Saturday, December 23, 2006

13. கர்ணன் படத்திலிருந்து கண்ணன் கீதை



மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா!...
மரணத்தின் தன்மை சொல்வேன்!...
மானிடர் ஆன்மா மரணம் எய்தாது...
மறுபடிப் பிறந்திருக்கும்!...
மேனியைக் கொல்வாய்...மேனியைக் கொல்வாய்...
வீரத்தில் அதுவும் ஒன்று!
நீ விட்டுவிட்டாலும் அவர்களின் மேனி,
சென்று தான் தீரும் ஓர் நாள்...

(கண்ணா, உனக்கு எல்லாம் தெரியும், ஆனால் எனக்கு உன்னைத் தான் தெரியும், பரந்தாமனைத் தான் தெரியும்! நீயா என்னை இந்தப் பாவச் செயலுக்குத் தூண்டுவது?)

என்னை அறிந்தாய், எல்லா உயிரும் எனதென்றும் அறிந்து கொண்டாய்!
கண்ணன் மனது கல் மனதென்றோ...
காண்டீபம் நழுவ விட்டாய்,
காண்டீபம் நழுவ விட்டாய்!
மன்னரும் நானே, மக்களும் நானே,
மரஞ் செடி கொடியும் நானே...
சொன்னவன் கண்ணன், சொல்பவன் கண்ணன்...
துணிந்து நில், தர்மம் வாழ்க!

(ஆனால் கொல்லப் போகிறவன் நான் அல்லவா? அந்தப் பழியெல்லாம் எனக்கல்லவா? கண்ணன் காட்டிய வழி என்று நீ எண்ணியதை நான் செய்து விட்டால், அதனால் வரும் பாவ பலனை யார் சுமப்பது? இந்தக் கொலைக்கு நீ உடந்தை ஆவாயா? சொல், சொல்!)

புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால்
அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே!...
போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும்,
போகட்டும் கண்ணனுக்கே!...
கண்ணனே காட்டினான், கண்ணனே தாக்கினான்,
கண்ணனே கொலை செய்கின்றான்!...
காண்டீபம் எழுக, நின் கைவண்ணம் எழுக,
இக் களமெலாம் சிவக்க, வாழ்க! ஆஆஆஆஆ...


பகவத் கீதை - பாரதியாரின் முன்னுரை (பாகம் 8 & 12)
(வடமொழிச் சொற்கள் நீக்கி சில பகுதிகள் மட்டும் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளன! பின் வருவன பாரதியாரின் வரிகள்...)

பகவத் கீதையைச் சிலர் கொலை நூலாகப் பாவனை செய்கிறார்கள்.
துரியோதனாதிகளைக் கொல்லும்படி அர்ஜுனனைத் தூண்டுவதற்காகவே, இந்தப் பதினெட்டு அத்தியாயமும் கண்ணபிரானால் கூறப்பட்டன. ஆதலால்,இது கொலைக்குத் தூண்டுவதையே தனி நோக்கமாகவுடைய நூல் என்று சிலர் பேசுகிறார்கள்.

கொலை செய்யச் சொல்ல வந்த இடத்தே, இத்தனை வேதாந்தமும், இத்தனை சத்வ குணமும், இத்தனை துக்க நிவர்த்தியும், இத்தனை சாகாதிருக்க வழியும் பேசப்படுவது என்னே என்பதை அச்சில மூடர் கருதுகின்றனர்.

துரியோதனாதியர் காமக் குரோதங்கள்.
அர்ஜுனன் ஜீவாத்மா.
ஸ்ரீ கிருஷ்ணன் பரமாத்மா.
இந்த ரகசியம் அறியாதவருக்குப் பகவத் கீதை ஒருபோதும் அர்த்தமாகாது.

இந்நூல் ஞான சாஸ்திர்களில் முதன்மைப் பட்டிருப்பதுபோல், காவிய வரிசையிலும் மிக உயர்ந்ததென்பதற்குச் சான்றாகும்.
ஆனால், அதிலிருந்து இது ஞான சாஸ்திரமேயில்லை என்று மறுக்கும் மூடர், முகவுரையை மாத்திரமே வாசித்துப் பார்த்தார்களென்று தோன்றுகிறது.

முகவுரையில் மாத்திரமன்றே?
நூலில், நடுவிலும் இடையிடையே, 'ஆதலால், பாரதா, போர் செய்', என்ற பல்லவி வந்துகொண்டே இருக்கின்றது அன்றோ? என்று கூறிச் சிலர் ஆட்சேபிக்கலாம்.

அதற்குத்தான் மேலேயே கீதா ரகசியத்தின் ஆதார ரகசியத்தை எடுத்துச் சொன்னேன்.
அதனை, இங்கு மீண்டும் சொல்லுகிறேன்.
துரியோதனாதிகள் - காமம், குரோதம், சோம்பர், மடமை, மறதி, கவலை, துயரம், ஐயம் முதலிய பாவ சிந்தனைகள்.
அர்ஜுனன் ஜீவாத்மா.
ஸ்ரீ கிருஷ்ணன் பரமாத்மா

இயற்கை விதியை அனுசரித்து வாழ வேண்டும். அதனால் எவ்விதமான தீமையும் எய்த மாட்டாது. எனவே, சாதாரண புத்தியே பரம மெய்ஞ்ஞானம். இதனை, ஆங்கிலேயர் 'common sense' என்பர். சுத்தமான - மாசு படாத, கலங்காத, பிழை படாத சாதரண அறிவே பரம மெய்ஞ்ஞானாகும்.

சாதாரண ஞானத்தைக் கைக்கொண்டு நடத்தலே எதிலும் எளிய வழியாம்.
சாதாரண ஞானமென்று சொல்லு மாத்திரத்தில் அது எல்லாருக்கும் பொது என்று விளங்குகிறது.

ஆனால் சாதாரண ஞானத்தின்படி நடக்க எல்லாரும் பின் வாங்குகிறார்கள்.
சாதாரண ஞானத்தின்படி நடக்க ஒட்டாமல் ஜீவர்களைக் காமக் குரோதிகள் தடுக்கின்றன.
சாதாரண ஞானத்தில் தெளிவான கொள்கை யாதெனில்,
நம்மை மற்றோர் நேசிக்க வேண்டுமென்றால்,
நாம் மற்றோரை நேசிக்க வேண்டும்' என்பது.

நேசத்தாலே நேசம் பிறக்கிறது. அன்பே அன்பை விளைவிக்கும்.

நம்மிடம் பிறர் அன்பு செலுத்த வேண்டுமென்று எதிர்பார்த்துக் கொண்டும்,
ஆனால் அதே காலத்தில் நாம் பிறருக்கு எப்போதும் மனத்தாலும் செயலாலும் தீங்கிழைத்துகொண்டும் இருப்போமாயின்
- அதாவது பிறரை வெறுத்துக்கொண்டும், பகைத்துக் கொண்டும், சாபமிட்டுக் கொண்டும் இருப்போமாயின் - நாம் அழிந்து விடுவோமென்பதில் ஐயமில்லை



மார்கழி 9 - தூமணி மாடத்து - ஒன்பதாம் பாமாலை.

23 comments :

குமரன் (Kumaran) said...

மிக அருமையாக பாரதியாரின் பகவத் கீதை முன்னுரையை எளிமைப்படுத்தி இட்டிருக்கிறீர்கள் இரவிசங்கர். நல்ல உழைப்பு. பாரதியாரும் மிக நன்றாக கீதையைப் பற்றி சொல்லியிருக்கிறார். அன்பே அன்பை விளைக்கும் என்று உலக சமயங்கள் சொல்லுவதை இங்கே மிக நன்றாகச் சொல்லியிருக்கிறார்.

ஞானவெட்டியான் said...

//'நம்மை மற்றோர் நேசிக்க வேண்டுமென்றால், நாம் மற்றோரை நேசிக்க வேண்டும்' என்பது.
நேசத்தாலே நேசம் பிறக்கிறது. அன்பே அன்பை விளைவிக்கும்.//

இதைப் படித்த என் நண்பர் ஒருவரின் கூற்று:"நியூட்டனின் மூன்றம் விதி போலிருக்கிறதே!"

தி. ரா. ச.(T.R.C.) said...

ரவி கீதையின் உட்க்கருத்தை தெளிவாக எடுத்துரைத்தீர்கள். 18 அத்யாத்தையும் கண்ணதாசன் 18 ட்டே வரிகளில் அப்படியே பிழிந்து ஜூஸாக குடுத்துவிட்டார்.நல்ல பதிவு

Anonymous said...

very good Ravi, god bless u.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
மிக அருமையாக பாரதியாரின் பகவத் கீதை முன்னுரையை எளிமைப்படுத்தி இட்டிருக்கிறீர்கள் இரவிசங்கர். நல்ல உழைப்பு. பாரதியாரும் மிக நன்றாக கீதையைப் பற்றி சொல்லியிருக்கிறார்//

நன்றி குமரன்! youtube வீடியோ சேமித்து வைத்தமைக்கும் நன்றி!
அன்பே அன்பை விளைக்கும் என்று எக்காலத்துக்கும் எந்த தேசத்துக்கும் பொருந்தும் உண்மையை பாரதி நாலே வரியில் சொன்னது மிக அற்புதமான ஒன்று!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஞானவெட்டியான் said...
இதைப் படித்த என் நண்பர் ஒருவரின் கூற்று:"நியூட்டனின் மூன்றம் விதி போலிருக்கிறதே!"//

ஆமாம் ஐயா, நீங்க சொன்னப்புறம் பாத்தா அப்படித் தான் தோனுது!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தி. ரா. ச.(T.R.C.) said...
ரவி கீதையின் உட்க்கருத்தை தெளிவாக எடுத்துரைத்தீர்கள். 18 அத்யாத்தையும் கண்ணதாசன் 18 ட்டே வரிகளில் அப்படியே பிழிந்து ஜூஸாக குடுத்துவிட்டார்.நல்ல பதிவு//

நன்றி திராச!
உண்மை தான்; கண்ணதாசன் அப்படியே பிழிந்து ஜூஸாக குடுத்துவிட்டார். அதுவும் அதை சினிமாவில் பார்த்தால் பாமரன் கூட ஒரு நிமிடம் உள்ளுக்குள் வாங்கி விடுவான்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Anonymous said...
very good Ravi, god bless u.//

நன்றிங்க அனானிமஸ்.

வல்லிசிம்ஹன் said...

பாரதம் வந்ததால் தான் கீதை வந்தது.
கண்ணன் சொன்னதைக் கேட்க அர்ஜுனனும் இருந்தான்.

அனைவரையும் அடையும்படி
இந்தப் பதிவு போய்ச் சேர்ந்து நன்றி விளைக்க வேண்டும்.
நன்றி.

G.Ragavan said...

மிகவும் அருமையான பாடல். சீர்காழியின் வெங்கலக் குரலும் மெல்லிசை மன்னரின் அற்புதயிசையும் கவியரசரின் கவிச்சாரமும் கூடிய தெள்ளமுது.

கீதையைப் பற்றி நான் அறிந்தது ஒன்றுமில்லை. ஆகையால் அதை நல்லதென்று பாராட்டவோ அல்லதென்று விலக்கவோ எனக்குத் தகுதியில்லை.

நாமக்கல் சிபி said...

அருமையான பாடல் KRS...

பாரதியாரின் கீதையை எளிமைப்படுத்தி மிக அருமையாக வழங்கியிருக்கிறீர்கள்.
கீதை முழுதும் இவ்வாறு எளிமையாக வழங்கினால் அருமையாக இருக்கும்...

Anonymous said...

பாரதியின் அருமையான கருத்துக்களுடன் கீதை விளக்கத்தைச் சுருக்கமாகத் தந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.

பராசரன் said...

"போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே " என்று கீதையின் சாரத்தை அழகாக அளிக்க கவியரசரைத்தவிர வேறு யாரால் முடியும். பாரதியாரின் கீதை விளக்கமும் அருமை. அவரைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளாமால் அவர் ஆன்மீகவாதி அல்லர் என்று இன்னும் சிலர் சொல்லித் திரிவதுதான் வேடிக்கை

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வல்லிசிம்ஹன் said...
அனைவரையும் அடையும்படி
இந்தப் பதிவு போய்ச் சேர்ந்து நன்றி விளைக்க வேண்டும்//

நன்றி வல்லியம்மா.
எல்லாரும் அறிந்து தெளிவது அவன் அருளால் தானே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//G.Ragavan said...
மிகவும் அருமையான பாடல். சீர்காழியின் வெங்கலக் குரலும் மெல்லிசை மன்னரின் அற்புதயிசையும் கவியரசரின் கவிச்சாரமும் கூடிய தெள்ளமுது//

உண்மை ஜிரா. இயல் இசை நாடகம் மூன்றும் சந்திக்கும் பாடல்! :-)

//கீதையைப் பற்றி நான் அறிந்தது ஒன்றுமில்லை. ஆகையால் அதை நல்லதென்று பாராட்டவோ அல்லதென்று விலக்கவோ எனக்குத் தகுதியில்லை//

உங்கள் நண்பன் என்ற முறையில் ஒன்று மட்டும் நிச்சயமாய் சொல்ல முடியும்.
நல்லது உண்டா என்று நீங்கள் ஆய்ந்து காணலாம்!
ஆனால் அல்லது இங்கு இல்லவே இல்லை என்பது மட்டும் உறுதி ஜிரா!

வாரியார் சுவாமிகள் சொற்பொழியாத கீதையா! ஒலித் தகடு கேளுங்கள் ஜிரா! நீங்க இங்கு இருந்தால் ஓடி வந்துக் கொடுத்திருப்பேன் நண்பா, CDயை!

அருணகிரி அநூபூதியும் கீதையில் விபூதி யோகமும் என்ற பதிவு போட நெடு நாள் எண்ணம்; பார்ப்போம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வெட்டிப்பயல் said...
அருமையான பாடல் KRS...//
நன்றி பாலாஜி.

//கீதை முழுதும் இவ்வாறு எளிமையாக வழங்கினால் அருமையாக இருக்கும்...//

கூட்டுப் பதிவு try சேசலாமா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Kanags said...
பாரதியின் அருமையான கருத்துக்களுடன் கீதை விளக்கத்தைச் சுருக்கமாகத் தந்திருக்கிறீர்கள்//

வாங்க Kanags! நன்றி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பராசரன் said...
"போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே " என்று கீதையின் சாரத்தை அழகாக அளிக்க கவியரசரைத்தவிர வேறு யாரால் முடியும். பாரதியாரின் கீதை விளக்கமும் அருமை. //

நன்றி பராசரரே!
உங்க பேரே அருமையா இருக்கு!

//அவரைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளாமால் அவர் ஆன்மீகவாதி அல்லர் என்று இன்னும் சிலர் சொல்லித் திரிவதுதான் வேடிக்கை//

வேடிக்கை எல்லாம் நம் பாரதிக்கு வாடிக்கை தானே! ஞான பானு அல்லவா அவன். யார் என்ன சொன்னாலும் அவன் ஒளித்திறம் ஒளியுமோ?

நாமக்கல் சிபி said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வெட்டிப்பயல் said...
அருமையான பாடல் KRS...//
நன்றி பாலாஜி.

//கீதை முழுதும் இவ்வாறு எளிமையாக வழங்கினால் அருமையாக இருக்கும்...//

கூட்டுப் பதிவு try சேசலாமா? //

அடியேன் ஞானசூன்யம்...

படித்து பொருள் புரியவே பல நாட்களாகும்... பொருள் கூறி மற்றவரை புரிந்து கொள்ள வைக்கும் திறமை எமக்கில்லை...

நீங்க எல்லாம் சேர்ந்து எழுதினால் படித்து சுவைக்க அடியேன் தயார்...

குமரன் (Kumaran) said...

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணை மேல் கண் வளரும்
மாமான் மகளே மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உம் மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்று ஏலோர் எம்பாவாய்

தூய்மையான மணி மாடத்தில் சுற்றிலும் விளக்குகள் எரிய

நறுமணப்புகை எங்கும் கமழ மென்மையான படுக்கையின் மேல் தூங்கும்

மாமன் மகளே! மணிக்கதவுகளின் தாள் திறப்பாய்!

மாமி! அவளை எழுப்புங்கள். உங்கள் மகள் தான்

ஊமையோ? இல்லை செவிடோ? பெருஞ் சோம்பேறியோ?

நீண்ட பெருந்துயில் வரும்படி மந்திரம் செய்து விட்டார்களோ?

'மாயங்களில் வல்லவன், மாதவன், வைகுந்தன்' என்று என்று

நாமம் பலவும் சொல்.

கோவி.கண்ணன் said...

//இத்தனை வேதாந்தமும், இத்தனை சத்வ குணமும், இத்தனை துக்க நிவர்த்தியும், இத்தனை சாகாதிருக்க வழியும் பேசப்படுவது என்னே என்பதை அச்சில மூடர் கருதுகின்றனர்.//

அச்சில மூடர் - இரவி... இது போன்று பொதுப்படுத்திச் சொல்லும் போது ஒன்றை நாம் மறந்துவிடுகிறோம். எதையும் உறுதியாக இவை மட்டுமே உண்மை என்ற மாறாத விதி இருந்தால் எல்லோரும் ஏற்றுக் கொள்ளுதல் என்ற நிலைக்கு ஒரு கருத்து செல்லும். ஒரு உதாரணத்துக்கு ... ஆண்டான் அடிமை என்று காலம் காலமாக வந்து இருக்கிறது ... இவற்றை எதோ ஒரு நன்மைக்குத்தான் முன்னோர்கள் மனிதர்களையே அடிமைப் படுத்தினார்கள் என்று சொல்ல முடியுமா ?

நமக்கு தெய்வீகமாகவோ நன்மையாகவோ தெரியும் ஒரு கருத்து ஏன் அவர்களுக்குத் தெரியவில்லை அதன் பின்னனி என்னவாக இருக்கும், ஏன் வெறுக்கும் அளவுக்குச் செல்கிறார்கள் என்றும் கொஞ்சம் நினைத்துப் பார்க்கவேண்டும்.

பாரதக் கதைகளோ, இராமயணமோ ஞானமுல்லவர்கள் மட்டும் தான் பரமாத்மா - ஜீவாத்மா தத்துவத்தில் பார்ப்பார்கள் என்று நினைக்கிறேன்... இதிகாசம் புராணம் என்று வரும் போது இவையெல்லாம் வெறும் கதைகள் தான், வேண்டுமானால் கொஞ்சம் ஆராய்ந்து வாழ்வியல் தத்துவம் இருக்கிறது என்று சொல்லலாம் ... ஞானமில்லாதாவர்கள் ... அதே கதைகளின் வழி பாதிக்கப்பட்டிருப்பதாக
அவர்களின் வார்த்தையில் சொல்வதை வைத்து விமர்சிப்பதைக் கொண்டு அவர்களை மூடர்கள் என்று சொல்வது சரியா ?

கண்ணபிரானின் கருத்துக்களில் ஆன்மிகம் மட்டும்தான் இருக்கும் என்று இப்பொழுதும் அப்படியே நினைக்கிறேன். நீங்கள் கொஞ்சம் கவனம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

குமரன் (Kumaran) said...

கண்ணன் அண்ணா. இது இரவிசங்கர் எழுதியது இல்லை. பாரதியார் எழுதியது.

//பகவத் கீதை - பாரதியாரின் முன்னுரை (பாகம் 8 & 12)
(வடமொழிச் சொற்கள் நீக்கி சில பகுதிகள் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளன)
//
என்று தெளிவாக இரவிசங்கர் தொடக்கத்திலேயே சொல்லியிருக்கிறாரே.

பாரதியார் யாரை மூடர்கள் என்று சொன்னார் என்று தெரியாது. அவர் சொன்னதை அவரவர் புரிதலுடன் புரிந்து கொள்ள வேண்டியது தான்.

Anonymous said...

உலகின் இயக்கம் அனைத்திற்கும் நானே என பொறுப்பேற்றவன் கண்ணன் மட்டுமே. உலகத்தின் நன்மைக்கு மட்டும் தான் நான் மற்றவைக்கு கெட்ட ஆவி அல்லது சாத்தான் என கூறாமல் கண்ணன் கீதையில் கூறுவதுதான்
எனக்குப் பிடித்தது

புள்ளிராஜா

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP