Sunday, December 31, 2006

21: நேயமாய் 2007 நினைவினில் நிற்க நிற்க!

புது வருடம் பிறக்கிறது. உலகில் எத்தனை எத்தனை துயரங்கள்! பிறக்கும் புது வருடத்திலாவது இந்தத் துயரங்களுக்கு எல்லாம் விடிவு காலம் பிறக்காதா என்ற ஏக்கம் தான் மனத்தில் நிற்கிறது. இலங்கையில் நம் உடன்பிறந்தோர் படும் துயரங்கள் துன்பங்களில் இருந்து தொடங்கிச் சொன்னால் சொல்லி முடியாது. அதனால் புது வருட வாழ்த்துகள் அனுப்பும் நண்பர்களின் வாழ்த்துகளை அரைகுறை மனத்துடனே ஏற்றுக் கொள்ளத் தோன்றுகிறது. கொஞ்சம் தயங்கி, பின்னர் அவர்களின் அன்பிற்காக அந்த நண்பர்களின் வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டு, அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள் அனுப்பத் தோன்றுகிறது.

இறைவனின் எல்லையற்ற கருணையில் நம்பிக்கை வைத்து இந்த வருடத்தைத் துவக்கி அவன் நல்லருளால் எல்லாமே நன்மையாக நடக்க வேண்டும் என்று வேண்டி இந்தக் கவிதையை இன்று இயற்றி இறைவணக்கமாகவும் புது வருட வாழ்த்துகளாகவும் அன்பு நண்பர் இரவிசங்கர் கண்ணபிரானின் அன்புக் கட்டளைக்கேற்ப இங்கே இடுகிறேன்.





எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா இறைவா இறைவா!
பித்தராய் நாங்கள் உன் பெருமை அறியாமல் பிதற்றுகிறோம் இறைவா!
அத்தனை கோடி இன்பங்களும் இங்கே அனைவருக்கும் கிடைக்க
அத்தனே உன்னை அடிபணிகின்றோம் அருள்வாய் அருள்வாய் அருள்வாய்!


காயிலே புளித்தாய் கனியிலே இனித்தாய் கடல்வண்ணா கருணைக்கடலே!
நோய் நொடி இன்றி நீனிலத்தவர் வாழ நீயருள்வாய் கண்ணா!
பேய்முலை உண்டு பெரும்பழி தீர்த்தப் பெருமான் உன்னருளாலே
பேய்த்தனம் நீங்கி பேதைமை நீங்க பெற்றியைத் தந்தருள்வாய்!

மாயமாய் போனதே முந்தைய வருடங்கள், மாதவா உன்னருளால்
நேயமாய் இரண்டாயிரத்தேழாம் வருடம் நினைவினில் நிற்க நிற்க!
நீயருள் செய்க! நாயகன் அருளால் நானிலம் வாழ்க வாழ்க!
நிறைமதி பெரும்புகழ் நிறைவுடன் பெற்றுமே அனைவரும் வாழ்க வாழ்க!


அருஞ்சொற்பொருள்:

அத்தன் - அப்பன்
நீனிலத்தவர் - உலகத்தவர்
பெற்றி - நற்குணம்; நல்லியல்பு.

***

மார்கழி 17 - அம்பரமே தண்ணீரே - பதினேழாம் பாமாலை.

Saturday, December 30, 2006

20. என்ன தவம் செய்தனை யசோதா!!!

இது நம்ம dubukudisciple (சுதா) தயாரித்த பதிவு!
அவர் தமிழ்மணத்துக்கு அனுப்பும் படி என்னிடம் கேட்டுக் கொண்டார்! Post-இல் அவர் பெயர் தெரிந்தாலும், தமிழ்மணம் மட்டும் அவர் பெயரில் ஏனோ எடுத்துக் கொள்ளவில்லை! எல்லாப் புகழும் dubukudisciple க்கே!

பாபநாசம் சிவன் அவர்களின் அருமையான தமிழிசைப் பாடல் இது!
Fusion Music இல் மாதங்கி அவர்கள் பாடிக் கேட்க இங்கே சொடுக்கவும்!
S. காயத்ரி அவர்களில் குரலில் சம்பிரதாய மெட்டில் கேட்க இங்கே சொடுக்கவும்!
மற்ற கலைஞர்கள் பாடியது/இசைத்தது பதிவின் இறுதியில்!

இதன் வீடியோ ஒன்று, ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் ஆடும் பரதம்!
காண வேண்டுமா? திராச ஐயாவின் பதிவுக்குச் செல்லுங்கள்! இதோ சுட்டி




என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை
எங்கும் நிறை பரப்ரம்மம் - அம்மா வென்றழைக்க

(என்ன தவம்)

ஈரேழு புவனங்கள் படைத்தவனைக் - கையில்
ஏந்திச் சீராட்டி பாலூட்டி தாலாட்ட - நீ

(என்ன தவம்)


பிரமனும் இந்தரனும் மனதில் பொறாமை கொள்ள - உரலில்
கட்டி வாய் பொத்திக் கெஞ்ச வைத் தாயே - நீ

(என்ன தவம்)

சனகாதியர் தவ யோகம் செய்து வருந்திச் சாதித்ததை
புனித மாதே எளிதில் பெற - நீ

(என்ன தவம்)
-----------------

திரைப்படங்களில்:
ஹரிணி படம்: பார்த்திபன் கனவு (முதல் சில வரிகள் மட்டும்)

கர்நாடக இசை/ஹிந்துஸ்தானி/மெல்லிசை:
S.P. Ram
Veenai - Nirmala Rajasekar
Violin
Flute - Ramani
Saxophone - Kadri Gopalnath

மார்கழி 16 - நாயகனாய் நின்று - பதினாறாம் பாமாலை.


எழுதியவர்: பாபநாசம் சிவன்
ராகம்: காபி
தாளம்: ஆதி

Friday, December 29, 2006

19. சோலைமலைக் கும்மி - மார்கழி ஏகாதசி சிறப்புப் பதிவு!

மதுரைப் பக்கம், சோலமல தெரியுங்களா சாமீ?
சோலை மலை = திருமாலிருஞ்சோலை
திருமால் இருஞ் சோலை; அது நறுஞ் சோலை.
இழும் என இழிதரும் அருவி, பழமுதிர்ச் சோலை! திவ்ய தேசம்!

அட, நம்ம அழகர் கோவிலைச் சொல்றீங்களா! கள்ளழகர் தெரியாதா என்ன?
ஆண்டாள் விரும்பிய கள்ளழகன், இந்தக் கோவிலில் இருப்பவன்!
பரமசுவாமி, சுந்தரராஜன் என்று பெயர்; கொஞ்சு தமிழில் கள்ளழகர்!


29567009_tirumaliruncholai

2005112600220301

அவனைப் பற்றிய கும்மிப் பாட்டு ஒன்று கிடைத்தது! எழுதியவர் யார் என்று தெரியவில்லை! ஆனால் அழகர் கோவில், மதுரைப் பக்கம் பரவலாகப் பாடப்படும் கும்மியாம்!
இதை கண்ணன் பாட்டு வலைப்பூவுக்காக அனுப்பினார் நம் நண்பர் மெளலி சார். மதுரையம்பதி என்று பின்னூட்டம் இடுவார்!

இயலுடன் இசை சேர்ந்தால் கொண்டாட்டம் தானே!
யார் பாடித் தருவது என்று யோசித்தேன்; கண்ணனை யாசித்தேன்! பாட்டை வாசித்தேன்!
வாசிப்பதும், வடிவான குரலில் பாடுவதும் ஒன்றாகி விட முடியுமா?

வல்லி சிம்ஹன் என்கிற நம் வல்லியம்மாவைத் தான் நம் எல்லாருக்கும் தெரியுமே!
தற்போது குடும்ப நிகழ்ச்சி ஒன்றுக்காக அமெரிக்கா வந்துள்ளார்.
அவர் பொறுமையா, அழகா, மெட்டு போட்டு பாடிக் கொடுத்துள்ளார்! நீங்களே கேளுங்க!



சோலைமலைக் கும்மி

மாயன் அழகு மலை மேலே - என்றும்
மல்லிகைப் பூ வாசம் வீசுதடி
நாயன் அவன் புகழே பாடி - இள
நங்கை யரே கும்மி அடிங்கடி


நந்தன் மதலையைக் கும்பிடு வோம் - அந்த
நாரணன் தாளையே நம்பிடு வோம்
செந்திரு மார்பனை சுந்தர ராஜனை
செந்தமிழ் பாடியே கும்மி யடி


சாத்தின கதவு திறக் காமல் - என்றும்
சந்தன காப்புக் கலை யாமல்
சத்தியம் காக்கும் கருப்பண்ண சாமியை
சரணம் என்றே ஒரு கும்மி யடி


kallar_ekanthaseva
கள்ளழகர் ஏகாந்த சேவை

தோள் அழகன் அவன் தாளழகன் - முடி
தூக்கிச் சொருகும் குழல் அழகன்
சோலை மலைத் திருமாலை வணங்கியே
சுந்தர ராஜனைக் கும்மி யடி


கண்ணாடிக் கன்னத்தில் வேர்க்கு தடி - உந்தன்
கடைக்கண்ணு எங்கேயோ பார்க்கு தடி
முன்னாடி சாமியை கும்பிடடி பின்னே
முத்துப் போல புருசன் வருவானடி!


நல்ல கணவன் வேண்டி மார்கழி நோன்பு இருப்பது தானே தத்துவம், வழக்கம்!
அன்று ஆண்டாள் செய்ததை, அப்படியே நாட்டுப்புற வழக்கமாக செய்யும் இந்தச் சோலைமலைப் பெண்களைப் பாருங்கள்!
முன்னாடி சாமியை கும்பிடடி பின்னே
முத்துப் போல புருசன் வருவானடி
என்றல்லவா பாடுகிறார்கள்! என்ன அழகான கும்மி!
இன்னொரு முறை கேட்டு, நாமும் பாடி ஆடலாம் வாங்க!


மார்கழி 15 - எல்லே இளங்கிளியே - பதினைந்தாம் பாமாலை.

கண்ணன் பாட்டு வலைப்பூவில் இது போன்ற கூட்டு முயற்சிகள் சிறக்க வேண்டும் என்று அந்தக் கண்ணனையே வேண்டுவோம்!
நன்றி வல்லியம்மா, நன்றி மெளலி சார்!

பல அன்பர்கள், பாடல் வரிகளும், ஒலிச் சுட்டி்களும், தனி மடலில் தந்த வண்ணம் உள்ளார்கள்!
அவர்கள் எல்லார்க்கும் இந்த வைகுந்த ஏகாதசி நன்னாளில் நன்றி!
ஒவ்வொன்றாகப் பதிவில் இடுகிறோம்; இடும் முன்னர் தங்களுக்குத் தனி மடலிலும் தெரியப்படுத்துகிறோம்!

Thursday, December 28, 2006

18. யாரென்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே!

யாரென்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே! = ஊத்துக்காடு வேங்கட கவி எழுதியது.
இன்றும், தொண்டர் குலத்தின் வைராக்கியத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டுப் பாடலாய் விளங்குகிறது!

பாடலைக் கேட்க, கீழுள்ள சுட்டிகளைச் சொடுக்கவும்!
Maharajapuram Santhanam
Krishna Kumar Varma

இந்தப் பாடலில் மூன்று பெரும் பக்தர்கள் பற்றிக் குறிப்பு வருகிறது! கடைசிக் பத்தியில்! யார் யாருன்னு சொல்லுங்க பார்ப்போம்!



gallery_Bg09 gallery_Bg08


யாரென்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே
ஐயன் கருணையை பாடு
ராக ஆலாபனம் உடனும் பாடு - முடிந்தால்
அடவோடும் ஜதியோடும் ஆடு
அருமை என வந்த பிறவிகளோ பல
ஆயிரம் தந்தாலும் வருமோ - ஆதலின்
(யாரென்ன)

நாரத கானமும் வேதமும் நாண
கான்க் குழல் ஒன்று தான் ஊதுவான்
நீரதர் கழலாட கோபியரும் பாட
வெகு நேர் நேரெனச் சொல்லி தானாடுவான் - அந்த
ஐயன் கருணையை பாடு...
(யாரென்ன)

தோலை அரிந்து கனி தூர எறிந்து
வெறும் தோலைத் துணிந்து ஒருவன் தந்தான் அல்லவோ
மேலைப் பிடி அவலை வேணுமென்றே தெரிந்து
விரும்பி ஒருவன் அன்று தந்தான் அல்லவோ

காலமெல்லாம் தவம் இருந்து கனிந்த கனி
கடித்துச் சுவைத்து ஒருவள் தந்தாள் அல்லவோ - இந்த
ஞாலமும் ஆயிரம் சொன்னாலும் நாம் அதை
நமக்கு எதற்கு என்று தள்ளி
நாமமும் ஆயிரம் சொல்லிச் சொல்லி

ஐயன் கருணையை பாடு...
ராக ஆலாபனம் உடனும் பாடு - முடிந்தால்
அடவோடும் ஜதியோடும் ஆடு
அருமை என வந்த பிறவிகளோ பல
ஆயிரம் தந்தாலும் வருமோ - ஆதலின்
(யாரென்ன)

gallery_Bg01


மார்கழி 14 - உங்கள் புழக்கடை - பதினான்காம் பாமாலை.

எழுதியவர்: ஊத்துக்காடு வேங்கட கவி
ராகம்: மணிரங்கு
தாளம்: ஆதி

1. இந்தப் பாடலைத் திராச ஐயா முன்பே பதிந்துள்ளதாக நினைவு! சரியாகத் தெரியவில்லை! திராச ஐயா, சரி பார்த்து, சுட்டி தாருங்களேன்!

2. Picture Credit - Bhakti Vedanta Book Trust

Wednesday, December 27, 2006

17. கண்ணன் வருவான் கதை சொல்லுவான்!

பாடலைக் கேட்க, இங்கே சொடுக்கவும் - கவிஞர் கண்ணதாசன் எழுதி, விசுவநாதன்-இராமமூர்த்தி இசையில், பி.சுசீலா பாடியது
படம் பெயர் யாராவது பின்னூட்டத்தில் சொல்லுங்க; மறந்து போச்சு;
படத்தில் இதை கே.ஆர்.விஜயா பாடுவாங்கன்னு மட்டும் நினைவிருக்கு!

இது ரீ-மிக்ஸ் பாடல்; வேண்டுமானால் சொடுக்கவும்; சும்மா கேட்டுப் பார்க்கலாம்.

கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர் தொட்டில் கட்டித் தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான்
வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான்
(கண்ணன் வருவான்)


பச்சை வண்ணக் கிளி வந்து பழம் கொடுக்க
பட்டு வண்ணச் சிட்டு வந்து மலர் கொடுக்க
கன்னங்கரு காக்கை வந்து மை கொடுக்க
கண்ணன் மட்டும் கன்னத்திலே முத்தம் கொடுக்க
முத்தம் கொடுக்க...முத்தம் கொடுக்க...



தத்தித் தத்தி நடக்கையில் மயில் போலே
திக்கித் திக்கி பேசுகையில் குயில் போலே
கொஞ்சிக் கொஞ்சி எடுக்கையில் கொடி போலே
அஞ்சி அஞ்சி விழுவாய் மடி மேலே


ஆரிரோ ஆரி ராரி ராரி ராரி ராரிரோ
ஆராரோ ஆரி ராரி ராரி ராரி ராராரோ

(கண்ணன் வருவான்)

உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான்
இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான்
ஒருவரின் குரலுக்கு மயங்க வைத்தான்
உண்மையை அதிலே உறங்க வைத்தான்
உறங்க வைத்தான்...உறங்க வைத்தான்...



ஆரிரோ ஆரி ராரி ராரி ராரி ராரிரோ
ஆராரோ ஆரி ராரி ராரி ராரி ராராரோ

(கண்ணன் வருவான்)



மார்கழி 13 - புள்ளின் வாய் கீண்டானை- பதின்மூன்றாம் பாமாலை.

Tuesday, December 26, 2006

16. புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே!

பாடலைக் கேட்க, இங்கே சொடுக்கவும் - கவிஞர் கண்ணதாசன் எழுதி, MSV இசையில், TMS பாடியது


புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே

வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)


பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள்
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)


குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
(புல்லாங்குழல்)



பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்
(புல்லாங்குழல்)




மார்கழி 12 - கனைத்திளங் கற்றெருமை - பன்னிரண்டாம் பாமாலை.

Monday, December 25, 2006

15. தாயே யசோதா!

இப்பதிவு அன்பர் Dubuku Disciple - சுதா பிரசன்னா அவர்களின் சார்பாக!
பாடலைக் கேட்க, இங்கே சொடுக்கவும் - ஊத்துக்காடு வேங்கட கவி எழுதி, சுதா ரகுநாதன் பாடியது
மற்ற கலைஞர்கள் பாடியது/இசைத்தது பதிவின் இறுதியில்!



தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி
(தாயே)

தையலே கேளடி உந்தன் பையனைப் போலவே இந்த
வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை
(தாயே)

காலினில் சிலம்பு கொஞ்சக் கைவளை குலுங்க முத்து
மாலைகள் அசையத் தெரு வாசலில் வந்தான்
காலசைவும் கையசைவும் தாளமோடு இசைந்து வர
நீலவண்ணக் கண்ணன் இவன் நர்த்தனம் ஆடினான்


பாலனென்று தாவி அணைத்தேன் அணைத்த என்னை
மாலையிட்டவன் போல் வாயில் முட்டமிட்டாண்டி
பாலனல்லடி உன் மகன் ஜாலம் மிக செய்யும் கிருஷ்ணன்
நாலு பேர்கள் கேட்கச் சொல்ல நாணமிக ஆகுதடி
(தாயே)

முந்தாநாள் அந்தி நேரத்தில் சொந்தமுடன் கிட்டே வந்து
விந்தைகள் அனேகம் செய்து விளையாடினான் ஒரு
பந்தளவாகிலும் வெண்ணை தந்தால்தான் விடுவேன் என்று
முந்துகிலைத் தொட்டிழுத்துப் போராடினான்




அந்த வாசுதேவன் இவன் தான் அடி யசோதா!
மைந்தன்என்று தொட்டுஇழுத்து மடிமேல் வைத்து
சுந்தர முகத்தைக் கண்டு சிந்தை மயங்கும் நேரம்
அந்தர வைகுந்தமோடு எல்லாம் காட்டினான் அடி!
(தாயே)

இந்தப் பாடல் இன்னும் பல பத்திகள் (சரணங்கள்) கொண்டு உள்ளது; மொத்தம் ஆறு சரணங்கள் என்றாலும், மிகப் பிரபலமாகப் பாடப் படும் சரணங்களே மேலே கொடுக்கப்பட்டுள்ளன. முழுதும் அறிய இங்கே செல்லவும்.



திரைப்படங்களில்:

எம்.எல்.வசந்தகுமாரி = படம்: குல தெய்வம்
சுதா ரகுநாதன், ரஞ்சனி ராமகிருஷ்ணன் = படம்: Morning Raga (Hindi)

கர்நாடக இசை/ஹிந்துஸ்தானி/மெல்லிசை:
Maharajapuram Santhanam
Sowmya
Bombay Sisters
Madurai Mani Iyer
Chembai Vaidyanatha Bhagavathar

Veenai - Karaikurichi Brothers


மார்கழி 11 - கற்றுக் கறவை - பதினொன்றாம் பாமாலை.

எழுதியவர்: ஊத்துக்காடு வேங்கட கவி
ராகம்: தோடி
தாளம்: ஆதி

Sunday, December 24, 2006

14. ஆயர்பாடி மாளிகையில்

பாடலை கேட்க இங்கே சொடுக்கவும் - கண்ணதாசன் எழுதி விஸ்வனாதன் இசையமைக்க எஸ்.பி. பாலசுப்ரமணியன் பாடியது


ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
அவன் வாய்நிறைய மண்ணை உண்டு மண்டலத்தைக் காட்டியபின்
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
(ஆயர்பாடி...)

பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
அந்த மந்திரத்தில் அவர் உறங்க மயக்கத்திலே இவனுறங்க மண்டலமே உறங்குதம்மா ஆராரோ மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
(ஆயர்பாடி...)




நாகப்படம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான் தாலேலோ
நாகப்படம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில் தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான் தாலேலோ
அவன் மோக நிலை கூட ஒரு யோக நிலை போலிருக்கும் யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ
(ஆயர்பாடி...)

கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும் அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும் அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
அவன் பொன்னழகைப் பார்ப்பதற்க்கும் போதை முத்தம் பெறுவதற்க்கும் கன்னியரே கோபியரே வாரீரோ கன்னியரே கோபியரே வாரீரோ

ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

வீரமணி ராதா படியதை கேட்க இங்கே சொடுக்கவும்.

மார்கழி 10 - நோற்றுச் சுவர்க்கம் - பத்தாம் பாமாலை

Saturday, December 23, 2006

13. கர்ணன் படத்திலிருந்து கண்ணன் கீதை



மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா!...
மரணத்தின் தன்மை சொல்வேன்!...
மானிடர் ஆன்மா மரணம் எய்தாது...
மறுபடிப் பிறந்திருக்கும்!...
மேனியைக் கொல்வாய்...மேனியைக் கொல்வாய்...
வீரத்தில் அதுவும் ஒன்று!
நீ விட்டுவிட்டாலும் அவர்களின் மேனி,
சென்று தான் தீரும் ஓர் நாள்...

(கண்ணா, உனக்கு எல்லாம் தெரியும், ஆனால் எனக்கு உன்னைத் தான் தெரியும், பரந்தாமனைத் தான் தெரியும்! நீயா என்னை இந்தப் பாவச் செயலுக்குத் தூண்டுவது?)

என்னை அறிந்தாய், எல்லா உயிரும் எனதென்றும் அறிந்து கொண்டாய்!
கண்ணன் மனது கல் மனதென்றோ...
காண்டீபம் நழுவ விட்டாய்,
காண்டீபம் நழுவ விட்டாய்!
மன்னரும் நானே, மக்களும் நானே,
மரஞ் செடி கொடியும் நானே...
சொன்னவன் கண்ணன், சொல்பவன் கண்ணன்...
துணிந்து நில், தர்மம் வாழ்க!

(ஆனால் கொல்லப் போகிறவன் நான் அல்லவா? அந்தப் பழியெல்லாம் எனக்கல்லவா? கண்ணன் காட்டிய வழி என்று நீ எண்ணியதை நான் செய்து விட்டால், அதனால் வரும் பாவ பலனை யார் சுமப்பது? இந்தக் கொலைக்கு நீ உடந்தை ஆவாயா? சொல், சொல்!)

புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால்
அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே!...
போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும்,
போகட்டும் கண்ணனுக்கே!...
கண்ணனே காட்டினான், கண்ணனே தாக்கினான்,
கண்ணனே கொலை செய்கின்றான்!...
காண்டீபம் எழுக, நின் கைவண்ணம் எழுக,
இக் களமெலாம் சிவக்க, வாழ்க! ஆஆஆஆஆ...


பகவத் கீதை - பாரதியாரின் முன்னுரை (பாகம் 8 & 12)
(வடமொழிச் சொற்கள் நீக்கி சில பகுதிகள் மட்டும் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளன! பின் வருவன பாரதியாரின் வரிகள்...)

பகவத் கீதையைச் சிலர் கொலை நூலாகப் பாவனை செய்கிறார்கள்.
துரியோதனாதிகளைக் கொல்லும்படி அர்ஜுனனைத் தூண்டுவதற்காகவே, இந்தப் பதினெட்டு அத்தியாயமும் கண்ணபிரானால் கூறப்பட்டன. ஆதலால்,இது கொலைக்குத் தூண்டுவதையே தனி நோக்கமாகவுடைய நூல் என்று சிலர் பேசுகிறார்கள்.

கொலை செய்யச் சொல்ல வந்த இடத்தே, இத்தனை வேதாந்தமும், இத்தனை சத்வ குணமும், இத்தனை துக்க நிவர்த்தியும், இத்தனை சாகாதிருக்க வழியும் பேசப்படுவது என்னே என்பதை அச்சில மூடர் கருதுகின்றனர்.

துரியோதனாதியர் காமக் குரோதங்கள்.
அர்ஜுனன் ஜீவாத்மா.
ஸ்ரீ கிருஷ்ணன் பரமாத்மா.
இந்த ரகசியம் அறியாதவருக்குப் பகவத் கீதை ஒருபோதும் அர்த்தமாகாது.

இந்நூல் ஞான சாஸ்திர்களில் முதன்மைப் பட்டிருப்பதுபோல், காவிய வரிசையிலும் மிக உயர்ந்ததென்பதற்குச் சான்றாகும்.
ஆனால், அதிலிருந்து இது ஞான சாஸ்திரமேயில்லை என்று மறுக்கும் மூடர், முகவுரையை மாத்திரமே வாசித்துப் பார்த்தார்களென்று தோன்றுகிறது.

முகவுரையில் மாத்திரமன்றே?
நூலில், நடுவிலும் இடையிடையே, 'ஆதலால், பாரதா, போர் செய்', என்ற பல்லவி வந்துகொண்டே இருக்கின்றது அன்றோ? என்று கூறிச் சிலர் ஆட்சேபிக்கலாம்.

அதற்குத்தான் மேலேயே கீதா ரகசியத்தின் ஆதார ரகசியத்தை எடுத்துச் சொன்னேன்.
அதனை, இங்கு மீண்டும் சொல்லுகிறேன்.
துரியோதனாதிகள் - காமம், குரோதம், சோம்பர், மடமை, மறதி, கவலை, துயரம், ஐயம் முதலிய பாவ சிந்தனைகள்.
அர்ஜுனன் ஜீவாத்மா.
ஸ்ரீ கிருஷ்ணன் பரமாத்மா

இயற்கை விதியை அனுசரித்து வாழ வேண்டும். அதனால் எவ்விதமான தீமையும் எய்த மாட்டாது. எனவே, சாதாரண புத்தியே பரம மெய்ஞ்ஞானம். இதனை, ஆங்கிலேயர் 'common sense' என்பர். சுத்தமான - மாசு படாத, கலங்காத, பிழை படாத சாதரண அறிவே பரம மெய்ஞ்ஞானாகும்.

சாதாரண ஞானத்தைக் கைக்கொண்டு நடத்தலே எதிலும் எளிய வழியாம்.
சாதாரண ஞானமென்று சொல்லு மாத்திரத்தில் அது எல்லாருக்கும் பொது என்று விளங்குகிறது.

ஆனால் சாதாரண ஞானத்தின்படி நடக்க எல்லாரும் பின் வாங்குகிறார்கள்.
சாதாரண ஞானத்தின்படி நடக்க ஒட்டாமல் ஜீவர்களைக் காமக் குரோதிகள் தடுக்கின்றன.
சாதாரண ஞானத்தில் தெளிவான கொள்கை யாதெனில்,
நம்மை மற்றோர் நேசிக்க வேண்டுமென்றால்,
நாம் மற்றோரை நேசிக்க வேண்டும்' என்பது.

நேசத்தாலே நேசம் பிறக்கிறது. அன்பே அன்பை விளைவிக்கும்.

நம்மிடம் பிறர் அன்பு செலுத்த வேண்டுமென்று எதிர்பார்த்துக் கொண்டும்,
ஆனால் அதே காலத்தில் நாம் பிறருக்கு எப்போதும் மனத்தாலும் செயலாலும் தீங்கிழைத்துகொண்டும் இருப்போமாயின்
- அதாவது பிறரை வெறுத்துக்கொண்டும், பகைத்துக் கொண்டும், சாபமிட்டுக் கொண்டும் இருப்போமாயின் - நாம் அழிந்து விடுவோமென்பதில் ஐயமில்லை



மார்கழி 9 - தூமணி மாடத்து - ஒன்பதாம் பாமாலை.

Friday, December 22, 2006

12. தீராத விளையாட்டுப் பிள்ளை!

பாடலைக் கேட்க, இங்கே சொடுக்கவும் - பாரதியார் எழுதி, சித்ரா பாடியது
மற்ற கலைஞர்கள் பாடியது/இசைத்தது பதிவின் இறுதியில்!



தீராத விளையாட்டுப் பிள்ளை -கண்ணன்
தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை. (தீராத)


1. தின்னப் பழங்கொண்டு தருவான்; - பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
என்னப்பன் என்னையன் என்றால் - அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். (தீராத)


2. தேனொத்த பண்டங்கள் கொண்டு - என்ன
செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;
மானொத்த பெண்ணடி என்பான் - சற்று
மனமகிழும் நேரத்திலே கிள்ளி விடுவான். (தீராத)


3. அழகுள்ள மலர்கொண்டு வந்தே - என்னை
அழஅழச் செய்துபின், "கண்ணை மூடிக்கொள்;
குழலிலே சூட்டுவேன்" என்பான் - என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான். (தீராத)


4. பின்னலைப் பின்நின்று இழுப்பான்; - தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்;
வன்னப் புதுச்சேலை தனிலே - புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். (தீராத)


5. புல்லாங் குழல்கொண்டு வருவான்! - அமுது
பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்;
கள்ளால் மயங்குவது போலே - அதைக்
கண்மூடி வாய்திறந்தே கேட் டிருப்போம். (தீராத)






6. அங்காந் திருக்கும்வாய் தனிலே - கண்ணன்
ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்;
எங்காகிலும் பார்த்த துண்டோ ? - கண்ணன்
எங்களைச் செய்கின்ற வேடிக்கை யொன்றோ? (தீராத)


7. விளையாட வாவென் றழைப்பான்; - வீட்டில்
வேலையென்றால் அதைக் கேளா திழுப்பான்;
இளையாரொடு ஆடிக் குதிப்பான்; - எம்மை
இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான். (தீராத)


8. அம்மைக்கு நல்லவன் கண்டீர்! - மூளி
அத்தைக்கு நல்லவன், தந்தைக்கு மஃதே,
எம்மைத் துயர்செய்யும் பெரியோர் - வீட்டில்
யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான். (தீராத)


9. கோளுக்கு மிகவுஞ் சமர்த்தன்; - பொய்ம்மை
சூத்திரம் பழிசொலக் கூசாச் சழக்கன்;
ஆளுக் கிசைந்தபடி பேசித் - தெருவில்
அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான். (தீராத)




திரைப்படங்களில்:
பட்டம்மாள் - ஆர்.சுதர்சனம் = படம்: வேதாள உலகம்

கர்நாடக இசை/ஹிந்துஸ்தானி/மெல்லிசை:
Nityashree
Bombay Sisters
Unni Krishnan

Flute - N.Ramani
Nadaswaram - Sheikh Chinna Moulana Saheb
Guitar - Prasanna
Clarinet - AKC Natarajan
Veenai - Balachander
Saxophone - Kadri Gopalnath


மார்கழி 8 - கீழ்வானம் வெள்ளென்று - எட்டாம் பாமாலை.
இன்று திருப்பாவையில் "மிக்குள்ள பிள்ளைகளும்" என்று வருவதால், இந்த பிள்ளைப் பாட்டு!

எழுதியவர்: சுப்ரமணிய பாரதியார்
ராகம்: கேதாரம்
தாளம்: கண்ட ஜதி - ஏக தாளம்

Thursday, December 21, 2006

10. காக்கைச் சிறகினிலே நந்தலாலா

பாடலைக் கேட்க, இங்கே சொடுக்கவும் - பாரதியார் எழுதி, உன்னி கிருஷ்ணன் அவர்கள் பாடியது
மற்ற கலைஞர்கள் பாடியது/இசைத்தது பதிவின் இறுதியில்!



காக்கைச் சிறகினிலே நந்த லாலா! - நின்றன்
கரியநிறம் தோன்று தையே, நந்த லாலா!


பார்க்கும் மரங்கள் எல்லாம் நந்த லாலா! - நின்றன்
பச்சை நிறம் தோன்று தையே, நந்த லாலா!


கேட்கும் ஒலியில் எல்லாம் நந்த லாலா! - நின்றன்
கீதம் இசைக்குதடா, நந்த லாலா!


தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா! - நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா, நந்த லாலா!




திரைப்படங்களில்:
ஜேசுதாஸ் - L.வைத்யநாதன் = படம்: ஏழாவது மனிதன்
சூலமங்கலம் ராஜலட்சுமி - K.V.மகாதேவன் = படம்: திருமால் பெருமை

கர்நாடக இசை/ஹிந்துஸ்தானி/மெல்லிசை:
Bombay Jayashree
Bombay Sisters
Veenai-Rajesh Vaidya


மார்கழி 7 - கீசுகீசு என்றெங்கும் - ஏழாம் பாமாலை
இன்று திருப்பாவையில் கீசுகீசு என்ற பறவைப் பாட்டு! அதனால் இங்கும் "காக்கைச் சிறகினிலே"!

எழுதியவர்: சுப்ரமணிய பாரதியார்
ராகம்: யதுகுல காம்போதி (அ) பஹாடி (ஹிந்துஸ்தானி)
தாளம்: ஆதி

Wednesday, December 20, 2006

10. கோபியர் கொஞ்சும் ரமணா!

இப்பதிவு நம் ஐயா ஞானவெட்டியான் அவர்களின் சார்பாக!
மேலும் சில அழகான பாடல் ஒலி (ஆடியோ), அனுப்பி உள்ளார்; ஒவ்வொன்றாகப் பதிவில் இடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
இன்று, "கோபியர் கொஞ்சும் ரமணா"



பாடலைக் கேட்க, இங்கே சொடுக்கவும் - கவிஞர் கண்ணதாசன் எழுதி, TMS அவர்கள் பாடியது, K.V. மகாதேவன் இசையில்
படம்: திருமால் பெருமை


கோபியர் கொஞ்சும் ரமணா
கோபால கிருஷ்ணா

(கோபியர் கொஞ்சும் ரமணா)

மாபாரதத்தின் கண்ணா
மாயக்கலையின் மன்னா
மாதவா கார்மேக வண்ணா - மதுசூதனா!

(கோபியர் கொஞ்சும் ரமணா)

தாயின் கருணை உள்ளம்
தந்தையின் அன்பு நெஞ்சம்
தந்தவன் நீயே முகுந்தா
ஸ்ரீ வைகுந்தா

(கோபியர் கொஞ்சும் ரமணா)




மார்கழி 6 - புள்ளும் சிலம்பின காண் - ஆறாம் பாமாலை
பாடியவர்: டி.எம்.எஸ்
எழுதியவர்: கண்ணதாசன்

படம்: திருமால் பெருமை

Tuesday, December 19, 2006

9. குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்டான்!

இப்பதிவு அன்பர் Dubuku Disciple - சுதா பிரசன்னா அவர்களின் சார்பாக!
மேலும் சில அழகான பாடல் வரிகளும், படங்களும் அனுப்பி உள்ளார்; ஒவ்வொன்றாகப் பதிவில் இடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
இன்று, "குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்னும், குறை ஏதும் எனக்கேதடி சகியே.... "




பாடலைக் கேட்க, இங்கே சொடுக்கவும் - K.S. Chitra பாடியது
மற்ற கலைஞர்கள் பாடியது/இசைத்தது பதிவின் இறுதியில்!

குழலூதி மனமெல்லாம் கொள்ளைகொண்ட பின்னும்
குறை ஏதும் எனக்கேதடி சகியே
(குழலூதி)

அழகான மயிலாடவும் - மிக மிக
அழகான மயிலாடவும்
காற்றில் அசைந்தாடும் கொடிபோலவும்


அகமகிழ்ந்து இலகும் நிலவொளி தனிலே
தனைமறந்து புள்ளினம் கூவ
அசைந்தாடி மிக இசைந்தோடி வரும்
நலம் காண ஒரு மனம் நாட
தகுமிது என ஒரு பதம் பாட
தகிட ததிமி என நடமாட
கன்று பசுவினமும் நின்று புடைசூழ
என்றும் மலரும் முக இறைவன் கனிவோடு

(குழலூதி)

மகர குண்டலம் ஆடவும் - அதற்கேற்ப
மகுடம் ஒளி வீசவும்
மிகவும் எழில் ஆகவும் - காற்றில்
மிளிரும் துகில் ஆடவும்

(அகமகிழ்ந்து இலகும் நிலவொளி தனிலே...)
(குழலூதி மனமெல்லாம்...)





கர்நாடக இசை/ஹிந்துஸ்தானி/மெல்லிசை:

"குழல் ஊதி" குழலில்; Flute - Ramani
Saxophone-Kadri Gopalnath

KJ Yesudass
Maharajapuram Santhanam
Sudha Raghunathan
Bombay Sisters
Sowmya

மார்கழி 5 - மாயனை மன்னு வடமதுரை - ஐந்தாம் பாமாலை
பாடியவர்: சித்ரா
எழுதியவர்: ஊத்துக்காடு வேங்கட கவி

ராகம்: காம்போதி
தாளம்: ஆதி

Monday, December 18, 2006

8. ஆழிமழைக்கண்ணா!


எங்கும் கண்ணனே எதிலும் கண்ணனே
தங்கும் வீடும் தரிக்கும் உடைகளும்
சிங்காரமாக சீர்பெறு அணிகளும்
சிங்காரக் கண்ணனே சிங்காரக் கண்ணனே

உண்ணும் சோறும் பருகும் நீரும்
தின்னும் வெற்றிலையும் தீங்கனிச்சாறும்
கண்ணன் மாயவன் காதலன் கோவிந்தன்
எண்ணில் இன்பங்கள் நல்குவான் அவனே

ஆழிமழைக்கண்ணன் அன்பர்க்கு இனியனவன்
பாழியந்தோளுடையான் பன்மலர் பூணுவான்
சீர்மிகும் அவன் உருவைச் சிந்தித்தே வாழுவோம்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

***

பாவைத்திருநாளில் அடியேனின் (குமரனின்) சிறிய பாமாலை.
மார்கழி 4 - ஆழிமழைக் கண்ணா - நான்காம் பாமாலை

7. குழந்தை கண்ணன் என்றால் குறும்பல்லவா!!

குழந்தை கண்ணன் என்றால் குறும்பல்லவா
அழகான அவன் செயல்கள் அமிழ்தல்லவா..
பழகவே அவனும் நல்ல தோழனல்லவா
வழங்கும் தமிழில் நானும் அதைச் சொல்லவா...

(குழந்தை கண்ணன்..)

வெண்ணை பானை உடைத்து சிரிக்கின்றான்
உண்டிவில் கொண்டு தயிர்பானை தகர்க்கின்றான்
அண்ணன் பலராமன் பலசொல்லி கேளாதவன்
கண்ணன் குறும்புகளில் என்றும் குறையாதவன்

(குழந்தை கண்ணன்..)


அரக்கரை அழித்திடவே அவனும் வந்தான்
அரவம் ஒன்றின்மேல் நடமாடி நின்றான்
உரலொன்றில் அன்னைதான் கட்டி வைத்தால்
மரம்மோதி ஆங்கே மோட்சம் தந்தான்.

(குழந்தை கண்ணன்..)

தின்ன இவன் மண்கொண்டான் என்றே
அன்னை கேட்க வாய்திறந்து வையகம்
தன்னை காட்டியவன் மயங்க வைத்தான்.
இன்னும் என்னென்ன இவனே செய்வான்.

குன்றொன்றை அவனும் குடையாய் கொண்டான்
கன்றுபசுக்கள் யாவிற்கும் அபயம் தந்தான்.
இன்றுஇக் கண்ணன் யாது செய்வான்
என்று யாவரையும் நோக்கச் செய்தான்.

குழந்தை கண்ணன் என்றால் குறும்பல்லவா
அழகான அவன் செயல்கள் அமிழ்தல்லவா...

***

பாவைத்திருநாளில் சாத்வீகனின் பாமாலை.
மார்கழி 3 - ஓங்கி உலகளந்த - மூன்றாம் பாமாலை

Saturday, December 16, 2006

6. நாளை என்பதை யார் தான் கண்டார்?


நாளை நாளை நாளை என்கின்றாய்
நாரணன் நாமத்தை நீ சொல் என்றால்
நாளை என்பதை யார் தான் கண்டார்
நாளும் சொல்வாய் நாயகன் நாமம்

கண்ணன் மாதவன் காகுத்தன் கோவிந்தன்
எண்ணமெங்கும் நிறைந்து தித்திப்பான்
தண்ணந் தாமரைக் கண்ணன் அவனே
திண்ணமாய் அவன் திருநாமம் சொல்வாய்

குழகன் கோவிந்தன் கூடல் மாயவன்
பழக இனியவன் பாடும் அடியவரை
எழில்கொள் தன்னடி சேர்ப்பான் மனமே
அழகன் அவன் புகழ் அன்புடன் சொல்வாய்



கூடல் அழகர், திருக்கூடல் (மதுரை)


பாவைத்திருநாளில் அடியேனின் (குமரனின்) சிறிய பாமாலை.

மார்கழி 2 - வையத்து வாழ்வீர்காள் - இரண்டாம் பாமாலை

Friday, December 15, 2006

5. செம்பவள வாய்திறவாய் யதுகுல கண்ணா!

இப்பதிவு அன்பர் மதுமிதா அவர்களின் சார்பாக!
அவரே கண்ணனுக்காக எழுதிய பாடல்!
இந்தப் பாடல் மதுரை வானொலியில் இசையமைக்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டது. நாள்: Oct 19, 1996 - மாலை 6.45 மணி

இந்தப் பாடலை, இன்று மார்கழி முதல் நாளில்,
கண்ணன் பாட்டு வலைப்பூவில், முதல் மாலையாகச் சமர்ப்பிக்கிறோம்!
ஆண்டாள் திருவடிகளே சரணம்!



சின்ன சின்ன கண்ணா



கண்ணா கண்ணா கண்ணா கண்ணா
சின்னச் சின்ன கண்ணா
கோகுல மன்னா
செம்பவள வாய்திறவாய் யதுகுல கண்ணா
செம்பவள வாய்திறவாய் கோகுல மன்னா



வெண்ணைய் உண்ட கண்ணனே
உனைக் காணவந்த அன்னைக்கு
சிறுவாய் திறந்து அற்புதமாய்
அகிலம் தனைக் காட்டினாய்


காளிங்கன் தலைமீது களிநர்த்தனம் செய்து
நச்சுப்பொய்கை தனையே பரிசுத்தம் செய்தாய்
கோபம்கொண்ட இந்திரனும் கொடுமழை தந்தான்
கோவர்த்தன கிரிஎடுத்து யதுகுலம் காத்தாய்


பாஞ்சாலியின் மானத்தைப் பெருஞ்சபையில் காத்தாய்
பார்த்தன்தன் மயக்கத்தை குருஷேத்திரத்தில் தீர்த்தாய்
பெற்றோம் உன் கீதை
கண்டோம் உன் லீலை
நல்வாழ்க்கை வாழத் தந்தாய் புதுப்பாதை,

தந்தாய் புதுப்பாதை...
கண்ணா கண்ணா

செம்பவள வாய்திறவாய் யதுகுல கண்ணா
செம்பவள வாய்திறவாய் கோகுல மன்னா


குறிப்பு:
1. பாடல், கேசட்டில் இருப்பதால் வலையேற்ற இயலவில்லை
2. ஒரு கோகுலாஷ்டமி இரவில் உள்ளம் உருக, அதிகாலையில் எழுதியது.
3. கண்ணன் "வாய் திறவாய்" படம் - நன்றி: krishna.com

மதுமிதா அவர்கள் தொடர்புடைய சுட்டிகள்:
வலைப்பூ-காற்றுவெளி
மரத்தடி ஆக்கங்கள்
நிலாச்சாரல் பேட்டி
திண்ணை ஆக்கங்கள்



மார்கழி 1 - மார்கழித் திங்கள் - முதல் பாமாலை

Thursday, December 14, 2006

4. காற்றினிலே வரும் கீதம்!




திரைப்படம்: மீரா
வெளிவந்த வருடம்: தெரியவில்லை
பாடகி: எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி
இசையமைப்பாளர்: எஸ்.வி.வெங்கட்ராமன்
இயற்றியவர்: கல்கி
குழலில் இசைத்தவர்: சிக்கில் மாலா சந்திரசேகர்



காற்றினிலே..... வரும் கீதம்..... காற்றினிலே....

காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திடப் பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்

பட்ட மரங்கள் தளிர்க்கும் கீதம்
பண்ணொலி கொஞ்சிடும் கீதம்
காட்டு விலங்கும் கேட்டே மயங்கும்
மதுர மோகன கீதம்
நெஞ்சினிலே
நெஞ்சினில் இன்பக் கனலை எழுப்பி
நினைவழிக்கும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்



துணை வண்டுடன் சோலை குயிலும்
மனம் குவிந்திடவும்
வானவெளிதனில் தாராகணங்கள்
தயங்கி நின்றிடவும்
ஆ என் சொல்வேன் மாயப்பிள்ளை
வேய்ங்குழல் பொழி கீதம்
காற்றினிலே வரும் கீதம்

நிலா மலர்ந்த இரவினில் தென்றல்
உலாவிடும் நதியில்
நீலநிறத்து பாலகன் ஒருவன்
குழல் ஊதி நின்றான்
காலமெல்லாம்
காலமெல்லாம் அவன் காதலை எண்ணி
உருகுமோ என் உள்ளம்
காற்றினிலே வரும் கீதம்


அருஞ்சொற்பொருள்:
பண்ணொலி - இசையுடன் கூடிய ஒலி
மதுர - இனிமை
மோகன - மனம் மயக்கும்
கீதம் - பாடல்; இசை
தாராகணங்கள் - தாரா என்றால் விண்மீன்கள்; தாராகணங்கள் என்றால் விண்மீன்கள் கூட்டம்
வேய்ங்குழல் - மூங்கில் குழல்

Sunday, December 10, 2006

3. திருமலை உறைந்திடும் கருமுகிலே!

பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும்

வருக வருகவே திருமலை உறைந்திடும்
கருமுகிலே அருள் பொழிக பொழிகவே (வருக வருகவே)

மறையுடையோன் ஏறு விடையுடையோன் ஆறு
முகமுடையோன்
பணியும் திருவுடையோன் (வருக வருகவே)




மோகன முறுவல் முகம் கண்டு - பிறவி
சோகம் தவிர்க்கும் விழி அருளை உண்டு - உன்
தாள் மலர் தழுவிடத் தாகம் கொண்டு - நாளும்
தவித்திடும் எனக்கு உன் தரிசனம் தந்திட (வருக வருகவே)



பாடியவர்: எம்.எஸ். சுப்புலக்ஷ்மி
இயற்றியவர்: அம்புஜம் கிருஷ்ணா
இராகம்: மோகனம்
தாளம்: ஆதி

Saturday, December 09, 2006

2. அலைபாயுதே கண்ணா

மிகப் பிரபலமான அலைபாயுதே கண்ணா...பாடலைக் கேட்க, இங்கே சொடுக்கவும் - இது திரைப்படப் பாடல்; ஏ.ஆர்.ரகுமான் இசையில்

மற்ற கலைஞர்கள் பாடிடும் பாடல் சுட்டிகளும்,
நாதஸ்வரம் மற்றும் இன்ன பிற இசைக்கருவிகளிலும் "அலை பாயுதே" பாடலைக் கேட்க வேண்டுமா?
பதிவின் இறுதியில் சுட்டிகள் உள்ளன!



அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணு கானம் அதில்

(அலைபாயுதே)

நிலை பெயராது சிலை போலவே நின்று
நேரம் ஆவதறியாமலே மிக வினோதமான முரளீதரா என் மனம்

(அலைபாயுதே)

தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே - உன்
திக்கை நோக்கி என் இரு புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணு கானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் மருகுதே


கதித்த மனத்தில் உருத்தி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்தவா - ஒரு
தனித்த வனத்தில் அணைத்து எனக்கு

உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா

கரைகடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையறு கழல் எனக்கு அளித்தவா
கதறி மனமுருக நான் அழைக்கவோ
இதர மாதருடன் நீ களிக்கவோ


இது தகுமோ இது முறையோ
இது தருமம் தானோ
குழலூதிடும் பொழுது ஆடிடும் குழைகள் போலவே
மனதில் வேதனை மிகவொடு

(அலைபாயுதே)



Nadaswaram = Sheik Chinna Moulana Sahib
Nadaswaram = Thiruvizha Jaishankar
Saxaphone = Kadri Gopalnath
Violin = Ganesh-Kumaresh Violin
Jaladharangam = Ananyampatti S Dhandapani
Mandolin = U Srinivas

Chitra
Maharajapuram Santhanam
Sudha Raghunathan
KJ Yesudas
Bombay Sisters

நன்றி: MusicIndiaOnline.com; karanatik.com



பாடல்: அலை பாயுதே
பாடியவர்: ஹரிணி, கல்யாணி மேனன், நெய்வேலி ராமலக்ஷ்மி
எழுதியவர்: ஊத்துக்காடு வேங்கட கவி

ராகம்: கானடா
தாளம்: ஆதி
படம்: அலை பாயுதே

1. கணபதியே வருவாய் அருள்வாய்

அன்று பாரதி பாடினான் - கண்ணன் பாட்டு!
இன்று நாமும் பாடுகிறோம் - கண்ணன் பாட்டு!!

மார்கழி மாதத்தில் இந்தப் புதிய வலைப்பூ.
இதில், நம்மை உடையவன், நாராயணன் நம்பி!
அவனைக் குறித்த தமிழ்ப் பாடல்களின்

  • வரி (lyrics),
  • ஒலி (audio clips),
  • ஒளி (video clips).
எல்லாம் இடம் பெறப் போகின்றன! திரை இசை மட்டும் இல்லை, பிரபலமான எல்லாப் பாடல்களும் தான்!

இந்த வலைப்பூ நன்கு பூத்து, நாளும் மணம் தந்து மகிழ்விக்க,
கணபதியானை வணங்கித் துவங்குகிறோம்!
என்றும் போல் உங்கள் அன்பும் ஆதரவும் வேண்டுகிறோம்!

கூட்டு முயற்சியாக, குமரன், பாலாஜி மற்றும் அடியேன்;
நீங்களும் இந்த முயற்சியில் பங்கு கொண்டால் எல்லாரும் மகிழ்வோம்!
குழுவில் சேர வேண்டுமா?
வலப்பக்கச் சுட்டியை - சொடுக்குங்கள்!
நற்றமிழ்ப் பாடல்களை - அடுக்குங்கள்!!




பாடலைக் கேட்க, இங்கே சொடுக்கவும்

கணபதியே வருவாய் அருள்வாய்
(கணபதியே)

மனம் மொழி மெய்யாலே தினம் உன்னைத் துதிக்க
மங்கள இசை என்தன் நாவினில் உதிக்க

(கணபதியே)

ஏழு சுரங்களில் நான் இசைபாட
எங்குமே இன்பம் பொங்கியே ஓட
தாளமும் பாவமும் ததும்பிக் கூத்தாட
தரணியில் யாவரும் புகழ்ந்து கொண்டாட

(கணபதியே)

தூக்கிய துதிக்கை வாழ்த்துக்கள் அளிக்க
தொனியும் மணியென கணீர் என்றொலிக்க
ஊக்குக நல்லிசை உள்ளம் களிக்க
உண்மை ஞானம் செல்வம் கொழிக்க

(கணபதியே)



பாடல்: கணபதியே வருவாய் அருள்வாய்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
எழுதியவர்:

ராகம்: நாட்டை
தாளம்: ஆதி
படம்:

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP