Sunday, December 31, 2006

21: நேயமாய் 2007 நினைவினில் நிற்க நிற்க!

புது வருடம் பிறக்கிறது. உலகில் எத்தனை எத்தனை துயரங்கள்! பிறக்கும் புது வருடத்திலாவது இந்தத் துயரங்களுக்கு எல்லாம் விடிவு காலம் பிறக்காதா என்ற ஏக்கம் தான் மனத்தில் நிற்கிறது. இலங்கையில் நம் உடன்பிறந்தோர் படும் துயரங்கள் துன்பங்களில் இருந்து தொடங்கிச் சொன்னால் சொல்லி முடியாது. அதனால் புது வருட வாழ்த்துகள் அனுப்பும் நண்பர்களின் வாழ்த்துகளை அரைகுறை மனத்துடனே ஏற்றுக் கொள்ளத் தோன்றுகிறது. கொஞ்சம் தயங்கி, பின்னர் அவர்களின் அன்பிற்காக அந்த நண்பர்களின் வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டு, அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள் அனுப்பத் தோன்றுகிறது.

இறைவனின் எல்லையற்ற கருணையில் நம்பிக்கை வைத்து இந்த வருடத்தைத் துவக்கி அவன் நல்லருளால் எல்லாமே நன்மையாக நடக்க வேண்டும் என்று வேண்டி இந்தக் கவிதையை இன்று இயற்றி இறைவணக்கமாகவும் புது வருட வாழ்த்துகளாகவும் அன்பு நண்பர் இரவிசங்கர் கண்ணபிரானின் அன்புக் கட்டளைக்கேற்ப இங்கே இடுகிறேன்.





எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா இறைவா இறைவா!
பித்தராய் நாங்கள் உன் பெருமை அறியாமல் பிதற்றுகிறோம் இறைவா!
அத்தனை கோடி இன்பங்களும் இங்கே அனைவருக்கும் கிடைக்க
அத்தனே உன்னை அடிபணிகின்றோம் அருள்வாய் அருள்வாய் அருள்வாய்!


காயிலே புளித்தாய் கனியிலே இனித்தாய் கடல்வண்ணா கருணைக்கடலே!
நோய் நொடி இன்றி நீனிலத்தவர் வாழ நீயருள்வாய் கண்ணா!
பேய்முலை உண்டு பெரும்பழி தீர்த்தப் பெருமான் உன்னருளாலே
பேய்த்தனம் நீங்கி பேதைமை நீங்க பெற்றியைத் தந்தருள்வாய்!

மாயமாய் போனதே முந்தைய வருடங்கள், மாதவா உன்னருளால்
நேயமாய் இரண்டாயிரத்தேழாம் வருடம் நினைவினில் நிற்க நிற்க!
நீயருள் செய்க! நாயகன் அருளால் நானிலம் வாழ்க வாழ்க!
நிறைமதி பெரும்புகழ் நிறைவுடன் பெற்றுமே அனைவரும் வாழ்க வாழ்க!


அருஞ்சொற்பொருள்:

அத்தன் - அப்பன்
நீனிலத்தவர் - உலகத்தவர்
பெற்றி - நற்குணம்; நல்லியல்பு.

***

மார்கழி 17 - அம்பரமே தண்ணீரே - பதினேழாம் பாமாலை.

26 comments :

குமரன் (Kumaran) said...

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்!
கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்!
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்!
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேல் ஓர் எம்பாவாய்!

எங்கு பார்த்தாலும் 'இவர் உடைகளை மட்டுமே தானமாய் அளிக்கிறார்' என்று சிலரும், 'இல்லை. இவர் தண்ணீர் தானம் மட்டுமே அளிக்கிறார்' என்று சிலரும், 'இல்லை. இவர் அன்னதானம் மட்டுமே அளிக்கிறார்' என்று சிலரும் சொல்லும் படியாக எல்லா திக்கிலும் இவற்றை மிகுதியாக தருமம் செய்யும் எங்கள் தலைவா! நந்தகோபாலா! எழுந்திராய்.

கொம்பு போன்ற பெண்டிர்களில் கொழுந்து போல் சிறந்தவளே! எங்கள் குலவிளக்கே! எம் தலைவியே! யசோதாய்! அறிவுறாய்.

வானை ஊடுறுவிச் சென்று ஓங்கி உலகங்கள் எல்லாவற்றையும் அளந்த தேவர்கள் தலைவனே! உறங்காமல் எழுந்திராய்!

செம்மையான பொன்னினால் செய்யப்பட்ட வீரக்கழலை அணிந்த திருவடியைக் கொண்ட செல்வனே! பலதேவனே! உன் தம்பியும் நீயும் உறங்காதீர்கள், எழுந்திருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

ஓங்கி உலகளந்த கோமான் கண்ணன்
செய்யும் அறமே உலகெங்கும் நிலைக்க அவனே வழிகாட்டட்டும்.
உலகம் நோய் நொடியின்றி இருக்கட்டும்.
எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வெற்றி said...

குமரன்,
அருமையான கவிதை.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் உளம் கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

/* புது வருடம் பிறக்கிறது. உலகில் எத்தனை எத்தனை துயரங்கள்! பிறக்கும் புது வருடத்திலாவது இந்தத் துயரங்களுக்கு எல்லாம் விடிவு காலம் பிறக்காதா என்ற ஏக்கம் தான் மனத்தில் நிற்கிறது. இலங்கையில் நம் உடன்பிறந்தோர் படும் துயரங்கள் துன்பங்களில் இருந்து தொடங்கிச் சொன்னால் சொல்லி முடியாது. அதனால் புது வருட வாழ்த்துகள் அனுப்பும் நண்பர்களின் வாழ்த்துகளை அரைகுறை மனத்துடனே ஏற்றுக் கொள்ளத் தோன்றுகிறது. கொஞ்சம் தயங்கி, பின்னர் அவர்களின் அன்பிற்காக அந்த நண்பர்களின் வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டு, அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள் அனுப்பத் தோன்றுகிறது. */

உண்மைதான் குமரன். வரும் வருடம் உலகில் அமைதி நிலவி எல்லோரும் எல்லாம் பெற்று சுபீட்சமாக வாழ இறைவன் அருள் புரிவானாக.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அருமையான புத்தாண்டுக் கவிதை குமரன்!

புத்தாண்டு வாழ்த்தைக் கவிதையாய் சொன்ன குமரனுக்கும் அவர் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

நேயமாய் இரண்டாயிரத்தேழாம் வருடம் நினைவினில் நிற்க நிறைந்த வாழ்த்துக்கள்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

உலகின் துயரங்கள் பல! ஈராக் மற்றும் இஸ்ரேல் பிரச்னை, தாய்லாந்து மக்கள் துன்பங்கள், இயற்கைச் சீற்றங்கள் ஏழை நாடுகளையே மீண்டும் தாக்கல் என்று பல நிகழ்வுகள் வருத்தம் அளித்தாலும்,

நம் சக தமிழ் மக்கள் அண்டை நாடுகளில் குறிப்பாக ஈழத்தில் படும் துன்பங்கள், மனதை இன்னும் கனமாக்குகின்றன! தீர்வு வந்திடாதோ என்று ஏங்கும் நேரத்தில் இழுபறியாகவே போகும் அமைதி!

2007இல் ஆவது அமைதி திரும்ப இறையருள் இறைஞ்சுவோம்! இன்பம் கூடக் கேட்கவில்லை! அமைதி மட்டுமே வேண்டுவது! அரங்கன் அருள வேண்டும்!

அடியேன் அனுமத் ஜெயந்தி பதிவில் ஒரு அன்பர், இலங்கையில் மீண்டும் அனுமன் வந்து தீமையைக் களையமாட்டாரா என்றே கேட்டிருந்தார்! அப்போதே மனம் ஒரு மாதிரி ஆகி விட்டது!

கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
இறைவா இதையே அருள்வாய், 2007 புத்தாண்டில்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//எல்லாமே நன்மையாக நடக்க வேண்டும் என்று வேண்டி .. அன்பு நண்பர் இரவிசங்கர் கண்ணபிரானின் அன்புக் கட்டளைக்கேற்ப இங்கே இடுகிறேன்//

:-)
குமரன் அல்லவா சங்கரனுக்குக் கட்டளை இடுவார், பிரணவம் கேட்க வேண்டுமானால்?
குமரனுக்கே கட்டளையா!

//மாயமாய் போனதே முந்தைய வருடங்கள், மாதவா உன்னருளால்
நேயமாய் இரண்டாயிரத்தேழாம் வருடம் நினைவினில் நிற்க நிற்க!//

அருமையான வரிகள், குமரன்!
நிற்க நிற்க! என்று நீங்கள் சொன்னது, அடியேனுக்குப் பொலிக பொலிக என்று பாசுரம் போல் பட்டது!

பொலிக பொலிக போயிற்று உலகின் துன்பம்!
பெருக பெருக அமைதியும் வளமும் தானே!

அனைவருக்கும் 2007 புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ஜெயஸ்ரீ said...

நல்ல கவிதை குமரன்.


//நேயமாய் இரண்டாயிரத்தேழாம் வருடம் நினைவினில் நிற்க நிற்க!
நீயருள் செய்க! நாயகன் அருளால் நானிலம் வாழ்க வாழ்க!
நிறைமதி பெரும்புகழ் நிறைவுடன் பெற்றுமே அனைவரும் வாழ்க வாழ்க! //

அருமையான சிந்தனை. நிற்க, நிற்க, வாழ்க வாழ்க என்று இருமுறை வருவது வரிகளுக்கு ஒரு கம்பீரத்தைக் கொடுக்கிறது.


உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் மனங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

SP.VR. SUBBIAH said...

காயிலே புளித்தாய் கனியிலே இனித்தாய்
சேயிலே சிரிக்க வைத்தாய் - நோயிலோ
பாயிலோ படுக்குமுன் பகவானே உன்னுள்ளக்
கோயிலில் என்னைக் குடியமர்த்து!

Anonymous said...

நல்ல பாடல்...நன்றி...

எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

மெளலி........

குமரன் (Kumaran) said...

ஆமாம் வல்லி அம்மா. ஓங்கி உலகளந்த உத்தமன் பெயர் பாடி நாங்களும் எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் என்று வாழ்த்துவோம்.

குமரன் (Kumaran) said...

நன்றி வெற்றி.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

குமரன் (Kumaran) said...

உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி இரவிசங்கர். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

குமரன் (Kumaran) said...

நன்றி ஜெயஸ்ரீ. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

குமரன் (Kumaran) said...

நல்ல பா வாத்தியார் ஐயா. அவனிடமிருந்து வேறெதையும் வேண்டாமல் அவனையே கேட்டுவிட்டீர்கள்.

குமரன் (Kumaran) said...

நன்றி திரு.மௌலி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Anonymous said...

Good Poem Kumaran

Kishore

Boston Bala said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நன்றி kishore!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Boston Bala said...
புத்தாண்டு வாழ்த்துக்கள்//

பாபா, விடுமுறை (வெகேஷன்) எப்படி இருந்தது?
புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும், துணைவியார் மற்றும் குழந்தைக்கும்!!

ENNAR said...

அனைத்தும் அவனது திருவிளையாடல் வருவதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்ம் காலம் வரும்

ஷைலஜா said...

அழகிய
ஆழ்ந்த
இனிய
ஈடு இணையற்ற
உண்மையுடன்
ஊக்கமிகு
எழிலார்ந்த
ஏற்றம்கொண்ட
ஐயமற்ற
ஒப்பில்லாத
ஓங்குபுகழ்
ஒளவை வளர்த்த தமிழில்
இஃதாய்
குமரன் அளித்த கவிதை நன்று!

குமரன் (Kumaran) said...

நல்ல காலம் விரைவில் வரட்டும் என்னார் ஐயா.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஷைலஜா said...
குமரன் அளித்த கவிதை நன்று!//

குமரன் கவிதைக்கு ஷைலஜா அளித்த பதில் கவிதை, இன்னும் நன்று! :-)

குமரன் (Kumaran) said...

கவிதைக்கு நன்றி ஷைலஜா.

துளசி கோபால் said...

எல்லாம் நல்லதாகவே நடக்கும், நடக்கணும் என்ற நம்பிக்கையுடன்,
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து(க்)கள்.

குமரன் (Kumaran) said...

நன்றி துளசி அக்கா.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP