Tuesday, January 02, 2007

23. ஆடாது அசங்காது வா கண்ணா!

இப்பதிவு அன்பர் பிரேம்குமார் சண்முகமணி அவர்களின் சார்பாக!
பாடலைக் கேட்க, இங்கே சொடுக்கவும் - K.J. ஜேசுதாஸ் பாடியது
அன்பர் மலைநாடான் ஐயா, பித்துக்குளி முருகதாசர் பாடிய சுட்டியும் கொடுத்துள்ளார்; இதோ!

மற்ற கலைஞர்கள் பாடியது/இசைத்தது பதிவின் இறுதியில்!




ஆடாது அசங்காது வா கண்ணா...
உன் ஆடலில்
ஈரேழு புவனமும்
அசைந்து அசைந்தாடுதே - எனவே
ஆடாது அசங்காது வா கண்ணா


ஆடலைக் காணத் தில்லை அம்பலத்து இறைவனும் தன்
ஆடலை விட்டு இங்கே கோகுலம் வந்தான்
ஆதலினால் சிறு யாதவனே - ஒரு
மாமயில் இறகுஅணி மாதவனே - நீ

(ஆடாது அசங்காது வா)

சின்னஞ்சிறு பதங்கள் சிலம்பொலித் திடுமே - அதைச்
செவிமடுத்த பிறவி மனங்களித் திடுமே
பின்னிய சடைசற்றே வகைகலைந் திடுமே - மயில்
பீலி அசைந்தசைந்து நிலைகலைந் திடுமே


பன்னிரு கைஇறைவன் ஏறுமயில் ஒன்று
தன் பசுந்தோகை விரித்தாடி பரிசளித்திடுமே



பாடி வரும் அழகா
உனைக் காணவரும் அடியார் எவராயினும்
கனக மணிஅசையும் உனது திருநடனம்
கண்பட்டுப் போனால் மனம் புண்பட்டுப் போகுமே

(ஆடாது அசங்காது வா)




கர்நாடக இசை/ஹிந்துஸ்தானி/மெல்லிசை:

SP Ram
Maharajapuram Santhanam
Sudha Raghunathan
Bombay Sisters
Sowmya

மார்கழி 19 - குத்து விளக்கெரிய - பத்தொன்பதாம் பாமாலை

இன்று மார்கழித் திருவாதிரையும் கூட! தில்லை ஆருத்ரா தரிசனம்!
முனியே நான்முகனே முக்கண்ணப்பா!
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி!!




எழுதியவர்: ஊத்துக்காடு வேங்கட கவி
ராகம்: மத்யமாவதி
தாளம்: ஆதி

33 comments :

குமரன் (Kumaran) said...

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவு ஏலோர் எம்பாவாய்

குத்து விளக்கு எரிய யானைத் தந்தத்தால் செய்த கால்களையுடைய கட்டில் மேல் மெத்தென்ற பஞ்சணையின் மேல், கொத்தாக மலர்ந்த பூக்களை அணிந்த கூந்தலையுடைய நப்பின்னையின் மார்பின் மேல் தன் மலர் மார்பை வைத்துக் கிடந்தவனே! வாய் திறவாய்.

மையினால் எழுதப்பட்டக் கண்களை உடையவளே! நீ உன் மணவாளனை எத்தனை நேரம் ஆன பின்னாலும் துயில் எழ விடவில்லை காண். எள்ளளவு நேரமும் அவன் பிரிவை நீ சகிக்கவில்லை. நீ எங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டியிருக்க இப்படி எங்களுக்கு எதிராக இருப்பது உனக்குத் தகுதியன்று.

Anonymous said...

ரவி
இதுவும் எனக்கு மிகவும் பிடித்த ஊத்துக்காடு வேங்கட கவியின் பாடல் அதுவும், கே.ஜே.யேசுதாஸ் குரலில் கேட்டால் சொல்லவும் வேண்டுமா?
நன்றி

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//எத்தனையேலும் பிரிவாற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவு ஏலோர் எம்பாவாய்//

தாயாரின் பெருங்கருணைத் தத்துவ விளக்கத்தை எப்படி எல்லாம் எடுத்துரைக்கிறார்கள், பாருங்க!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//செல்லி said...
ரவி
இதுவும் எனக்கு மிகவும் பிடித்த ஊத்துக்காடு வேங்கட கவியின் பாடல் அதுவும், கே.ஜே.யேசுதாஸ் குரலில் கேட்டால் சொல்லவும் வேண்டுமா?//

யேசுதாஸ், பரதநாட்டியப் பாடல் போல் அல்லாது, வேறு ஒரு மெட்டில் பாடுவார்!
நன்றி செல்லி!

வல்லிசிம்ஹன் said...

திருவாதிரைத் திருநாள்.
நப்பின்னையின் அருள்பார்வை,
கண்ணனின் கள்ளப்புன்னகை.
தாயாரை விளித்தால்தான் தகப்பனும் வருவானோ?

பஞ்சசயனத்துக்கு ஐந்து அங்கங்கள் உண்டு என்று பெரியோர் விளக்குவார்கள்.
கோட்டுக்கால் யானைன் தந்தத்தால் செய்த கட்டில்,
அதுவும் கண்ணன் வென்ற யானையின் தந்தங்கள்.
இத்தனை பேருக்கு மோக்ஷம் கொடுத்த கண்ணன் நம்மையும் கவனிக்காமல் விடுவானா..

பார்த்துக்கொள்ளுவான்.
நன்றி குமரன்,ரவி

ஷைலஜா said...

ஆடாது அசங்காது கேட்டுக்கொண்டே இருக்கலாம்போன்றதான பாடல். தமிழ்தான் எத்தனை இனிமை!
ஷைலஜா

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வல்லிசிம்ஹன் said...
அதுவும் கண்ணன் வென்ற யானையின் தந்தங்கள்.
இத்தனை பேருக்கு மோக்ஷம் கொடுத்த கண்ணன் நம்மையும் கவனிக்காமல் விடுவானா..//

ஆகா, கட்டிலின் காலில் இவ்வளவு விடயங்கள் உள்ளனவா?
சொன்னதற்கு நன்றி வல்லியம்மா!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஷைலஜா said...
ஆடாது அசங்காது கேட்டுக்கொண்டே இருக்கலாம்போன்றதான பாடல். தமிழ்தான் எத்தனை இனிமை! //

நன்றிங்க ஷைலஜா!
தமிழ் படிக்க இனிமை, பேச இனிமை, பாடவும் இனிமை, பாடி ஆடவும் இனிமை!

வெற்றி said...

ரவி,
ஆகா! நான் விரும்பிக் கேட்கும் பாடல்களில் ஒன்றை இங்கு தந்தமைக்கு மிக்க நன்றி. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.

இன்று இப் பாடலை எழுத்துருவில் பார்க்கும் வரை, பிழையாகத்தான் முணுமுணுத்து வந்திருக்கிறேன்.

ஆடாது அசையாது வா கண்ணா

என்று தான் இவ்வளவு நாளும் நினைத்திருந்தேன்.

நன்றி

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வெற்றி said...
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.//

நன்றி வெற்றி!

//ஆடாது அசையாது வா கண்ணா
என்று தான் இவ்வளவு நாளும் நினைத்திருந்தேன்//

உண்மை தாங்க; நானும் பல பாடல்களை இப்படித் தான் இருக்கும் என்று நினைத்துப் பாடி வந்திருக்கிறேன். அப்புறம் யாராவது திருத்துவார்கள்!

அதுவும் வேகமாகப் பாடப்பாடும் பாடல்களின் சில வார்த்தைகள் அவ்வளவாகப் பிடிபடாது. கண்ணன் பாட்டு வலைப்பூ உங்களுக்கு உதவியாய் இருப்பதை அறிந்து மகிழ்ச்சியே!

கால்கரி சிவா said...

KRS, லஞ்ச் அவரில் அனைத்து பாடகர்களின் இந்த பாடலை ஆடாது அசங்காது கேட்டேன். நன்றி


தில்லை சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா என்ற பாடலை ஒலிபரப்ப நேயர் விருப்பமாக கேட்கிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கால்கரி சிவா said...
KRS, லஞ்ச் அவரில் அனைத்து பாடகர்களின் இந்த பாடலை ஆடாது அசங்காது கேட்டேன். நன்றி//

ஆகா...லஞ்ச் அவரில் ஆடாது அசங்காதா? மதிய உணவு சாப்பிட்டீர்களா? இல்லை பாட்டு கேட்டூக் கொண்டே மறந்து விட்டீர்களா? :-)

//தில்லை சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா என்ற பாடலை ஒலிபரப்ப நேயர் விருப்பமாக கேட்கிறேன்//

தந்துட்டாப் போச்சு! என்ன, சிவனார் பாட்டு என்ற புது வலைப்பூ தொடங்கணும்! கால்கரி சிவா, கைலாய சிவாவைக் கேட்கறீங்க! :-))

Anonymous said...

இந்த பாட்டுக்கு மிக மிக பொருத்தமான படம். பன்னிரு கை இறைவன் ஏறு மயில் ஒன்று தன் பசுந்தோகை விரித்து ஆடுகிறது. மற்றொன்று பாட்டில் நம்மை பற்றி ஒன்றும் சொல்லவில்லை என்று வருந்துகிறது. கண்ணனை இறைஞ்சுகிறது. மிக சிறப்பு.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Sai Devotee 1970s said...
இந்த பாட்டுக்கு மிக மிக பொருத்தமான படம். பன்னிரு கை இறைவன் ஏறு மயில் ஒன்று தன் பசுந்தோகை விரித்து ஆடுகிறது.//

நன்றி சாயிபக்தரே! அடியேனும் அதை எண்ணியே மயில் படத்தை இட்டேன்! அதை மிகச் சரியாகக் கவனித்துப் பின்னூட்டிய உங்களுக்கு நன்றி!

மலைநாடான் said...

ரவி!
இந்தப்பாடலை பித்துக்குளி முருகதாஸ் பாடியிருப்பதை இங்கே கேளுங்கள். எனக்கு மிகவும் பிடித்தமானது.

வெற்றி said...

ரவி,
நேற்று கேட்க நினைத்து மறந்து போனேன்.

அசங்காது = அசையாது?

நன்றி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மலைநாடான் said...
ரவி! இந்தப்பாடலை பித்துக்குளி முருகதாஸ் பாடியிருப்பதை இங்கே கேளுங்கள். எனக்கு மிகவும் பிடித்தமானது.//

நன்றி மலைநாடான் ஐயா; பதிவிலும் உங்கள் பக்கத்துக்கான சுட்டியை ஏற்றி விடுகிறேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நன்றி மலைநாடான் ஐயா!
அருமையான பாடலை வித்தியாசமான கதியில் பளிச் என்று பாடியுள்ளார்!

பித்துக்குளி முருகதாசரின் பல முருகன் பாடல்களைக் கேட்டுள்ளேன்! அவரின் குரலும் அந்த ஆர்மோனிய இசையும் சுண்டி இழுக்கும்! ஆனால் அவரின் கண்ணன் பாடல்கள் அவ்வளவாகக் கேட்டதில்லை! அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வெற்றி said...
ரவி,நேற்று கேட்க நினைத்து மறந்து போனேன்.
அசங்காது = அசையாது?//

ஆமாங்க வெற்றி! வட்டார வழக்கு தான்! தஞ்சாவூர், திருச்சி பக்கம் இந்த "அசங்காது" ரொம்பவே புழங்கும்!
தீபத்தைத் தான் பொதுவா அசங்காம எடுத்து வரச் சொல்வார்கள்!

ஆனா அசையாம எப்படி எடுத்து வர முடியும்! நடந்தா அசங்கத் தானே செய்யும்! அவ்வளவு மெல்லிதா, நளினமா எடுத்து வா என்று பொருள் கொள்ளலாம்!

"ஆடாது அசங்காது" போலவே இன்னொரு சொற்றொடர் தான் "அலுங்காது குலுங்காது"!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வெற்றி

வட்டார வழக்கு மட்டும் இல்லாது, கம்பராமாயணத்திலும் "அசங்கு" வருகிறது!

ராவணன் ஊதும் சங்கநாதத்தின் முழக்கத்தால், ஈசனார் மற்றும் பிரம்மன் கைகளும் நடுங்கி அசங்கிற்று என்றும் வருகிறது!

கண்ட சங்கரன் நான்முகன் கைத்தலம்
விண்டு அசங்க தொல்அண்டம் வெடித்திட
உண்ட சங்கம் இராவணன் ஊதினான்.

மலைநாடான் said...

ரவி!

உங்கள் பதிவில் இணைப்புக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

பித்துக்குளியார் ' கனக மணிஅசையும் உனது திருநடனம்' வரிகளை ஒவ்வொரு நடையில் பாடுவதை நான் மிகவும் ரசிப்பதுண்டு. பாடல் நிறைவு பெறும் போது, ஏதோ ஒரு முழுக்கச்சேரி கேட்ட அனுபவம் கிடைக்கும்.

Anonymous said...

ரவிசங்கர்!
இப்பாடலை எனக்கு மகாராஜபுரம் சந்தானத்தில் நளினக்குரலில் கேட்கும் போது; கண்ணன் சிறு நடை பழகுவது போல் இருக்கும்;இந்த மத்யமாவதியில் ஒரு தனிப் பிரியம் உண்டு.
நல்லிசை விருந்து.
யோகன் பாரிஸ்

Anonymous said...

விதம் விதமான தாள பிரமாணங்களில்
"கனக மணியசையும் உனது திருநடனம் - கண்பட்டு போனால் மனம்" என்ற வரிகளில் பாடும் போது கண்ணன் நம் கண்முன் வருகிறானைய்யா.....

மெளலி....

Anonymous said...

sir,

Idhu aanulum aniyayam?

Ungalin aruputhamana MP-i vittu (ACHARANIN-IRRUPIDAM)Kannanindam thanjam pugunthathai solgiren.Ekathasi kku piragu ungal post-i thedinal Ematrame.finally got u here.

Thirumalai Bramotasavam is wonderful and preserved it for Posterity.

some views:
Ur chance meeting Sridevi coincided after dharsan of SRIDEVI+BOODEVI of Thirupathi.

Their family and also sridevi appology,goes to prove some decency despite the confusion by overbearing bhattacharya or official.

ur outburst reminded me the great ANNAMAIYA episode when he threw open the door after a fight with guards at Thirumalai.

i felt guilty that in our youngr age we used to tease Andhrites visiting our temples as GOULTY. sorry.

Enjoyed BRAMOTSAVAM ,ever lasting beauty of LORD VENKATESA. THANKS........sundar.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Johan-Paris said...
ரவிசங்கர்!
இப்பாடலை எனக்கு மகாராஜபுரம் சந்தானத்தில் நளினக்குரலில் கேட்கும் போது; கண்ணன் சிறு நடை பழகுவது போல் இருக்கும்;//

நன்றி யோகன் அண்ணா!
எனக்கும் மகராஜபுரம் குரலில் ஒரு பெரும் ஈர்ப்பு! உச்சரிப்புச் சுத்தம் மற்றும் நளினம் அப்படியே கண்ணன் தத்தித் தத்தி வருவது போலவே பாடுவார்! ஆனால் என் தங்கை குட்டிக் கண்ணன் பாடல்களுக்குப் பெண்களின் குரல் தான் சரியா இருக்கும் என்று வாதிடுவாள்!

நாங்கள் இருவரும் இப்படிக் காரசாரமாக வாதாடிக் கொள்வோம் :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Anonymous said...
விதம் விதமான தாள பிரமாணங்களில்
"கனக மணியசையும் உனது திருநடனம் - கண்பட்டு போனால் மனம்" என்ற வரிகளில் பாடும் போது கண்ணன் நம் கண்முன் வருகிறானைய்யா.....//

ஆமாம் மெளலி சார்
ஊத்துக்காட்டு ஐயாவின் பாட்டுக்கு வீடியோ தேவையே இல்லை! அவர் பாட்டே போதும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Anonymous said...
Ungalin aruputhamana MP-i vittu (ACHARANIN-IRRUPIDAM)Kannanindam thanjam pugunthathai solgiren.Ekathasi kku piragu ungal post-i thedinal Ematrame.finally got u here.//

வாங்க சுந்தரம் சார்! மாதவிப் பந்தல், கண்ணன் பாட்டு, பிள்ளைத் தமிழ், சுப்ரபாத வலைப்பூக்கள் எல்லாம் பல மலர்கள் கொண்ட கதம்ப மாலை தானே! அங்கும் இருப்பேன் இங்கும் இருப்பேன் அல்லவா? :-))))

ஏகாதசி இறுதிப் பதிவினை கைத்தல சேவை நாள் அன்று இடலாம் என்று எண்ணம்; இன்று இரவு/நாளை காலை இடுகிறேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Thirumalai Bramotasavam is wonderful and preserved it for Posterity//

நன்றி சுந்தரம் சார்!

//some views:
Their family and also sridevi appology,goes to prove some decency despite the confusion by overbearing bhattacharya or official.//

அவர்கள் சற்று மரியாதையாகத் தான் நடந்து கொண்டார்கள்! அவர்களுக்கு இருக்கும் பணிவு கூட பெருமாளின் அண்மையில் இருக்கும் பேறு பெற்றவருக்கு இல்லாமற் போய் விட்டதே என்ற என் ஆதங்கம் தான், அப்படி நடந்து கொண்டேன்; ஆனால் அதன் பின் நாமும் அவசரப்பட்டு விட்டோமோ என்ற யோசித்துப் பார்த்தேன்!

//ur outburst reminded me the great ANNAMAIYA episode when he threw open the door after a fight with guards at Thirumalai//

அன்னமாச்சார்யர் உண்மைத் தொண்டர்! அவர் சினக்க முழு உரிமை உண்டு! ஆனால் அடியேன் அப்படி அல்லவே!

//i felt guilty that in our youngr age we used to tease Andhrites visiting our temples as GOULTY. sorry//

:-)

ஷைலஜா said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said:


வட்டார வழக்கு மட்டும் இல்லாது, கம்பராமாயணத்திலும் "அசங்கு" வருகிறது!

ராவணன் ஊதும் சங்கநாதத்தின் முழக்கத்தால், ஈசனார் மற்றும் பிரம்மன் கைகளும் நடுங்கி அசங்கிற்று என்றும் வருகிறது!

கண்ட சங்கரன் நான்முகன் கைத்தலம்
விண்டு அசங்க தொல்அண்டம் வெடித்திட
உண்ட சங்கம் இராவணன் ஊதினான்//

அடேயப்பா! விரல் நுனியில் பல விஷயங்களை வைத்திருக்கிறீர்கள் போல? ரசித்தேன் மிகவும்.
ஷைலஜா

Anonymous said...

இந்த பாடலை o s அருண் பாடியிருக்கிறார்
ஒருதடவை கேட்டுபாருங்கள்

சின்னஞ்சிறு பதங்கள் என்கிற வரிகளை
உச்சரிப்பார் அப்படியே
மனதை மயக்கிபோடும் மிருதங்கம்
அதற்கு ஈடுகொடுக்கும். எந்த ஒரு
பாடகரும் இவ்வளவு அற்புமாய் இப்பாடலைபாடியிருப்பார் என்றுதெரியவில்லை. எனதுஅபிப்பிராயம்

வெற்றி said...

ரவி,
அசங்காது எனௌம் சொல்லிற்கு விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றிகள்.

raji said...

இந்த பதிவு இன்றைய வலைச்சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.நேரமிருப்பின்
சென்று பார்க்கவும்.

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_23.html

srinivaas said...

excellent blog :) pls continue the good work.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP