Monday, December 18, 2006

8. ஆழிமழைக்கண்ணா!


எங்கும் கண்ணனே எதிலும் கண்ணனே
தங்கும் வீடும் தரிக்கும் உடைகளும்
சிங்காரமாக சீர்பெறு அணிகளும்
சிங்காரக் கண்ணனே சிங்காரக் கண்ணனே

உண்ணும் சோறும் பருகும் நீரும்
தின்னும் வெற்றிலையும் தீங்கனிச்சாறும்
கண்ணன் மாயவன் காதலன் கோவிந்தன்
எண்ணில் இன்பங்கள் நல்குவான் அவனே

ஆழிமழைக்கண்ணன் அன்பர்க்கு இனியனவன்
பாழியந்தோளுடையான் பன்மலர் பூணுவான்
சீர்மிகும் அவன் உருவைச் சிந்தித்தே வாழுவோம்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

***

பாவைத்திருநாளில் அடியேனின் (குமரனின்) சிறிய பாமாலை.
மார்கழி 4 - ஆழிமழைக் கண்ணா - நான்காம் பாமாலை

25 comments :

வல்லிசிம்ஹன் said...

மழையை வேண்டி நம் ஊரில் இசைக்கப் பட்டப் பாட்டு.
மழையும் கொடுத்துவிட்டான்.

இன்னும் என்ன கேட்கப் போகிறோம் பரிசாக.
கண்ணன் பட்டுக் கேட்கவேண்டும் என்றுதான்.
அருமையாக இருக்கிறது குமரன்.
நன்றி.

ஜெயஸ்ரீ said...

குமரன், நீங்கள் எழுதிய பாடலா ?

அருமையாக இருக்கிறது.

குமரன் (Kumaran) said...

நன்றி வல்லி அமமா. மழை வேண்டியது கோதையின் பாடல். மழையையே கண்ணனாகப் பார்த்து ஆழிமழைக்கண்ணா என்றாள் என்று சொல்கிறது அடியேன் பாடல்.

குமரன் (Kumaran) said...

ஆமாம் ஜெயஸ்ரீ. இன்றைய திருப்பாவைப் பாடலுக்கு ஏற்ற மாதிரி இன்று எழுதிய பாடல் இது.

ஞானவெட்டியான் said...

அன்பு குமரா,
பாடல் அருமை!
தொடர்க!
வாழ்க! வளர்க!!

வல்லிசிம்ஹன் said...

அதையேதான் சொன்னேன் குமரன்.

பரிசாகக் கேட்பது கண்ணன்பாட்டு என்று.
அதையும் கொடுக்கப் போகிறான்
உங்கள் வழியாக.:-0)

Anonymous said...

அருமை தலைவா....

தாங்கள் பித்துக்குளி முருகதாஸ் அவர்கள் பாடிய கீழ்கண்ட பாடலை முழுதாக பதிவிட முடியுமா?..

"காத்தருள் புரிவாய் நீயே, கமலக்கண்ணா!
காத்தருள் புரிவாய் நீயே...

மார்பில் கவசமுடன், துளபமாலை அணிந்து,
பார்க்க, பார்க்க தெவிட்டாத பரிபூரணநந்தா"

மெளலி...

குமரன் (Kumaran) said...

தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஞானவெட்டியான் ஐயா.

மதுமிதா said...

பாடல் அருமை குமரன்
விஸ்வரூபம் எடுக்கிறான் கண்ணன்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஆழ்வார் வரிகளைப் பாட்டின் இடையிடையே நிரப்பிக் கவிதைக்கு அழகு செய்திருக்கிறீர்கள், குமரன்!

"உண்ணும் சோறும் பருகும் நீரும்
தின்னும் வெற்றிலையும்",
"பாழியந்தோளுடையான்"

ஊழி முதல்வனைப் படத்தில் கொண்டு வந்ததற்கும் நன்றி!

Anonymous said...

அருமையான பாடல் குமரன் !! இந்த சிறிய அறிவிற்கு ஒரு சொல்லின் பொருள் விளங்கவில்லை, விளக்க முடியுமா? "பாழியந்தோளுடையான்" என்றால் என்ன?

நன்றி,
குமரேஷ்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Kumaresh said...
"பாழியந்தோளுடையான்" என்றால் என்ன?//

பாழியந்தோளுடையான் =
பாழி + அம் + தோள் + உடையான்
அகன்ற, அழகான தோள் உடையவன்.
அந்தத் தோள்களில் பல மலர் மாலைகள் பூணுவான் என்ற நோக்கில் குமரன் எழுதியுள்ளார்.

"பாழியந் தோளுடைய பத்மநாபன் கையில்" என்ற ஆண்டாள் பாசுரத்தின் சொல்லை அப்படியே ஆண்டுள்ளார்.

சரி தானே குமரன்?
ஓகேவா கும்ரேஷ்?

குமரன் (Kumaran) said...

பரிசாகக் கண்ணன் பாட்டு தானே வல்லி அம்மா. கட்டாயம் கொடுப்பான். :-)

குமரன் (Kumaran) said...

நன்றி மௌலி. நீங்கள் கேட்டப் பாடலைத் தேடிப் பார்க்கிறேன். கிடைத்தால் கட்டாயம் பதிவில் இடுகிறோம்.

குமரன் (Kumaran) said...

ஆமாம் மதுமிதா அக்கா. எங்கும் கண்ணன் என்ற உணர்வு தானே விஸ்வரூபம். ஊழி முதல்வன் அவன் என்ற பொருத்தத்தை நன்றாக இரவிசங்கர் சொல்லியிருக்கிறார் பாருங்கள். :-)

Anonymous said...

அற்ப்புதமான வலைப்பதிவு!! :)

குமரன் (Kumaran) said...

ஆமாம் இரவிசங்கர். நான்காம் நாளுக்கான திருப்பாவை பாசுரத்தின் அடிப்படையில் எழுத வேண்டும் என்று எழுதினேன் இரவி. தலைப்பு அதனால் ஆழி மழைக்கண்ணா என்று வைத்தேன்.

ஆழிமழைக்கண்ணா என்று மழைக்கடவுளை அழைத்து ஆணையிடுகிறாள் என்று சொல்லிக் கவிதையைத் தொடங்கிய போது பாசுரம் முழுதும் ஒரு முறை சொல்லிப் பார்த்துக் கொண்டேன். கோதை தமிழில் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் கோதையின் கதைப்பகுதிக்கு ஏற்ப எல்லாவற்றையும் மழைக்கடவுளையும் கோதை கண்ணனாகவே பார்க்கிறாள் என்று தோன்றியது. இந்தக் கவிதையை என் கவிதையாக எண்ணாமல் கோதை பாடுவதாக எண்ணிப் பாருங்கள். நான் சொல்வது புரியும்.

அப்படி எழுதும் போது ஆழ்வார் பாசுர வரிகள் தானாகவே வந்து அமைவது இயற்கை தானே. :-)

ஆமாம். நீங்கள் சொன்னது போல் 'உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்னன்' எனும் திருவாய்மொழி வரியும், பாழியந்தோளுடையான் என்று கோதை திருப்பாவை வரியும் இங்கே இட்டுள்ளேன்.

எங்கும் கண்ணன் என்று தொடங்கும் இந்தப் பாடலுக்குப் பொருத்தமாக இருக்கட்டும் என்று விஸ்வரூபக் கண்ணனை இட்டேன். அது இன்றைய பாடலில் வரும் 'ஊழி முதல்வன் உருவம்' ஆகவும் அமைந்தது இந்தப் பாடல் கோதையின் பாடல் என்பதை உறுதி செய்கிறது. :-)

அதே போல் எதுகை மோனைக்காக எழுதியது 'பன்மலர் பூணுவான்' என்பது. அது பாழியந்தோளுடையானுடன் எப்படி பொருந்தி வந்துள்ளது என்று நீங்கள் விளக்கியவுடன் பார்த்தாலும் இது கோதையின் பாடல் என்பது உறுதியாகிறது.

அடியேன் எப்போதாவது எழுதும் கவிதைகளுக்கும் இராகவன் மயிலாரின் துணையுடன் விளக்கம் தருவார். இனி மேல் நீங்கள் விளக்கம் தரலாம் என்று எண்ணுகிறேன். இராகவனின் விளக்கத்திலும் நான் நிறைய கற்றுக் கொள்வேன். உங்கள் விளக்கத்திலும் அது நடக்கிறது. :-)

எதுகை மோனை அமைப்பு திருப்பாவையில் இருக்கும் எதுகை மோனை அமைப்பினைப் போலவே அமைய முயன்றுள்ளேன்.

குமரன் (Kumaran) said...

வெகு நாட்களுக்குப் பிறகு என் பதிவிற்கு வந்து பின்னூட்டம் இட்டதற்கு நன்றி குமரேஷ். நீங்கள் முடிந்த போதெல்லாம் படிக்கிறீர்கள்; பின்னூட்டம் தான் இடுவதில்லை என்று நினைக்கிறேன்.

உங்கள் கேள்விக்கு இரவிசங்கர் மிக நன்றாக விளக்கம் சொல்லியிருக்கிறார் பாருங்கள். உங்களுக்கு அந்த விளக்கத்தைத் தனிமடலிலும் அனுப்பியிருக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி திரு. CVR

G.Ragavan said...

குமரன், இந்தப் பாடலைப் படிக்கையில் பாவையின் நினைவு வராமல் இல்லை. :-) நல்ல பாடல்.

நீங்கள் சொல்வது உண்மைதான். கண்ணனைத்தான் மழையாகக் காண்கிறாள் ஆண்டாள். இதோ சென்ற ஆண்டு நானிட்ட விளக்கம்.

http://iniyathu.blogspot.com/2005/12/blog-post_18.html

ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்
ஆழி உள்புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்துப்
பாழியம் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிந்தேலோர் எம்பாவாய்

நோன்பைச் சொல்லி அதன் பெருமையைச் சொல்லி அதன் முறைமைகளைச் சொல்லி அதன் பலன்களையும் சொல்லியாகி விட்டது. இப்பொழுது நோன்பைத் துவக்கலாம். அப்படி நோன்பைத் துவக்கவும் தொடரவும் இறைவன் அருள் வேண்டும். அதை வேண்டுவோம் முதலில்.

கண்ணனே! கடலுக்கும் மழைக்கும் மன்னனே! நீ எங்களை எதற்கும் கை விடாதே. நாங்கள் நோன்பு துவக்குகிறோம். உன்னருளின்றி ஒன்றும் ஆகாது. துவங்கும் நோன்பும் தூய்மையாகத் துவங்க வேண்டும். உள்ளத்தைத் தூய்மைப் படுத்துவதும் நீர். உடலைத் தூய்மைப் படுத்துவதும் நீர். எங்களைக் காக்க நீரே வரவேண்டும் நீராகவும் வரவேண்டும்.

எப்படித் தெரியுமா? ஆழமான ஆழியில் நிறைந்து ததும்பும் உப்புதல் கொண்ட நீரை முகந்து உப்புதல் கொண்டு இடியிடித்துக் கொண்டு விண்ணில் ஏறிடும் மேகங்கள். ஊழி முதல்வனான உந்தன் மேனி போலவே கருத்து விண்ணை மறைத்து நிற்கும் அந்த மேகங்கள். விரிந்த (பாழியம்) தோள்களை உடைய பற்பனாபன் கையில் இருக்கும் சக்கரத்தினைப் போல மின்னிடும் அந்த மேகங்கள். ஓவென்று மங்கலமாய் ஒலிக்கும் உனது கைச் சங்கைப் போல அதிர்ந்திடும் அந்த மேகங்கள்.

(கண்ணனின் கரிய மேனியைப் பாடாத தமிழ்ப் புலவன் யார்? சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் பாடுகிறார். "கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே!" சைவ மரபில் பிறந்த அவரும் கரியவனைப் பாடியிருக்கிறார். வைணவ மரபில் வந்த பகழிக்கூத்தர் முருகனைப் பாடியது போல. சமய மயக்கம் கூடாது என்பதே இதன் பொருள்.)

மின்னியும் அதிர்ந்தும் நின்று விடாமலும் காலம் தாழ்த்தாமலும் உனது கையிலிருக்கும் சார்ங்கம் என்ற வில்லிலிருந்து பொழியப்படும் இடைவிடாத அம்புகளைப் போல சரஞ்சரமாய் மழை பெய்து இந்த உலகத்தில் நாங்கள் அனைவரும் வாழ்ந்திடும் வகை செய்வாய். அப்பொழுதான் நீர்வளம் பெருகி இந்த மார்கழி மாதத்தில் நாங்கள் நீராடித் தூய்மையாவாய் எம்பாவாய்!

(இந்தப் பாடலில் இன்னொரு சிறப்பும் உண்டு. நோக்குமிடமெங்கும் இறைவனைக் கண்டவள் கேட்கும் ஒலியெல்லாம் இறைவனைக் கேட்டாள். இறைவன் புலன்களுக்கு எட்டான் என எப்படிச் சொல்வது? பார்க்கும் பார்வை. கேட்கும் ஒலி. நுகரும் நாற்றம். உணரும் தீண்டல். பேசும் மொழி என்று ஐந்து புலன்களின் வழியாகவும் நாம் உணர்ந்து கொண்டிருப்பது இறைவன் கருணையல்லவா. ஆகையால்தான் மழை மேகங்களைப் பார்த்ததும் இடியிடித்து மின்னியதும் கண்ணன் நினைவில் ஆழ்கின்றார். அதனால்தான் வைணவ அடியவர்களை ஆழ்வார் என்பர். கரிய மேகத்தைப் பார்த்தால் கண்ணனின் கரிய மேனி நினைவில் வருகிறது. இடிக்கும் ஒலியில் கண்ணனின் கைச்சங்கின் ஒலி எழுகிறது. மின்னுகின்ற மின்னல் திருமால் கைச் சக்கரம் போலத் தெரிகிறது. பொழியும் சர மழையில் சார்ங்க வில்லின் அம்பு மழை தெரிகின்றது. அதுதான் அன்பு மழைபெயனப் பெய்கிறது ஆண்டாளுக்கு.)

அன்புடன்,
கோ.இராகவன்

Anonymous said...

சபாஷ் குமரன்:

"ஆண்டாள் ஜீயர்" நம் எம்பெருமானார். அவர் உள்வாங்கிக் கொண்டது போல் ஆண்டாளை நீங்களும் உள்வாங்குகிறீர்கள். இது வரம் இது தவம்! ஆண்டாள் தாயார். எளிமையின் இன்னுரு. கிட்ட நெருங்கினால் ஞானத்தின் சுரங்கம்.

ஆழி மழைக் கண்னன் யார்? வருணனா? இல்லை கண்ணனா? என்ற மயக்கத்தைத் தீர்க்கும் என் பழைய கட்டுரை ஒன்று:

ஆழ்வார்க்கடியன்

இந்த மாதம் முழுவது ஆண்டாளின் தியானத்தில் இருங்கள். அது தவம்!

குமரன் (Kumaran) said...

'கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் கண்ணன்' என்ற பாடலுக்கேற்ப அழைத்ததும் வந்து பார்த்து தங்கள் அன்பான வார்த்தைகளைச் சொன்னீர்கள் கண்ணன் ஐயா. மிக்க நன்றி.

தங்களது 'ஆழ்வார்க்கடியான்' வலைப்பூவைத் தொடர்ந்து இதோ படித்துக் கொண்டிருக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

நன்றி இராகவன்.

Anonymous said...

அன்புக் குமரா!
உங்களுக்குப் நன்கு பாடலும் எழுத வருகிறதே!!வரிகளைச் சுவைத்தேன்.
நன்றி!
யோகன் பாரிஸ்

குமரன் (Kumaran) said...

தங்களின் அன்பான சொற்களுக்கு மிக்க நன்றி யோகன் ஐயா.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP