Friday, June 08, 2007

55. பாரதியாரும் கண்ணதாசனும் கூட்டு சேர்ந்து போட்ட பாட்டு!

பாரதியாரும் கண்ணதாசனும் கூட்டாச் சேர்ந்து ஒரு பாட்டு எழுதினாங்க! :-)
என்ன.......அது ஆப்பரேஷன் கில்மா-ன்னு நினைக்கறீங்களா?
இல்லை இல்லை! அது எல்லாம் நம்ம வெட்டிப்பயல் தான் பதிவு போடுவாரு!
நான் சொல்வது உண்மை, உண்மை, உண்மையைத் தவிர வேறு ஒண்ணுமே இல்லீங்கோ!

கண்ணன் என் சேவகன் பாட்டு, பாரதியார் எழுதினார்.
ஆனால் அதைச் சினிமாவிற்கு அப்படியே எடுத்தாள முடியாது!
வரகவி கண்ணதாசனுக்கு, கண்ணன் மேல் இல்லாத உரிமையா?
பாரதியையும் கண்ணனையும் கோடம்பாக்கம் ஸ்டூடியோவில் உலவ விட்டுவிட்டார், நம்ம கவிஞர்!

மொதல்ல பாரதி பாட்டைக் கொஞ்சம் தொட்டுக்குவோம்!
ஹூம்......இந்தக் காலத்துல எங்க நல்ல வேலைக்காரங்க கிடைக்கறாங்க?
அப்படியே கிடைச்சாலும் "வேலைக்காரங்களையும் ட்ரைவர்களையும் வேலைய விட்டுத் தூக்கவே முடியாது...அப்பிடி ஒரு பாசம்"-னு நம்ம கவுண்டமணி ஒரு படத்துல மந்திரவாதியா அருள்வாக்கு டயலாக் கொடுப்பாரு!
ஆனா எல்லாக் காலங்களிலும் நெலமை, இதே தான் போலும்!
பாரதியாரே புலம்புவதைப் பாருங்க! :-)

கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார்:
வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்;
'ஏனடா, நீ நேற்றைக்கு இங்குவர வில்லை' யென்றால்
பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்;

வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்;
பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்;
ஓயாமல் பொய்யுரைப்பார்; ஒன்றுரைக்க வேறுசெய்வார்;
தாயாதியோடு தனியிடத்தே பேசிடுவார்;

உள்வீட்டுச் செய்தியெல்லாம் ஊர அம்பலத்து உரைப்பார்;
எள்வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்;
சேவகரால் பட்ட சிரமம் மிக உண்டு கண்டீர்;



சோர்ந்தான் பாரதி....வந்து சேர்ந்தான் கண்ணன்!

எங்கிருந்தோ வந்தான், 'இடைச்சாதி நான்' என்றான்;
மாடுகன்று மேய்த்திடுவேன், மக்களை நான் காத்திடுவேன்
வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்;
சொன்னபடி கேட்பேன்; துணிமணிகள் காத்திடுவேன்;
.....
காட்டுவழி யானாலும், கள்ளர் பயமானாலும்;
இரவிற் பகலிலே எந் நேரமானாலும்
சிரமத்தைப் பார்ப்பதில்லை, தேவரீர் தம்முடனே
சுற்றுவேன், தங்களுக்கோர் துன்பமுறாமல் காப்பேன்;
கற்ற வித்தை ஏதுமில்லை; காட்டு மனிதன்; ஐயே!


......என்று கண்ணன் தன் பாட்டுக்கு அடுக்குகிறான்!

கண்ணனுக்கு இடம் கொடுத்த பாரதியின் கதி என்னவாயிற்று?
ஆளாகக் கொண்டு விட்டேன் அன்று முதற்கொண்டு,
நாளாக நாளாக, நம்மிடத்தே கண்ணனுக்குப்
பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன்; கண்ணனால்
பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி முடியாது


கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல், என் குடும்பம்
வண்ணமுறக் காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டிறியேன்
......

நண்பனாய், மந்திரியாய், நல் ஆசிரியனுமாய்,
பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்,
எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதியென்று சொன்னான்
இங்கிவனை யான் பெறவே என்னதவஞ் செய்து விட்டேன்!

கண்ணன் எனது அகத்தே கால்வைத்த நாள்முதலாய்
எண்ணம் விசாரம் எதுவும் அவன் பொறுப்பாய்ச்
செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி,
கல்வி, அறிவு, கவிதை, சிவ யோகம்,
தெளிவே வடிவாம் சிவஞானம், என்றும்
ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கி வருகின்றன காண்!



இதைச் சினிமாவிற்கு அப்படியே போட்டா,
மினிமா ஆக வேண்டியது தான்:-)

பாருங்க, கண்ணதாசன் கலக்கும் சுவையான காப்பியை!
இதைக் காப்பின்னு சொல்லுறதே பெருங்குற்றம்...ஆனாலும் சுவைக்காகச் சொல்கிறேன்....
பாரதியை டிகாஷனில் இறக்கி, மணக்க மணக்க, ஏ.ஆர்.ரகுமான் தந்த லியோ காப்பியைப் போல் கொடுக்கிறான்!

படிக்காத மேதை படத்தில் ரங்காராவின் கவலையும் துக்கமும், சிவாஜியின் குணங்களையும் மனசு முன்னால கொஞ்சம் ஓட விட்டுக்குங்க!
ஓடலைன்னா....இருக்கவே இருக்கு youtube காட்சி....பதிவின் இறுதியில்!


சீர்காழியாரின் உருக்கும் குரலில், இதோ கேளுங்கள்!

எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்
கண்ணன்...
(எங்கிருந்தோ வந்தான்)


சொன்னபடி கேட்பான் துணிமணிகள் காத்திடுவான்
சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைப்பான்
கண்ணை இமையிரண்டும் காப்பது போல் என் குடும்பம்
வண்ணமுறக் காக்கின்றான் வாய் முணுத்தல் கண்டறியேன்
கண்ணன்...
(எங்கிருந்தோ வந்தான்)


பற்று மிகுந்து வரப் பார்க்கின்றேன் - கண்ணனால்
பெற்று வரும் நன்மையெல்லாம் பேசி முடியாது
நண்பனாய் ...
மந்திரியாய் ...
நல்லாசிரியனுமாய் ...

(யதா யதா ஹி தர்மஸ்ய க்ளானிர் பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய தத் ஆத்மானம் ச்ருஜாம் அகம்)

பண்பிலே தெய்வமாய் ...
பார்வையிலே சேவகனாய் ...
ரங்கன்.....

எங்கிருந்தோ வந்தான்

ரங்கன் ரங்கன் ரங்கன்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்!
ரங்கா ரங்கா ரங்கா ரங்கா!




படம்: படிக்காத மேதை
இசை: K.V.மகாதேவன்
வரிகள்: கண்ணதாசன்
குரல்: சீர்காழி கோவிந்தராஜன்

48 comments :

இலவசக்கொத்தனார் said...

இன்னா கனீக்சன் தரப்பா. படா கில்லாடிப்பா நீயி!!

Unknown said...

படிக்காத மேதை படம் பார்க்கும்போதே இந்த கனெக்ஷனை யோசித்ததுண்டு கண்ணபிரான். அதனால் இந்த பதிவின் பேடண்ட் ரைட்ஸிலும் கிடைக்கவிருக்கும் ராயல்டியிலும் எனக்கும் ஒரு பங்கு தரவேண்டும்:-)))).

MSATHIA said...

அட இங்கேயும் கண்ணதாசனா. கலக்கிட்டீங்க. அதாவது ரெண்டு பாட்டை கலக்கீட்டீங்கன்னு சொல்லவந்தேன்.

சிவமுருகன் said...

கண்ணன் வந்தான் என்ற பதிவில் முதல் வரியில் "கண்ணன் என் அடிமை" என்று எழுத எண்ணினேன். கிருஷ்ண ஜெயந்தி அதுவுமா இப்படி எழுதனுமா? ன்னு நினைத்து வேண்டாம்! பிறகு அடிமையை அழகனாக்கிவிட்டேன், அப்பறம் பாருங்க அப்படியே அகர வரிசையா வந்தது அது ஒரு கோஇன்ஸிடன்ட

இந்த கணக்சனை பார்க்கும் போது அந்த நிகழ்வு ஞாபகத்திற்க்கு வந்தது.

நல்ல வர்ணனை, நல்ல ஒப்பாய்வு.

Anonymous said...

ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப கண்ணைக் கட்டுதே...
நல்ல link பண்ணி சொல்லி இருக்கீங்க.பாரதியாரும் கண்ணதாசனும் இப்படி கூட்டு சேர்ந்த போட்ட பாட்டு சூப்பர் ;-))

siva gnanamji(#18100882083107547329) said...

நன்றி KRS
இதே பாடலை ஜி.ராமநாதன் அவர்களும் பாடியிருப்பதாக நினைவு.
கொஞ்சம் முயன்று பாருன்களேன்...

CVR said...

மிக அழகான பாடல கே.ஆர்.எஸ் அண்ணா. ரங்காராவின் நடிப்பை பாராட்டுவதா,சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் மயங்குவதா,இல்லை இனிமையான வரிகளில் மெய் மறந்து போவதா என்று தெரிய வில்லை.
பதிவுக்கு நன்றி!! :-)

வடுவூர் குமார் said...

அங்கிருந்து எடுத்து இங்கு போட திறமை மட்டும் போததது,ஞாபக சக்தியும் வேண்டும்,அது நம் கவிஞரிடம் ஏராளமாக இருந்திருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

நல்ல ஒரு லின்க் தந்திருக்கிறீர்கள்.
ரவி, இறைவனுக்கும் நமக்கும்.

குசேலர் கண்ணன் படம் வெகு ஜோர்.

எத்தனையோ மறக்க முடியாத கதைகள் இணைந்த லின்க்.

சிவாஜி ரங்கராவ்
பாரதி கண்ணதாசன்
சீர்காழி கே.வி.மஹாதேவன்

இது போலப் பாடல்கள் இனி ஏது.
கண்ணனையும் ரங்கனையும் பார்க்கவும் கேட்கவும் கொடுத்தற்கு
மிக நன்றி.

தருமி said...

நல்ல பாட்டு பற்றி போட்ட நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்

மலைநாடான் said...

ரவி!

சின்ன வயதில் இந்தப்பாடலையும், பாரதிபாடலென்றே நெடுநாள் நினைத்திருந்தேன். கேட்கும்போதெல்லாம் கேட்பவரை ரங்கனாக எண்ணி விம்ம வைக்கும் பாடல்

பதிவுக்கு நன்றி.

G.Ragavan said...

தமிழால் பிழைக்க வந்தவர்கள் பலரிருக்க பாரதியும் கண்ணதாசனும் தமிழ் பிழைக்க வந்தவர்கள்.

இந்தப் பாடலை இயற்றும் பொழுதே பாரதியின் அந்தப் பாடலை வைத்துத்தான் இயற்றியிருக்கிறார்கள். அது அப்பொழுதே முடிவு செய்தது.

இன்னொன்று...பாரதியின் பாடலை அப்படியே சினிமாவில் போட்டால் மினிமா ஆகாதுங்க. நின்னையே ரதியென்று நினைக்கின்றேனடி, சிந்துநதியின் மிசை நிலவினிலே, நிற்பதுவே நடப்பதுவே, வெற்றி எட்டுத் திக்கும் எட்ட, சொல்ல வல்லாயோ கிளியோ, சின்னஞ்சிறு கிளியே, வெள்ளைக் கமலத்திலே...இப்படி எக்கச்சக்கமாக இருக்கிறது. அது இசையமைப்பாளரின் திறமை.

நல்லதொரு பாடலை நினைவுகூர்ந்தமைக்கு நன்றி.

நாகை சிவா said...

கல்லூரியில் எனக்கு இந்த பாடல் பாடத்தில் உண்டு....

அருமையான மற்றும் ஒரு பாரதியார் பாடல்....

இந்த பாடலை நடத்தும் போது தமிழ் ஆசிரியர் அப்படியே உருகி போய் நடத்துவார்.... இதில் என்ன விசேஷம்னா அவர் ஒரு கிறிஸ்தவர்.... ஆனால் இந்த பாடலை நடத்தும் போது பாரதியாகவே மாறி கண்ணனை நினைத்து நடத்துவார்....

அருமையாக இருக்கும்

நினைவு கூர்ந்தமைக்கு நன்றி கண்ணா...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இலவசக்கொத்தனார் said...
இன்னா கனீக்சன் தரப்பா. படா கில்லாடிப்பா நீயி!!//

அட நீ வேறப்பா...கனீக்சன் போட்டது கண்ணதாசன் தான்பா..
அவரு தான்பா கில்லாடி!
நம்ம பேருல கண்ணன் ஒட்டிக்கினு கீறாரு...அவ்ளோ தான் :-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//செல்வன் said...
அதனால் இந்த பதிவின் பேடண்ட் ரைட்ஸிலும் கிடைக்கவிருக்கும் ராயல்டியிலும் எனக்கும் ஒரு பங்கு தரவேண்டும்:-)))).//

வாங்க செல்வன்.
யோசிச்சதுக்கே ரைட்ஸா? நல்ல காலம் பாட்டா நீங்க பாடி வைக்கல, பதிவும் போட்டு வைக்கல!
பேசாம உங்களுக்கு ராயல் டீ ஒரு கப் வாங்கிக் கொடுத்துடறேன்...ஓக்கே தானே!:-)

சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்-ன்னாரு பாரதி.
சேது சமுத்திர திட்டத்துல பாரதியாருக்கே ரைட்ஸ் கொடுப்பாரு-ங்கறீங்க நம்ம டிஆர் பாலு? :-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Sathia said...
அட இங்கேயும் கண்ணதாசனா. கலக்கிட்டீங்க. அதாவது ரெண்டு பாட்டை கலக்கீட்டீங்கன்னு சொல்லவந்தேன்.//

வாங்க சத்திய நட்சத்திரமே! :-)
நம்பிக்கை நட்சத்திரம் தெரியும்.
நீங்க சத்திய நட்சத்திரம்!

ரெண்டு பாட்டையும் கலக்குனது கண்ணதாசன் தாங்க!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சிவமுருகன் said...
கண்ணன் வந்தான் என்ற பதிவில் முதல் வரியில் "கண்ணன் என் அடிமை" என்று எழுத எண்ணினேன். கிருஷ்ண ஜெயந்தி அதுவுமா இப்படி எழுதனுமா? ன்னு நினைத்து வேண்டாம்!//

என்ன சிவா நீங்க, நல்ல சான்ஸை மிஸ் பண்ணிட்டீங்களே!
கிருஷ்ண ஜெயந்தி அதுவுமா அப்படி சொல்லியிருந்தீங்கனா எல்லாரும் முறுக்கு சீடையைப் பேசாம உங்க கிட்டயே கொடுத்துட்டு இருப்பாங்க!
நானும் உங்க வீட்டுக்கு வந்திருப்பேன்! :-)


//அப்படியே அகர வரிசையா வந்தது அது ஒரு கோஇன்ஸிடன்ட//

இப்ப தான் பார்த்தேன் சிவா...அ,ஆ ன்னு ஆரம்பிச்சு...நன்றாக இருந்தது!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

/ துர்கா|†hµrgåh said...
ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப கண்ணைக் கட்டுதே...//

கண்ணைக் கட்டுதா?
கண்ணனைக் கட்டுதா?
கரீட்டா சொல்லுங்க துர்கா! :-)

//நல்ல link பண்ணி சொல்லி இருக்கீங்க.//

லிங்க் பண்ணி சொல்றதுல எக்ஸ்பர்ட் நீங்க தானே! CVR ஐக் கேட்டாத் தெரியும் :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//siva gnanamji(#18100882083107547329) said...
நன்றி KRS
இதே பாடலை ஜி.ராமநாதன் அவர்களும் பாடியிருப்பதாக நினைவு.
கொஞ்சம் முயன்று பாருன்களேன்...//

வாங்க சிஜி..
பதிவு போட்டவுடன் வெளியில் சென்று விட்டேன்.
இன்று தேடுகிறேன்....

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//CVR said...
மிக அழகான பாடல கே.ஆர்.எஸ் அண்ணா.//

அண்ணா-வா?
என்னங்கண்ணா என்னிய போயி அண்ணா, மன்னான்னு
கன்னா பின்னான்னு கூப்புடுறீங்க?
வேணுமின்னா, கண்ணா-ன்னு கூப்பிடுங்க! ஓடி வந்து அருள்கிறேன்! :-)

//ரங்காராவின் நடிப்பை பாராட்டுவதா//

இதில் மொத்த திறமையும் "இயல்பா" காட்டி நடித்திருப்பார் அவர்! சூப்பரா இருக்கும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வடுவூர் குமார் said...
அங்கிருந்து எடுத்து இங்கு போட திறமை மட்டும் போததது,ஞாபக சக்தியும் வேண்டும்,அது நம் கவிஞரிடம் ஏராளமாக இருந்திருக்கிறது//

குமார் சார்...
மூலப் பாட்டின் மகத்துவத்தை மாற்றாமல் சினிமாவில் பாட்டு கொடுக்க, அவர விட்டா வேறு யாரு!

திருப்புகழ் வரிகளையும், ஆழ்வார் வரிகளையும் கூடச் சினிமாவில் அழகா கொண்டாந்து சேத்துடுவாரு!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

/வல்லிசிம்ஹன் said...
குசேலர் கண்ணன் படம் வெகு ஜோர்.
எத்தனையோ மறக்க முடியாத கதைகள் இணைந்த லின்க்//

ஆமாங்க வல்லியம்மா...எனக்கும் அந்தப் படம் மிகவும் பிடித்தது!

நண்பனாய்,
மந்திரியாய்,
நல் ஆசிரியனுமாய்,
பண்பிலே தெய்வமாய்ப்
பார்வையிலே சேவகனாய்,- இப்படி ஒவ்வொன்றுக்கும் இருக்கும் கதையைச் சொல்லிப் பதிவு போட்டா, ஒரு வருடத்துக்குப் போடலாம்!

//கண்ணனையும் ரங்கனையும் பார்க்கவும் கேட்கவும்//

அந்தப் பாத்திரத்துக்கு ரங்கன்-னு பேரு வச்சது மிகவும் பொருத்தம் வல்லியம்மா! ஏன்னு இன்னொரு பதிவில் சொல்லுறேன்! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தருமி said...
நல்ல பாட்டு பற்றி போட்ட நல்ல பதிவு//

நன்றி தருமி ஐயா!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மலைநாடான் said...
சின்ன வயதில் இந்தப்பாடலையும், பாரதி பாடலென்றே நெடுநாள் நினைத்திருந்தேன்.//

ஆமாங்க மலைநாடான் ஐயா.
அவ்வளவு நுட்பமா செஞ்சிருக்காரு கண்ணதாசன்...மூலப் பாடலின் வரிகளை அப்படியே அள்ளி அள்ளித் தெளிச்சிருக்காரு!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// G.Ragavan said...
இன்னொன்று...பாரதியின் பாடலை அப்படியே சினிமாவில் போட்டால் மினிமா ஆகாதுங்க.//

ஜிரா
இப்படிச் சொன்னதால தான் பாருங்க, இத்தனை பாரதி-திரையிசைப் பாடல்களைப் பட்டியல் இட்டுக் கொடுத்திருக்கீங்க! நன்றி! :-)

நல்லாப் பாருங்க...நான் "பாரதியின் பாடல்கள் எல்லாம்" என்று சொல்லவில்லை!
"இதைச் சினிமாவிற்கு அப்படியே போட்டா" என்று தான் சொன்னேன்!

இதை என்று எதைச் சொன்னேன் என்றால்:
"எண்ணம் விசாரம் எதுவும் அவன் பொறுப்பாய்ச்
செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி,
கல்வி, அறிவு, கவிதை, சிவ யோகம்,
தெளிவே வடிவாம் சிவஞானம், என்றும்"

கவியரசர் மூலப் பாடலின் மிடுக்கு மாறாது, அடுக்கித் தந்த திரைப்பாடல்கள் பல! அதில் இந்தப் பாடல் ஒரு மகுடம்!

துளசி கோபால் said...

பாட்டும் அருமை, பாட்டு வந்த படமும் அருமை. பதிவும் அருமை.

எங்கிருந்தோ வந்து இப்படி நல்ல பதிவுகளைத் தரும்
KRS , நல்லா இருக்கட்டும்.

VSK said...

இங்கிவரை யாம் பெறவே
என்ன தவம் செய்து விட்டோம்
எனத்தான் உங்களைப் பார்த்து சொல்லத் தோன்றுகிறது ரவி!

பாரதிக்கும், கண்ணனுக்கும் பெருமை சேர்க்கும் இந்தப் பாஅடலை நமக்கெல்லாம் அளித்து, குன்றாப்புகழ் பெற்றிருக்கிறார்.

படத்தில் இதனைப் பார்க்கும் எவரும் கண்களில் நீர் துளிக்காமல் இருக்க முடியாது!

ரங்காராவ் இப்பாடல் முழுதையும் ஆக்கிரமித்திருப்பார்.

ஆனால், ஒரே ஒரு இடத்தில், அந்த சிகரெட் டின் மேல் சிறிதாய் நின்றுகொண்டு, தன் சட்டையை இழுத்து விட்டுக்கொண்டு ஒரு நொடி வருவார் நடிகர் திலகம்.

வர்ணிக்க வார்த்தைகளே இல்லை!

மிக்க நன்றி, ரவி!

Geetha Sambasivam said...

மன அமைதிக்கு இந்தப் பாட்டைப் போட்டுக் கேட்க நேர்ந்தது உண்டு. இன்றும் மறுபடி கேட்க நேர்ந்தது. ரொம்பவும் நன்றி. அருமையான பாடல்கள் தேர்வு, படங்கள் அதை விட அருமை. நல்ல ரசனை! பாராட்டுக்கள்.

தென்றல் said...

அருமையான பாடல் வரிகள்!

நன்றி, KRS!

/ஆனால், ஒரே ஒரு இடத்தில், அந்த சிகரெட் டின் மேல் சிறிதாய் நின்றுகொண்டு, தன் சட்டையை இழுத்து விட்டுக்கொண்டு ஒரு நொடி வருவார் நடிகர் திலகம்.

வர்ணிக்க வார்த்தைகளே இல்லை!
/
ரொம்ப அழகா சொன்னிங்க, ஐயா!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நாகை சிவா said...
இந்த பாடலை நடத்தும் போது தமிழ் ஆசிரியர் அப்படியே உருகி போய் நடத்துவார்.... இதில் என்ன விசேஷம்னா அவர் ஒரு கிறிஸ்தவர்....//

உண்மை தான் சிவா.
பாரதி இந்தப் பாட்டில் பயன்படுத்தும் சக்தி வாய்ந்த சொற்கள் யாரையும் ஒரு கணம் கலக்கி விடும்.

//ஆனால் இந்த பாடலை நடத்தும் போது பாரதியாகவே மாறி கண்ணனை நினைத்து நடத்துவார்....
அருமையாக இருக்கும்//

ஹை! மலரும் நினைவுகளா?
கல்லூரியில் லூட்டிக்கு லூட்டிக்கும் ஆச்சு! தமிழுக்கு தமிழும் ஆச்சு! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//துளசி கோபால் said...
பாட்டும் அருமை, பாட்டு வந்த படமும் அருமை. பதிவும் அருமை//

டீச்சர்...உங்க கிட்ட சொல்ல என்ன இருக்கு!
பசங்க அம்மா அப்பா கிட்ட எப்படி எல்லாம் இருக்கக் கூடாதுன்னு அப்பப்ப நமக்கு நாமே அறிவுறுத்திக்கவே, இந்தப் பாட்டை அப்பப்ப கேட்பேன்! :-)
ரொம்பவும் பிடிக்கும்!

//எங்கிருந்தோ வந்து இப்படி நல்ல பதிவுகளைத் தரும்
KRS , நல்லா இருக்கட்டும்//

நீங்கள் கண்ணனை விட அன்பு காட்டறீங்க டீச்சர்!
எனக்கு ஏன்னு தெரியுமே!
ஏன்னா உங்க பேர்லயும் கோபால கண்ணன் ஒளிந்துள்ளார் :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//VSK said...
இங்கிவரை யாம் பெறவே
என்ன தவம் செய்து விட்டோம்
எனத்தான் உங்களைப் பார்த்து சொல்லத் தோன்றுகிறது ரவி!//

ஆகா என்ன இது பெரிய வார்த்தைகள் SK?
நாம் எல்லாரும் இப்படிப் பதிவுலகில் கூடிடத் தான் என்ன தவம் செய்து விட்டோம்!

//படத்தில் இதனைப் பார்க்கும் எவரும் கண்களில் நீர் துளிக்காமல் இருக்க முடியாது!//

ஹூம். டீச்சருக்கு நான் சொன்ன பதிலைப் பாருங்க!

//அந்த சிகரெட் டின் மேல் சிறிதாய் நின்றுகொண்டு, தன் சட்டையை இழுத்து விட்டுக்கொண்டு ஒரு நொடி வருவார் நடிகர் திலகம்.//

ஆமாங்க SK.
எனக்கு மிகவும் பிடிச்ச இடம் இது.
இதுவும், கண்ணன் கால் பிடித்து விடும் காட்சியும்....

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கீதா சாம்பசிவம் said...
மன அமைதிக்கு இந்தப் பாட்டைப் போட்டுக் கேட்க நேர்ந்தது உண்டு.//

ஓ...நீங்க மன அமைதிக்குக் கேட்பீங்களா?
நாங்க...பெரும்பாலும்...அச்சோ தப்பு செய்யக் கூடாது என்பதற்கு கேட்கிறோம் போல! கண்ணிர் வர வைத்து விடும் பாடல்.

//அருமையான பாடல்கள் தேர்வு, படங்கள் அதை விட அருமை. நல்ல ரசனை! பாராட்டுக்கள்//

நன்றி கீதாம்மா! கண்ணன் பாட்டில் இன்னும் நிறைய நல்ல பாடல்கள் எல்லாம் போட வேண்டும்!

வல்லிசிம்ஹன் said...

பாண்டுரங்கன் கனெக்ஷனா:-))))
சீக்கிரம் போடுங்க.

Anonymous said...

RAVI SIR,VANAKKAM.
Very good song from S.G.in 1984or85 he was singing this song along with his son in S.P.B.COLONY,ERODE. AT pattru migundu vara line, he showed his wrist watch to audience that, time is above 10 p.m.
ARANGAN ARULVANAGA.
anbudan
srinivasan.

கவி ரூபன் said...

அட... நம்ம கண்ணதாசனின் சிறப்பே எங்கிருந்து எடுத்தாலும் சிறப்பாக தருவது... எனக்கு எப்பவும் இந்தப் பாட்டில் மயக்கம் உண்டு... மறுபடியும் மனசுக்குள் அந்த மயக்கத்தை இந்தப் பதிவு கொண்டு வந்துவிட்டது...

பத்மா அர்விந்த் said...

கல்லூரி ஆண்டுவிழாவிற்காக எழுதிய கட்டுரை (திரைப்படப்பாடல்களும் பாரதியும் ) ஒன்றில் இதை குறிப்பிட்டிருக்கிறேன். நண்பர் எஸ்கேயுடன் பேசிக்கொண்டிருந்தபோது இந்த பாடலை பதிவிடவேண்டும் என்று சொல்லி இருந்தார். அதை பூர்த்தி செய்தமைக்கு நன்றி.

VSK said...

அட! இப்போதுதான் கவனித்தேன்!

பாடல் முடிந்ததும் கீழே இன்னும் பல போனஸ் பாட்டுகள்!

அற்புதம் ரவி!

சொல்லாமல் செய்வர் பெரியர்!
:))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தென்றல் said...
அருமையான பாடல் வரிகள்!
நன்றி, KRS!
வர்ணிக்க வார்த்தைகளே இல்லை!
/
ரொம்ப அழகா சொன்னிங்க, ஐயா!//

நன்றி தென்றல்.
எனக்கும் மிகப் பிடித்தமான கட்டம் அந்த சிகரெட் டப்பா சீன்....

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Anonymous said...
he was singing this song along with his son in S.P.B.COLONY,ERODE. AT pattru migundu vara line, he showed his wrist watch to audience that, time is above 10 p.m.//

பற்று மிகுந்து வர என்பதற்கு பத்து மிகுந்து வருவது சிலேடையா? :-)
நன்றி ஸ்ரீநிவாசன் சார்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கவி ரூபன் said...
எனக்கு எப்பவும் இந்தப் பாட்டில் மயக்கம் உண்டு... மறுபடியும் மனசுக்குள் அந்த மயக்கத்தை இந்தப் பதிவு கொண்டு வந்துவிட்டது...//

வாங்க கவிரூபன். இந்தப் பாடலின் மயக்கத்தன்மை என்னவென்றால் சொல்லாமல் பல விடயங்களைச் சொல்லும். வசைப் பாட்டாய் இல்லாமல் ஏக்கப்பாட்டாய் அமைந்தது தான் அவ்வளவு சிறப்பு!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பத்மா அர்விந்த் said...
கல்லூரி ஆண்டுவிழாவிற்காக எழுதிய கட்டுரை (திரைப்படப்பாடல்களும் பாரதியும் ) ஒன்றில் இதை குறிப்பிட்டிருக்கிறேன். நண்பர் எஸ்கேயுடன் பேசிக்கொண்டிருந்தபோது இந்த பாடலை பதிவிடவேண்டும் என்று சொல்லி இருந்தார். //

ஆகா...பத்மா...உங்க கல்லூரி மலரில் கட்டுரையா? எத்தனை ஆண்டு கால நினைவுகள்! அவசியம் பதிவிடுங்கள்...
எனக்கும் நான் கல்லூரி மலருக்கு எழுதிய கவிதைகளை இட வேண்டும் என்று நெடு நாள் ஆசை. நினைவில் இருந்து தட்டச்ச வேண்டும்! மலர் சென்னை வீட்டில் எங்குள்ளதோ?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//
VSK said...
அட! இப்போதுதான் கவனித்தேன்!
பாடல் முடிந்ததும் கீழே இன்னும் பல போனஸ் பாட்டுகள்!அற்புதம் ரவி!
சொல்லாமல் செய்வர் பெரியர்!
//

அச்சோ, சொல்லாமல் செய்த பெரியர் யூட்யூப் தான் SK. அவங்க தான் தொடர்புடைய மத்த காட்சிகளைக் கீழே காட்டறாங்க!
நாம எப்பவுமே சிறுத்தொண்டர் தான்! :-)

குமரன் (Kumaran) said...

இரவிசங்கர். திருஷ்டி பொட்டு வைக்கலாம்ன்னு நினைக்கிறேன். எல்லாரும் இப்படியே பாராட்டிக்கிட்டு இருந்தால் கண்ணு பட்டுறாதா? :-)

என் வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்ன்னு எழுதியிருக்கீங்க. சொற்குற்றமும் இருக்கிறது. பொருட்குற்றமும் இருக்கிறது. :-) என் வீட்டில் என்ன இல்லையென்றால் முரசறைவார்ன்னு சொல்லுங்க. பாரதியார் எள் வீட்டில் இல்லையென்றால்ன்னு தானுங்க எழுதியிருக்கார். சின்ன பொருள் இல்லாட்டியும் ஊரெல்லாம் போய் சொல்லுவாங்கன்னு குறைபட்டுக்கிறார். எழுத்துப்பிழையோ? அப்படியென்றால் அது சொற்குற்றம். அதனால் எழுந்ததும் பொருட்குற்றம்.

அப்பாடா. திருஷ்டி பொட்டு அழுத்தமா வச்சாச்சு.

மலைநாடன் சொன்னது போல் இது வரை படத்தில் வருவதும் பாரதியார் பாடல் என்று தான் எண்ணிக் கொண்டிருந்தேன். கண்ணன் என்று வரும் இடத்தில் மட்டுமே ரங்கன் என்று போட்டுவிட்டார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// குமரன் (Kumaran) said...
இரவிசங்கர். திருஷ்டி பொட்டு வைக்கலாம்ன்னு நினைக்கிறேன். எல்லாரும் இப்படியே பாராட்டிக்கிட்டு இருந்தால் கண்ணு பட்டுறாதா? :-)//

ஹிஹி
நக்கீரரே...
சொல், பொருளில் மட்டும் தானா குற்றம்?
உங்கள் பின்னூட்டத்தை எப்படித் தவற விட்டேன் என்றும் தெரியவில்லை! அது அவற்றை விடப் பெரும் பெரும் குற்றம் அல்லவா? :-)

இப்ப தான் பார்த்தேன் குமரன்! திருஷ்டிப் பொட்டு, ஒரு மாசம் கழிச்சி வச்சிருக்கீங்க! இருந்தாலும் சூப்பர்!

//உள்வீட்டுச் செய்தியெல்லாம்...
எள்வீட்டில் இல்லையென்றால்...//

எதுகை கூட கரெக்டாகத் தான் வருகிறது!
பதிவில் "என் வீட்டிற்குப்" பதிலா "எள் வீட்டில்" என்று மாற்றி விட்டேன் குமரன்!

எள்ளளவு குற்றம் இருந்தாலும் குற்றம் குற்றமே என்று
எள்ளாமல் எடுத்துரைத்த குமரனே நன்றி! :-)

Kavinaya said...

//வேணுமின்னா, கண்ணா-ன்னு கூப்பிடுங்க! ஓடி வந்து அருள்கிறேன்! :-)//

ச்வீட்டு! :)) கண்ணா!!!!

//தமிழ் பிழைக்க வந்தவர்கள்//

அழகா சொல்லிட்டார், ஜிரா.

//இங்கிவரை யாம் பெறவே
என்ன தவம் செய்து விட்டோம்
எனத்தான் உங்களைப் பார்த்து சொல்லத் தோன்றுகிறது ரவி!//

ஆமோதிக்கிறேன்! (ஆ! வேகமா மோதிக்கிட்டேன் போல. வலிக்குது :)

குமரன் ஒரு மாசம் கழிச்சு திருஷ்டிப் பொட்டு வச்சார். நான் ஒரு வருஷம் கழிச்சு.. மன்னிச்சுடுங்க ரவி.

Linda said...

//வேணுமின்னா, கண்ணா-ன்னு கூப்பிடுங்க! ஓடி வந்து அருள்கிறேன்! :-)// ச்வீட்டு! :)) கண்ணா!!!! //தமிழ் பிழைக்க வந்தவர்கள்// அழகா சொல்லிட்டார், ஜிரா. //இங்கிவரை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம் எனத்தான் உங்களைப் பார்த்து சொல்லத் தோன்றுகிறது ரவி!// ஆமோதிக்கிறேன்! (ஆ! வேகமா மோதிக்கிட்டேன் போல. வலிக்குது :) குமரன் ஒரு மாசம் கழிச்சு திருஷ்டிப் பொட்டு வச்சார். நான் ஒரு வருஷம் கழிச்சு.. மன்னிச்சுடுங்க ரவி.

Unknown said...

பாடலும் அருமை. தங்கள் விளக்கமும் அருமை

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP