Monday, July 23, 2007

மாடு மேய்க்கும் கண்ணே !

கண்ணன் பாடல்களில் எனக்கு ஆர்வம் மிகக் காரணம் என் அன்னை. வேளைகளில், ஏதாவதொரு கண்ணன் பாடலை முணுமுனுத்தபடியிருப்பாள். இதன் நீட்சி, கண்ணன் பாடல்களில் எனக்கும் எப்போதும் விருப்புண்டு. ரவிசங்கர் இந்தப்பதிவைத் தொடங்கிய காலத்திலிருந்து பார்த்தும், பாடல்களைக் கேட்டும் வருகின்றேன். மிக அழகான பாடல்களெல்லாம் பதிவாகியுள்ளன.

இவை பற்றிக் கதைக்கும் வேளைகளிலெல்லாம், ரவிசங்கர் , நீங்களும் கண்ணன் பாடல் பதிவில் பங்குகொள்ளலாமே என்பார். நானும் எப்படியாவது தவிர்த்துக்கொண்டுவிடுவேன். என் தப்பித்தல் தந்திரத்தை புரிந்து கொண்டோ என்னவோ, என் பெயரையும் பதிவில் இணைத்து அழைப்பு அனுப்பிவிட்டார் ரவி. இதற்கு மேலும் தவிர்க்க முடியாதென்பதால் இதோ நானும்...

கண்ணனைப் பலருக்கும் பிடிப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்று எண்ணிய போது, அவனை புனிதக் கடவுளாக அல்லாது, குறும்புகளும், குறைகளும் கொண்ட மனிதனாகக் கொண்டாட முடிகிறதென்பது ஒரு காரணமாகவிருக்குமோ என்று கூட எண்ணத்தோன்றியது. ( அடிக்க வந்தீடாதீங்கப்பா..:-)

கண்ணனை மாடு மேய்பவனாக, யதுகுல பாலனாகப் பார்த்து ரசிக்கும் இந்தப்பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. பிரபல கர்னாடக இசைக்கலைஞர் அருணாசாய்ராமின் குரலில் இப்பாடலை முதலில் கேட்டபோது, அவரது பாடும் லாவகமும், இசையில் காட்டும் மாறுதல்களும், ரசிக்கத்தக்கதாக இருந்தது. அவ்விசையின்பத்தை இங்கே, உங்களோடினைந்து ரசிக்க வந்துள்ளேன். வாருங்கள்...



ரவிசங்கர்! உங்கள் அன்புக்கு நன்றி. பாடல் உங்களுக்கும், ஏனையோர்க்கும் மகிழ்வு தருமெனில் அதுவே எனக்கும் இன்பம்.

பல்லவி:

யசோதை:
மாடு மேய்க்கும் கண்ணே நீ
போக வேண்டாம் சொன்னேன்


அனுபல்லவி:

கண்ணன்:
போக வேணும் தாயே
தடை சொல்லாதே நீயே


சரணம்:

காய்ச்சின பாலு தரேன்; கல்கண்டுச் சீனி தரேன்
கை நிறைய வெண்ணைய் தரேன்; வெய்யிலிலே போக வேண்டாம்

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

காய்ச்சின பாலும் வேண்டாம்; கல்கண்டுச் சீனி வேண்டாம்
உல்லாசமாய் மாடு மேய்த்து, ஒரு நொடியில் திரும்பிடுவேன்

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)
----------------------------------------------------------------------------

யமுனா நதிக் கரையில் எப்பொழுதும் கள்வர் பயம்
கள்வர் வந்து உனை அடித்தால் கலங்கிடுவாய் கண்மணியே

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

கள்ளனுக்கோர் கள்ளன் உண்டோ? கண்டதுண்டோ சொல்லும் அம்மா?
கள்வர் வந்து எனை அடித்தால் கண்ட துண்டம் செய்திடுவேன்

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)
----------------------------------------------------------------------------

கோவர்த்தன கிரியில் கோரமான மிருகங்கள் உண்டு
கரடி புலியைக் கண்டால் கலங்கிடுவாய் கண்மணியே

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

காட்டு மிருகமெல்லாம் என்னைக் கண்டால் ஓடி வரும்
கூட்டங் கூட்டமாக வந்தால் வேட்டை ஆடி ஜெயித்திடுவேன்

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)
----------------------------------------------------------------------------

பாசமுள்ள நந்தகோபர் பாலன் எங்கே என்று கேட்டால்
என்ன பதில் சொல்வேனடா என்னுடைய கண்மணியே

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

பாலருடன் வீதியிலே பந்தாடுறான் என்று சொல்லேன்
தேடி என்னை வருகையிலே ஓடி வந்து நின்றிடுவேன்

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)
----------------------------------------------------------------------------

23 comments :

G.Ragavan said...

கண்ணன் பாடல்கள் வலைப்பூவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்ல பாடல். இதை முழுக்கவும் கருநாடகாமப் பாடுவார்கள். அப்படிப் பாடாமல் சிறிது நாட்டுப்பாடல் முறைமையைக் கலந்தமை நன்றாக ரசிக்கும் படி இருந்தது.

காட்டில் ம்ருகங்கள் உண்டு போன்ற உச்சரிப்புகளைத் தவிர்த்திருக்கலாம்.

அது சரி...கழுத்தில் சங்கிலி ரொம்பவும் வித்தியாசமா இருக்கே?

குமரன் (Kumaran) said...

வாங்க மலைநாடான். மிக நல்ல பாடலுடன் வந்திருக்கிறீர்கள். முன்பொரு முறை 'இசை இன்பம்' பதிவில் இந்தப் பாடலை முதன்முதலில் பார்த்தேன்/கேட்டேன். இப்போது மீண்டும் அது கண்ணன் பாட்டில். இது தான் இந்தப் பாடலுக்குப் பொருத்தமான பதிவு. :-)

பித்துக்குளி முருகதாஸும் இப்படி சொற்களை அவரது தனிப்பாணியில் பலுக்குவாரே. அது போலவே தோன்றுகிறது அருணா அவர்கள் இசைக்கும் போதும்.

குமரன் (Kumaran) said...

இராகவன். எனக்கும் போன முறை கேட்டபோதும் இன்று கேட்டபோதும் இந்த 'ம்ருகங்கள் உண்டு' என்ற இடத்தில் தான் இடறியது. :-)

-/பெயரிலி. said...

மலேநாடார்
இன்னைக்கு எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சாகணும்!!

இது பாட்டுக்கச்சேரியா? நாட்டியகச்சேரியா? :-)

குமரன் (Kumaran) said...

அட ஆமா. நாட்டியக் கச்சேரி மாதிரி தான் இருக்கு. :-))

jeevagv said...

சாய்ராமின் பாடலை
கண்ணன் பாடலில்
வழங்கியதற்கு நன்றி!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சஸ்பென்சை வெற்றிகரமாக உடைத்த மலைநாடான் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்! :-)

கண்ணன் பாட்டில் தங்கள் வரவு நல்வரவாகுக!
துவக்கமே அட்டகாசமாக, அம்மா-பிள்ளையுடன் வந்திருக்கீங்க! :-)

இசை இன்பத்தில் நாட்டுப்புற இசையாய் இதை இடும் போது, அச்சோ கண்ணன் பாட்டில் இடாது போகிறோமே என்று எனக்கு உள்ளூர வருத்தம்!

பாருங்க, கண்ணன் உங்க மூலமாய் அவன் பாட்டை அவன் பதிவில் வலையேற்றிக் கொண்டான்! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அது சரி...கழுத்தில் சங்கிலி ரொம்பவும் வித்தியாசமா இருக்கே?//

ஜிரா எதப் பாக்கணுமோ அத கரெக்டாப் பாத்திடுவாரே! :-))
எவ்வளவு தேறும் ஜிரா, சங்கிலி? :-)

//காட்டில் ம்ருகங்கள் உண்டு போன்ற உச்சரிப்புகளைத் தவிர்த்திருக்கலாம்//

ஜிரா
இது கர்நாடக இசை வாணர்கள் பலர் செய்யும் ஒலி பேதம்! தமிழ் என்றில்லை...
தெலுங்கு, கன்னடம் எல்லாத்திலும் இதைச் செய்கிறார்கள்...ஜேசுதாஸ் கூடத் தன்னை அறியாமல் சில சமயம் இப்படிச் செய்து விடுவார் இசைக் கச்சேரிகளில்!

எந்த "ரோ" மகானுபாவுலு என்று "ரோ"வை இழுப்பது - உடனே அடியேன் இங்கே C-Rowவில் உட்கார்ந்து இருக்கிரேன் என்று ஒருவர் எழுவது மாதிரி ஆகி விடும்! :-)

ஸ்வரங்களுக்காக சொற்களைப் போட்டு அடிக்காமல் பாட கொஞ்சம் மொழியிடம் கனிவு வேண்டும்! எம்.எஸ்-இன் வெற்றிகளில் இதுவும் ஒன்று! இப்ப ஓரளவு நித்யஸ்ரீ செய்கிறார்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அவனை புனிதக் கடவுளாக அல்லாது, குறும்புகளும், குறைகளும் கொண்ட மனிதனாகக் கொண்டாட முடிகிறதென்பது ஒரு காரணமாகவிருக்குமோ என்று கூட எண்ணத்தோன்றியது. ( அடிக்க வந்தீடாதீங்கப்பா..:-)//

என்னது அடியா? :-)
அடி இல்லீங்க மலைநாடான் ஐயா!
கொடி பிடிக்க வேண்டும் உங்களுக்கு!
உண்மையை புட்டு புட்டு வைச்சிருக்கீங்க!

கண்ணன் நம் ஒவ்வொருவர் செய்கையிலும் கொஞ்சம் கொஞ்சம் இருக்கிறான்...சைட் அடிப்பது முதல், சையின்டிஸ்டு ஆவது வரை, எல்லாவற்றிலும் அவன் ஒரு பங்கு கொண்டிருப்பான்!

அதனால் தானே அவனைப் பூர்ண அவதாரம் என்று குறிப்பிட்டார்கள்! நீங்கள் சொல்வது முற்றிலும் சரி!

சரி, இந்தப் பாடல் தானே நீங்களும் உங்கள் மகளும் பாடியாதாகச் சொன்னீர்கள்! நீங்கள் பாடியதைக் கொடுத்திருக்கலாமே ஐயா! ஒலிப்பந்தல் சுட்டி இருந்தால் சேர்த்து விடுங்க...ப்ளீஸ்!

மலைநாடான் said...

ராகவன்!

இந்த நாட்டுப்பாடல் முறைமைதான் எனக்கு மிகவும் பிடித்தது.

காட்டு ம்ருகங்கள் என்பது மட்டுமல்ல, சாச்சின பாலையும் சற்றுக் குறிலாகவே உச்சரிக்கின்றார். முதற்தடவைகள் என் பிள்ளைகள் கேட்டபோது, அவர்களுக்கு அது விளங்கவில்லை.:)

கண்ணா!
கண்ணன் பாட்டில் பாட்டை மட்டுந்தான் கேட்கணும். கழுத்தையெல்லாம் பார்க்கப்படாது :)

குமரன் (Kumaran) said...

மலைநாடான், அது காய்ச்சின பாலு தரேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்; அப்போது தான் கற்கண்டு என்பதுடன் மோனையில் ஒத்துவரும்; கை நிறைய; வெய்யிலிலே என்பவற்றுடன் எதுகையில் ஒத்துவரும்.

மலைநாடான் said...

குமரன்!

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி. காய்ச்சின பாலு தரேன் என்பதை அவர்கள் சற்றுக் குறிலாக உச்சரிப்பதாகவே எனக்குத் தோன்றியது அதையே குறிப்பிட்டேன்.

நன்றி

மலைநாடான் said...

பெயரிலி!

பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும். ஆடுவோர் ஆனால் ஆடவும் தோன்றும், அதுபோல்தான் இதுவும் :)

மலைநாடான் said...

ஜீவா!

கருத்துக்கு நன்றி.

G.Ragavan said...

//// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//அது சரி...கழுத்தில் சங்கிலி ரொம்பவும் வித்தியாசமா இருக்கே?//

ஜிரா எதப் பாக்கணுமோ அத கரெக்டாப் பாத்திடுவாரே! :-))
எவ்வளவு தேறும் ஜிரா, சங்கிலி? :-) //

ஒரு காக்கிலோ தேறும்னு நெனைக்கிறேன் :)))))))))))))))

// //காட்டில் ம்ருகங்கள் உண்டு போன்ற உச்சரிப்புகளைத் தவிர்த்திருக்கலாம்//

ஜிரா
இது கர்நாடக இசை வாணர்கள் பலர் செய்யும் ஒலி பேதம்! தமிழ் என்றில்லை...
தெலுங்கு, கன்னடம் எல்லாத்திலும் இதைச் செய்கிறார்கள்...ஜேசுதாஸ் கூடத் தன்னை அறியாமல் சில சமயம் இப்படிச் செய்து விடுவார் இசைக் கச்சேரிகளில்! //

இது தம்மையும் அறியாமல் செய்யும் தவறல்ல ரவி. மொழியை அறியாமல் செய்யும் தவறு. ஒருமுறை கச்சேரியில் பாம்பே ஜெயஸ்ரீ ராகி தந்திரா என்ற புரந்தரதாசரின் கீர்த்தனையைப் பாடுகையில்.....கன்னடத்தைப் படுகொலை செய்து கொண்டிருந்தார். எனக்கே மனசுக்குச் சங்கடமாக இருந்தது என்றால்..கன்னடர்கள் கேட்டிருந்தால்? அப்படித் தப்புத் தப்பாய் ஏன் பாட வேண்டுமென்று தெரியவில்லை.

// எந்த "ரோ" மகானுபாவுலு என்று "ரோ"வை இழுப்பது - உடனே அடியேன் இங்கே C-Rowவில் உட்கார்ந்து இருக்கிரேன் என்று ஒருவர் எழுவது மாதிரி ஆகி விடும்! :-) //

எந்த்த "ரோம" கான பாவுலுகளும் நிறைய உண்டு. இப்பிடிப் பாடிச் சாதிப்பது என்னவென்றுதான் எனக்குப் புரியவில்லை. :)))))))))))))))))) ஜேசுதாசின் திருப்புகழைக் கேட்கனுமே. ஒலிப்பேழை இருக்கிறது. அதில் அவர் செய்த திருப்புகழ் கொலைகளைக் கேட்டு விட்டு...அதைத் திரும்பக் கேட்கவேயில்லை.

குமரன் (Kumaran) said...

ஆமாம் மலைநாடான். அந்தச் சொல்லை குறிலாகத் தான் உச்சரிக்கிறார்கள்.

குமரன் (Kumaran) said...

//ஒரு காக்கிலோ தேறும்னு நெனைக்கிறேன் :)))))))))))))))//

அது காக்கிலோ தேறலாம் இராகவன். ஆனா தங்கமா இருக்கணும்ன்னு இல்லையே. இப்ப 1 கிராம் தங்கம்ன்னு ஒன்னு வந்திருக்கு (ரொம்ப நாளா இருக்கோ என்னவோ; எனக்கு இந்த வருடம் தான் தெரியும்). இந்த மாதிரி வகை வகையா 1000 ரூபாய்க்கு மேலே கிடைக்குது.

Dr.N.Kannan said...

சூப்பர் பாட்டு! மலைநாடன். இதை நான் இதற்கு முன் கேட்டதில்லை. எப்படி எல்லோராலும் சீட்டில் உட்கார்ந்து கொண்டு இதைக் கேட்கமுடிகிறது? துள்ள வேண்டாம்? காவடிச் சிந்துவா? அருணாவே பந்து வந்து விழுந்துவிட்டது போல் பாவனை செய்கிறாரே!

கண்ணன் கருணைக் கடவுள். இவ்வளவு கீழிறங்கி தெய்வம் வந்ததாக இதுவரை யாரும் சொன்னதில்லை (சௌலப்யம்). அதனால் தான் ஆனானப்பட்ட ஆச்சார்யர்களெல்லாம் எங்கள் "ஆயர் தேவு" வை தலையில் வைத்துக் கொண்டாடுகின்றனர்!

மலைநாடான் said...

கண்ணன்!
காவடிச்சிந்து பாணியில் வரும் இப் பாடலில், அருணாவின் உச்சரிப்புத் தவறினை தவிர்த்து, கள்வனுக்கோர் கள்வனுண்டு எனும் இடத்தில் அவர்காட்டும் நுட்பத்தை, பாராட்டி மிருதங்ககாரர் தரும், ஆஹா ரசிப்பையும், அவர் பந்து விழும் சத்தத்தை மிருதங்கத்தில் தருவதை அருணா பாராட்டுவதையும் உன்னிப்பாகக் கேட்டால் ரசிக்கலாம். கூடுதலாக நான் ரசித்த இன்னுமொரு விடயம், காட்டு மிருகங்களெல்லாம் வரி வந்தபின், காட்டுப்பின்னணிக்கு தக்கதாக மிருதங்கத்தில் தரும் ஒலிநயம்.

இதைத்தான் இசை அனுபவம் என்பார்களோ.
நன்றி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மலைநாடர்!
இதை யூருயூப்பில் ரசித்தேன்.
சுப்புடுவால் பெண் மதுரை சோமு எனப் பாராட்டப் பெற்றவர். அருணா.
கம்பீரமாகவும் நளினமாகவும் பாடியுள்ளார்.
நற்றேர்வு.

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

Ahha Arumaiyana Paadal ... Naan thediya varigal..

Mikka Naandri.

C.Sugumar said...

இவ்வளவு அற்புதமான வலைதளம் இன்றுதான் என் கண்ணில் பட்டது. நிறைய பேருக்கு இணைப்பு அளித்துள்ளேன். மிகவும் மகிழ்ச்சி. விடாமல் படிப்பேன்.சேர்ந்து பாடிப்பழகுவேன். கண்ணன் கவியமுது பருகிவேன். நன்றி நன்றி நண்பரே.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP