

இந்த பாடலின் சிறப்பு பன்னிரெண்டு மாதமும் கண்ணுக்கான உற்சவங்களைக் குறிப்பிட்டு பாடுவது...சித்திரை முதல் பங்குனி வரை நடக்கும் சிறப்பான உற்சவங்களைத் தொட்டு எழுதப்பட்ட பாடல். வீரமணி அவர்கள் கண்ணனைக் குறித்து பாட, ராதா அவர்கள் கண்ணனின் தேவியரின் உற்சவங்களைக் குறிப்பிட்டு பாடுவார்.
பன்னிரெண்டு மாதங்களில் மார்கழி குறித்துப் பாடும் போது பூபாள ராகத்தில் பாடி அசத்தி இருப்பார்கள்.

பதினேழு வருடங்களுக்கு முன்பு மறைந்து போன தந்தையை என் அருகில் கொண்டு வரும் பக்திப் பாடல்கள் பலவற்றில் இதுவும் ஒன்று. கொஞ்சம் பெரிய பாட்டு தான்!
கேட்டுப்பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும்.
இதோ சுட்டி




பாரெல்லாம் புகழ்ந்திடும் ஓர் சாரதி - அவர்
பார்த்தனுக்கு தேரோட்டும் சாரதி - அவர்
பார்த்தனுக்கு தேரோட்டும் சாரதி
எங்கள் சாரதி பார்த்த சாரதி
எங்கள் சாரதி பார்த்த சாரதி
பார்த்த சாரதி பார்த்த சாரதி


(வீரமணி)
தேரோடும் வீதியாம் திருவல்லிக் கேணியிலே
தேரோடும் வீதியாம் திருவல்லிக் கேணியிலே
ஈராறு மாதங்களும் இன்பமான திருவிழா.
ஈராறு மாதங்களும் இன்பமான திருவிழா.

சித்திரை மாதத்தில் தேவகி மைந்தனுக்கு
பத்து நாட்கள் பிரம்மோற்சவ திருவிழா
கருட வாகனத்தில் காட்சி தரும் கண்ணன்
அருள் தந்து நமைக் காப்பான் அனுமந்த வாகனத்தில்...

வைகாசி மாதம் தன்னில் வரதராஜ பெருமாளும்
மனம் மகிழ்ந்து பவனி வரும் அலங்காரத் திருவிழா

(ராதா)
ஆனி மாதம் லட்சுமி நரசிம்மன் அழகோடு
ஆனந்தக் காட்சி தரும் அரியதோர் திருவிழா
ஆனந்த முகில் வண்ணன் மாதேவியருடனே
ஆனந்த ஊஞ்சல் ஆடும் ஆனித் திருவிழா


சூடிக் கொடுத்த சுடர் கொடிக்கோர் திருவிழா
ஆடி மாதம் அன்னை ஆண்டாளின் திருவிழா
பாடினள் பாசுரங்கள் பரந்தாமனைப் புகழ்ந்து
நாடினள் நாரணனை நாயகனாய் கொண்ட
ஆடிப்பூரத் திருவிழா ஆண்டாளின் திருவிழா


(வீரமணி)
ஆயர்குலத்துதித்த அரசன் நம் கண்ணனுக்கு
ஆவணி பிறந்ததும் அவன் லீலை புரிவதற்கு
உரலிலே கட்டுண்ட உத்தமன் மாயனுக்கு
உறியடித் திருவிழா உயர்ந்த ஓர் திருவிழா


(ராதா)
வன்னிமரப் பார்வேட்டை கண்டருள வலம் வரவே
மன்னவனும் எழுந்தருள்வான் புரட்டாசி மாதம் தன்னில்
அவனியெல்லாம் காக்கும் அன்னை வேதவல்லிக்கு
அலங்காரம் ஒன்பது நாள் நவராத்திரி நன்னாள்
புரட்டாசித் திருநாள்... புரட்டாசித் திருநாள்

(வீரமணி)
கைத்தல சேவையாம் ஐப்பசத் திங்களில்
இத்தரை மீதில் எங்கும் காணாத சேர்வையாம்
வித்தகன் வேதப்பொருள் வேணுவி லோலனை
பக்தி கொண்டே பணியும் தீபாவளித் திருநாள்

கார்த்திகை மாதம் தன்னில் கார்முகில் வண்ணனும்
ஊர்வலம் வந்து வன போஜனமே கண்டருளி
சீர்மிகும் வனம் தன்னை சிறப்புடன் வலம் வந்த
சாரதியாம் கண்ணனுக்குத் தைலக்காப்பு திருவிழா


(பூபாளம்...)
மார்கழி மாதத்தில் துவாரகை மன்னனாம்
பார்த்தனின் சாரதிக்கு பகல் பத்து திருநாளாம்
காருண்ய சீலனின் இராப் பத்து உற்சவத்தில்
நாரணன் ஏகாந்த சேவையைக் காணலாம்


(ராதா)
வங்கக்கடல் கடைந்த மாயனை மணம் முடித்த
மங்கை திருப்பாவை ஆண்டாளும் மனம் மகிழ
மங்கலத் திருவிழா, மஞ்சள் நீராட்டு விழா
எங்கும் திருப்பாவை இசைத்திடும் தனுர் விழா


(வீரமணி)
காளிங்க நர்த்தனனாய் திருக்கோலம் கொண்ட கண்ணன்
தாள் பணிந்தோரை என்றும் தயவுடன் காப்பவன்
தர்ம மிகும் சென்னையில் ஈக்காடு கிராமம் சென்று
சர்வ நிலம் பார்க்கும் தர்மத்தின் தலைவனுக்கு
தைமாதத் திருவிழா தைப்பூசத் திருவிழா


(ராதா)
கேசவனாம் ஸ்ரீமன்னாதன் பிருகு மகள் வேதவல்லியை
மாசிமாதம் துவாதிசியில் மணம் புரிந்த திருவிழா
வாசுதேவன் மகிழ்ந்திடவே மாசியில் வரும் விழா - நல்
ஆசி தந்து மாதவனும் அருள் புரியும் திருவிழா
அப்பனுக்குப் பாடம் சொன்ன ஆறுமுகன் மாமனுக்கு
தெப்போற்சவத் திருவிழா திருவிழா


(இருகுரல்)
நம் இராமருக்கு
வரதராஜரருக்கு
பார்த்த சாரதிக்கு
நரசிம்மனுக்கு
ஸ்ரீமன்னாதருக்கு
தெப்போற்சவத் திருவிழா...திருவிழா


(வீரமணி)
மங்கல வாழ்வழிக்கும் மன்னன் ஸ்ரீராமனுக்கு
பங்குனி மாதத்தில் பாரெங்கும் திருவிழா

(இருகுரல்)
திங்கள் முகத்தானுக்கு திருவல்லிக் கேணியிலேயே
சிங்காரத் திருவிழா ராமநவமி திருவிழா


பாரெல்லாம் புகழ்ந்திடும் ஓர் சாரதி - அவர்
பார்த்தனுக்கு தேரோட்டும் சாரதி - அவர்
பார்த்தனுக்கு தேரோட்டும் சாரதி
எங்கள் சாரதி பார்த்த சாரதி
எங்கள் சாரதி பார்த்த சாரதி
பார்த்த சாரதி பார்த்த சாரதி

குரல்: வீரமணி, ராதா
வரிகள்: K சோமு
இசை: சோமு, கஜா


இராப் பத்து திருநாளில்,
இனிய பாட்டை தட்டச்சும் செய்து, பதிவும் அளித்த கோவி அண்ணாவுக்கு,
கண்ணன் பாட்டு அன்பர்களின் சார்பாக எங்கள் நன்றி!
கண்ணன் பாட்டில் இது 75 ஆம் பதிவு!

இதோ...கோவி சொன்ன திருவல்லிக்கேணி விழாவின் அசைபடம் ஒன்று! சித்திரைப் பிரம்மோற்சவத்தில் - கருட சேவை!

20 comments :

cheena (சீனா) said...

ஆகா ஆகா - அருமை அருமை - கோவி.கண்ணனை பாடச் செய்த அவரது தந்தையாருக்கு நன்றி. தந்தையாரை நினைக்கும் போதெல்லாம் பாடத் தோன்றுகிறது - நல்ல செயல். வீரமணி ராதா பாடும் பாடல் இனிமை. மார்கழி மாத அதிகாலைப் பனியில் , குளித்து, திருனீறிட்டு, பிள்ளையார் கோவிலுக்குச் சென்று, பக்திப் பாடல்கள் பாடி, வீடு திரும்பும் போது, பறங்கிப்பூக்கள் நிறைந்த கோலங்களை ஒப்பு நோக்கி, மனமகிழ்ந்த இளமைக் காலம் திரும்ப வராதா ?

ஆமாம் - பார்த்த சாரதிக்கு மட்டும் மீசை ஏன் ??

ஜெகதீசன் said...

கோவியாரே, நீங்க இவ்வளவு நல்லவரா இருந்தீங்களா சின்னப் பிள்ளயா இருந்தப்ப(இவ்வளவு பெரிய பாட்ட மனப்பாடம் செய்து பாடும் அளவுக்கு...)?
:))
இப்ப ஏந்தான் இப்படிக் கெட்டுப் போயிட்டீங்களோ தெரியல...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//cheena (சீனா) said...
ஆமாம் - பார்த்த சாரதிக்கு மட்டும் மீசை ஏன் ?? //

தத்துவ விளக்கம் குமரன் வந்து சொல்லட்டும்!
தத்துபித்து விளக்கம் அடியேன் சொல்கிறேன்!

அர்ச்சுனனின் தேர்ப்பாகன் கோலத்தில் இறைவன் நிற்கிறான். அது கர்ப்பூரப் பொடியால் வரையப்பட்ட மீசை!

அக்காலக் குல வழக்கப்படி தேர்ப் பாகன்களுக்கு மீசை உண்டு! அந்த வழக்கத்தின் படியே இறைவனும் காட்சி அளிக்கிறான்.

அண்ணன் பலராமன், மற்றும் தம்பி சாத்யகி...இருவரும் கூடவே திருவல்லிக்கேணியில் சிலையாய் நிக்கறாங்க! ஆனா அவங்களுக்கு மீசை இல்லை பாருங்கள்! தேர்ப்பாகன் பெருமாளுக்கு மட்டுமே மீசை! பாகனுக்கு உரிய கோல், தோல் செருப்பு, குதிரைச் சேணக் கருவிகள் என்று எல்லாமே இருக்கும்!

குதிரைக்குப் புல் அள்ளிப் போடுவது, தண்ணியும் கொள்ளும் காட்டுவது என்று எந்தப் பணியை ஏற்றுக் கொண்டானோ, அந்தப் பணியைச் சுய கெளரவம் பார்க்காமல் இயல்பாகச் செய்கிறான் இறைவன்! அதற்காகத் தன் தனித்தன்மையும் இழந்து விடவில்லை! கொள்ளும் அள்ளிப் போடுவான். ஞான வழியில் கீதையும் சொல்லுவான்!
Duty on the job and detatched attachment! கண்ணனிடம் கற்றுக் கொள்ள வேண்டிய விடயங்கள் நிறைய இருக்கு! :-)

மெளலி (மதுரையம்பதி) said...

பாட்டும், கோர்வையான அனுபவமும் சூப்பர். :)

//எந்தப் பணியை ஏற்றுக் கொண்டானோ, அந்தப் பணியைச் சுய கெளரவம் பார்க்காமல் இயல்பாகச் செய்கிறான் //

உண்மை. நாமும் அப்படி இருக்க பழகுவோம்.

cheena (சீனா) said...

தத்து பித்து விளக்கமே நல்லா இருக்கு ரவி, தத்துவ விளக்கம் குமரன் அளிக்கட்டும். பார்ப்போம்.

ஒரு வேலை என்று இறங்கி விட்டால், அதை முழுமையாகச் செய்ய வேண்டும் - ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும் - தான் யார் - தன் தகுதிக்கு இந்த வேலை தகுமா என்பதெல்லாம் எண்ணக்கூடாது. அதே சமயம் தனது தனித்தன்மையை சமயம் கிடைக்கும் போது காட்டி விட வேண்டும்.

இதைத்தான் கண்ணன் செய்கிறான். இல்லையா ரவி ?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மதுரையம்பதி said...
பாட்டும், கோர்வையான அனுபவமும் சூப்பர். :)//

நன்றி மெளலி அண்ணா.

//எந்தப் பணியை ஏற்றுக் கொண்டானோ, அந்தப் பணியைச் சுய கெளரவம் பார்க்காமல் இயல்பாகச் செய்கிறான் //
உண்மை. நாமும் அப்படி இருக்க பழகுவோம்.//

ஆகா...ஈசியா சொல்லிட்டீங்க!
அடியேனால் முடியுமா தெரியலையே! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஜெகதீசன் said...
கோவியாரே, நீங்க இவ்வளவு நல்லவரா இருந்தீங்களா சின்னப் பிள்ளயா இருந்தப்ப//

வாங்க ஜெகா
என்ன இப்பிடிக் கேட்டுட்டீங்க? கோவி அண்ணா நீங்களே சொல்லுங்க...(நாயகன் ஸ்டைலில்) நீங்க நல்ல பிள்ளையா? கெட்ட பிள்ளையா? :-))

எனக்கு என்னமோ கோவி நல்ல பிள்ளைன்னு தான் தோணுது! பேசாம சர்வேசனை ஒரு சர்வே போட்டுடச் சொல்லலாம்! :-)))

குசும்பன் said...

நல்ல பாட்டு.

ஜெகதீசன் said...
///:))
இப்ப ஏந்தான் இப்படிக் கெட்டுப் போயிட்டீங்களோ தெரியல... ///

உங்களையும் TBCDயையும் எத்தனை முறை சந்தித்தார்? சும்மா ஒரு விவரத்துக்குதான் கேட்டேன், கேள்விக்கும் இதுக்கும் தொடர்பு இல்லை:)))

கோவி.கண்ணன் said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//ஜெகதீசன் said...
கோவியாரே, நீங்க இவ்வளவு நல்லவரா இருந்தீங்களா சின்னப் பிள்ளயா இருந்தப்ப//

வாங்க ஜெகா
என்ன இப்பிடிக் கேட்டுட்டீங்க? கோவி அண்ணா நீங்களே சொல்லுங்க...(நாயகன் ஸ்டைலில்) நீங்க நல்ல பிள்ளையா? கெட்ட பிள்ளையா? :-))

எனக்கு என்னமோ கோவி நல்ல பிள்ளைன்னு தான் தோணுது! பேசாம சர்வேசனை ஒரு சர்வே போட்டுடச் சொல்லலாம்! :-)))
//

என்ன இப்பட்டி சொல்லிட்டிங்க ?

நாத்திகம் பேசினால் கெட்டவரா ?

எனக்கு ஆத்திகம் நாத்திகம் இரண்டும் இரு கண்கள் போன்றவை. :)

பகவான் கண்ணனின் ஆசிர்வாதம், அனுக்கிரகம் இல்லாமல் என்னால் நாத்திக கருத்தை சிந்திக்க முடியும் என்று நினைக்கிறீர்களா ?
:))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குசும்பன் said...
உங்களையும் TBCDயையும் எத்தனை முறை சந்தித்தார்? சும்மா ஒரு விவரத்துக்குதான் கேட்டேன், கேள்விக்கும் இதுக்கும் தொடர்பு இல்லை:)))//

குசும்பன் அண்ணாச்சி, வாங்க!
கேள்விக்கும் இதுக்கும் தொடர்பு இல்ல தான்!
ஆனா குசும்பன்-ங்கிற பேருக்கும் இதுக்கும் நல்லாவே தொடர்பு இருக்கு போங்க! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//என்ன இப்பட்டி சொல்லிட்டிங்க ?
நாத்திகம் பேசினால் கெட்டவரா ?//

அலோ, ஜெகா...அண்ணன் கேக்கறாருல்ல, பதில் சொல்லுங்க!
:-)

என்னைக் கேட்டா, நான் நாத்திகர்களில் தான் நல்லவங்க மிகுதி-ன்னு சொல்லிடுவேன்!

//பகவான் கண்ணனின் ஆசிர்வாதம், அனுக்கிரகம் இல்லாமல் என்னால் நாத்திக கருத்தை சிந்திக்க முடியும் என்று நினைக்கிறீர்களா ?
:))//

சூப்பர்! புத்தர் என்னும் அவதாரம் சொல்லாத நாத்திகமா?
சித்தர்களை விடப் பெரிய நாத்திகர்கள் உண்டா?

ஆனா, கோவி அண்ணா...
ஜெகா அதுக்காக உங்களைக் கெட்டுப் போயிட்டீங்கன்னு சொல்லலை!
ஏதோ ஒங்க பர்த்ட்டே ட்ரீட் பாக்கி இருக்காமே! அதுக்குத் தான் அப்படிச் சொன்னாரு! வார்த்தை தவறினாலும் ட்ரீட்டைத் தவறலாமா?
ஜெகா, வுட்டுறாதீங்க! :-))

கோவி.கண்ணன் said...

//ஏதோ ஒங்க பர்த்ட்டே ட்ரீட் பாக்கி இருக்காமே! அதுக்குத் தான் அப்படிச் சொன்னாரு! வார்த்தை தவறினாலும் ட்ரீட்டைத் தவறலாமா?
ஜெகா, வுட்டுறாதீங்க! :-))//

மோர் குடிக்கிறவருக்கு என்னத்த ட்ரீட் கொடுத்து ஹூம்....குழந்தை அவர். பிரிட்டானியா மேரியும், காம்ப்ளானும் கேட்டார் 'நோ' சொல்லிட்டேன், அதுதான் அவருக்கு கோவம்.

ஜெகதீசன் said...

//
ஆனா, கோவி அண்ணா...
ஜெகா அதுக்காக உங்களைக் கெட்டுப் போயிட்டீங்கன்னு சொல்லலை!
ஏதோ ஒங்க பர்த்ட்டே ட்ரீட் பாக்கி இருக்காமே! அதுக்குத் தான் அப்படிச் சொன்னாரு! வார்த்தை தவறினாலும் ட்ரீட்டைத் தவறலாமா?
ஜெகா, வுட்டுறாதீங்க! :-))
//
ஆமாம் கோவி... சந்தடி சாக்கில்,
ட்ரீட்ட மறந்துறாதீங்க... tbcd வரும்போது தருவதாக சொல்லீருக்கீங்க(sentosa- 2 நாள் முழு செலவு).... :)

kaialavuman said...

ஏற்கனவே TBCD - கோவி அவர்களின் மறுபக்கத்தை வெளியிட்டார்!!!!! இப்போது உங்கள் முறையா? இதில் Treaட் ‍ வேறு கேட்கிறீர்கள். ம்ம்ம்ம்.

kaialavuman said...

ஏற்கனவே TBCD - கோவி அவர்களின் மறுபக்கத்தை வெளியிட்டார்!!!!! இப்போது உங்கள் முறையா? இதில் Treaட் ‍ வேறு கேட்கிறீர்கள். ம்ம்ம்ம்.

தி. ரா. ச.(T.R.C.) said...

ஆஹா ஒடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்.

ஜெகதீசன் said...

பீர் அடிச்சாத்தான் ட்ரீட்டுன்னா அந்த ட்ரீட் எனக்கு வேண்டாம். ஆனாலும் உங்ககிட்ட எப்படி ட்ரீட் வாங்குறதுன்னு எனக்குத் தெரியும்....

நீங்க ட்ரீட் தரலைன்னா, நான் எழுதப் போற ABC 9898 தொடரில் "மலேசியாவுல எல்லா பஸ்ட்டாண்டும் ஒரே மாதிரிதான் இருக்கும் போல" என்ற தலைப்பில் அடுத்த அத்தியாயம் வரும்..(இதை எழுதித் தர பாரி.அரசு தயாரா இருக்கார்...)
:))

கோவி.கண்ணன் said...

//ஜெகதீசன் said...
பீர் அடிச்சாத்தான் ட்ரீட்டுன்னா அந்த ட்ரீட் எனக்கு வேண்டாம். ஆனாலும் உங்ககிட்ட எப்படி ட்ரீட் வாங்குறதுன்னு எனக்குத் தெரியும்....

நீங்க ட்ரீட் தரலைன்னா, நான் எழுதப் போற ABC 9898 தொடரில் "மலேசியாவுல எல்லா பஸ்ட்டாண்டும் ஒரே மாதிரிதான் இருக்கும் போல" என்ற தலைப்பில் அடுத்த அத்தியாயம் வரும்..(இதை எழுதித் தர பாரி.அரசு தயாரா இருக்கார்...)
:))
//

ஜெகதீசன்...........
கண்ணன் பாட்டு பதிவில் வந்து என்னன்னமோ சொல்றிங்க, நான் சொன்னது புஃல் மீல்ஸ் சொல்லவா ? என்று கேட்டால் நீங்க மோறு சாதம் போதும்னு பம்முறிங்க. அதைத்தான் சொன்னேன்.

ஜெகதீசன் said...

//
ஜெகதீசன்...........
கண்ணன் பாட்டு பதிவில் வந்து என்னன்னமோ சொல்றிங்க, நான் சொன்னது புஃல் மீல்ஸ் சொல்லவா ? என்று கேட்டால் நீங்க மோறு சாதம் போதும்னு பம்முறிங்க. அதைத்தான் சொன்னேன்.
//
என்னது இதெல்லாம்????
செந்தோசா - Siloso Beach resort - 2 நாள் அப்படின்னு பெருசு பெருசா ப்ராமிஸ் பண்ணீட்டு இப்ப புஃல் மீல்ஸ், மோறு சாதம்ன்னுட்டு ஜகா வாங்குறீங்க??? இதெல்லாம் நல்லாஇல்ல ஆமாம் சொல்லீட்டேன்...
:P

மலைநாடான் said...

கோவி. கண்ணன்!

நன்றி. நான் கேட்டிராத பாடல். ஆனால் பாடலைக்கேட்கும் போது ஞாபகத்துக்கு வந்தது, பூம்பாவைக்காகப் பாடிய ஞானசம்பந்தர்பதிகம்.

வீரமணியின் குரலில் பூபாளராகம், மார்கழிக்குளிர் காலை, சபரிமலைச்சாரல், ஒரு சுகானுபவம்.

//எனக்கு ஆத்திகம் நாத்திகம் இரண்டும் இரு கண்கள் போன்றவை. :)//

அது..அப்படிப்போடுங்க..:)

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP